Satyaki defeated Kritavarma! | Drona-Parva-Section-115 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 31)
பதிவின் சுருக்கம் : சாத்யகியைத் தாக்கிய கௌரவ வீரர்கள்; அனைவரையும் பதிலுக்குத் துளைத்த சாத்யகி; துரியோதனனுக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட போர்; துரியோதனனின் வில்லை இருமுறை வெட்டி, கொடிமரத்தையும் வெட்டி, குதிரைகளையும் தேரோட்டியையும் கொன்று அவனை வீழ்த்திய சாத்யகி; கிருதவர்மனுக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட போர்; கிருதவர்மனை வீழ்த்தி முன்னேறிச் சென்ற சாத்யகி...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தாக்குவதில் சிறந்த அந்த வீரர்கள் அனைவரும் கணைகளின் மேகங்களைக் கவனமாக ஏவியபடியே யுயுதானனுடன் {சாத்யகியுடன்} மோதினர். துரோணர், பெரும் கூர்மை கொண்ட எழுபத்தேழு {77} கணைகளால் அவனைத் {சாத்யகியைத்} தாக்கினார். துர்மர்ஷணன் பனிரெண்டாலும் {12}, துஸ்ஸஹன் [1] பத்து {10} கணைகளாலும் அவனை {சாத்யகியைத்} தாக்கினர். விகர்ணனும், கங்க {பறவையின்} இறகுகளைக் கொண்ட முப்பது {30} கூரிய கணைகளால் அவனது {சாத்யகியின்} இடப்பக்கத்திலும், நடுமார்பிலும் துளைத்தான். துர்முகன் பத்து {10} கணைகளாலும், துச்சாசனன் எட்டாலும் {8}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனன் இரண்டு {2} கணைகளாலும் அவனை {சாத்யகியைத்} துளைத்தனர். அந்தப் போரில், ஓ! மன்னா, துரியோதனனும், பிற வீரர்கள் பலரும் அந்த வலிமைமிக்க வில்லாளியை {சாத்யகியை} அடர்த்தியான கணைமாரியால் துளைத்தனர்.
[1] கங்குலியின் பதிப்பில், இது துச்சாசனன் என்றே இருக்கிறது. ஆனால், அடுத்தும் துச்சாசனன் பெயர் மீண்டும் வருவதால், இது துஸ்ஸஹனாகவே இருக்க வேண்டும். வேறொரு பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இந்த இடத்தில் துஸ்ஸஹன் என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வலிமைமிக்க வில்லாளிகளான உமது மகன்களால் அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கப்பட்டாலும், அந்த விருஷ்ணி குலத்து யுயுதானன், அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகத் தனது நேரான கணைகளால் துளைத்தான். உண்மையில் அவன் {சாத்யகி}, பரத்வாஜர் மகனை {துரோணரை} மூன்று கணைகளாலும், துஸ்ஸஹனை [2] ஒன்பதாலும், விகர்ணனை இருபத்தைந்தாலும், சித்திரசேனனை ஏழாலும், துர்மர்ஷணனை பனிரெண்டாலும், விவிம்சதியை எட்டாலும், சத்தியவிரதனை ஒன்பதாலும், விஜயனைப் பத்துக் கணைகளாலும் துளைத்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான ருக்மாங்கதனையும் துளைத்த சாத்யகி, தன் வில்லை அசைத்துக் கொண்டே உமது மகனை (துரியோதனனை) எதிர்த்து வேகமாகச் சென்றான். யுயுதானன், மனிதர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மொத்த உலகிலும் உள்ள தேர்வீரர்களில் பெரியவனான அந்த மன்னனை {துரியோதனனைத்} தன் கணைகளால் ஆழத் துளைத்தான். பிறகு அவ்விருவருக்கும் இடையில் ஒரு போர் தொடங்கியது.
[2] கங்குலியில் மீண்டும் இங்கே துச்சாசனன் என்றே இருக்கிறது. வேறு இரு பதிப்புகளிலும் துஸ்ஸஹன் என்றே இருக்கிறது. கங்குலி இங்கே பிழை செய்திருக்க வேண்டும் என்று கருதி மேலே துஸ்ஸஹன் என்றே திருத்தியிருக்கிறேன்.
அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களில் {இருவரில்} ஒவ்வொருவனும் அந்தப் போரில் எண்ணற்ற கணைகளைக் குறி பார்த்தும், கூரிய கணைகளை ஏவியும், மற்றவனை மறைத்தனர். குரு மன்னனால் {துரியோதனனால்} துளைக்கப்பட்ட சாத்யகி, சந்தன மரம் ஒன்று பாலைச் சுரப்பது போல, தன் மேனியெங்கும் குருதி பெருகியோட மிகப் பிரகாசமாகத் தெரிந்தான். உமது மகனும் {துரியோதனனும்}, அந்தச் சாத்வதனின் {சாத்யகியின்} கணைமேகங்களால் துளைக்கப்பட்டு, தங்கத்தால் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, (வேள்வியில்) நிறுவப்பட்ட ஒரு வேள்விக் கம்பை {யூபஸ்தம்பத்தைப்} போலவே அழகாகத் தெரிந்தான்.
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் மாதவன் {சாத்யகி}, சிரித்துக் கொண்டே குரு மன்னனின் {துரியோதனனின்} வில்லை ஒரு க்ஷுரப்ரத்தினால் வெட்டினான். அதன் பிறகு அவன் {சாத்யகி}, வில்லற்ற அம்மன்னனை எண்ணற்ற கணைகளால் துளைத்தான். பெரும் சுறுசுறுப்புக் கொண்ட அந்த எதிரியின் {சாத்யகியின்} கணைகளால் துளைக்கப்பட்ட அந்த மன்னனால் {துரியோதனனால்}, எதிரியின் இந்த வெற்றிக் குறியீட்டைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அப்போது துரியோதனன், தங்கப் பிடி கொண்ட மற்றொரு உறுதியான வில்லை எடுத்துக் கொண்டு, சாத்யகியை ஒரு நூறு கணைகளால் வேகமாகத் துளைத்தான். வில்தரித்த உமது வலிமைமிக்க மகனால் {துரியோதனனால்} ஆழத் துளைக்கப்பட்ட யுயுதானன், கோபத்தால் தூண்டப்பட்டு உமது மகனைப் பீடிக்கத் தொடங்கினான்.
மன்னன் {துரியோதனன்} இப்படிப் பீடிக்கப்படுவதைக் கண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களான உமது மகன்கள், பெரும் பலத்துடன் அடர்த்தியான கணைமாரிகளை ஏவியபடியே சாத்யகியை மறைத்தனர். அந்த வலிமைமிக்க வில்லாளிகளான உமது மகன்களின் கூட்டத்தால் யுயுதானன் {சாத்யகி} இப்படி மூழ்கடிக்கப்பட்டபோது, அவர்கள் ஒவ்வொருவரையும் ஐந்துகணைகளாலும், மீண்டுமொருமுறை ஏழு கணைகளாலும் அவன் {சாத்யகி} துளைத்தான். அவன், எட்டு வேகமானக் கணைகளால் துரியோதனனைத் துளைத்த பிறகு, சிரித்துக் கொண்டே, எதிரிகள் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் பின்னவனின் {துரியோதனனின்} வில்லை அறுத்தான். மேலும் சில கணைகளால் அவன் {சாத்யகி}, ஆபரணங்களோடு கூடிய யானையால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் மன்னனின் {துரியோதனனின்} கொடிமரத்தையும் வீழ்த்தினான். பிறகு, நான்கு கணைகளால் துரியோதனனின் குதிரைகள் நான்கையும் கொன்ற அந்தச் சிறப்புவாய்ந்த சாத்யகி, மன்னனின் தேரோட்டியையும் ஒரு க்ஷுரப்ரத்தால் வீழ்த்தினான். யுயுதானன், இன்பத்தில் நிறைந்த அதேவேளையில், உயிர்நிலைகளையே ஊடுருவவல்ல பல கணைகளைக் கொண்டு வலிமைமிக்கத் தேர்வீரனான குரு மன்னனை {துரியோதனனைத்} துளைத்தான். பிறகு, ஓ! மன்னா, உமது மகன் {துரியோதனன்}, அந்தப் போரில் சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} அந்தச் சிறந்த கணைகளால் இப்படித் தாக்கப்பட்ட போது திடீரெனத் தப்பி ஓடினான். அம்மன்னன் {துரியோதனன்}, வில்தரித்த சித்திரசேனனின் தேரில் வேகமாக ஏறிக் கொண்டான். போரில் சாத்யகியால் இப்படித் தாக்கப்பட்டு, ராகுவால் விழுங்கப்படும்போது ஆகாயத்தில் சிறுக்கும் சோமனை {சந்திரனை} போன்ற நிலையை அடைந்த மன்னனைக் கண்டு குரு படையின் அனைத்துப் பகுதிகளிலும் துயரக் குரல்கள் எழுந்தன.
