Friday, May 27, 2016

மன்னன் சுஹோத்திரன்! - துரோண பர்வம் பகுதி – 056

King Suhotra! | Drona-Parva-Section-056 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 26)

பதிவின் சுருக்கம் : மன்னன் சுஹோத்திரனின் கதையைச் சொன்ன நாரதர்; சுஹோத்திரன் செய்த வேள்விகள் மற்றும் கொடைகள்; அவன் நாட்டின் செழிப்பு; அவனது மரணம்…


நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, மன்னன் சுஹோத்ரனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அவன் {மன்னன் சுஹோத்திரன்} வீரர்களில் முதன்மையானவனாகவும், போரில் வெல்லப்பட முடியாதவனாகவும் இருந்தான். அவனைக் காண தேவர்களே வந்தனர். அறத்தால் தன் அரசை அடைந்த அவன் {சுஹோத்திரன்}, தன் நன்மைக்காக ரித்விக்குகள், அரண்மனைப் புரோகிதர்கள் மற்றும் பிராமணர்களின் அறிவுரைகளை நாடி, அவர்களை விசாரித்து, அவர்களது உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து வந்தான். தன் குடிகளைக் காக்கும் கடமையை நன்கு அறிந்த மன்னன் சுஹோத்திரன் அறம் மற்றும் ஈகையுடன், வேள்விகள் செய்து, எதிரிகளை அடக்கித் தன் செல்வத்தைப் பெருக்க விரும்பினான்.

அவன் சாத்திர விதிகளைப் பின்பற்றித் தேவர்களை வணங்கினான். தன் கணைகளின் மூலம் அவன் {சுஹோத்ரன்} தன் எதிரிகளை வீழ்த்தினான். தன் சிறந்த சாதனைகளின் மூலம் அவன் உயிரினங்கள் அனைத்தையும் நிறைவு கொள்ளச் செய்தான். அவன் {சுஹோத்ரன்}, மிலேச்சர்களிடம் இருந்தும், காட்டுக் கள்வர்களிடமும் இருந்தும் பூமாதேவியை விடுவித்து, அவளை ஆண்டான்.

மேகங்களின் தேவன் {இந்திரன்}, அவனிடம் {அவனது நாட்டில்} வருடா வருடம் தங்கத்தையே மழையாகப் பொழிந்தான். எனவே, அந்தப் பழங்காலத்தில், (அவனுடைய நாட்டில் உள்ள) ஆறுகளில் தங்கமே (நீராகப்) பாய்ந்தது. மேலும் அஃது {ஆறுகளில் உள்ள தங்கம்} அனைவரும் பயன்படுத்தும்படி திறந்தே இருந்தது. மேகங்களின் தேவன் {இந்திரன்} அவனது {சுஹோத்ரனின்} நாட்டில் {குருஜாங்கலத்தில்}, பெரும் எண்ணிக்கையிலான முதலைகள், நண்டுகள், பல்வேறு இனங்களிலான மீன்கள், விருப்பத்துக்குகந்த எண்ணற்ற பல்வேறு பொருட்கள் ஆகியவை அனைத்தையும் தங்கமயமாகவே பொழிந்தான்.

பிரம்மசரோவர் தடாகம் (ஹரியானா)
குருசேத்திரத்தில் உள்ள செயற்கைத் தடாகம்
நீளம் 3600அடி X அகலம் 1500 அடி
ஆசியாவிலேயே மிகப்பெரிய செயற்கைத் தடாகம்
அந்த மன்னனின் {சுஹோத்ரனின்} ஆட்சிப் பகுதிகளில் இருந்த செயற்கைத் தடாகங்கள் ஒவ்வொன்றும் இரண்டு மைல்கள் நீளத்திற்கு [1] இருந்தன. மன்னன் சுஹோத்திரன், ஆயிரக்கணக்கான குள்ளர்கள், கூன்முதுகர்கள் [2], முதலைகள், மகரங்கள், ஆமைகள் ஆகியவை அனைத்தும் தங்கமயமாகவே இருப்பதைக் கண்டு அதிசயித்தான். அரசமுனியான அந்தச் சுஹோத்ரன், குருஜாங்கலத்தில் ஒரு வேள்வியைச் செய்து தங்கத்தாலான அந்த அளவற்ற செல்வத்தை, வேள்வி முடியுமுன்பே பிராமணர்களுக்குத் தானமாகக் கொடுத்தான்.

[1] வேறொரு பதிப்பில் ஒரு குரோசம் நீளம் என்று இருக்கிறது.

[2] வேறொரு பதிப்பில் குள்ளர் மற்றும் கூன்முதுகர்கள் பற்றிய குறிப்பேதும் இல்லை. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே அவர்களைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. ஆனால் அஃது இங்குப் பொருள் தருவதாகத் தெரியவில்லை.

ஆயிரம் குதிரை வேள்விகள் {அஸ்வமேதயாகங்கள்}, நூறு ராஜசூயங்கள், பல புனிதமான க்ஷத்திரிய வேள்விகள் ஆகியவற்றைச் செய்து, பிராமணர்களுக்கு அபரிமிதமான கொடைகளை அளித்து, குறிப்பிட்ட விருப்பங்களுக்காகச் செய்பவையும் கிட்டத்தட்ட எண்ணற்றவையுமானத் தன் தினச் சடங்குகளைச் செய்த அந்த மன்னன் {சஹோத்ரன்}, இறுதியில் மிகவும் விரும்பத்தக்க ஒரு முடிவை அடைந்தான்.

ஓ சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அந்த மன்னனே {சுஹோத்திரனே} இறந்தான் எனும்போது,  எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக, “ஓ சுவைதியா, ஓ சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.


ஆங்கிலத்தில் | In English