Tuesday, July 05, 2016

திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 096

Satyaki rescued Dhrishtadyumna! | Drona-Parva-Section-096 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 12)

பதிவின் சுருக்கம் : பீமசேனன் ஜலசந்தனையும், யுதிஷ்டிரன் கிருதவர்மனையும், திருஷ்டத்யும்னன் துரோணரையும் எதிர்த்து விரைந்தது. துரோணரும் திருஷ்டத்யும்னனும் ஏற்படுத்திய பேரழிவு; போர்க்களத்தின் வர்ணனை; துரோணரின் மரணக்கணையில் இருந்து திருஷ்டத்யும்னனைக் காத்த சாத்யகி...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் அந்தக் கடும்போர் தொடங்கிய போது, மூன்று பிரிவுகளாகப் பிரிந்திருந்த கௌரவர்களை எதிர்த்துப் பாண்டவர்கள் விரைந்தனர். அந்தப் போரில் பீமசேனன் வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட ஜலசந்தனை எதிர்த்தும், யுதிஷ்டிரன் தன் துருப்புகளின் தலைமையில் நின்று கிருதவர்மனை எதிர்த்தும் விரைந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திருஷ்டத்யும்னன், சூரியன் தன் கதிர்களை ஏவுவதைப் போலே தன் கணைகளை இறைத்தபடி துரோணரை எதிர்த்து விரைந்தான். அப்போது, போரிடும் ஆவலுடன் கோபத்தால் நிறைந்திருந்த குருக்கள் மற்றும் பாண்டவர்களின் வில்லாளிகள் அனைவருக்கும் இடையில் அந்தப் போர் தொடங்கியது.


வீரர்கள் அனைவரும் அச்சமற்ற வகையில் ஒருவருடன் ஒருவர் போரிட்டதால் பயங்கரப் படுகொலைகள் நேர்ந்த போது, வலிமைமிக்கத் துரோணர் பாஞ்சாலர்களின் வலிமைமிக்க இளவரசனுடன் {திருஷ்டத்யும்னனுடன்} போரிட்டார். அம்மோதலில் அவர் {துரோணர்} ஏவிய கணைகளின் மேகங்கள் காண்போர் அனைவரையும் ஆச்சரியத்தில் நிறைத்தன. துரோணரும், பாஞ்சாலர்களின் இளவரசனும், தாமரைக்காட்டுக்கு ஒப்பாகத் தெரியும்படி ஆயிரக்கணக்கில் மனிதர்களின் தலைகளை வெட்டி போர்க்களத்தில் அவற்றை {தலைகளை} இறைத்தனர்.

ஒவ்வொரு படைப்பிரிவிலும், ஆடைகள், ஆபரணங்கள், ஆயுதங்கள், கொடிமரங்கள், கவசங்கள் ஆகியன விரைவில் தரையில் விரவிக் கிடந்தன. குருதிக் கறை படிந்த தங்கக் கவசங்கள் மின்னலுடன் கூடிய மேகங்களைப் போலத் தெரிந்தன. வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பிறர், முழுமையாக ஆறு முழ நீளம் கொண்ட தங்கள் பெரிய விற்களை வளைத்தபடி தங்கள் கணைகளால் யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களை வீழ்த்தினர். துணிவுள்ள உயர் ஆன்ம வீரர்களுக்கு இடையில் நடைபெற்ற அந்தப் பயங்கர ஆயுத மோதலில், வாள்கள், கேடயங்கள், விற்கள், தலைகள், கவசங்கள் ஆகியன எங்கும் விரவி கிடப்பது காணப்பட்டது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} எண்ணற்ற தலையில்லா முண்டங்கள், போர்க்களத்தின் மத்தியில் எழும்புவது காணப்பட்டது. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கழுகுகள், கங்கங்கள், நரிகள் ஆகியவையும், ஊனுண்ணும் விலங்குகள் பிறவும், வீழ்ந்துவிட்ட மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகளின் சதையை உண்டு, அவற்றின் குருதியைக் குடித்து, அல்லது அவற்றின் மயிர்களைப் பிடித்து இழுத்து, அல்லது அவற்றின் மஜ்ஜையை நக்கி, அல்லது அவற்றைக் கொத்தி, அவற்றின் உடல்களையும், அறுபட்ட அங்கங்களையும் இழுத்துக் கொண்டு, அல்லது அவற்றின் தலைகளைத் தரையில் உருட்டிக் கொண்டும் அங்கே இருந்தன.