அந்த ஆரவாரத்தைக் கேட்ட வலிமைமிக்கத் தேர்வீரனான கிருதவர்மன், பலமிக்க மாதவன் {சாத்யகி} போரிட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு வேகமாகச் சென்றான். கிருதவர்மன், தன் வில்லை அசைத்துக் கொண்டும், தன் குதிரைகளைத் தூண்டிக் கொண்டும், தன் தேரோட்டியை, "வேகமாகச் செல்வாயாக, வேகமாகச் செல்வாயாக" என்று சொல்லி தூண்டிக் கொண்டும் சென்றான். வாயை அகல விரித்த யமனைப் போலத் தன்னை நோக்கி விரையும் கிருதவர்மனைக் கண்ட யுயுதானன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, "கணைகளைத் தரித்திருக்கும் அந்தக் கிருதவர்மன், என்னை நோக்கியே தன் தேரில் வேகமாக விரைந்து வருகிறான்" என்றான் [3]. பிறகு, மிக வேகமாகத் தூண்டப்பட்ட தன் குதிரைகளுடன் முறையாகத் தயாரிக்கப்பட்டிருந்த தன் தேரில் சென்ற சாத்யகி, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையான அந்தப் போஜர்களின் ஆட்சியாளனிடம் {கிருதவர்மனிடம்} வந்தான்.
[3] வேறொரு பதிப்பில் இன்னும் அதிகமாக இருக்கிறது. அது பின்வருமாறு: "இந்தக் கிருதவர்மன் அம்புகளுடன் கூடியவனாகத் தேருடன் விரைவாக வருகிறான். வில்லாளிகள் அனைவரிலும் சிறந்த அந்தக் கிருதவர்மனை நோக்கித் தேருடன் எதிர்த்துச் செல்வாயாக. சூதா, மிகச் சிறந்த தேரைத் தேருடன் விரைவாக எதிர்த்துச் செல்வாயாக. எதிரிகளை அடக்குபவனான அந்த விருஷ்ணி வீரனைப் போரில் கொல்லப்போகிறேன்" என்று சாத்யகி தன் தேரோட்டியிடம் சொன்னதாக இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "அதோ வீரக் கிருதவர்மன் என்னை எதிர்த்துத் தன் தேரில் விரைந்து வருகிறான். வில்தரித்தோர் அனைவரிலும் முதன்மையான அவனிடம் மோத உன் தேரை அவனுக்கு எதிரில் செலுத்துவாயாக" என்று இருக்கிறது.
அப்போது, மனிதர்களில் புலிகளும், சினத்தால் தூண்டப்பட்டவர்களும், நெருப்புக்குக்கு ஒப்பானவர்களுமான அவ்விருவரும், பெரும் சுறுசுறுப்பைக்கொண்ட இரு புலிகளைப் போல ஒருவரோடொருவர் மோதினர். கிருதவர்மன், சிநியின் பேரனை {சாத்யகியைக்} கூர் தீட்டப்பட்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையுமான இருபத்தாறு கணைகளாலும், பின்னவனின் தேரோட்டியை {முகுந்தனை} ஐந்து கணைகளாலும் துளைத்தான். போரில் திறம்வாய்ந்தவனான அந்த ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, சிறந்தவையும், சிந்து இனத்தைச் சேர்ந்தவையும், நன்கு பழக்கப்பட்டவையுமான சாத்யகியின் நான்கு குதிரைகளையும் வலிமைமிக்க நான்கு கணைகளால் துளைத்தான்.
தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தைக் கொண்டவனும், தங்கக் கவசம் பூண்டவனுமான கிருதவர்மன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட பிடி கொண்ட தன் உறுதியான வில்லை அசைத்துக் கொண்டு, தங்கச் சிறகுகள் கொண்ட கணைகளால் யுயுதானனைத் தடுத்தான். அப்போது அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, தனஞ்சயனைக் காணவிரும்பி, பெரும் சுறுசுறுப்புடன் கிருதவர்மன் மீது எட்டுக் கணைகளை ஏவினான். எதிரிகளை எரிப்பவனும், வெல்லப்பட முடியாத வீரனுமான அவன் {கிருதவர்மன்}. வலிமைமிக்க அந்த எதிரியால் {சாத்யகியால்} ஆழத்துளைக்கப்பட்டு, நிலநடுக்கத்தில் நடுங்கும் மலையொன்றைப் போல நடுங்கத் தொடங்கினான். இதன்பிறகு, கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட சாத்யகி, அறுபத்துமூன்று கணைகளால் கிருதவர்மனின் நான்கு குதிரைகளையும், ஏழால் அவனது தேரோட்டியையும் விரைவாகத் துளைத்தான். பிறகு சாத்யகி, யமதண்டத்திற்கோ, கோபம் கொண்ட பாம்புக்கோ ஒப்பானதும், தங்கச் சிறகுகளைக் கொண்டதுமான மற்றொரு கணையைக் குறிபார்த்துக் கிருதவர்மனைத் துளைத்தான். அந்தப் பயங்கரக் கணையானது, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்த தன் எதிரியின் பிரகாசமான கவசத்தைத் துளைத்து ஊடுருவி, இரத்தக் கறையுடன் பூமிக்குள் நுழைந்தது.
சாத்வதனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டு, அந்தப் போரில் குருதியில் குளித்த கிருதவர்மன், கணையோடு கூடிய தன் வில்லை எறிந்துவிட்டுத் தன் தேரிலேயே விழுந்தான். அளவற்ற ஆற்றலைக் கொண்டவனும், மனிதர்களில் காளையுமான அந்தச் சிங்கப் பல் வீரன் {கிருதவர்மன்}, சாத்யகியின் கணைகளால் பீடிக்கப்பட்டு, முழங்காலால் மண்டியிட்டு கீழே தன் தேர்த்தட்டில் விழுந்தான். சாத்யகி, பழங்காலத்தின் ஆயிரங்கை அர்ஜுனனுக்கோ {கார்த்தவீரியார்ஜுனனுக்கோ}, அளவிலா வல்லமை கொண்ட பெருங்கடலுக்கோ ஒப்பான அந்தக் கிருதவர்மனைத் தடுத்துவிட்டு முன்னேறிச் சென்றான்.
வாள்கள், ஈட்டிகள், விற்கள், யானைகள், குதிரைகள் மற்றும் தேர்கள் ஆகியவற்றால் நிறைந்த கிருதவர்மனின் படைப்பிரிவைக் கடந்து, நூற்றுக்கணக்கிலான முதன்மையான க்ஷத்திரியர்களின் குருதி சிந்திய விளைவால் பயங்கரமாக இருந்த அந்தக் களத்தைவிட்டு வெளியேறிய அந்தச் சிநிக்களில் காளை {சாத்யகி}, அசுரவியூகத்தினூடாகச் செல்லும் விருத்திரனைக் கொன்றவனைப் {இந்திரனைப்} போலத் துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே முன்னேறிச் சென்றான். அதேவேளையில், வலிமைமிக்க ஹிருதிகன் மகன் {கிருதவர்மன்}, மற்றொரு பெரிய வில்லை எடுத்துப் போரில் பாண்டவர்களைத் தடுத்துக் கொண்டு, தான் இருந்த இடத்திலேயே நின்று கொண்டான்" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |