Thursday, May 26, 2016

மரணத்திற்கு வருந்தாதே! - துரோண பர்வம் பகுதி – 053, 054, 055

Don’t grieve for death! | Drona-Parva-Section-053, 054, 055 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 23, 24, 25)

பதிவின் சுருக்கம் : மரண தேவியின் கதையைக் கேட்டு திருப்தியடையாத யுதிஷ்டிரனுக்கு வியாசர் மேலும் ஒரு நிகழ்வைச் சொல்வது; மன்னன் சிருஞ்சயனுக்குப் பிறந்த சுவர்ணஷ்டீவின்; சுவர்ணஷ்டீவினைக் கொன்ற கள்வர்கள்; மகனின் மறைவால் வருந்திய சிருஞ்சயன், சிருஞ்சயனுக்கு மன்னன் மருத்தனின் கதையைச் சொன்ன நாரதர்; மரணத்தைக் குறித்து ஏன் வருந்தக்கூடாது என்பதற்குச் சிருஞ்சயனிடம் நாரதர் சொன்ன விளக்கம்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "மரணத்தின் {மரணதேவியின்} பிறப்பையும், அவளது விசித்திரமான செயல்பாடுகளையும் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், மீண்டும் வியாசரிடம் பணிவுடன் இந்த வார்த்தைகளைப் பேசினான்.


யுதிஷ்டிரன் {வியாசரிடம்}, “நற்பேறுபெற்ற நாடுகளில், நீதிமிக்கச் செயல்களைச் செய்பவர்களும், ஆற்றலில் இந்திரனுக்கே நிகரானவர்களுமாகப் பல மன்னர்கள் இருந்திருக்கின்றனர். ஓ! மறுபிறப்பாளரே {பிராமணரே, வியாசரே}, அரசமுனிகளான அவர்கள் பாவமற்றவர்களாகவும், உண்மையைப் பேசுபவர்களாகவும் இருந்தனர். பழங்காலத்தின் அந்த அரச முனிகளால் செய்யப்பட்ட சாதனைகளைக் கனமான வார்த்தைகளால் சொல்லி என்னை ஆறுதலடையச் செய்வீராக. அவர்களால் அளிக்கப்பட்ட வேள்விக் கொடைகள் என்ன? அதைச் செய்தவர்களான அறம்செய்யும் உயர் ஆன்ம அரச முனிகள் யாவர்? ஓ! சிறப்புமிக்கவரே {வியாசரே}, இவையாவையும் எனக்குச் சொல்வீராக” என்றான் {யுதிஷ்டிரன்} [1].


[1] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி, “பிராம்மணரே! கௌரவம் உள்ளவர்களும், பரிசுத்தமான செய்கையை உடையவர்களும், இந்திரனுக்குச் சமமான பராக்ரமத்தை உடையவர்களுமான எத்தனை ராஜரிஷிகள் முன்பு மிருத்யுவினால் கொல்லப்பட்டனர்? மறுபடியும் என்னை நீர் உண்மையான வார்த்தைகளால் விருத்தியடையும்படி செய்யும். முற்காலத்தில் இருந்த ராஜரிஷிகளுடைய செய்கைகளாலே என்னை ஆறுதலடையும்படி செய்ய வேண்டும். மகாத்மாக்களும், புண்ணியத்தைச் செய்தவர்களுமான ராஜரிஷிகளாலே எவ்வளவு தக்ஷிணைகள் கொடுக்கப்பட்டன? எவைகள் கொடுக்கப்பட்டன? அவற்றை எனக்கு நீ சொல்லவேண்டும்” என்று இருக்கிறது.

வியாசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், “சுவித்யன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். அவனுக்குச் சிருஞ்சயன் என்று அழைக்கப்பட்ட ஒரு மகன் இருந்தான். முனிவர்களான நாரதரும், பர்வதரும் அவனது நண்பர்களாக இருந்தனர். ஒருநாள், அந்தத் துறவிகள் இருவரும், சிருஞ்சயனைச் சந்திப்பதர்காக அவனது அரண்மனைக்கு வந்தனர். சிருஞ்சயனால் முறையாக வழிபடப்பட்ட அவர்கள் அவனிடம் {சிருஞ்சயனிடம்} மனம்நிறைந்து அவனுடனேயே மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

