The Kingdom of Rama! | Drona-Parva-Section-059 | Mahabharata In Tamil
(அபிமன்யுவத பர்வம் – 29)
பதிவின் சுருக்கம் : தசரதனின் மகனான ராமனின் கதையைச் சொன்ன நாரதர்; அசுரர்களையும் ராவணனையும் கொன்ற ராமன்; அவன் செய்த வேள்விகள்; அநீதியான போக்கு, பேராசை, அறியாமை, பிணி ஆகியவையற்ற ராமராஜ்ஜியத்தின் மகிமை; ராமன் சொர்க்கம் புகுந்தது…
நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, தசரதனின் மகனான ராமனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம்.
தன் மடியில் பிறந்த மக்களிடம் {பிள்ளைகளிடம்} மகிழ்ச்சி கொள்ளும் ஒரு தந்தையைப் போல அவனது குடிமக்கள் அவனிடம் மகிழ்ச்சி கொண்டனர். அளவிலா சக்தி கொண்ட அவனிடம் {ராமனிடம்} எண்ணற்ற நற்குணங்களும் இருந்தன. லக்ஷ்மணனின் அண்ணனான அந்த மங்காப் புகழ் கொண்ட ராமன், தனது தந்தையின் கட்டளையின் பேரில், தன் மனைவியுடன் {சீதையுடன்} பதினான்கு ஆண்டுக் காலம் காட்டில் வாழ்ந்தான். அந்த மனிதர்களில் காளை {ராமன்}, துறவிகளின் பாதுகாப்புக்காக ஜனஸ்தானத்தில் பதினாலாயிரம் ராட்சசர்களைக் கொன்றான். அங்கே {ஜனஸ்தானத்தில்} வசித்தபோது, ராவணன் என்று அழைக்கப்பட்ட ராட்சசன், அவனையும் {ராமனையும்}, அவனது தோழனையும் (லக்ஷ்மணனையும்) வஞ்சித்து, விதேஹ இளவரசியான அவனது {ராமனது} மனைவியை {சீதாவை} அபகரித்துச் சென்றான்.
முக்கண்ணன் (மகாதேவன்), பழங்காலத்தில் (அசுரன்) அந்தகனைக் கொன்றதைப் போலக் கோபத்தில் ராமன், அதற்கு முன் எந்த எதிரியிடமும் வீழாத புலஸ்திய குலத்தின் குற்றவாளியைப் {இராவணனைப்} போரில் கொன்றான். உண்மையில் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ராமன், தேவர்களும் அசுரர்களும் சேர்ந்தாலும் கொல்லப்பட முடியாதவனும், தேவர்கள் மற்றும் பிராமணர்களுக்கு முள்ளாக இருந்த இழிந்தவனும், புலஸ்திய குலத்தின் வழித்தோன்றலுமான அந்த ராட்சசனை {இராவணனை}, அவனது சொந்தங்கள், அவனைப் பின்தொடர்பவர்கள் ஆகியோரோடு சேர்த்துப் போரில் கொன்றான்.
தன் குடிகளைக் கருணையோடு நடத்தியதன் விளைவாக, ராமனைத் தேவர்களும் வழிபட்டனர். தன் சாதனைகளால் முழுப் பூமியையும் நிறைத்த அவன் {ராமன்} தெய்வீக முனிவர்களாலும் மிகவும் புகழப்பட்டான். அனைத்து உயிரினங்களிடமும் கருணையோடிருந்த அந்த மன்னன் {ராமன்}, பல்வேறு நாடுகளை அடைந்து, தன் குடிகளை அறத்தோடு பாதுகாத்து, எந்தத் தடங்கலும் இல்லாத ஒரு பெரும் வேள்வியை நடத்தினான். அந்தத் தலைவன் ராமன், நூறு குதிரை வேள்விகளையும், ஜாரூத்யம் என்றழைக்கப்படும் பெரும் வேள்வியையும் நடத்தினான். தெளிந்த நெய்யை நீர்க்காணிக்கையாகச் செலுத்தி இந்திரனை அவன் மகிழ்வித்தான் [1]. இப்படிப்பட்ட தன் செயல்களால் ராமன், உயிரினங்களுக்கு நேரும் பசி, தாகம் மற்றும் அனைத்து நோய்களையும் வென்றான். அனைத்துச் சாதனைகளையும் கொண்ட அவன் {ராமன்}, தன் சக்தியாலேயே எப்போதும் சுடர்விட்டுப் பிரகாசித்தான். உண்மையில், தசரதனின் மகனான அந்த ராமன், உயிரினங்கள் அனைத்தையும் விடப் பெரிதும் பிரகாசித்தான்.
