Saturday, July 30, 2016

ஜலசந்தனைக் கொன்ற சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 114

Satyaki killed Jalasandha! | Drona-Parva-Section-114 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 30)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களைப் பீடித்த கிருதவர்மனைக் கண்டு திரும்பி வந்த சாத்யகி கிருதவர்மனை வீழ்த்தியது; யானைப்படையுடன் சாத்யகியைச் சூழ்ந்து கொண்ட ஜலசந்தன்; ஜலசந்தனின் கரங்களையும் தலையையும் வெட்டிக் கொன்ற சாத்யகி...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிதறாத கவனத்துடன் கேட்பீராக. அந்தப்படை உயர் ஆன்ம ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} முறியடிக்கப்பட்டு, பார்த்தர்கள் வெட்கத்தால் அவமானமடைந்து, உமது துருப்புகள் மகிழ்ச்சியில் குதூகலித்த போது, அடியற்றத் துன்பக் கடலில் மூழ்கிப் பாதுகாப்பை வேண்டிக் கொண்டிருந்த பாண்டவர்களுக்கு எவன் பாதுகாவலனாவானோ அந்த வீரனான சிநியின் பேரன் {சாத்யகி}, அந்தப் பயங்கரப் போரில் உமது படையால் உண்டாக்கப்பட்ட அந்தக் கடும் ஆரவாரத்தைக் கேட்டு விரைவாகத் திரும்பி கிருதவர்மனை எதிர்த்து வந்தான்.


ஹிருதிகன் மகனான கிருதவர்மன், கோபத்தால் தூண்டப்பட்டுக் கூரிய கணை மேகங்களால் சிநியின் பேரனை {சாத்யகியை} மறைத்தான். இதனால் சாத்யகியும் சினத்தால் தூண்டப்பட்டான். பிறகு அந்தச் சிநியின் பேரன் அம்மோதலில் ஒரு கூரிய பல்லத்தையும், நான்கு பிற கணைகளையும் கிருதவர்மனின் மீது விரைவாக ஏவினான். அந்த நான்கு கணைகள் கிருதவர்மனின் குதிரைகளைக் [1] கொன்றன. மற்றொன்று {பல்லம்} கிருதவர்மனின் வில்லை அறுத்தது. பிறகு சாத்யகி தன் எதிரியின் தேரோட்டியைத் துளைத்து, தன் எதிராளியின் படைகளைப் பீடிப்பதற்காகப் பின்னவனின் {கிருதவர்மனின்} பின்புறத்தைக் காத்தவர்களைக் கூரிய கணைகள் பலவற்றால் துளைத்தான். சாத்யகியின் கணைகளால் பீடிக்கப்பட்ட அந்தப் பகைவரின் படைப்பிரிவுகள் சிதறின. அதன்பேரில் கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகி தன் வழியே விரைவாகச் சென்றான்.

[1] துரோண பர்வம் 112ல் கிருதவர்மனின் நான்கு குதிரைகளைச் சாத்யகி கொன்றதாகவும், பிறகு சாத்யகியால் வீழ்த்தப்பட்ட கிருதவர்மன் குதிரைகளால் இழுத்துச்செல்லப்பட்டதாகவும் குறிப்புகள் இருக்கின்றன. அந்தப் பகுதியின் அடிக்குறிப்புகள் [4] மற்றும் [5] காணவும்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் வீரம் கொண்ட அந்த வீரன் {சாத்யகி} உமது துருப்புகளை என்ன செய்தான் என்பதைக் கேட்பீராக. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணரின் படைப்பிரிவாலான பெருங்கடலைக் கடந்து, போரில் கிருதவர்மனை வென்றதால் மகிழ்ச்சியால் நிறைந்த அந்த வீரன் {சாத்யகி}, தன் தேரோட்டியிடம், "அச்சமில்லாமல் மெதுவாகச் செல்வாயாக" என்றான். எனினும், தேர்கள், குதிரைகள், யானைகள், காலாட்படைவீரர்கள் ஆகியவற்றால் நிறைந்த அந்த உமது படையைக் கண்ட சாத்யகி, மீண்டும் தன் தேரோட்டியிடம், "துரோணரின் படைக்கு இடது பக்கத்தில் நீ காண்பதும், மேகங்களைப் போன்ற கரிய நிறத்தில் தெரிவதுமான பெரிய படைப்பிரிவானது (எதிரியின்) யானைகளைக் கொண்டிருக்கிறது. ருக்மரதன் [2] அதன் தலைவனாக இருக்கிறான். ஓ! தேரோட்டியே {முகுந்தா}, அதிகம் இருக்கும் அந்த யானைகள் போரில் தடுப்பதற்கு மிகக் கடினமானவையாகும். துரியோதனனால் தூண்டப்பட்ட அவர்கள், தங்கள் உயிரையும் விடத் துணிந்து எனக்காகக் காத்திருக்கின்றனர். திரிகர்த்தர்களின் நாட்டைச் சேர்ந்த அந்தப் போராளிகள் அனைவரும், அரச பிறவி கொண்டவர்களும், பெரும் வில்லாளிகளும், போரில் பெரும் ஆற்றலை வெளிப்படுத்த வல்லவர்களும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களையுடைய சிறப்புமிக்கத் தேர்வீரர்களுமாவர். துணிச்சல்மிக்க அந்தவீரர்கள் என்னுடன் போரிடும் விருப்பத்தால் காத்திருக்கின்றனர். ஓ! தேரோட்டியே {முகுந்தா}, விரைவாகக் குதிரைகளைத் தூண்டி, என்னை அங்கே கொண்டு செல்வாயாக. பரத்வாஜர் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே திரிகர்த்தர்களுடன் நான் போரிடுவேன்" என்றான் {சாத்யகி}.