ஒரு சமயம், அந்த இரு துறவிகளுடனும் சிருஞ்சயன் சுகமாக அமர்ந்திருந்த போது, இனிய புன்னகை கொண்ட அவனது அழகிய மகள் அவனிடம் வந்தாள். தன் மகளால் மரியாதையுடன் வணங்கப்பட்ட சிருஞ்சயன், அந்தப் பெண்ணின் அருகில் நின்று கொண்டு அவள் விரும்பிய வகையிலேயே முறையான வாழ்த்துகளைச் சொன்னான். அந்தக் கன்னிகையைக் கண்ட பர்வதர் புன்னகையுடன் சிருஞ்சயனிடம், “துருதுரு பார்வையையும், மங்கலக் குறிகள் அனைத்தையும் கொண்ட இந்தக் கன்னிகை யாருடைய மகள்? இவள் சூரியனின் ஒளியா? அல்லது அக்னியின் தழலா? அல்லது ஸ்ரீதேவி, ஹ்ரீதேவி, கீர்த்தி, த்ருதி, புஷ்டி, சித்தி ஆகியோரா? அல்லது சோமனின் ஒளியா?” என்று கேட்டார்.

அந்தத் தெய்வீக முனிவர் (பர்வதர்) இந்த வார்த்தைகளைக் கேட்டதும், மன்னன் சிருஞ்சயன் {பர்வத முனிவரிடம்}, “ஓ! சிறப்புமிக்கவரே {பர்வதரே}, இந்தப் பெண் எனது மகளாவாள். இவள் என் ஆசிகளை இரந்து கேட்கிறாள்” என்று பதிலுரைத்தான். அப்போது நாரதர் மன்னன் சிருஞ்சயனிடம், “ஓ! ஏகாதிபதி {சிருஞ்சயா}, (உனக்கு) பெரும் நன்மையை நீ விரும்பினால், இந்த உன் மகளை மனைவியாக எனக்கு அளிப்பாயாக” என்றார். (முனிவரின் முன்மொழிவால்) மகிழ்ந்த சிருஞ்சயன், நாரதரிடம், “நான் உமக்கு அவளை அளிக்கிறேன்” என்றான்.

இதற்கு, மற்றொரு முனிவரான பர்வதர், நாரதரிடம் கோபத்துடன், “என் இதயத்துக்குள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தக் காரிகையை, உமது மனைவியாக நீர் கொள்கிறீர். ஓ! பிராமணரே, இதை நீர் செய்ததால், உம் விருப்பப்படி உம்மால் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது” என்றார். இப்படி அவரால் {பர்வதரால்} சொல்லப்பட்ட நாரதர், “கணவனின் {மணமகனின்} இதயம் {மனம்}, (அது சம்பந்தமான) பேச்சு, (கொடுப்பவரின்) சம்மதம், (இருவரின்) பேச்சுகள், நீர் தெளித்துக் கொடுக்கப்படும் உண்மையான தானம், (மணமகளின் கைப்) பற்றுவதற்கு விதிக்கப்பட்டவை (மந்திரங்களை உரைத்தல்) – ஆகிய இந்த அறிகுறிகளே ஒரு கணவனை அமைக்கின்றன என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சடங்கே கூட முழுமையாகாது. ஏழு எட்டுகள் {அடிகள்} வைத்து (ஒரு மணமகள், மணமகனை வலம் வருதல்) இவற்றில் (இவை அனைத்திற்கும் மேலாக) முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இவையில்லாமல் (திருமணம் குறித்த) உமது காரியம் அடையப்பட்டதாகாது. {இவற்றை அறிந்தும்} நீர் சபித்திருக்கிறீர். எனவே, நீரும் என்னைவிட்டுவிட்டுச் சொர்க்கத்திற்குச் செல்ல முடியாது [2] என்று பதிலுக்குச் சபித்தார் {நாரதர்}. இப்படி ஒருவரையொருவர் சபித்துக் கொண்ட அந்த முனிவர்கள் இருவரும் தொடர்ந்து அங்கேயே வாழ்ந்தனர்.

[2] வேறொரு பதிப்பில் இது, “மனம், வாக்கும், புத்தி, சம்பாஷணம், சத்தியம், ஜலம், அக்னிகள், பாணிக்ரஹணம், மந்திரங்கள் இவைகளல்லவோ பிரசித்தமான தாரத்தின் லட்சணம்; இந்தத் தாரலட்சணங்களில் பூர்த்தி ஏற்படவில்லை; மனத்தினாலே மாத்திரம் உம்மால் அவள் பார்யையாக எண்ணப்பட்டாள். நீர் அறிந்திருந்தும் என்னை இவ்வாறு சபித்ததனால் நீரும் என்னைவிட்டு ஸ்வர்க்கம் போகக்கூடாது” என்று பிரதி சாபத்தைக் கூறினார்” என்று இருக்கிறது.

