Monday, August 01, 2016

துரோணரை வென்ற சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 116

Satyaki vanquished Drona! | Drona-Parva-Section-116 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 32)

பதிவின் சுருக்கம் : துரோணருக்கும் சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; சாத்யகியின் வில்லை அறுத்த துரோணர்; சாத்யகியின் தேரோட்டியை மயக்கமடையச் செய்தது; தன் தேரைத் தானே செலுத்திய சாத்யகி, துரோணரின் தேரோட்டியைக் கொன்றது; துரோணரை வியூகத்தின் வாயிலுக்கே மீண்டும் இட்டுச் சென்ற குதிரைகள்; துரோணர் சாத்யகியைப் பின்தொடராமல் அங்கேயே நிலைகொண்டது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இந்த இடங்களில் சிநியின் பேரனால் {சாத்யகியால்} (குரு) படை துரத்தியடிக்கப்படும்போது, அவனைப் பரத்வாஜர்மகன் {துரோணர்} அடர்த்தியான கணைமழையால் மறைத்தார். துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கையில் துரோணருக்கும், சாத்வதனுக்கும் {சாத்யகிக்கும்} இடையில் நடந்த மோதலானது, (பழங்காலத்தில்) பலிக்கும் {பலிச்சக்கரவர்த்திக்கும்} வாசவனுக்கும் {இந்திரனுக்கும்} இடையில் நடந்ததைப் போல மிகக் கடுமையானதாக இருந்தது. அப்போது துரோணர், முழுக்க இரும்பாலானவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையுமான மூன்று அழகிய கணைகளால் சிநியின் பேரனுடைய {சாத்யகியின்} நெற்றியைத் துளைத்தார். இப்படி அந்த நேரான கணைகளால் நெற்றியில் துளைக்கப்பட்ட யுயுதானன் {சாத்யகி}, ஓ! மன்னா, மூன்று முகடுகளைக் கொண்ட மலையொன்றைப் போல அழகாகத் தெரிந்தான்.


{ஏதாவதொரு} சந்தர்ப்பத்திற்காக எப்போதும் விழிப்புடன் இருக்கும் அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்}, இந்திரனுடைய வஜ்ரத்தின் முழக்கத்திற்கு ஒப்பானவையான பிற கணைகள் பலவற்றை அந்தப் போரில் சாத்யகியின் மீது ஏவினார். உயர்ந்த ஆயுதங்களை அறிந்தவனான அந்தத் தாசார்ஹ குலத்தோன் {சாத்யகி}, துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகள் அனைத்தையும், அழகிய சிறகுகள் கொண்ட தன் இரண்டு கணைகளால் வெட்டினான். (சாத்யகியின்) அந்தக் கரநளினத்தைக் கண்ட துரோணர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திடீரென முப்பது {30} கணைகளால் அந்தச் சிநிக்களின் காளையை {சாத்யகியைத்} துளைத்தார். யுயுதானனின் கரநளினத்தைத் தமது கரநளினத்தால் விஞ்சிய துரோணர், மீண்டுமொரு முறை பின்னவனை {சாத்யகியை} ஐம்பது {50} கணைகளாலும், மேலும் ஒரு நூறு {100} கணைகளாலும் துளைத்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உண்மையில் {உடலைச்} சிதைப்பவையான அக்கணைகள்,  எறும்புப் புற்றில் இருந்து கோபத்துடன் வெளியேறும் சீற்றமிக்கப் பாம்புகளைப் போலத் துரோணரின் தேரில் இருந்து வெளியேறின. அதே போல, யுயுதானனால் {சாத்யகியால்} நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் ஏவப்பட்டவையான குருதியைக் குடிக்கும் கணைகளும் துரோணரை மறைத்தன. எனினும், மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரால் {துரோணரால்} வெளிப்படுத்தப்பட்ட கரநளினத்திற்கும், சாத்வத குலத்தோனால் {சாத்யகியால்} வெளிப்படுத்தப்பட்டதற்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் நாங்கள் காணவில்லை. உண்மையில் மனிதர்களில் காளையரான அவ்விருவரும் ஒரு வகையில் இணையானவராகவே இருந்தனர்.

