Wednesday, August 24, 2016

கர்ணன் பீமனுக்கிடையில் பயங்கரப் போர்! - துரோண பர்வம் பகுதி – 131

A terrible war between Karna and Bhima! | Drona-Parva-Section-131 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 33)

பதிவின் சுருக்கம் : மற்றொரு தேரில் ஏறி பீமனை எதிர்த்து மீண்டும் விரைந்த கர்ணன்; கர்ணனுக்கும், பீமனுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர்; கர்ணனாலும், திருதராஷ்டிரன் மகன்களாலும் பாண்டவர்கள் இதுவரை அடைந்த துன்பங்களை எண்ணிப் பார்த்து மூர்க்கத்துடன் போரிட்ட பீமன்; கௌரவப் படையில் ஏற்பட்ட பேரழிவு...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, என் மகன்கள் எவனிடம் வெற்றிக்கான தங்கள் நம்பிக்கைகள் அனைத்தையும் கொண்டுள்ளனரோ அந்தக் கர்ணன் களத்தில் இருந்து புறங்காட்டிச் செல்வதைக் கண்டு, உண்மையில் துரியோதனன் என்ன சொன்னான்?(1) உண்மையில், தன் சக்தியில் பெருமை கொண்ட பீமன் எவ்வாறு போரிட்டான்? கர்ணனும் இதன் பிறகு, ஓ! மகனே {சஞ்சயா}, அந்தப் போரில் சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பான பீமசேனனைக் கண்டு என்ன செய்தான்?" என்றான் {திருதராஷ்டிரன்}.(2)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "முறையாக அமைக்கப்பட்ட மற்றொரு தேரில் ஏறிய கர்ணன், சூறாவளியால் கொந்தளிக்கும் கடலின் சீற்றத்துடன் பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்து மீண்டும் விரைந்தான்.(3) சினத்தால் தூண்டப்பட்ட அந்த அதிரதன் மகனை {கர்ணனைக்} கண்ட உமது மகன்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (கர்ண) நெருப்பில் ஏற்கனவே ஊற்றப்பட்ட காணிக்கையாகவே {ஆகுதியாகவே) பீமசேனனைக் கருதினர்.(4) வில்நாண் கயிற்றின் சீற்றமிக்க நாணொலி மற்றும் தன் உள்ளங்கைகளின் பயங்கர ஒலிகள் ஆகியவற்றுடன் கூடிய ராதையின் மகன் {கர்ணன்}, பீமசேனனின் தேரை நோக்கி அடர்த்தியான கணைமாரியை ஏவினான்.(5)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வீரக் கர்ணனுக்கும், உயர் ஆன்ம பீமனுக்கும் இடையில் மீண்டும் ஒரு பயங்கரமான மோதல் நடந்தது.(6) கோபத்தால் தூண்டப்பட்டவர்களும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான அவ்விரு போர் வீரர்களும், (கோபம்நிறைந்த) தங்கள் பார்வையாலேயே ஒருவரையொருவர் எரித்துவிடத் தீர்மானித்தவர்களைப் போல ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(7) கோபத்தால் சிவந்திருந்த கண்களுடன் கூடிய அவ்விருவரும், இரண்டு பாம்புகளைப் போலச் சீற்றத்துடன் மூச்சுவிட்டனர். எதிரிகளைத் தண்டிப்பவர்களும், பெரும் வீரம் கொண்டவர்களுமான அவ்விருவரும் ஒருவரையொருவர் அணுகி சிதைத்தனர்.(8) உண்மையில் அவர்கள், பெரும் சுறுசுறுப்புக் கொண்ட இரு பருந்துகளைப் போல, அல்லது கோபத்தால் தூண்டப்பட்ட இரு சரபங்களைப் போல ஒருவரோடொருவர் போரிட்டனர்.(9)

