Monday, May 30, 2016

மன்னன் சிபி! - துரோண பர்வம் பகுதி – 058

King Sivi! | Drona-Parva-Section-058 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 28)

பதிவின் சுருக்கம் : உசீநரனின் மகனான மன்னன் சிபியின் கதையைச் சொன்ன நாரதர்; சிபி செய்த வேள்விகள் மற்றும் கொடைகள்; அவன் ருத்ரனிடம் அடைந்த வரம்; அவனது மரணம்…


நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, உசீநரனின் மகனான சிபியும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த மன்னன் {சிபி}, பூமியைச் சுற்றிலும் தோல் கச்சையால் சுற்றியதைப் போல, மலைகள், தீவுகள், கடல்கள், காடுகள் ஆகியவற்றுடன் கூடிய பூமியைத் தன் தேரின் சடசடப்பொலியால் எதிரொலிக்கச் செய்தான். எதிரிகளை வெல்பவனான மன்னன் சிபி, எப்போதும் தன் முதன்மையான எதிரிகளைக் கொன்று வந்தான். அவன் {சிபி}, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளை அளித்துப் பல வேள்விகளைச் செய்தான். பெரும் ஆற்றலும், பெரும் நுண்ணறிவும் கொண்ட அந்த ஏகாதிபதி {சிபி} மகத்தான செல்வத்தை அடைந்தான். போரிலோ அவன் க்ஷத்திரியர்கள் அனைவரின் பாராட்டுதலையும் வென்றான்.


முழுப் பூமியையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவன் {சிபி}, ஆயிரங்கோடி தங்க நிக்ஷங்களையும், பல யானைகள், குதிரைகள் மற்றும் பிற வகை விலங்குகளையும், மிகையான தானியங்களையும், பல மான்கள் மற்றும் ஆடுகளையும் (வேள்விக் கொடையாகக்) கொடுத்து பெரும் புண்ணியத்தை அடையச்செய்யும் குதிரை வேள்விகள் பலவற்றை எந்தத் தடங்கலுமின்றிச் செய்தான். மன்னன் சிபி, பல்வேறு வகை நிலங்களைக் கொண்ட புனிதமான பூமியை பிராமணர்களுக்குக் கொடுத்தான்.

உண்மையில் உசீநரனின் மகனான சிபி, பூமியில் விழுந்த மழைத்துளிகளின் எண்ணிக்கை அளவுக்கோ, ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களின் எண்ணிக்கை அளவுக்கோ, மணற்துகள்களின் எண்ணிக்கையின் அளவுக்கோ, மேரு என்று அழைக்கப்படும் மலையில் அமைந்த பாறைகளின் எண்ணிக்கையின் அளவுக்கோ, ரத்தினங்களின் அளவுக்கோ, பெருங்கடலில் உள்ள (நீர்வாழ்) விலங்குகள் அளவுக்கோ பசுக்களைத் தானமளித்தான். மன்னன் சிபி சுமந்ததைப் போன்ற சுமைகளைச் சுமக்க இயன்ற வேறு எந்த மன்னனையும் படைப்பாளனே சந்தித்ததில்லை; அல்லது கடந்த காலத்திலோ, நிகழ்காலத்திலோ, எதிர்காலத்திலோ கூடச் சந்திக்கமாட்டான்.

அனைத்துவகைச் சடங்குகளையும் கொண்ட வேள்விகள் பலவற்றை மன்னன் சிபி செய்தான். அவ்வேள்விகளில், யூபஸ்தம்பங்கள், விரிப்புகள், வீடுகள், சுவர்கள், வளைவுகள் அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டவையாக இருந்தன. {அங்கே} இனிமையான சுவையும், முற்றான தூய்மையும் கொண்ட உணவும் நீரும் அபரிமிதமாக வைக்கப்பட்டிருந்தன. அங்கே சென்ற பிராமணர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரமாகவே எண்ணப்பட முடியும். அனைத்து வகை உணவுப் பொருட்களும் நிரம்பியிருந்த அந்த இடத்தில், தானமளிக்கப்படுகிறது, எடுத்துக் கொள்ளுங்கள் என்ற ஏற்புடைய வார்த்தைகள் மட்டுமே கேட்கப்பட்டன. பாலும், தயிரும், பெரும் தடாகங்களில் திரட்டப்பட்டன.

“விரும்பியவாறு குளியுங்கள், குடியுங்கள், உண்ணுங்கள்” என்ற வார்த்தைகள் மட்டுமே அங்கே கேட்கப்பட்டன. அவனது நீதிமிக்கச் செயல்களால் {தர்ம செயல்களால்} மனம்நிறைந்த ருத்ரன் {சிவன்}, சிபிக்கு, “கொடுக்கக் கொடுக்க, உன் செல்வமும், உன் அர்ப்பணிப்பும், உன் புகழும், உன் அறச்செயல்களும், உயிரினங்கள் அனைத்திடமும் நீ காட்டும் அன்பும், (நீ அடையப் போகும்) சொர்க்கமும் வற்றாததாக {குறையாததாக} இருக்கட்டும்” என்ற வரத்தை அளித்தான். விரும்பக்கூடிய இந்த வரங்கள் அனைத்தையும் அடைந்த சிபியும் கூட, அவன் காலம் வந்ததும், இந்த உலகத்தைவிட்டுச் சொர்க்கம் சென்றான்.

ஓ! சிருஞ்சயா, உனக்கு மேம்பட்டவன் ஆதலால், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனான அவனே {அந்தச் சிபியே} இறந்தான் எனும்போது. எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.


ஆங்கிலத்தில் | In English