அதே வேளையில், ஒரு மகனை (அடைய) விரும்பிய மன்னன் சிருஞ்சயன், சுத்தப்படுத்தப்பட்ட ஆன்மாவுடன், தன் சக்தியால் முடிந்தவரை,  உணவும், ஆடைகளும் கவனத்துடன் வழங்கி பிராமணர்களை மகிழ்ச்சிப்படுத்தத் தொடங்கினான். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, வேதங்களைப் படிப்பதில் அர்ப்பணிப்புடையவர்களும், சாத்திரங்களை அவற்றின் பிரிவுகளுடன் முழுவதும் அறிந்தவர்களுமான அந்தப் பிராமணர்களில் முதன்மையானோர், மகனை அடைய விரும்பிய அந்த ஏகாதிபதியிடம் {சிருஞ்சயனிடம்} மனம் நிறைந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக நாரதரிடம் வந்து, அவரிடம், “இந்த மன்னன் விரும்பியவாறு அவனுக்கு ஒரு மகனைக் கொடுப்பீராக” என்றனர். இப்படி அந்தப் பிராமணர்களால் சொல்லப்பட்ட நாரதர், அவர்களிடம், “அப்படியே ஆகட்டும்” என்று சொன்னார். பிறகு, அந்தத் தெய்வீக முனிவர் {நாரதர்} சிருஞ்சயனிடம், “ஓ! அரசமுனியே {சிருஞ்சயா}, பிராமணர்கள் மனம் நிறைந்து உனக்கு ஒரு மகனை விரும்புகிறார்கள். நீ அருளப்பட்டிருப்பாயாக, நீ விரும்பும் வகையிலான மகனை வரமாகக் கேட்பாயாக” என்றார்.

இப்படி அவரால் சொல்லப்பட்ட அந்த மன்னன், கூப்பிய கரங்களுடன், அனைத்தையும் சாதிப்பவனும், புகழ்பெற்றவனும், மகிமைநிறைந்த சாதனைகளைச் செய்பவனும், பெரும் சக்தி கொண்டவனும், எதிரிகள் அனைவரையும் தண்டிக்க இயன்றவனுமான ஒரு மகனைக் கேட்டான். மேலும், அவன் {சிருஞ்சயன்}, அந்தக் குழந்தையின் சிறுநீர், மலம், சளி, வியர்வை ஆகியவை தங்கமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டான். சரியான காலத்தில் அந்த மன்னனுக்கு ஒரு மகன் பிறந்தான், அவன் சுவர்ணஷ்டீவின் என்று பூமியில் பெயரிடப்பட்டான் {அழைக்கப்பட்டான்}. மேலும் அந்த வரத்தின் விளைவாக அந்தக் குழந்தை (தன் தந்தையின்) எல்லைகள் அனைத்தையும் மீறி செல்வத்தைப் பெருக்கத் தொடங்கினான். மன்னன் சிருஞ்சயன் தனக்கு விருப்பப்பட்ட பொருட்கள் அனைத்தையும் தங்கத்திலேயே செய்தான். அவனது வீடுகள், சுவர்கள், கோட்டைகள், (அவனது ஆட்சிப்பகுதிக்குள் உள்ள) பிராமணர்கள் அனைவரின் வீடுகள், அவனது படுக்கைகள், வாகனங்கள், தட்டுகள், குடங்கள், குடுவைகள், அவனுக்குச் சொந்தமான இடங்கள், மேலும் அவனது கருவிகள் அனைத்தும், அரண்மனைக்கு உள்ளும் புறமும் இருந்த பாத்திரங்கள் ஆகிய அனைத்தும் தங்கத்தாலேயே செய்யப்பட்டன. அந்த நேரத்தில் அவனது {தங்க} கையிருப்பும் அதிகரித்தது.