அப்போது, கோபத்தால் தூண்டப்பட்ட சாத்யகி, நேரான ஒன்பது கணைகளால் துரோணரைத் தாக்கினான். மேலும் அவன் {சாத்யகி} கூரிய கணைகள் பலவற்றால் துரோணரின் கொடிமரத்தையும் தாக்கினான். பரத்வாஜர் மகன் {துரோணர்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அவன் {சாத்யகி} பின்னவரின் {துரோணரின்} தேரோட்டியை நூறு கணைகளால் துளைத்தான். யுயுதானனால் வெளிப்படுத்தப்பட்ட கரநளினத்தைக் கண்டவரும், வலிமைமிக்கத் தேர்வீரருமான துரோணர், எழுபது கணைகளால் யுயுதானனின் தேரோட்டியைத் துளைத்து, மூன்றால் அவனது (நான்கு) குதிரைகளையும் துளைத்து, ஒற்றைக் கணை ஒன்றால் மாதவனின் {சாத்யகியின்} தேரில் நின்ற கொடிமரத்தையும் வெட்டினார். இறகுகளையும், தங்கத்தாலான சிறகுகளையும் கொண்ட மற்றொரு பல்லத்தால் அந்தப் போரில் மதுகுலத்தின் சிறப்புமிக்க வீரனுடைய {சாத்யகியின்} வில்லையும் அறுத்தார்.

அதன்பேரில் வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி, கோபத்தால் தூண்டப்பட்டு, அவ்வில்லை வீசிவிட்டு, ஒரு பெரிய கதாயுதத்தை அந்தப் பரத்வாஜரின் மகன் மீது வீசினான். எனினும் துரோணர், இரும்பாலானதும், இழைகளால் கட்டப்பட்டதும், தன்னை நோக்கி மூர்க்கமாக வந்ததுமான அந்தக் கதாயுதத்தைப் பல்வேறு வடிவங்களிலான கணைகள் பலவற்றால் தடுத்தார். அப்போது கலங்கடிக்கப்பட முடியாதவனான சாத்யகி மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, கல்லில் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றால் பரத்வாஜரின் வீர மகனை {துரோணரைத்} துளைத்தான். அந்தப் போரில் அதைக் கொண்டு துரோணரைத் துளைத்த யுயுதானன் சிங்கமுழக்கமும் செய்தான். எனினும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான துரோணரால் அந்த முழக்கத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இரும்பாலானதும் தங்கக் கைப்பிடி கொண்டதுமான ஓர் ஈட்டியை எடுத்த துரோணர், அதை மாதவனுடைய {சாத்யகியின்} தேரின் மீது வேகமாக ஏவினார். எனினும், காலனைப் போல மரணத்தைக் கொடுக்கும் அந்த ஈட்டியானது, சிநியின் பேரனைத் {சாத்யகியைத்} தீண்டாமல், பின்னவனின் {சாத்யகியின்} தேரைத் துளைத்துச் சென்று, கடும் ஒலியுடன் பூமிக்குள் நுழைந்தது. பிறகு அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, ஓ! மன்னா, சிறகுகள் கொண்ட கணைகள் பலவற்றால் துரோணரைத் துளைத்தான். அவரது வலக்கரத்தைத் தாக்கிய அந்தச் சாத்யகி, ஓ! பாரதக் குலத்தின் காளையே, உண்மையில் அவரைப் பெரிதும் பீடித்தான். அந்தப் போரில் துரோணரும், ஓ! மன்னா, அர்த்தச்சந்திரக் கணையொன்றால் மாதவனின் {சாத்யகியின்} பெரிய வில்லை வெட்டி, பின்னவனின் தேரோட்டியை ஓர் ஈட்டியால் [1] தாக்கினார். அந்த ஈட்டியால் தாக்கப்பட்ட யுயுதானனின் தேரோட்டி மயக்கமடைந்து, சிறிது நேரத்திற்குத் தேர்த்தட்டில் அசைவற்றவனாகக் கிடந்தான்.