[1] “Havisha mudamavahat; அல்லது havisham udam avahat, என்று மூலத்தில் உள்ளது. இரண்டாம் முறையில் படித்தால், ’அவன் {ராமன்}, நீரைப் போல அபரிமிதமாகக் காணிக்கைகளை இந்திரனுக்கு அளித்தான்’ என்று பொருள்படும்” என இங்கே கங்குலி விளக்குகிறார்.
ராமன் தன் நாட்டை ஆண்டபோது, முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகியோர் அனைவரும் பூமியில் ஒன்றாகவே வாழ்ந்தனர். உயிரினங்களின் வாழ்வும் வேறுமாதிரியாகவில்லை {பலவீனமடையவில்லை}. ராமன் தன் நாட்டை ஆண்ட போது, பிராணன், அபானன், சமானன் என்றழைக்கப்படும் உயிர்மூச்சுகளும், இன்னும் பிறவும் [2] தங்கள் செயல்பாடுகளை {சரியாகச்} செய்தன. ஒளிக்கோள்கள் அனைத்தும் பிரகாசமாக ஒளிர்ந்தன. பேரிடர் ஏதும் நேரவில்லை.
[2] மனித உடலில் இருக்கும் ஐந்து வாயுக்கள்:-வியாணன்: இரத்தத்தை எங்கும் பரவச் செய்து தேகத்தைத் தாங்கி நிற்கும்.பிராணன்: இருதயத்திலிருந்து சலித்துக்கொண்டே பசி, தாகங்களை உண்டாக்கும்.அபானன்: உடலிலிருந்து மலஜலங்களை வெளித்தள்ளும்.சமானன்: நாபியிடமிருந்து உண்ட அன்னபானாதிகளைச் சமானம் செய்யும்.உதானன்: இது கண்டத்திலிருந்து உஸ்வாசம், நிஸ்வாசம் செய்யும்தவிர ஐந்து உப வாயுக்களும் உண்டு:நாகன்: தேகத்தை முறுக்கிக் கொட்டாவி விடச் செய்யும்.கூர்மன்: விக்கலையும், ஏப்பத்தையும் உண்டாக்கும்.கிரிகரன்: தும்மலை உண்டாக்கும்.தேவநந்தன்: சிரித்தல், சோகம் முதலியவற்றை உண்டாக்கும்.தனஞ்செயன்: இது பிராணன் நீங்கிய பின் தேகத்தில் 5 நாள் தங்கியிருந்து சதை வீங்கி வெடிக்கச் செய்யும்.- 1943-ல் வெளிவந்த, திருச்சி தென்னூர் தி. அர. நடேசன் பிள்ளை எழுதிய‘தமிழர் (திராவிடர்) மதச்சுருக்கம்’ நூலிலிருந்து..
