Sunday, July 03, 2016

புறமுதுகிட்ட சகுனி! - துரோண பர்வம் பகுதி – 095

Sakuni turned his back! | Drona-Parva-Section-095 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 11)

பதிவின் சுருக்கம் : துரோணரோடு மோதிய பாண்டவப்படையினர்; விராடனுடன் விந்தானுவிந்தர்களும், சிகண்டி மற்றும் திரௌபதியின் மகன்களோடு பாஹ்லீகனும், காசி இளவரசனோடு சைப்யனும், சாத்யகியோடு துச்சாசனனும், குந்திபோஜன் மற்றும் கடோத்கசனோடு அலம்புசனும், நகுலன் மற்றும் சகாதேவனோடு சகுனியும், யுதிஷ்டிரனோடு சல்லியனும், பீமசேனனுடன் விவிம்சதி, சித்திரசேனன் மற்றும் விகர்ணன் ஆகியோர் மோதியது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா, குருக்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடைபெற்ற அந்த அற்புதமான போரை விவரமாகச் சொல்கிறேன் கேளும். தமது வியூகத்தின் வாயிலில் {முகப்பில்} நின்று கொண்டிருந்த பரத்வாஜரின் மகனை {துரோணரை} அணுகிய பார்த்தர்கள், துரோணரின் படைப்பிரிவைப் பிளப்பதற்காக மூர்க்கமாகப் போரிட்டனர். துரோணரும் தம் படைகளின் துணையுடன், தமது வியூகத்தைப் பாதுகாக்க விரும்பி, புகழடைய முயன்று கொண்டிருந்த பார்த்தர்களுடன் போரிட்டார்.


கோபத்தால் தூண்டப்பட்ட அவந்தியின் விந்தனும், அனுவிந்தனும், உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} நன்மை செய்ய விரும்பி, பத்து கணைகளால் விராடனைத் தாக்கினர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விராடனும், போரில் பெரும் ஆற்றலுடன் திகழ்ந்த அவ்வீரர்கள் இருவரையும் அணுகி, அவர்களுடனும், அவர்களைப் பின்தொடர்ந்து வந்தவர்களுடனும் போரிட்டான். அவர்களுக்குள் நடைபெற்றதும், எல்லைகடந்த கடுமை கொண்டதுமான அந்தப் போரில் இரத்தம் தண்ணீராக ஓடியது. காட்டில் சிங்கத்திற்கும், மதங்கொண்ட, வலிமைமிக்க இரு யானைகளுக்கு இடையில் நேரும் மோதலுக்கு ஒப்பாக அஃது இருந்தது.

யக்ஞசேனனின் {துருபதனின்} வலிமைமிக்க மகன் {சிகண்டி}, உயிர்நிலைகளையே துளைக்கவல்ல, கடுமையான, கூரிய கணைகளால் அந்தப் போரில் மன்னன் பாஹ்லீகனைப் பலமாகத் தாக்கினான். கோபத்தால் நிறைந்த பாஹ்லீகனும், தங்கச் சிறகுகளைக் கொண்டவரையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான ஒன்பது நேரான கணைகளால் யக்ஞசேனன் மகனை {சிகண்டியை} ஆழமாகத் துளைத்தான். அடர்த்தியான கணைகள் மற்றும் ஈட்டிகளின் மழையுடன் அவ்வீரர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற அந்தப் போரானது மிகக் கடுமையடைந்தது. மருண்டோரின் அச்சங்களையும், வீரர்களின் இன்பத்தையும் அஃது அதிகரித்தது. அவர்களால் ஏவப்பட்ட கணைகள் ஆகாயத்தையும், திசைப்புள்ளிகள் அனைத்தையும் முழுமையாக மறைத்து, எதுவும் தெளிவாகக் காணமுடியாதபடி ஆக்கின.

துருப்புகளுக்குத் தலைமையில் நின்ற கோவாசனர்களின் மன்னன் சைப்பியன், அந்தப் போரில், யானையொன்று மற்றொரு யானையோடு போரிடுவதைப் போல வலிமைமிக்கத் தேர்வீரனான காசிகளின் இளவரசனோடு போரிட்டான். பாஹ்லீகர்களின் மன்னன் கோபத்தால் தூண்டப்பட்டு, ஐந்து புலன்களுக்கு எதிராகப் போராடும் மனத்தைப் போல வலிமைமிக்கத் தேர்வீரர்களான திரௌபதியின் மகன்கள் ஐயவரை எதிர்த்துப் போரிட்டான். அந்த இளவரசர்கள் ஐவரும், ஓ! உடல்படைத்தோரில் முதன்மையானவரே, உடலோடு எப்போதும் போராடும் புலன்நுகர்பொருட்களைப் போல அனைத்துப் பங்கங்களில் இருந்தும் தங்கள் கணைகளை ஏவி, அந்த எதிரியோடு {பாஹ்லீகனோடு} போரிட்டனர்.

