Sunday, May 29, 2016

மன்னன் பௌரவன்! - துரோண பர்வம் பகுதி – 057

King Paurava! | Drona-Parva-Section-057 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 27)

பதிவின் சுருக்கம் : மன்னன் பௌரவனின் கதையைச் சொன்ன நாரதர்; பௌரவன் செய்த வேள்விகள் மற்றும் கொடைகள்; அவனது மரணம்…


நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, வீர மன்னன் பௌரவனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த மன்னன் {பௌரவன்}, வெண்ணிறம் கொண்ட ஆயிரம் {1000} குதிரைகளை ஆயிரம் {1000} முறை தானமளித்திருக்கிறான். அந்த அரசமுனியால் {பௌரவனால்} நடத்தப்பட்ட குதிரைவேள்வியில், சிக்ஷை மற்றும் அக்ஷரங்களின் விதிகளை நன்கறிந்தவர்களான [1] எண்ணற்ற பிராமணக் கல்விமான்கள் பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்தனர். வேதங்கள், அறிவு, நோன்புகள் ஆகியவற்றால் தூய்மையடைந்து, பரந்த மனப்பான்மையும், இனிய தோற்றமும் கொண்ட இந்தப் பிராமணர்கள், மன்னனிடம் இருந்து, ஆடைகள், வீடுகள், சிறந்த படுக்கைகள், விரிப்புகள், வாகனங்கள், இழுவைக் கால்நடைகள் ஆகியவை போன்ற விலையுயர்ந்த தானங்களைப் பெற்று, தேர்ந்தவர்களும், வேடிக்கை செய்ய எப்போதும் முனைபவர்களும், (தங்களுக்குரிய கலைகளை) நன்கறிந்தவர்களுமான நடிகர்கள், ஆடற்கலைஞர்கள், பாடகர்கள் ஆகியோரால் எப்போதும் மகிழ்விக்கப்பட்டனர்.


[1] “சிக்ஷை என்பது வேதங்களின் ஆறு கிளைகளில் ஒன்றாகும்; அது வேதங்களைச் சரியாக உச்சரிப்பது என்று அழைக்கப்படும். அக்ஷரம் என்பது எழுத்துகளின் நெடுங்கணக்காகும். இந்தப் பிராமணர்கள் வேதங்களை நன்கு படித்தவர்கள் என்று இந்த வரியில் பொருள்படுகிறது” என இங்கே விளக்குகிறார் கங்குலி.

அவன் {பௌரவன்}, தனது ஒவ்வொரு வேள்வியிலும், தங்கள் உடல்களில் மதநீர் ஒழுகுபவையும், பொன்மயமான பிரகாசம் கொண்டவையுமான பத்தாயிரம் {10000} யானைகளையும், கொடிமரங்கள் மற்றும் கொடிகளுடன் கூடிய தங்கத்தாலான தேர்களையும் சரியான நேரத்தில் வேள்விக்கொடைகளாகக் கொடுத்தான்.

தங்க ஆபரணங்கள் பூண்ட ஆயிரம் {1000} கன்னியர், ஏறிப்பயணிக்கத் தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவை, வீடுகள், வயல்கள், நூற்றுக்கணக்காகவும், ஆயிரக்கணக்காகவும், நூற்றுக்கணக்கான பசுக்கள், பொன்னால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான இடையர்கள் ஆகியவற்றையும் வேள்விப் பரிசுகளாக அவன் {பௌரவன்} தானமளித்தான். கடந்த கால வரலாற்றை அறிந்தோர், “தங்கக் கொம்புகள், வெள்ளிக் குளம்புகள், வெண்கலப் பால்குடங்கள் ஆகியவற்றைக் கொண்டவையும், கன்றுகளுடன் கூடியவையுமான பசுக்கள், எண்ணற்ற வகையில், வேலைக்காரிகள், வேலைக்காரர்கள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடுகள் ஆகியவற்றையும், பல்வேறு வகை ரத்தினங்கள், மலைபோன்ற பலவகை உணவுகளையும் மன்னன் பௌரவன் அந்த வேள்வியில் அளித்தான்” என்ற இந்தப் பாடலைப் பாடுகின்றனர் [2].

[2] வேறொரு பதிப்பில் இவ்வரி, “அந்த அரசன், பொன்னால் அலங்கரிக்கப்பட்டவர்களும், தேர், குதிரை, யானை இவர்களின் மீது ஏறினவர்களும், வாஸஸ்தானங்கள், க்ஷேத்திரங்கள், அநேகம்பசுக்கள் இவைகளையுடையவர்களுமான பத்துலக்ஷம் கன்னிகளையும், பொன்மாலைகளை அணிந்தவைகளும் ஆயிரம் பசுக்களைப் பின்தொடர்ந்தவையுமான நூறு லக்ஷம் காளை மாடுகளையும், பொன்மயமான கொம்புகளையும், வெள்ளிமயமான குளம்புகளையும் இளங்கன்றுகளையுமுடைய பசுக்களையும் கறப்பதற்கு வெண்கலப் பாத்திரங்களோடு தக்ஷிணையாகக் கொடுத்தான்” என்றிருக்கிறது.

வேள்விகள் செய்பவனான அந்த அங்கர்களின் மன்னன் {பௌரவன்}, விருப்பத்திற்குரிய பொருள்கள் அனைத்தையும் தரவல்லவையும், தன் சொந்த வர்க்கத்திற்குத் தகுந்தவையும், அவற்றின் தன்மையின் வரிசைப்படியும் பல மங்கல வேள்விகளைச் செய்தான்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கும் மேம்பட்டவனான அத்தகு மன்னனே {அந்தப் பௌரவனே} இறந்தான். அவன் உனக்கும் மேம்பட்டவன் ஆதலால், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கும்} மிகவும் மேம்பட்டவனாவான். உன் மகன் {சுவர்ணஷ்டீவின்} எந்த வேள்வியையும் செய்ததில்லை, வேள்விக் கொடை எதையும் அளித்ததும் இல்லை எனும்போது, “ஓ! சுவைதியா, ஓ சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.


ஆங்கிலத்தில் | In English