Thursday, June 02, 2016

மன்னன் சசபிந்து! - துரோண பர்வம் பகுதி – 065

King Sasavindu! | Drona-Parva-Section-065 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 35)

பதிவின் சுருக்கம் : மன்னன் சசபிந்துவின் கதையைச் சொன்ன நாரதர்; அவனுடைய மனைவிகளும், பிள்ளைகளும்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…


நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, மன்னன் சசபிந்துவும் {Sasavindu} [1] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். பெரும் அழகும், கலங்கடிக்கமுடியாத ஆற்றலும் கொண்ட அவன் {சசபிந்து}, பல்வேறு வேள்விகளைச் செய்தான். அந்த உயர் ஆன்ம ஏகாதிபதி {சசபிந்து} நூறாயிரம் {ஒரு லட்சம்- 100,000} மனைவியரைக் கொண்டிருந்தான். அந்த மனைவியர் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் {1000} மகன்கள் பிறந்தனர்.


[1] வேறொரு பதிப்பில் இந்தப் பெயர் சசிபிந்து என்று குறிப்பிடப்படுகிறது.

அந்த இளவரசர்கள் அனைவரும் பெரும் ஆற்றல் கொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் கோடிக்கணக்கான வேள்விகளைச் செய்தனர். வேதங்களை அறிந்தோரான அம்மன்னர்கள் {சசபிந்துவின் பிள்ளைகள்} முதன்மையான வேள்விகள் பலவற்றைச் செய்தனர். (போர் நேரும் போதெல்லாம்) அவர்கள் அனைவரும் தங்கக் கவசங்களைப் பூண்டனர். அவர்கள் அனைவரும் சிறந்த வில்லாளிகளாகவும் இருந்தனர். சசபிந்துவுக்குப் பிறந்த இந்த இளவரசர்கள் அனைவரும் குதிரை வேள்விகளையும் செய்தனர்.

அவர்களது தந்தையான {சசபிந்து}, தான் செய்த குதிரை வேள்விகளில், தன் மகன்களான அவர்கள் அனைவரையும் (வேள்விக் கொடைகளாக) பிராமணர்களுக்குத் தானம் செய்தான். அந்த இளவரசர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் நூறு நூறாகத் தேர்களும், யானைகளும், தங்க ஆபரணங்கள் பூண்ட அழகிய கன்னிகையரும் இருந்தனர். ஒவ்வொரு கன்னிகையுடன் நூறு யானைகளும்; ஒவ்வொரு யானையுடன் நூறு தேர்களும், ஒவ்வொரு தேருடன் தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட நூறு குதிரைகளும் இருந்தன. அந்தக் குதிரைகள் ஒவ்வொன்றுடனும் ஆயிரம் பசுக்களும், ஒவ்வொரு பசுவுடன் ஐம்பது ஆடுகளும் இருந்தன.

உயர்வாக அருளப்பட்டிருந்த சசபிந்து, அந்தப் பெரும் குதிரை வேள்வியில் தன் அளவிலா செல்வங்களைப் பிராமணர்களுக்குத் தானமளித்தான். அவனுடைய பிற குதிரை வேள்விகளில், மரத்தினால் எவ்வளவு வேள்விக்கம்புகள் {யூபஸ்தம்பங்கள்} இருந்தனவோ, அவற்றை விட எண்ணிக்கையில் இரண்டு மடங்கு அதிகமாக, தங்கத்தாலான வேள்விக்கம்புகளை அந்தப் பெரும் குதிரை வேள்வியில் ஊன்றச் செய்தான். இரண்டு மைல்கள் உயரத்திற்கு உணவுகளாலும், பானகங்களாலும் ஆன மலைகள் அங்கே இருந்தன. அவனது குதிரை வேள்வி முடிந்த போது, உணவாலும், பானகங்களாலும் ஆன அது போன்ற பதிமூன்று மலைகள் (கைப்படாமல்) மிஞ்சின [2]. அவனது நாடு, நன்கு உண்டு, மனநிறைவுடன் இருந்த மக்களால் நிறைந்திருந்தது. அது {அந்த நாடு} தீமையான அத்துமீறல்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டிருந்தது, மக்களும் முற்றான மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். {தன் நாட்டைப்} பல நீண்ட வருடங்களுக்கு ஆட்சி செய்த சசபிந்து, இறுதியாகச் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.

[2] வேறொரு பதிப்பில், "அந்த அரசனுடைய அஸ்வமேதயாகம் முடிந்த பிறகும், ஒரு குரோச உயரமுள்ளவைகளும், பர்வதம் போலப் பிரகாசிக்கின்றவைகளுமான பக்ஷ்யங்கள், அன்னபானாதி வஸ்துக்கள் இவற்றின் பதின்மூன்று குவியல்கள் மிகுந்தன" என்று இருக்கிறது.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {சசபிந்துவே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.


ஆங்கிலத்தில் | In English