King Amvarisha! | Drona-Parva-Section-064 | Mahabharata In Tamil
(அபிமன்யுவத பர்வம் – 34)
பதிவின் சுருக்கம் : மன்னன் அம்பரீஷன் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த போர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…
நாரதர் {சஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, நாபாகனின் மகனான அம்பரீஷனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அவன் {அம்பரீஷன்} தனி ஒருவனாகவே ஆயிரம் மன்னர்களுடன் ஆயிரம் முறை போரிட்டிருக்கிறான். வெற்றியை விரும்பியவர்களும், ஆயுதங்களை அறிந்தவர்களுமான அந்த எதிரிகள், கடுஞ்சொற்களைக் கூறிக்கொண்டு அனைத்துப் புறங்களில் இருந்தும் அவனை {அம்பரீஷனை} எதிர்த்துப் போருக்கு விரைந்தனர்.
அவன் {அம்பரீஷன்}, தன் பலம், சுறுசுறுப்பு, பயிற்சியின் மூலம் தான் அடைந்த திறம் ஆகியவற்றின் துணையாலும், தன் ஆயுதங்களின் சக்தியாலும், அந்த எதிரிகளின் குடைகள், ஆயுதங்கள், கொடிமரங்கள், தேர்கள், வேல்கள் ஆகியவற்றை வெட்டித் தன் துயரைக் களைந்து கொண்டான். தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பிய அம்மனிதர்கள் {அந்த எதிரிகள்}, தங்கள் கவசங்களைக் களைந்து, (கருணைக்காக) அவனை {அம்பரீஷனை} வேண்டிக் கொண்டனர். "எங்களை நாங்கள் உம்மிடம் அளிக்கிறோம் {சரணடைகிறோம்}" என்று சொல்லி அவர்கள் அவனது பாதுகாப்பை வேண்டினர்.
அவர்களை அடக்கி, முழு உலகத்தையும் வென்ற அவன் {அம்பரீஷன்}, ஓ! பாவமற்றவனே {சிருஞ்சயா}, சிறந்த வகையிலான நூறு வேள்விகளைச் சாத்திரங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளின்படி செய்தான். (அவ்வேள்விகளில்) அனைத்து வகையிலும் இனிமையான தரம் கொண்ட உணவுவகைகள், பெரும் எண்ணிக்கையிலான மக்களால் உண்ணப்பட்டது. அவ்வேள்விகளில், பிராமணர்கள் மரியாதையுடன் வழிபடப்பட்டு, பெரிதும் நிறைவு செய்யப்பட்டனர். இன்பண்டங்கள் {மோதகங்கள்}, பூரிகள், அப்பளங்கள், சுவைமிகுந்த பெரிய முறுக்குகள், தேன்குழல்கள், மாக்கலந்த தயிர்ப்பச்சடிகள், பல்வேறு ருசியுள்ள தின்பண்டங்கள், பல்வேறு வகைகளிலான ரசங்கள், பல்வேறு தானியங்கள் கலந்த சோறு, சர்க்கரைப் பொங்கல், நன்கு தயாரிக்கப்பட்ட வாசனைமிகுந்த மென்மையான பணியாரங்கள், தெளிந்த நெய், தேன், பால், நீர், இனிய மோர், இனிமையான சுவை கொண்ட கனிகள் மற்றும் கிழங்குகள் ஆகியவற்றை மறுபிறப்பாள {பிராமண} வர்க்கத்தினர் உண்டனர்.
மேலும் மது பழக்கம் கொண்டவர்கள், இன்பமடையவேண்டி பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்டிருந்த போதையூட்டும் பானங்களை அதற்குரிய நேரத்தில் குடித்துத் தங்கள் இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு பாடினர். தாங்கள் குடித்தவற்றால் அதீதமாகப் போதையுண்ட சிலரைத் தவிர ஆடிக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் அம்பரீஷனைப் புகழ்ந்து பாடிக் கொண்டுமிருந்தனர். அதேவேளையில் பிறரோ {அதீத போதையுண்டவர்கள்}, தங்களை நிலையாக நிறுத்திக் கொள்ள முடியாமல் பூமியில் விழுந்தனர் [1].
[1] வேறு ஒரு பதிப்பில் இவ்வரிகள், "குடிப்பவர்கள் மயக்கத்தை உண்டு பண்ணக்கூடிய சாராய முதலானவைகளைப் பாவத்துக்குக் காரணமாயிருப்பவைகளென்று அறிந்தும், தங்களுக்கு சுககரமென்று எண்ணிப் பாட்டுக்களோடும், வாத்தியங்களோடும் இஷ்டபடி குடித்தார்கள். அவ்விடத்தில், குடிவெறி கொண்ட சிலர் காதைகளைக் கானஞ்செய்தார்கள்; களித்தவர்களாகிப் படிக்கவும் படித்தார்கள்" என்று இருக்கின்றன.
அவ்வேள்விகளில் மன்னன் அம்பரீஷன், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மன்னர்களின் நாடுகளை (தன்னால் வேள்விகளில் நியமிக்கப்பட்டிருந்த) நூறு லட்சம் {10 Million - 10,000,000} புரோகிதர்களுக்குத் தானமளித்தான். பல்வேறு வகையான வேள்விகளைச் செய்து முடித்த அந்த மன்னன் {அம்பரீஷன்}, புனித நீராடிய மணிமுடி கொண்டவர்களும், தங்கக் கவசமணிந்திருந்தவர்களும், தங்கள் தலைக்குமேலே வெண்குடை கொண்டவர்களும், தங்கத் தேரில் அமர்ந்திருந்தவர்களும், அற்புத ஆடைகள் அணிந்திருந்தவர்களும், தொண்டர்கள் பலரைக் கொண்டவர்களும், செங்கோலைக் கொண்டவர்களும், பொக்கிஷங்களையுடையவர்களுமான பெரும் எண்ணிக்கையிலான இளவரசர்களையும், மன்னர்களையும் பிராமணர்களுக்குத் தானமாக அளித்தான்.
அவன் செய்ததைக் கண்டப் பெரும் முனிவர்கள் மிகவும் மகிழ்ந்து, "தாராளக் கொடை தரும் மன்னன் அம்பரீஷன் இப்போது செய்வதைப் போல, கடந்த காலத்து மனிதர்களில் எவரும் செய்ததில்லை, எதிர்காலத்திலும் எவராலும் செய்ய முடியாது" என்றனர்.
ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {அம்பரீஷனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.
ஆங்கிலத்தில் | In English |