அப்போது எதிரிகளைத் தண்டிப்பவனான பீமன், பகடையாட்டத்தின் போதும், நாடுகடத்தப்பட்டுக் காட்டில் இருந்தபோதும், விராடனின் நகரத்தில் வசித்த போதும் தான் பட்ட துன்பங்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்தும்,(10) செழிப்பிலும், ரத்தினங்களிலும் பெருகியிருந்த தங்கள் அரசு உமது மகன்களால் களவாடப்பட்டது, உம்மாலும், சூதனின் மகனாலும் {கர்ணனாலும்} பாண்டவர்களுக்கு எண்ணற்ற தீங்குகள் இழைக்கப்பட்டது ஆகியவற்றை மனதில் கொண்டும்,(11) அப்பாவியான குந்தியை நீர் அவளது மகன்களுடன் சேர்த்து எரிக்கச் சதி செய்த உண்மையை நினைத்தும், சபைக்கு மத்தியில் அந்த இழிந்தவர்களின் {திருதராஷ்டிரன், திருதராஷ்டிரன் மகன்கள் மற்றும் கர்ணன் ஆகியோரின்} கைகளில் கிருஷ்ணை {திரௌபதி} அடைந்த இன்னல்கள்,(12) துச்சாசனனால் அவளது குழல்கள் பற்றப்பட்டது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கர்ணன், "உன் கணவர்கள் இறந்துவிட்டதால் {கணவனற்றவளானதால்}, நீ மற்றொரு கணவனைக் கொள்வாயாக; நரகத்தில் மூழ்கிவிட்ட பிருதையின் {குந்தியின்} மகன்கள் எள்ளுப்பதர்களைப் போன்றவர்களாவர்" என்ற அளவுக்குப் பேசிய பேச்சு ஆகியவற்றை நினைவுப்படுத்திக் கொண்டும்,(13, 14) ஓ! குருவின் மகனே {திருதராஷ்டிரரே}, உமது முன்னிலையில் கௌரவர்கள் உதிர்த்த பிற வார்த்தைகள், உமது மகன்கள் கிருஷ்ணையைத் {திரௌபதியைத்} தங்கள் அடிமையாய் அடைந்து அனுபவிக்க விரும்பிய உண்மை,(15) பாண்டுவின் மகன்கள் மான் தோலுடுத்தி காட்டுக்குச் செல்ல முற்படுகையில், கர்ணன் அவர்களிடம் பேசிய கடுஞ்சொற்கள்,(16) கோபம் நிறைந்தவனும், செழிப்பாக இருந்தவனும், மூடனுமான உமது மகன் {துரியோதனன்}, வருந்திக்கொண்டிருந்த பிருதையின் {குந்தியின்} மகன்களை வெறும் புற்களாக நினைத்து மகிழ்ச்சியோடு தற்புகழ்ச்சியில் ஈடுபட்டது ஆகியவற்றை நினைவுகூர்ந்தும்,(17) உண்மையில் அறம்சார்ந்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்தப் பீமன் இவற்றையும், குழந்தை பருவத்தில் இருந்து தானடைந்த இன்னல்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்து, தன் உயிரையே துச்சமாக மதித்தான்.(18)

பாரதக் குலத்தின் புலியான அந்த விருகோதரன் {பீமன்}, தங்கமயமான கைப்பிடி கொண்டதும், வெல்லமுடியாததும், வல்லமைமிக்கதுமான தனது வில்லை வளைத்து, தன் உயிரை முற்றிலும் துச்சமாக மதித்து, கர்ணனை எதிர்த்து விரைந்தான்.(19) அந்தப் பீமன், கல்லில் கூராக்கப்பட்ட பிரகாசமான கணைமாரியை ஏவி சூரியனின் ஒளியையே மறைத்தான்.(20) எனினும் அந்த அதிரதன் மகன் {கர்ணன்} சிரித்துக் கொண்டே, கல்லில் கூராக்கப்பட்டவையும், சிறகுபடைத்தவையுமான தன் கணைகளால், பீமசேனனின் அந்தக் கணைமாரியை விரைவாகக் கலங்கடித்தான்.(21) பிறகு, பெரும் பலமும், வலிமைமிக்கக் கரங்களும் கொண்ட அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான அதிரதன் மகன் {கர்ணன்}, ஒன்பது கூரிய கணைகளால் பீமனைத் துளைத்தான்.(22) அங்குசத்தால் தாக்கப்பட்ட யானையைப் போல அந்தக் கணைகளால் தாக்கப்பட்ட விருகோதரன் {பீமன்}, அச்சமற்ற வகையில் அந்தச் சூதனின் மகனை {கர்ணனை} எதிர்த்து விரைந்தான்.(23) எனினும் கோபத்துடன் கூடிய கர்ணன், மதம் கொண்ட யானையை எதிர்த்து விரையும் மற்றொரு மதங்கொண்ட யானையைப் போல, வேகமாகவும், சக்தியுடனும் தன்னை நோக்கி இப்படி விரைந்துவரும் அந்தப் பாண்டவக் காளையை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(24)

நூறு பேரிகைகளின் ஒலிக்கு ஒப்பான வெடிப்பொலி கொண்ட தன் சங்கை முழங்கிய கர்ணன், ஆர்ப்பரிக்கும் கடலைப் போலப் பீமனை ஆதரித்து வந்த படையை மகிழ்ச்சியாகக் கலங்கடித்தான்.(25) யானைகள், குதிரைகள், தேர்கள் மற்றும் காலாட்படை வீரர்களைக் கொண்ட தனது படை கர்ணனால் இப்படிக் கலங்கடிக்கப்படுவதைக் கண்ட பீமன், முன்னவனை {கர்ணனை} அணுகி தன் கணைகளால் அவனை மறைத்தான்.(26) பிறகு கர்ணன் அன்னங்களின் நிறங்கொண்ட தன் குதிரைகளை, கரடிகளின் நிறங்கொண்ட பீமனுடையவையுடன் {பீமனின் குதிரைகளுடன்} கலக்கச் செய்து, தன் கணைகளால் அந்தப் பாண்டுவின் மகனை {பீமனை} மறைத்தான்.(27) கரடிகளின் நிறத்தையும், காற்றின் வேகத்தையும் கொண்ட அக்குதிரைகள், அன்னங்களின் நிறத்தைக் கொண்ட கர்ணனுடையவையுடன் {கர்ணனின் குதிரைகளுடன்} கலந்ததைக் கண்டு உமது துருப்புகளுக்கு மத்தியில் "ஓ" என்றும், "ஐயோ" என்றும் கூச்சல்கள் எழுந்தன.(28) காற்றின் வேகத்தைக் கொண்ட அக்குதிரைகள் இப்படி ஒன்றாகக் கலந்து, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, ஆகாயத்தில் ஒன்று கலந்திருக்கும் வெள்ளை மற்றும் கருப்பு மேகங்களைப் போல மிக அழகாகத் தெரிந்தன.(29)

