Friday, June 03, 2016

மன்னன் ரந்திதேவன்! - துரோண பர்வம் பகுதி – 067

King Rantideva! | Drona-Parva-Section-067 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 37)

பதிவின் சுருக்கம் : மன்னன் ரந்திதேவனின் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…


நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, சங்கிருதியின் [1] மகன் ரந்திதேவனும் [2] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த உயர் ஆன்ம மன்னன் {ரந்திதேவன்}, தன் வீட்டுக்கு {அரண்மனைக்கு} விருந்தினர்களாக வரும் பிராமணர்களுக்கு, அமிர்தத்தைப் போன்ற சிறந்த உணவை இரவிலும், பகலிலும் பரிமாறுவதற்காக இருநூறாயிரம் {இரண்டு லட்சம் 2,00,000} சமையற்கலைஞர்களைக் கொண்டிருந்தான்.


[1] கங்குலியில் இங்கே பிழையாகச் சிருஞ்சயன் என்றிருக்கிறது. வேறொரு பதிப்பில் இந்தப் பெயர் சங்கிருதி என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இந்தப் பெயர் சௌகிருதி {Saukriti} என்றிருக்கிறது. Puranic Encyclopediaவில் இந்தப் பெயர் சங்கிருதி {Sankrti} என்று இருக்கிறது. நாமும் சங்கிருதி என்றே கொள்கிறோம்.

[2] வனபர்வம் பகுதி 207ல் ரந்திதேவனைக் குறித்த சிறு குறிப்பு உள்ளது. பின்னால் வரப்போகும் சாந்தி பர்வம் மற்றும் அனுசாசனப் பர்வங்களிலும் இவனைப் பற்றிய குறிப்புகள் உண்டு.

அந்த மன்னன் {ரந்திதேவன்}, நியாயமான வழிகளில் ஈட்டிய தன் செல்வத்தைப் பிராமணர்களுக்குத் தானமளித்தான். வேதங்களைக் கற்ற அவன், தன் எதிரிகளை நியாயமான போரின் மூலம் அடக்கினான். கடும் நோன்புகளை நோற்று, முறையான வேள்விகளைச் செய்வதில் எப்போதும் ஈடுபடும் அவனிடம் {ரந்திதேவனிடம்}, சொர்க்கத்திற்குச் செல்ல விரும்பும் எண்ணற்ற விலங்குகள் தானாக வந்து சேர்ந்தன [3]. அந்த மன்னனின் {ரந்திதேவனின்} அக்னிஹோத்ரத்தில் பலியிடப்படும் விலங்குகளின் பெரும் எண்ணிக்கையால், அவனது மடைப்பள்ளியில் {சமையலறையில்} தேக்கப்படும் தோற்குவியல்களில் இருந்து பாயும் சுரப்புகள் உண்மையான ஆறு ஒன்றையே உண்டாக்கிய காரணத்தால், அது {அந்த ஆறு} சர்மண்வதி என்று அழைக்கப்படலாயிற்று [4].

[3] “வேள்விகளில் கொல்லப்படும் விலங்குகள் சொர்க்கத்திற்குச் செல்வதாக நம்பப்படுகிறது” என இங்கே விளக்குகிறார் கங்குலி.

[4] “இது நவீன சம்பல் நதி” என்று கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இவ்வரி, “அந்த அரசனுடைய யாகசாலையிலுள்ள தோற்குவியலிலிருந்து பெருகி ஓடிய பரிசுத்தமான உத்தம நதியானது சர்மண்வதி என்று பிரசித்தி பெற்றது” என்றிருக்கிறது.

