Tuesday, May 31, 2016

மன்னன் பகீரதன்! - துரோண பர்வம் பகுதி – 060

King Bhagiratha! | Drona-Parva-Section-060 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 30)

பதிவின் சுருக்கம் : பகீரதனின் கதையைச் சொன்ன நாரதர்; கங்கையை மகளாய் அடைந்த பகீரதன்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…


நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, மன்னன் பகீரதனும் இறந்ததாகவே நாம் கேட்டிருக்கிறோம். கங்கையின் கரைகளைத் தங்கத்தால் ஆன படித்துறைகளால் மறைத்து, அவற்றைத் தன் பெயரால் “பாகீரதம்” [1] என்று அழைக்கச் செய்தான்.


[1] “பகீரதப் படித்துறை {Bhagirath Ghat} என அழைக்கப்படும் இவை, அந்தப் புனிதமான ஓடையை எளிதாக அடையக்கூடிய வழிகளாகும் {படித்துறைகளாகும்}” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரையும் விஞ்சிய அவன் {பகீரதன்}, தங்க அபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஆயிரம் {1000} காரிகையரை பிராமணர்களுக்கு ஆயிரம் முறை தானமளித்தான். அந்தக் காரிகையர் அனைவரும் தேர்களில் இருந்தனர். ஒவ்வொரு தேரிலும் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு தேருக்குப் பின்பும் நூறு {100} பசுக்கள் இருந்தன. ஒவ்வொரு பசுவுக்கு பின்பும் (பல) செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் இருந்தன.

மன்னன் பகீரதன், தன் வேள்விகளில் அபரிமிதமான பரிசுகளைக் கொடுத்தான். அந்தக் காரணத்துக்காகவே பெரும் மனிதக் கூட்டம் அங்கே கூடியது. இதனால் பீடிக்கப்பட்ட கங்கை வலியை மிகுதியாக உணர்ந்து, “என்னைக் காப்பாயாக” என்று சொல்லி அவனது {பகீரதனின்} மடியில் அமர்ந்தாள். பழங்காலத்தில் இப்படிக் கங்கை அவனது மடியில் அமர்ந்ததால், எப்படித் தெய்வீக நர்த்தகி ஊர்வசி அவனது மகளாக அறியப்பட்டாளோ, அதே போல அவளும் {கங்கையும்} அவனது {பகீரதனது} பெயரால் {பாகீரதி என்று} அழைக்கப்பட்டாள். மன்னனின் மகளான அவள் {கங்கை}, (ஒரு மகனைப் போல அவனது மூதாதையருக்கு முக்தி அளித்ததன் விளைவாக) அவனது மகனாகவும் [2] ஆனாள்.

[2] பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்த நிகழ்வை வனபர்வம் பகுதி 108 மற்றும் 109ல் காணலாம் 

இனிமையான பேச்சும், தெய்வீக ஒளியும் கொண்ட கந்தர்வர்கள் மனம்நிறைந்து போய், முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள் ஆகியோர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவை யாவையும் பாடினர். இப்படியே, ஓ! சிருஞ்சயா, பெருங்கடலை அடையும் கங்கா தேவி, (பிராமணர்களுக்கு) அபரிமிதமான பரிசுகளுடன் வேள்விகளை நடத்தியவனும், இக்ஷ்வாகுவின் வழித்தோன்றலுமான தலைவன் பகீரதனைத் தன் தந்தையாகத் தேர்ந்தெடுத்தாள்.

அவனது வேள்விகள் எப்போதும் இந்திரனின் தலைமையான தேவர்களால் (அவர்களின் இருப்பால்) அருளப்பட்டிருந்தன. தேவர்கள், அந்த வேள்விகளுக்கு உதவும் பொருட்டுத் தடைகள் அனைத்தையும் அகற்றித் தங்களுக்குரிய பங்குகளைப் பெற்றுக் கொண்டனர்.

பெரும் தவத்தகுதியைக் கொண்ட பகீரதன், பிராமணர்கள் விரும்பிய நன்மைகளை, அவர்களை அசையவிடாமல், அவர்கள் எங்கிருந்து கேட்டனரோ அங்கேயே கொடுத்தான். பிராமணர்களுக்குக் கொடுக்கமுடியாதது என அவனிடம் ஏதும் இருக்கவில்லை. அனைவரும் தாங்கள் ஆசைப்பட்ட அனைத்தையும் அவனிடம் பெற்றுக் கொண்டனர்.

இறுதியாக அந்த மன்னன் {பகீரதன்}, பிராமணர்களின் அருள் மூலமாகப் பிரம்ம லோகத்திற்கு உயர்ந்தான். சூரியனின் கதிர்களிலேயே வாழ்ந்த முனிவர்கள் எந்நோக்கத்திற்காகச் சூரியனிடமும், சூரியனின் அதிதேவதையிடமும் {பணிவிடை செய்யக்} காத்திருந்தனரோ, அதே நோக்கத்திற்காக மூவுலகங்களின் ரத்தினமான தலைவன் பகீரதனுக்காகவும் அவர்கள் காத்திருந்தனர் [3].

[3] வேறொரு பதிப்பில், பின்வருவது வேறு பாடமாகச் சொல்லப்பட்டுள்ளது: “எந்த மரங்கள் சொர்க்கத்தை நோக்கிப் பகீரதனைத் தொடர்ந்து சென்றனவோ, அவைகள் இன்னமும் ஈசுவரனான அவ்வரசனை அனுசரித்து வருவதற்கு விருப்பமுள்ளவைகளும் வணங்கினவைகளுமாக நிற்கின்றன”

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கும்} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {பகீரதனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.


ஆங்கிலத்தில் | In English