King Yayati! | Drona-Parva-Section-063 | Mahabharata In Tamil
(அபிமன்யுவத பர்வம் – 33)
பதிவின் சுருக்கம் : மன்னன் யயாதின் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; ஆசைகளைத் துறந்த யயாதி காட்டுக்குச் சென்றது; அவனது மரணம்…
நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, நகுஷனின் மகனான யயாதியும் [1] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். நூறு ராஜசூயங்களையும், நூறு குதிரை வேள்விகளையும், ஆயிரம் பௌண்டரீகங்களையும், நூறு வாஜபேயங்களையும், ஆயிரம் அதிராத்திரங்களையும், எண்ணிலடங்கா சாதுர்மாஸ்யங்களையும், பல்வேறு அக்நிஷ்டோமங்களையும், இன்னும் பலவித வேள்விகள் பிறவற்றையும் அவன் செய்தான். அவை அனைத்திலும் பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளைக் கொடுத்தான்.
[1] யயாதியின் கதை மகாபாரதத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.
மிலேச்சர்கள், பிராமணர்களை வெறுப்போர் ஆகியோரிடம் பூமியில் நிலைத்திருந்த செல்வங்கள் அனைத்தையும் முதலில் எண்ணிப் பார்த்த அவன் {யயாதி}, {அவற்றைக் கவர்ந்து} பிராமணர்களுக்கு அவற்றைத் தானமாகக் கொடுத்தான். தேவர்களும் அசுரர்களும் போருக்காக அணிவகுத்த போது, மன்னன் யயாதி தேவர்களுக்கு உதவி செய்தான்.
பூமியை நான்கு பகுதிகளாகப் பிரித்த அவன் {யயாதி}, அவற்றை நான்கு மனிதர்களுக்குத் தானமளித்தான். பல்வேறு வேள்விகளைச் செய்து, (தன் மனைவியரான) உசனஸின் {சுக்கிரனின்} மகளான தேவயானியிடமும், சர்மிஷ்டையிடமும் சிறந்த வாரிசுகளைப் பெற்றவனும், தேவனைப் போன்றவனுமான மன்னன் யயாதி, தெய்வீகச் சோலைகளில் இரண்டாவது வாசவனை {இந்திரனைப்} போலத் தன் விருப்பப்படித் திரிந்தான்.
வேதங்கள் அனைத்தையும் அறிந்த அவன் {யயாதி}, ஆசைகளில் ஈடுபட்டாலும் கூட நிறைவடையாத நிலையைக் கண்டு, தன் மனைவியரிடம், “இந்தப் பூமியில் நெல், கோதுமை {தானியம்}, தங்கம், விலங்குகள், பெண்கள் ஆகியவை எவ்வளவு உண்டோ, அவ்வளவும் கூட {எதுவும்} ஒரு மனிதனுக்குப் போதுமானதாக இருக்காது {நிறைவைத் தராது}. இதையெண்ணும் ஒருவன், மனநிறைவை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று சொல்லிக் காட்டுக்குச் சென்றான். இப்படியே தன் விருப்பங்கள் அனைத்தையும் துறந்து மனநிறைவை அடைந்த தலைவன் யயாதி, (தன் மகனை {பூருவை}), அரியாசனத்தில் நிறுவிவிட்டுக் காட்டுச் சென்றான்.
ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {யயாதியே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.
ஆங்கிலத்தில் | In English |