[2] வேறொரு பதிப்பில் இது துரோணர் என்றே இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே ருக்மரதன் என்றே இருக்கிறது. சல்லியன் மகனுடைய பெயரும் ருக்மரதன்தான். ஆனால் அவன் துரோண பர்வம் பகுதி 43ல் அபிமன்யுவால் கொல்லப்படுகிறான். எனவே இங்கே குறிப்பிடப்படுபவன் திரிகர்த்தர்களைச் சேர்ந்த வேறொரு ருக்மரதனாக இருக்க வேண்டும்.

இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டியானவன் {முகுந்தன்}, சாத்வதனின் {சாத்யகியின்} விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்து மெதுவாகச் சென்றான். கொடிமரம் பொருத்தப்பட்டதும், சூரியனின் காந்தியைக் கொண்டதுமான அந்தப் பிரகாசமான தேரில் பூட்டப்பட்டிருந்தவையும், சாரதிக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையும், குந்த {குருக்கத்தி} மலர், அல்லது நிலவு, அல்லது வெள்ளியைப் போன்று வெண்மையாக இருந்தவையுமான அந்தச் சிறந்த குதிரைகள் அவனை {சாத்யகியை} (அந்த இடத்திற்குச்) சுமந்து சென்றன. சங்கின் நிறத்திலான அந்த அற்புதக் குதிரைகளால் இழுக்கப்பட்டு அவன் போரிட முன்னேறிய போது, அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், எளிதாக அனைத்தையும் துளைக்கவல்லவையும், பல்வேறு வகைகளிலான கணைகளை இறைத்தபடி தங்கள் யானைகளுடன் அவனை {சாத்யகியை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.

கோடையின் முடிவில் மலைச்சாரலில் மழைத்தாரைகளைப் பொழியும் பெரிய மேகங்களைப் போல அந்தச் சாத்வதனும் {சாத்யகியும்}, தன் கூரிய கணைகளை ஏவியபடி அந்த யானைப் படைப்பிரிவுடன் போரிட்டான். சிநிக்களில் முதன்மையானவனால் {சாத்யகியால்} ஏவப்பட்டவையும், இடியின் தீண்டலுக்கு ஒப்பானவையுமான அந்தக் கணைகளால் கொல்லப்பட்ட அந்த யானைகள், தங்கள் தந்தங்கள் முறிந்து, உடல்கள் குருதியால் நனைந்து, தலைகளும், மத்தகங்களும் பிளக்கப்பட்டு, காதுகள், முகங்கள் மற்றும் துதிக்கைகள் துண்டிக்கப்பட்டு, பாகர்களை இழந்து களத்தில் இருந்து தப்பி ஓடத் தொடங்கின. அவை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கொடிமரங்கள் வெட்டப்பட்டு, பாகர்கள் கொல்லப்பட்டு, கம்பளங்கள் தளர்ந்து அனைத்துத் திசைகளிலும் ஓடிச்சென்றன. அவற்றில் பல, ஓ! ஏகாதிபதி, சாத்வதனின் {சாத்யகியின்} நாராசங்கள் [3], வத்சதந்தங்கள் [4], பல்லங்கள் [5], அஞ்சலிகங்கள், க்ஷுரப்ரங்கள் [6], அர்த்தச்சந்திரக்கணைகள் [7] ஆகியவற்றால் சிதைக்கப்பட்டுத் தங்கள் உடல்களில் குருதி பாய, மலமும் சிறுநீரும் கழித்து, பலவிதமாகக் கதறி, மேகங்களின் ஆழ்ந்த முழக்கத்தைப் போலப் பேரொலிகளை வெளியிட்டபடியே ஓடின. அவற்றில் சில சுழன்றன, சில நொண்டின {தடுமாறின}, சில கீழே விழுந்தன, சில உற்சாகமற்று வாட்டமடைந்தன. சூரியன், அல்லது நெருப்புக்கு ஒப்பான யுயுதானனின் {சாத்யகியின்} கணைகளால் இப்படிப் பீடிக்கப்பட்ட அந்த யானைப்படைப்பிரிவு அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடியது.