உமது மகன் துச்சாசனன், கூர்முனைகள் கொண்ட ஒன்பது நேரான கணைகளால் விருஷ்ணி குலத்து சாத்யகியைத் தாக்கினான். பெரும் வில்லாளியான அந்தப் பலவானால் {துச்சாசனனால்} ஆழத் துளைக்கப்பட்டவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்டவனுமான சாத்யகி தன் புலனுணர்வை ஓரளவுக்கு இழந்தான் {சிறிது மயக்கமடைந்தான்}. விரைவில் தேற்றமடைந்த அந்த விருஷ்ணி குலத்தோன் {சாத்யகி}, கங்க இறகுகளிலான சிறகமைந்த பத்து கணைகளால் அந்த வலிமைமிக்க வில்லாளியான உமது மகனை {துச்சாசனனை} விரைவாகத் துளைத்தான். ஒருவரையொருவர் ஆழமாகத் துளைத்துக் கொண்டு, தங்கள் ஒவ்வொருவரின் கணைகளாலும் பீடிக்கப்பட்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரண்டு கின்சுகங்களை {பலாச மரங்களைப்} போல அபாரமாகத் தெரிந்தனர்.

குந்திபோஜனின் கணைகளால் பீடிக்கப்பட்ட {ராட்சசன்} அலம்புசன், கோபத்தால் நிறைந்து அழகாகப் பூத்துக் குலுங்கும் கின்சுகத்தை {பலாச மரத்தைப்} போலத் தெரிந்தான். பிறகு அந்த ராட்சசன், பல கணைகளால் குந்திபோஜனைத் துளைத்துத் தன் படையின் தலைமையில் நின்று பயங்கரக் கூச்சல்களையிட்டான். அந்த வீரர்கள் அந்தப் போரில் தங்களுக்குள் மோதிக் கொண்ட போது, பழங்காலத்தின் சக்ரனையும் {இந்திரனையும்}, அசுரன் ஜம்பனையும் போலத் துருப்புகள் அனைத்திற்கும் தெரிந்தனர். மாத்ரியின் மகன்கள் இருவரும் {நகுலனும், சகாதேவனும்}, கோபத்தால் நிறைந்து, தங்களுக்கு எதிராகப் பெரும் குற்றமிழைத்திருந்த காந்தார இளவரசன் சகுனியைத் தங்கள் கணைகளால் கடுமையாகத் தாக்கினர்.

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே நடந்த படுகொலைகள் பயங்கரமானவையாக இருந்தன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உம்மால் தோற்றுவிக்கப்பட்டு, கர்ணனால் வளர்க்கப்பட்டு, உமது மகன்களால் பாதுகாக்கப்பட்டதுமான (பாண்டவர்களின்) கோப நெருப்பு இப்போது பெருகி மொத்த உலகத்தையும் எரிக்கத் தயாராக இருக்கிறது. பாண்டு மகன்கள் இருவரின் கணைகளால் களத்தைவிட்டு புறங்காட்டி ஓட நிர்பந்திப்பட்ட சகுனி தன் ஆற்றலை வெளிப்படுத்த இயலாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அறியாதிருந்தான். அவன் புறமுதுகிட்டதைக் கண்டவர்களும் வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்தப் பாண்டுவின் மகன்கள் இருவரும் {நகுல, சகாதேவர்கள்}, பெரும் மலையின் மீது மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகத் திரள்களைப் போல அவன் {சகுனி} மீது மீண்டும் தங்கள் கணைகளைப் பொழிந்தனர். எண்ணற்ற நேரான கணைகளால் தாக்கப்பட்ட அந்தச் சுபலனின் மகன் {சகுனி}, வேகமான தன் குதிரைகளால் சுமக்கப்பட்டுத் துரோணரின் படைப்பிரிவை நோக்கி ஓடினான்.

துணிச்சல்மிக்கக் கடோத்கசன், அந்தப் போரில் ராட்சசன் அலம்புசனை நோக்கி தன்னால் இயன்றதைவிடச் சற்றே குறைவான மூர்க்கத்துடன் விரைந்தான். பழங்காலத்தில் ராமனுக்கும், ராவணனுக்கும் இடையில் நடந்ததைப் போல அந்த இருவருக்கிடையில் நடந்த அந்தப் போர் காண்பதற்கு அச்சமூட்டுவதாக இருந்தது. மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் போரில் ஐநூறு கணைகளால் மத்ரர்களின் ஆட்சியாளனைத் {சல்லியனைத்} துளைத்துவிட்டு, மேலும் ஏழாலும் அவனை மீண்டும் துளைத்தான். அதன்பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் அசுரன் சம்பரனுக்கும் தேவர்கள் தலைவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடைபெற்றதற்கு ஒப்பாக அவர்களுக்குள் நடந்த மிக அற்புதமான போரானது தொடங்கியது. உமது மகன்களான விவிம்சதி, சித்திரசேனன் மற்றும் விகர்ணன் ஆகியோர் பெரும் படை சூழ பீமசேனனுடன் போரிட்டனர்" {என்றான் சஞ்சயன்} [1].

[1] பெரும்பாலும் பகுதி 94ல் சொல்லப்பட்ட செய்திகளே பகுதி 95லும் மீண்டும் கூறப்பட்டிருக்கிறது. ஒருவேளை பகுதி 94 இடைசெருகலாக இருக்கலாம். இஃது ஆய்வுக்குரியதே.


ஆங்கிலத்தில் | In English