இளவரசனைக் குறித்துக் கேள்விப்பட்ட சில கள்வர்கள் ஒன்றுகூடி, அவன் அப்படி {செழிப்பாக} இருப்பதைக் கண்டு, அந்த மன்னனுக்குத் தீங்கிழைக்க முனைந்தனர். அவர்களில் சிலர், “நாம் மன்னனின் மகனையே கைப்பற்றுவோம். அவனே அவனது தந்தையின் தங்கச்சுரங்கமாவான். எனவே, அதை {அவனை} நோக்கிய நாம் முயல்வோம்.“ என்றனர். பிறகு, பேராசையால் தூண்டப்பட்ட அந்தக் கள்வர்கள் மன்னனின் அரண்மனைக்குள் ஊடுருவி, இளவரசன் சுவர்ணஷ்டீவினைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்றனர்.

இப்படி அவனைக் கைப்பற்றிய பிறகு காட்டுக்குத் தூக்கிச் சென்ற அந்த அறிவற்ற மூடர்கள், பேராசையால் உந்தப்பட்டு, அவனை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதை அறியாமல், அவன் உடலைத் துண்டு துண்டாக வெட்டி அவனை {சுவர்ணஷ்டீவினை} அங்கேயே கொன்றனர். எனினும், அவனிடம் தங்கம் எதையும் அவர்கள் காணவில்லை. இளவரசன் கொல்லப்பட்ட பிறகு, முனிவரின் வரத்தால் அடையப்பட்ட தங்கம் அனைத்தும் மறைந்தன. அறியாமை கொண்டவர்களும், அறிவற்றவர்களுமான அந்தக் கள்வர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இப்படி ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட அவர்கள் அழிந்தனர், அவர்களோடு சேர்ந்து பூமியில் இருந்த அந்த அற்புத இளவரசனும் அழிந்தான். தீச்செயல்களைச் செய்த அம்மனிதர்கள் கற்பனைக்கெட்டாத பயங்கர நரகத்தில் மூழ்கினர்.

முனிவரின் வரத்தால் அடையப்பட்ட தன் மகன் கொல்லப்பட்டதைக் கண்ட பெரும் துறவியான மன்னன் சிருஞ்சயன், கவலையால் ஆழப் பீடிக்கப்பட்டு, பரிதாபகரமான குரலில் அழுது புலம்பத் தொடங்கினான். தன் மகனின் நிமித்தமாகப் பீடிக்கப்பட்ட மன்னன் {சிருஞ்சயன்}, இப்படி அழுவதைக் கண்ட தெய்வீக முனிவரான நாரதர், அவன் முன்னிலையில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். ஓ! யுதிஷ்டிரா, துயரத்தால் பீடிக்கப்பட்டு, புலன்களை இழந்து இப்படிப்பட்ட பரிதாபகரமான புலம்பல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மன்னனை {சிருஞ்சயனை} அணுகி, அந்தச் சிருஞ்சயனிடம் நாரதர் என்ன சொன்னார் என்பதைக் கேட்பாயாக.

நாரதர் {சிருஞ்சயனிடம்}, “சிருஞ்சயா, பிரம்மத்தை உச்சரிப்பவர்களான நாங்கள் உன் இல்லத்தில் வாழ்ந்தும், உன் விருப்பங்கள் ஈடேறாமல் இறக்கப் போகிறாய். ஓ! சிருஞ்சயா, அவிக்ஷித்தின் மகன் மருத்தனும் இறக்க வேண்டியிருந்தது என்று நாம் கேள்வி படுகிறோம். பிருஹஸ்பதியிடம் கோபம்   கொண்ட அவன் {மருத்தன்} சம்வர்த்தரைக் கொண்டு தன் பெரும் வேள்விகளைச் செய்தான். அந்த அரசமுனியிடம் {மருத்தனிடம்}, சிறப்பு மிக்கத் தலைவனே (மகாதேவனே), இமயத்தின் தங்கப் பீடபூமியின் வடிவில் செல்வத்தைக் கொடுத்தான். (அந்தச் செல்வத்தைக் கொண்டு) மன்னன் மருத்தன் பல்வேறு வேள்விகளைச் செய்தான்.