[3] நாராசங்கள் - நீண்ட கணைகள்,
[4] வத்சதந்தங்கள் - கன்றின் பல் போன்ற தலை கொண்ட கணைகள்}
[5] பல்லங்கள் - அகன்ற தலை கொண்ட கணைகள்},
[6] க்ஷுரப்ரங்கள் - கத்தி போன்ற தலை கொண்ட கணைகள்}
[7] அர்த்தச்சந்திரக்கணைகள் - பிறைச்சந்திரன் போன்ற தலை கொண்ட கணைகள்}

அந்த யானைப்படைப்பிரிவு அழிக்கப்பட்ட பிறகு, வலிமைமிக்க ஜலசந்தன், நிதானமாக முயன்று, வெண்குதிரைகளால் இழுக்கப்பட்ட யுயுதானனின் தேரின் முன்பு தன் யானையை வழிநடத்திச் சென்றான். தங்க அங்கதங்கள், காது குண்டலங்கள், கிரீடம் ஆகியவற்றைச் சூடியவனும், சிவந்த சந்தனக் குழம்பை {மேனியில்} பூசியிருந்தவனும், சுடர்மிக்கத் தங்க ஆரத்தைத் தன் தலையில் சூடியிருந்தவனும், மார்புக் கவசத்தால் மார்பு மறைக்கப்பட்டவனும், தன் கழுத்தில் (பிரகாசமான) தங்க ஆரத்தால் அலங்கரிக்கப்பட்டவனும், பாவமற்ற ஆன்மா கொண்டவனுமான அந்த வீரன் {ஜலசந்தன்}, ஓ! மன்னா, தன் யானையின் தலையில் அமர்ந்து, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் வில்லை அசைத்துக் கொண்டு, மின்னலின் சக்தி ஊட்டப்பட்ட மேகத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.

துள்ளும் கடலைத் தடுக்கும் கரையைப் போலச் சாத்யகி, இத்தகு சீற்றத்துடன் தன்னை அணுகிய அந்த மகதர்களின் ஆட்சியாளனுடைய {ஜலசந்தனுடைய} சிறந்த யானையைத் தடுத்தான். வலிமைமிக்க ஜலசந்தன், யுயுதானனின் சிறந்த கணைகளால் யானை தடுக்கப்பட்டதைக் கண்டு சினத்தால் நிறைந்தான். அப்போது, ஓ மன்னா, கோபமூட்டப்பட்ட அந்த ஜலசந்தன், சில கணைகளால் சிநியின் பேரனுடைய அகன்ற மார்பைப் பெரும்பலத்துடன் துளைத்தான். அந்த விருஷ்ணி வீரன் {சாத்யகி} வில்லை வளைத்துக் கொண்டிருந்த போது, அவன் {ஜலசந்தன்} நன்கு கடினமாக்கப்பட்ட மற்றொரு கூரிய பல்லத்தால் அதை அறுத்தான். பிறகு, ஓ! பாரதரே, சிரித்துக் கொண்டே இருந்த மகதர்களின் வீர ஆட்சியாளன் {ஜலசந்தன்}, வில்லற்ற சாத்யகியை ஐந்து கூரிய கணைகளால் துளைத்தான். எனினும், வீரத்தையும், வலிமைமிக்கக் கரத்தையும் கொண்ட சாத்யகி, ஜலசந்தனின் கணைகள் பலவற்றால் துளைக்கப்பட்டாலும், கிஞ்சிற்றும் நடுங்கவில்லை. இவையாவும் அற்புதமாகத் தெரிந்தன.