போரில் திறம்வாய்ந்தவர்களும், ஆயுதங்களில் சாதித்தவர்களுமான போர்வீரர்கள், போரிட உறுதியாகத் தீர்மானித்து, புகழை மட்டுமே வேண்டி அந்தப் போரில் தீவிரமாகப் போரிட்டனர். களத்ததில் திரிந்த போராளிகள் பலர், வாள்வீரர்களின் பல்வேறு பரிமாணங்களைச் செய்து காட்டினர். போர்க்களத்தில் நுழைந்த மனிதர்கள் சினத்தால் நிறைந்து, கத்திகள், ஈட்டிகள், வேல்கள், சூலங்கள், போர்க்கோடரிகள், கதாயுதங்கள், பரிகங்கள் மற்றும் பிற வகை ஆயுதங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியும், வெறுங்கைகளாலும் கூட ஒருவரையொருவர் கொன்றனர். தேர்வீரர்கள் தேர்வீரர்களுடனும், குதிரைவீரர்கள், குதிரைவீரர்களுடனும், யானைகள், முதன்மையான யானைகளுடனும், காலாட்படை வீரர்கள் காலாட்படைவீரர்களுடனும் போரிட்டனர். முற்றிலும் பித்துப் பிடித்த மதங்கொண்ட யானைகள் பல உரக்கப் பிளிறிக் கொண்டு, விளையாட்டுக்களங்களில் செய்வதைப் போல ஒன்றையொன்று கொன்றன.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் கருதிப்பாராமல் போராளிகளுக்குள் நடைபெற்ற அந்தப் போரில், திருஷ்டத்யும்னன் தன் குதிரைகளோடு துரோணரின் குதிரைகளைக் கலக்க {மோதச்} செய்தான். காற்றின் வேகத்தைக் கொண்டவையும், புறாக்களின் வெண்மையைக் கொண்டவையும் {திருஷ்டத்யும்னனின் குதிரைகளும்}, இரத்தச் சிவப்பானவையுமான {துரோணரின் குதிரைகளுமான} அந்தக் குதிரைகள் போரில் ஒன்றோடொன்று கலந்து மிக அழகாகத் தெரிந்தன. உண்மையில் அவை, மின்னலோடு கூடிய மேகங்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பகைவீரர்களைக் கொல்பவனும், பிருஷதன் மகனுமான வீர திருஷ்டத்யும்னன், மிக அருகே வந்துவிட்ட துரோணரைக் கண்டு, தன் வில்லை விட்டுவிட்டு, கடுஞ்சாதனையைச் செய்வதற்காகத் தன் வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டான். அவன் {திருஷ்டத்யும்னன்} துரோணருடைய தேரின் ஏற்காலைப் பிடித்து அதற்குள் {துரோணரின் தேருக்குள்} நுழைந்தான். அவன் சில வேளைகளில் நுகத்தடியின் மத்தியிலும், சில வேளைகளில் அதன் இணைப்புகளிலும், சில வேளைகளில் குதிரைகளுக்குப் பின்பும் நின்றான். அப்படி அவன் {திருஷ்டத்யும்னன்} கையில் வாளுடன், துரோணரின் சிவப்பு குதிரைகளின் முதுகில் விரைவாக ஏறி நகர்ந்து கொண்டிருந்த போது, பின்னவரால் {துரோணரால்} அவனைத் தாக்குவதற்குத் தகுந்த வாய்ப்பைக் கண்டறியமுடியவில்லை. இவை அனைத்தும் எங்களுக்கு அற்புதம் நிறைந்ததாகத் தெரிந்தன. உண்மையில், உணவு மீது கொண்ட விருப்பத்தின் காரணமாகப் பருந்தானது காட்டுக்குள் பாய்வதைப் போலவே துரோணரின் அழிவுக்காகத் தன் தேரில் இருந்து பாய்ந்த திருஷ்டத்யும்னனின் பாய்ச்சலும் தெரிந்தது.

அப்போது துரோணர், நூறு சந்திரன்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த துருபதன் மகனின் {திருஷ்டத்யும்னனின்} கேடயத்தை ஒரு நூறு கணைகளால் அறுத்து, மேலும் பத்து கணைகளால் அவனது வாளையும் அறுத்தார். பிறகு அந்த வலிமைமிக்கத் துரோணர், அறுபத்துநான்கு கணைகளால் தம் எதிராளியின் குதிரைகளைக் கொன்றார். மேலும் இரண்டு பல்லங்களால் பின்னவனின் {திருஷ்டத்யும்னனின்} கொடிமரத்தையும் குடையையும் அறுத்து, பிறகு அவனது பார்ஷினி தேரோட்டிகள் இருவரையும் கொன்றார். மேலும் பெரும் வேகத்தோடு தம் வில்லின் நாணைத் தமது காது வரை இழுத்து, (எதிரியின் மீது) வஜ்ரத்தை வீசும் வஜ்ரதாரியைப் போல அவன் {திருஷ்டத்யும்னன்} மீது மரணக் கணையொன்றை ஏவினார்.

ஆனால், சாத்யகி, பதினான்கு கூரிய கணைகளால் துரோணரின் அந்த மரணக்கணையை அறுத்தான். இப்படியே அந்த விருஷ்ணி வீரன் {சாத்யகி}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, காட்டு மன்னனிடம் {சிங்கத்திடம்} அகப்பட்ட மானைப் போல, ஆசான்களில் முதன்மையான அந்த மனிதர்களில் சிங்கத்திடம் {துரோணரிடம்} அகப்பட்ட திருஷ்டத்யும்னனை மீட்டான். இப்படியே அந்தச் சிநிக்களின் காளை {சாத்யகி}, பாஞ்சாலர்களின் இளவரசனை {திருஷ்டத்யும்னனைக்} காத்தான். அந்தப் பயங்கரப் போரில் பாஞ்சாலர்களின் இளவரசனைக் காத்த சாத்யகியைக் கண்ட துரோணர், அவன் {சாத்யகி} மீது இருபத்தாறு கணைகளை விரைவாக ஏவினார். சிநியின் பேரனும் {சாத்யகியும்}, துரோணர் சிருஞ்சயர்களை விழுங்குவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, பதிலுக்கு இருபத்தாறு கணைகளால் பின்னவரின் {துரோணரின்} நடுமார்பில் துளைத்தான். அப்போது துரோணரை அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி} எதிர்த்துச் சென்ற போது, வெற்றியை விரும்பிய பாஞ்சாலத் தேர்வீரர்கள் அனைவரும், திருஷ்டத்யும்னனைப்  போரில் இருந்து விரைவாக விலக்கிச் சென்றனர்" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English