அவனது குடிமக்கள் நீண்ட வாழ்நாளோடு வாழ்ந்தனர். இளமையில் எவரும் மாளவில்லை. இதனால் மிக்க நிறைவு கொண்ட சொர்க்கவாசிகள் {தேவர்கள்}, நான்கு வேதங்களின் {விதிகளின்} படி, மனிதர்களால் அவர்களுக்குக் காணிக்கை அளிக்கப்படும் நெய், உணவு ஆகியவற்றை அடைந்தனர். அவனது {ராமனின்} ஆட்சிப்பகுதிகளில் ஈக்களோ, கொசுக்களோ, இரைதேடும் விலங்குகளோ, நஞ்சுமிக்க ஊர்வனவோ எதுவும் இல்லை [3]. அநீதியான போக்கு, பேராசை, அறியாமை ஆகியவற்றைக் கொண்ட எவரும் அங்கு இல்லை. அனைத்து (நான்கு) வகைக் குடிமக்களும், நீதிமிக்க இனிமையான செயல்பாடுகளிலேயே ஈடுபட்டனர்.
[3] மன்மதநாததத்தரின் பதிப்பில் இன்னும் சற்றுக் கூடுதலாக "உயிரினங்கள் எதுவும் நீரில் மூழ்கி இறக்கவில்லை; நெருப்பு எந்த உயிரினத்தையும் எரிக்கவில்லை" என்று இருக்கிறது.
அதே வேளையில், ஜனஸ்தானத்தில் பிதுர்களுக்கு வழங்கப்படும் காணிக்கைகளையும், தேவர்களை வழிபடுவதையும் தடுத்துக் கொண்டிருந்த ராட்சசர்களைக் கொன்ற தலைவன் ராமன், அந்தக் காணிக்கைகளும், வழிபாடுகளும் மீண்டும் பிதுர்களுக்கும், தேவர்களுக்கும் அளிக்கப்படும்படி ஆவன செய்தான். மனிதர்கள் ஒவ்வொருவரும் ஆயிரம் பிள்ளைகளால் அருளப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளைத் தங்கள் வாழ்நாளாகக் கொண்டு வாழ்ந்தனர். முதியவர்கள் தங்களின் இளையவர்களுக்கு எப்போதும் சிராத்தம் செய்ததில்லை [4].
[4] அப்படிச் செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை. அஃதாவது இளவயது மரணங்கள் ஏற்படவில்லை.
இளமையான வடிவமும், அடர்நீல நிறமும், சிவந்த கண்களும், மதயானையின் நடையும், கால் முட்டுகளை அடையும் கரங்களும் {மிக நீண்ட கைகள்}, சிங்கம் போன்ற அழகிய, பெரிய தோள்களும், பெரும் பலமும் கொண்ட ராமன், அனைத்து உயிர்களாலும் அன்புடன் விரும்பப்பட்டு, பதினோராயிரம் {11,000} ஆண்டுகளுக்குத் தன் நாட்டை ஆண்டான். அவனது {ராமனது} குடிமக்கள் எப்போதும் அவனது பெயரை உச்சரித்தனர். ராமன் தன் நாட்டை ஆண்டுகொண்டிருந்த போது உலகமே மிக அழகாக ஆனது. இறுதியாகப் பூமியில் தன் குலவழியைக் கொண்ட எட்டு வீடுகளை நிறுவிய பிறகு [5], தன் நால்வகைக் குடிகளையும் [6] தன்னுடன் அழைத்துக் கொண்டு சொர்க்கத்திற்குச் சென்றான்.
[5] எட்டுவிதமான ராஜவம்சத்தைப் பூமியில் நிறுவினான் என்று பொருள் கொள்ள வேண்டும்.[6] “ராமனின் ஆளுகைக்குள் இருந்த நால்வகை உயிரினங்களாவன (1) முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பவை {Oviparous} (2) குட்டியை ஈன்று பெறுபவை {Viviparous} (3) வியர்வை போன்று கழிவுப்பொருள்களில் இருந்து பிறப்பவை (4) தாவரங்கள் ஆகியவையே” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {ராமனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.
வேறொரு பதிப்பில் இப்பகுதி இன்னும் சற்று விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இவ்வளவே உள்ளது.
ஆங்கிலத்தில் | In English |