இந்திரனின் துணையுடனும், பிருஹஸ்பதியின் தலைமையிலும் தேவர்களில் பல்வேறு இனங்களான அந்த அண்டப் படைப்பாளர்கள், தன் வேள்விகளை முடித்த அவனிடம் வழக்கமாக வந்து கொண்டிருந்தனர். அவனது வேள்வி மண்டபத்தில் இருந்த விரிப்புகள் மற்றும் அறைகலன்கள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டவையாக இருந்தன. உணவை விரும்பிய மறுபிறப்பாள {பிராமண} வர்க்கங்கள் அனைவரும், தங்கள் விருப்பத்துக்கு உகந்த சுத்தமான உணவை மனநிறைவுடன் அவனது வேள்விகளில் உண்டனர். அவனது வேள்விகள் அனைத்திலும், பால், தயிர், தெளிந்த நெய், தேன், பிறவகைகளிலான உணவுகள், உண்ணக்கூடியவை அனைத்திலும் சிறந்தவை, ஆடைகள், விலைமதிப்பின் காரணமாக {தவறாக} விரும்பப்படும் ஆபரணங்கள் ஆகியவை வேதங்களை முழுமையாக அறிந்த பிராமணர்களை மனம்நிறையச் செய்தன. மன்னன் மருத்தனின் அரண்மனையில் தேவர்களே உணவைப் பரிமாறுபவர்களாக இருந்தனர். அவிக்ஷித்தின் மகனான அந்த அரசமுனிக்கு {மருத்தனுக்கு}, விஸ்வதேவர்களே சேவகர்களாக இருந்தனர். தெளிந்த நெய்யால் காணிக்கையளிக்கப்பட்ட சொர்க்கவாசிகள் அவனிடம் மனநிறைவு கொண்டனர். (அதனால்) மனம் நிறைந்த அவர்கள், தங்கள் பங்குக்கு, அந்தப் பலமிக்க ஆட்சியாளனின் {மருத்தனின்} பயிர் செல்வத்தை அபரிமிதமான மழைப்பொழிவால் அதிகரித்தனர்.

அவன் {மருத்தன்} எப்போதும், முனிவர்கள், பிதுர்கள், தேவர்கள் ஆகியோர் நிறைவடையும் வகையில் காணிக்கைகளை அளித்தும், பிரம்மச்சரியம், வேத கல்வி, ஈமக்கடன் சடங்குகள் ஆகியவற்றை நோற்றும் அனைத்து விதமான தானங்களை அளித்தும் அவர்களை மகிழ்வூட்டினான். அவனது படுக்கைகள், விரிப்புகள், வாகனங்கள், கொடுப்பதற்குக் கடினமான அவனது பரந்த தங்கக் கிடங்குகள் ஆகியவையும், உண்மையில் சொல்லப்படாத அவனது செல்வங்களும் தன்னார்வத்துடன் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டாதல் சக்ரனே {இந்திரனே} அவனுக்கு நன்மையை விரும்பினான். அவனது குடிகள் {குடிமக்கள்} (அவனால்) மகிழ்ச்சிப்படுத்தப்பட்டனர். எப்போதும் அர்ப்பணிப்போடு {பக்தியோடு} செயல்பட்ட அவன் {மருத்தன்}, (இறுதியில்) தான் அடைந்த அறத் தகுதிகளின் மூலம் அழியாமல் நிலைக்கும் அருள் உலகங்களை அடைந்தான். மன்னன் மருத்தன், தன் பிள்ளைகள், அமைச்சர்கள், மனைவியர், வழித்தோன்றல்கள், சொந்தங்கள் ஆகியோருடனும், இளமையுடனும் ஆயிரம் வருடங்களுக்குத் தன் நாட்டை ஆண்டான். ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களால் (தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றில்) உனக்கும் உன் மகனுக்கும் {சுவர்ணஷ்டீக்கும்} மிக மேன்மையான அத்தகு மன்னனே {மருத்தனே} இறந்தான் எனும்போது, ஓ! சுவைத்யா {சுவித்யனின் மகனே சிருஞ்சயா}, எந்த வேள்வியோ, எந்த வேள்விக் கொடையோ செய்யாத உன் மகனைக் குறித்து வருந்தாதே” என்றார் {நாரதர்}.


“பகுதிகள் 54 மற்றும் 55 ஆகியவை மூலப்பதிப்பில் காணப்படவில்லை. ஒருவேளை இந்தப் பகுதிகளின் உரைகள், வெளியீட்டாளரால் பகுதி 53ல் இணைக்கப்பட்டிருக்கலாம். எனவே இந்தப் பகுதிக்குப் பிறகு, நமது பகுதிஎண் வரிசையானது, பகுதி 56க்குச் செல்கிறது” என Sacredtexts வலைத்தளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனவே நாமும் அடுத்ததாகப் பகுதி 56க்குச் செல்கிறோம்.


ஆங்கிலத்தில் | In English