அப்போது வலிமைமிக்க யுயுதானன் எவ்வித அச்சமுமின்றி (தான் பயன்படுத்த வேண்டிய) கணைகளைக் குறித்துச் சிந்தித்தான். மற்றொரு வில்லை எடுத்துக் கொண்ட அவன் {சாத்யகி}, ஜலசந்தனிடம், "நில், நிற்பாயாக!" என்றான். இவ்வளவே சொன்ன சிநியின் பேரன் {சாத்யகி}, சிரித்துக் கொண்டே அறுபது {60} கணகளால் அவனது {ஜலசந்தனின்} அகன்ற மார்பை ஆழத் துளைத்தான். மேலும் பெருங்கூர்மை கொண்ட மற்றொரு க்ஷுரப்ரத்தால் ஜலசந்தனின் வில்லைக் கைப்பிடியில் அறுத்து, மேலும் மூன்று கணைகளால் அவன் ஜலசந்தனையும் துளைத்தான். பிறகு ஜலசந்தன் கணை பொருத்தப்பட்ட அந்த வில்லை எறிந்துவிட்டு, ஓ! ஐயா, சாத்யகியின் மீது வேல் ஒன்றை வீசினான். அந்தக் கடும்போரில் மாதவனின் {சாத்யகியின்} இடது கரத்தைத் துளைத்துச் சென்ற அந்தப் பயங்கர வேலானது, சீறும் பெரும் பாம்பொன்றைப் போலப் பூமிக்குள் நுழைந்தது. இப்படி இடது கரத்தில் துளைக்கப்பட்டவனும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, முப்பது கூரிய கணைகளால் ஜலசந்தனைத் தாக்கினான். பிறகு வலிமைமிக்க ஜலசந்தன் தன் கத்தியையும், காளைத் தோலாலானதும், நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டதுமான பெரிய கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, கத்தியைச் சிறிது நேரம் சுழற்றிய பிறகு அந்தச் சாத்வதனின் மேல் அதை வீசினான். சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} வில்லை அறுத்த அந்தக் கத்தி, நெருப்புக்கோளத்தின் பிரகாசத்துடன் கீழே பூமியில் விழுந்து கிடப்பது தெரிந்தது.

பிறகு அந்த யுயுதானன் {சாத்யகி}, எவரையும் துளைக்கவல்லதும், சாலமரத்தின் கிளையைப் போலப் பெரிதானதும், இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான நாணொலியைக் கொண்டதுமான மற்றொரு வில்லை எடுத்து வளைத்து, சினத்தால் நிறைந்து, ஜலசந்தனை ஒற்றைக் கணையால் துளைத்தான். மது குலத்தில் முதன்மையானவனான அந்தச் சாத்யகி, சிரித்துக் கொண்டே, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜலசந்தனின் கரங்களிரண்டையும் இரு க்ஷுரப்ரங்களால் அறுத்தான். அதன்பேரில், இரு பரிகங்களைப் {முள் பதித்த கதாயுதங்கள்} போலத் தெரிந்த அந்தக் கரங்கள் இரண்டும், மலையில் இருந்து விழும் ஐந்து தலை பாம்புகளைப் போல அந்த முதன்மையான யானையிலிருந்து கீழே விழுந்தன. பிறகு சாத்யகி, அழகிய பற்களைக் கொண்டதும், அழகிய காதுகுண்டலகள் இரண்டால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான தன் எதிராளியின் {ஜலசந்தனின்} பெரிய தலையை மூன்றாவது க்ஷுரப்ரத்தால் அறுத்தான். அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சிரம் மற்றும் கரங்களற்ற உடல் ஜலசந்தனின் யானையைக் குருதியில் நனைய செய்தது. 

ஓ! மன்னா, போரில் ஜலசந்தனைக் கொன்ற அந்தச் சாத்வதன் {சாத்யகி}, விரைவாக அந்த யானையின் முதுகில் இருந்த மர அமைப்பை {அம்பாரியைக்} கீழே தள்ளினான். குருதியில் குளித்த ஜலசந்தனின் யானை, தன் முதுகில் தொங்கும் அந்த விலைமதிப்புமிக்க ஆசனத்தைச் சுமந்து சென்றது. சாத்வதனின் கணைகளால் பீடிக்கப்பட்ட அந்தப் பெரும் விலங்கு, வலியால் கடுமையாகப் பிளிறிக் கொண்டே மூர்க்கமாக ஓடி நட்புப் படைப்பிரிவுகளை நசுக்கியது. பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்த விருஷ்ணிகளில் காளையால் {சாத்யகியால்} ஜலசந்தன் கொல்லப்பட்டதைக் கண்ட உமது துருப்புகளுக்குள் ஓலங்கள் எழுந்தன. உமது வீரர்கள் புறமுதுகிட்டு அனைத்துத் திசைகளிலும் ஓடினர். உண்மையில் எதிரியின் வெற்றியால் கவலையடைந்த அவர்கள் தங்கள் இதயங்களைத் தப்பி ஓடுவதில் நிலைநிறுத்தினர். அதேவேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வில் தரிப்போர் அனைவரிலும் முதன்மையான துரோணர், வேகமான குதிரைகளால் சுமக்கப்பட்ட வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானனை {சாத்யகியை} அணுகினார். குருக்களில் காளையர் {கௌரவர்கள்} பலர், (சினத்திலும் செருக்கிலும்) பெருகும் சிநிக்களின் காளையைக் {சாத்யகியைக்} கண்டு துரோணருடன் சேர்ந்து சீற்றத்துடன் அவனை நோக்கி விரைந்தனர். அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பழங்காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போருக்கு ஒப்பாக, (ஒரு புறத்தில்) குருக்களையும், துரோணரையும், மற்றும் (மறுபுறத்தில்) யுயுதானனையும் கொண்ட ஒரு போர் {அங்கே} தொடங்கியது" {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English