[1] வேறொரு பதிப்பில் இவ்வாயுதம் ரதசக்தி என்றழைக்கப்படுகிறது. அது தாழை மடல் போன்ற வாயுள்ள சக்தி {ஈட்டி} என்றும் அங்கே விளக்கப்படுகிறது.

அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனக்குச் சாரதியாகத் தானே செயல்பட்ட சாத்யகி, கடிவாளங்களையும் தானே பிடித்துக் கொண்டு துரோணருடனும் தொடர்ந்து போரிட்டத்தால், மனிதசக்திக்கு அப்பாற்பட்ட சாதனையை அடைந்தான். பிறகு, வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுதானன், அந்தப் போரில் ஒரு நூறு கணைகளால் அந்தப் பிராமணரை {துரோணரைத்} தாக்கி, ஓ! ஏகாதிபதி, தான் அடைந்த சாதனையால் மிகவும் மகிழ்ந்தான். அப்போது துரோணர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சாத்யகியின் மீது ஐந்து கணைகளை ஏவினார். அந்தப் போரில், சாத்யகியின் கவசத்தைத் துளைத்த அந்தக் கடுங்கணைகள் அவனது குருதியைக் குடித்தன. அச்சந்தரும் அந்தக் கணைகளால் இப்படித் துளைக்கப்பட்ட சாத்யகி கோபத்தால் தூண்டப்பட்டான். பதிலுக்கு அந்த வீரன் {சாத்யகி}, தங்கத் தேரைக் கொண்ட அவர் {துரோணர்} மீது கணைகள் பலவற்றை ஏவினான்.

பிறகு ஓர் ஒற்றைக் கணையால் துரோணரின் தேரோட்டியைப் பூமியில் வீழ்த்திய அவன் {சாத்யகி}, தன் கணைகளால் தன் எதிராளியின் சாரதியற்றக் குதிரைகளைத் தப்பி ஓடும்படி செய்தான். அதன் பேரில் அந்தத் தேரானது, ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு {அந்தக் குதிரைகளால்} இழுத்துச் செல்லப்பட்டது. உண்மையில், துரோணரின் பிரகாசமான தேரானது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சூரியனின் நகர்வைப் போல அந்தப் போர்க்களத்தில் ஆயிரம் முறை சுழலத் தொடங்கியது. அப்போது, (கௌரவப் படையின்) மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரும், "ஓடுவீர், விரைவீர், துரோணரின் குதிரைகளைப் பிடிப்பீர்" என்று உரக்க ஆரவாரம் செய்தனர். அந்தப் போரில் சாத்யகியை விரைவாகத் தவிர்த்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரோணர் எங்கிருந்தாரோ அந்த இடத்திற்கு விரைந்தனர். சாத்யகியின் கணைகளால் பீடிக்கப்பட்டு ஓடிச் செல்லும் அந்தத் தேர்வீரர்களைக் கண்ட உமது துருப்புகள் மீண்டும் பிளந்து, மிகவும் உற்சாகமற்றவையாக ஆகின.

அதேவேளையில், துரோணர், விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} கணைகளால் பீடிக்கப்பட்டவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையுமான அந்தக் குதிரைகளால் சுமக்கப்பட்டு, வியூகத்தின் வாயிலுக்கே மீண்டும் சென்று அங்கேயே நிலையாக நின்று கொண்டார். பரத்வாஜரின் வீரமகன் {துரோணர்}, (தாமில்லாத போது) பாண்டவர்களாலும், பாஞ்சாலர்களாலும் பிளக்கப்பட்ட வியூகத்தைக் கண்டு, சிநியின் பேரனைப் பின்தொடர எந்த முயற்சியும் செய்யாமல், (பிளக்கப்பட்ட) தமது வியூகத்தைத் தாமே காப்பதில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். பிறகு, பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் தடுத்த அந்தத் துரோண நெருப்பு, கோபத்தால் சுடர்விட்டெரிந்து அங்கேயே நின்று, யுக முடிவில் எழும் சூரியனைப் போல அனைத்தையும் எரித்தது" {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English