Friday, June 03, 2016

மாமன்னன் பரதன்! - துரோண பர்வம் பகுதி – 068

Imperial Bharata! | Drona-Parva-Section-068 | Mahabharata In Tamil

(அபிமன்யுவத பர்வம் – 38)

பதிவின் சுருக்கம் : துஷ்யந்தனின் மகனான மாமன்னன் பரதனின் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…


நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, துஷ்யந்தனின் [1] மகன் பரதனும் மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். குழந்தையாக அவன் {பரதன்} காட்டில் வாழும் போதே, பிறரால் செய்ய முடியாத சாதனைகளைச் செய்தான். பெரும் பலம் கொண்ட அவன் {பரதன்}, பனி போன்று வெள்ளையாகவும், பற்களையும், நகங்களையும் ஆயுதங்களாகக் கொண்டவையுமான சிங்கங்களின் ஆற்றலை இழக்கச் செய்து, அவற்றை இழுத்து வந்து (தன் விருப்பப்படி) கட்டிப்போட்டான். மேலும் அவன் {பரதன்}, (சிங்கங்களை விட) இரக்கமற்றவையும், மூர்க்கமானவையுமான புலிகளையும் அடக்கி, அவற்றைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.


[1] துஷ்யந்தனைக் குறித்து ஆதிபர்வம் பகுதி 68 முதல் பகுதி 74 வரை சொல்லப்பட்டுள்ளது.

பெரும் வலிமைமிக்க இரைதேடும் பிற விலங்குகளையும், மனோசிலை {சிவப்பு ஈயம் [அ] அரிதாரம்} பூசப்பட்டு, பிற திரவக் கனிமங்களால் கறையேறிய பற்களுடனும், தந்தங்களுடனும் கூடிய பெரும் யானைகளையும் பிடித்து, அவற்றைத் தன் கட்டுக்குள் கொண்டுவந்து, அவற்றின் வாய்களை வறண்டு போகச்செய்தான், அல்லது அவற்றைப் புறமுதுகிட்டோடும்படி விரட்டினான். பெரும் வலிமை கொண்ட அவன் {பரதன்}, எருமைகளில் வலிமைமிக்க எருமைகளை இழுத்து வந்தான். தன் பலத்தின் விளைவால் அவன் {பரதன்}, செருக்குமிக்கச் சிங்கங்களையும், வலிமைமிக்கச் சிருமரங்களையும் {மான்களையும்}, கொம்பு படைத்த காண்டாமிருகங்களையும், இன்னும் பிற விலங்குகளையும் நூற்றுக்கணக்கில் அடக்கினான். அவற்றின் கழுத்தைக் கட்டி, கிட்டத்தட்ட அவை உயிரைவிடும் அளவுக்கு நசுக்கிய பிறகு, அவற்றை அவன் விட்டான் {விடுவித்தான்}. அவனது அந்தச் சாதனைகளுக்காகவே (அவனோடு வாழ்ந்த) மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் அவனைச் சர்வதமனன் (அனைத்தையும் கட்டுப்படுத்துவபன்) என்று அழைத்து வந்தனர். இறுதியில், அவன் அவ்வழியில் விலங்குகளுக்குக் கொடுமை செய்வதை அவனது தாய் {சகுந்தலை} தடுத்தாள்.

பெரும் ஆற்றலைக் கொண்ட அவன் {பரதன்}, யமுனையாற்றங்கரையில் நூறு குதிரை வேள்விகளைச் செய்தான், பிறகு, சரஸ்வதி ஆற்றங்கரையில் அது போன்ற முன்னூறும், கங்கை ஆற்றங்கரையில் நானூறும் {குதிரை வேள்விகளும்} செய்தான். இவ்வேள்விகளைச் செய்த பிறகு, அவன் {பரதன்}, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளை வழங்கி, மீண்டும் ஆயிரம் குதிரை வேள்விகளையும், நூறு ராஜசூயங்களையும், பெரும் வேள்விகளையும் செய்தான். மேலும், பிற வேள்விகளான அக்நிஷ்டோமம், அதிராத்ரம், உக்தியம், விஸ்வஜித் ஆகியவற்றையும், அவைகளுடன் ஆயிரமாயிரம் {பத்து லட்சம்} வாஜபேயங்களையும் எந்த இடையூறுமின்றிச் செய்து முடித்தான். இவை அனைத்தையும் செய்து முடித்த அந்தச் சகுந்தலையின் மகன் {பரதன்}, பிராமணர்களுக்குச் செல்வங்களைப் பரிசளித்து அவர்களை மனம்நிறையச் செய்தான்.

பெரும் புகழ் படைத்த அந்தப் பரதன், (தன் தாயான சகுந்தலையைத் தன் மகளாகவே வளர்த்த) கண்வருக்கு, மிகத் தூய்மையான {ஜம்பூநதம் என்ற} தங்கத்தாலான பத்து லட்சம் கோடி {பத்தாயிரம் பில்லியன் 10000,000,000,000} நாணயங்களைக் கொடுத்தான். இந்திரனின் தலைமையிலான தேவர்களும், பிராமணர்களும் அவனது வேள்விக்கு வந்து, நூறு வியாமங்கள் [2] அகலம் கொண்டதும் முற்றிலும் தங்கத்தாலானதுமான அவனது வேள்விக்கம்பை {யூபஸ்தம்பத்தை} நிறுவினர்.

[2] இரண்டு கரங்களையும் அகல நீட்டினால் வரும் அளவே வியாமமாகும் என்று கங்குலி இங்கே விளக்குகிறார்.

உன்னத ஆன்மா கொண்டவனும், எதிரிகள் அனைவரையும் வெல்பவனும், எதிரியால் வெல்லப்பட முடியாத ஏகாதிபதியும், பேரரசனுமான அந்தப் பரதன், அழகிய குதிரைகளையும், யானைகள், தேர்கள், தங்கத்தாலும், அனைத்து வகை அழகிய ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேர்கள், ஒட்டகங்கள், ஆடுகள், செம்மறியாடுகள், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள், செல்வங்கள், தானியங்கள், கன்றுகளுடன் கூடிய கறவை மாடுகள், கிராமங்கள், வயல்கள், பல்வேறு விதங்களிலான ஆடைகள் ஆகியவற்றையும், லட்சக் கணக்காகவும் கோடிக்கணக்காவும் பிராமணர்களுக்குத் தானமளித்தான்.

ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {மாமன்னன் பரதனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.


ஆங்கிலத்தில் | In English