“நான் உமக்கு நிஷ்கங்களைக் கொடுக்கிறேன்”, “நான் உமக்கு நிஷ்கங்களைக் கொடுக்கிறேன்” என்ற வார்த்தைகளையே அவன் இடையறாது உச்சரித்துக் கொண்டு, பிராமணர்களுக்குப் பிரகாசமான தங்கத்தாலான நிஷ்கங்களை {பொன் நாணயங்களை} இடையறாமல் தானமளித்துக் கொண்டிருந்தான். “நான் உமக்குக் கொடுக்கிறேன்”, “நான் உமக்குக் கொடுக்கிறேன்” என்ற இந்த வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே ஆயிரக்கணக்கான நிஷ்கங்களை அவன் தானமளித்தான். பிராமணர்களிடம் மென்மையான வார்த்தைகளைப் பேசும் அவன், மீண்டும் மீண்டும் நிஷ்கங்களைத் தானமளித்தான்.

ஒரே நாளில் இது போன்ற ஒரு கோடி நாணயங்களைத் தானமளித்த பிறகு, தான் மிகக் குறைவாகவே தானமளித்திருப்பதாக அவன் எண்ணினான். எனவே, மீண்டும் மீண்டும் அவன் தானமளித்துக் கொண்டிருந்தான். அவன் தானமளித்த அளவுக்குத் தானமளிக்க இயன்றவன் வேறு எவன் இருக்கிறான்? அந்த மன்னன் {ரந்திதேவன்}, “பிராமணர்களின் கைகளில் நான் செல்வத்தைக் கொடுக்கவில்லை என்றால் [5], நிலையான பெரும் துயரம் எனதாகும் என்பதில் ஐயமில்லை” என்று எண்ணியே செல்வத்தைத் தானமளித்தான்.

[5] வேறொரு பதிப்பில் இவ்வரி, “பிராமணர்களின் கை என் சமீபத்தைவிட்டு விலகினால் எனக்கு நீங்காத பெரிய துக்கம் வந்துவிடும் என்பதில் ஐயமில்லை என்று சொல்லிக் கொண்டே தனங்களைக் கொடுத்தான்” என்றிருக்கிறது.

அவன் {ரந்திதேவன்}, நூறாண்டுகளில் ஒவ்வொரு அரைத்திங்களிலும் {பக்ஷத்திலும்}, ஆயிரம் பிராமணர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கக் காளையையும், அதைத் தொடர்ந்து நூறு பசுக்களையும், நிஷ்கங்களில் எண்ணூறு துண்டுகளையும் கொடுத்தான் [6]. அவனது அக்னிஹோத்ரத்திற்குத் தேவைப்பட்ட பொருட்கள் அனைத்தையும், அவனது பிற வேள்விகளுக்குத் தேவைப்பட்டவை அனைத்தையும், காருகங்கள் {கமண்டலங்கள்}, நீர்க்குடங்கள், தட்டுகள், படுக்கைகள், விரிப்புகள், வாகனங்கள், மாளிகைகள், வீடுகள், பல்வேறு விதங்களிலான மரங்கள், பல்வேறு விதங்களிலான உணவுப் பொருட்கள் உட்பட அனைத்தையும் அவன் {ரந்திதேவன்} முனிவர்களுக்குத் தானமளித்தான். ரந்திதேவன் கொண்டிருந்த உடைமைகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் தங்கத்தாலானவையாகவே இருந்தன.

[6] வேறொரு பதிப்பில் இவ்வரி, “நூறு பசுக்களால் பின்தொடரப் பெற்றவையும், சுவர்ணத்தினால் நிறைக்கப்பட்டவையுமான விருஷபங்களையும் ஆயிரமாயிரமாகத் தானஞ்செய்தான், நூற்றெட்டு ஸ்வர்ணங்கொண்ட தனத்தை நிஷ்கமென்று சொல்கிறார்கள்” என்று இருக்கிறது. இந்த விவரிப்பே சரியானதாகப் படுகிறது.

பழங்காலத்து வரலாறுகளை அறிந்தோர், மனிதசக்திக்கு அப்பாற்பட்ட ரந்திதேவனின் செல்வாக்கைக் கண்டு, “இப்படித் திரண்டிருக்கும் செல்வத்தை நாங்கள் குபேரனின் வசிப்பிடத்திலும் கண்டதில்லை எனும்போது, மனிதர்களைக் குறித்துச் சொல்வதற்கு என்ன இருக்கிறது?” என்ற பாடலைப் பாடினர். வியந்து போன மக்களும், “ரந்திதேவனின் நாடும் தங்கத்தாலானதுதான் ஐயமில்லை” என்று பேசிக் கொண்டனர் [7].

[7] Vaswoksara என்பதற்கு “தங்கத்தாலானது” என்று பொருள். இது பெண்பாற்பெயருக்கான உரிச்சொல்லாகும். தனியியல்பைத் தவிர்த்துப் பார்த்தால் இந்த வரி, “ரந்திதேவனின் நகரம் தங்கத்தாலானதாகும்” என்ற பொருளைத் தரும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இவ்வரி “அந்த ஐஸ்வர்யத்தில் வியப்புற்றவர்கள், ’நிச்சயமாக இந்நகரியானது அளகைதான்’ எனச் சொன்னார்கள்” என்று இருக்கிறது.

ரந்திதேவனின் வசிப்பிடத்தில் விருந்தினர்கள் கூடியிருக்கும் அத்தகு இரவுகளில், (அவர்களுக்கு உணவிடுவதற்காக) இருபத்தோராயிரம் பசுக்கள் [8] பலியிடப்பட்டன. எனினும், குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அரச சமயற்கலைஞர்கள், “நீங்கள் விரும்பிய அளவுக்கு ரசத்தைப் பருகுங்கள், பிற நாட்களில் உள்ளதைப் போல இன்று இறைச்சி அதிகமில்லை” என்று சொல்ல வேண்டியிருந்தது.

 [8] கங்குலியின் பதிப்பில் இங்கே Kine என்று இருப்பதால் இதைப் பசுக்கள் என்று நான் மொழிபெயர்த்திருக்கிறேன். வேறொரு பதிப்பிலும் இங்கே பசுக்கள் என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சம்ஸ்க்ருத மூல வரிகளில் Alabhyanta tadA gAvaH sahasrANyekaviMshatiH. tatra sma sUdAH kroshanti sumR^iShTamaNikuNDalAH.. 7-67-17  என்பதில் காவ: gAvaH (பசுக்கள்) என்ற சொல் உள்ளது. சம்ஸ்க்ருத மூல வரிகளை ஒப்பு நோக்கித் தெளிவுப்படுத்திய ஜடாயு அவர்களுக்கு நன்றி. மன்னன் ரந்திதேவன் இறைச்சியுண்டதில்லை என்ற குறிப்பு அனுசாசன பர்வத்தில் காணக்கிடைக்கிறது. இங்கேயும் ரந்திதேவன், தன் விருந்தினர்களுக்கு இறைச்சியைப் படைத்தான் {பிராமணர்களுக்கு அல்ல} என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடாதே என்பதற்காகவே இவ்வளவு விளக்கமும்...

ரந்திதேவனுக்குச் சொந்தமாக எஞ்சியிருந்த தங்கத்தையும், தன் வேள்விகளில் ஒன்று நடந்து கொண்டிருந்த போது, அந்த எஞ்சியதையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான். நெருப்பில் காணிக்கையாகத் தெளிந்த நெய் ஊற்றப்படும்போது, அவன் {ரந்திதேவன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவற்றைத் தேவர்களும், சிராத்தங்களில் அளிக்கப்படும் உணவைப் பிதுர்களும் பெற்றுக் கொண்டனர். மேன்மையான பிராமணர்கள் அனைவரும் அவர்களது விருப்பங்கள் அனைத்தையும் {அவற்றால் நிறைவடையும் வழிகளை} அவனிடம் அடைந்தனர்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {ரந்திதேவனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.


ஆங்கிலத்தில் | In English