கர்ணன் மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகிய இருவரும் கோபத்தால் தூண்டப்பட்டிருப்பதைக் கண்ட உமது படையின் பெரும் தேர்வீரர்கள் அச்சத்தால் நடுங்கத் தொடங்கினர்.(30) அவர்கள் போரிட்ட போர்க்களமானது விரைவில் யமனின் கொற்றங்களைப் போலப் பயங்கரமாக மாறியது. உண்மையில் அஃது, ஓ! பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, இறந்தோரின் மன்னனுடைய {யமனின்} நகரத்தைப் போலக் காண்பதற்கு மிகப் பயங்கரமாக மாறியது.(31) உமது படையின் பெரும் தேர்வீரர்கள், ஏதோ விளையாட்டுக் களத்தின் பார்வையாளர்களைப் போல அக்காட்சியைப் பார்த்தும், அந்தப் பயங்கர மோதலில் அந்த இருவரில் எவரும் மற்றவர் மேல் ஆதிக்கம் பெறுவதைக் காணவில்லை.(32) ஓ! மன்னா, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்கள், உம்முடைய மற்றும் உமது மகன்களின் தீய கொள்கையின் விளைவால் அவ்விரு வீரர்களின் வலிமைமிக்க ஆயுதங்களின் மோதல்களையும், அந்தக் கலப்பையும் மட்டுமே கண்டனர்.(33) எதிரிகளைக் கொல்பவர்களான அவ்விருவரும் தங்கள் கூரிய கணைகளால் ஒருவரையொருவர் மறைப்பதையே தொடர்ந்தனர். அற்புத ஆற்றலைக் கொண்ட அவ்விருவரும் தங்கள் கணைமாரியால் ஆகாயத்தையே நிறைத்தனர்.(34)

வலிமைமிக்க அவ்விரு தேர்வீரர்களும் ஒருவரையொருவர் உயிரை எடுக்க விரும்பி ஒருவரின் மேல் ஒருவர் கூரிய கணைகளை ஏவிக்கொண்டு, மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகங்களைப் போலப் பார்ப்பதற்கு மிக அழகாக மாறினர்.(35) எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கணைகளை ஏவி, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சுடர்மிக்க விண்கற்களைக் கொண்டுள்ளதைப் போல ஆகாயத்தைப் பிரகாசமாக்கினர்.(36) அவ்விரு வீரர்களாலும் ஏவப்பட்டவையும், கழுகின் இறகுகளைக் கொண்டவையுமான அக்கணைகள், கூதிர்காலத்து வானில் திரியும் உற்சாகமான நாரைகளின் வரிசைகளைப் போலத் தெரிந்தன.(37)

அதேவேளையில், , கிருஷ்ணனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, அந்த எதிரிகளைத் தண்டிப்பவன் {பீமன்}, சூதனின் மகனுடன் {கர்ணனுடன்} போரில் ஈடுபடுவதைக் கண்டு, அந்தச் சுமையானது பீமன் தாங்கிக் கொள்வதற்கு மிகப் பெரியது எனக் கருதினர்.(38) ஒருவரின் கணைகளை மற்றவர் கலங்கடிப்பதற்காகக் கர்ணனும், பீமனும் ஒருவர் மேல் ஒருவர் இக்கணைகளை ஏவியபோது, யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்கள் பலர் இதனால் தாக்கப்பட்டு உயிரை இழந்து கீழே விழுந்தனர்.(39) எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கில் அப்படி விழுந்ததன் விளைவாலும், விழுந்த உயிரினங்கள் உயிரை இழந்ததாலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் படையில் ஒரு பேரழிவு ஏற்பட்டது.(40) விரைவில் அந்தப் போர்க்களமானது, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் ஆகியவற்றின் உயிரற்ற உடல்களால் மறைக்கப்பட்டது" {என்றான் சஞ்சயன்}.(41)


துரோண பர்வம் பகுதி – 131ல் வரும் மொத்த சுலோகங்களின் எண்ணிக்கை 41.

குறிப்பு: ஆசிரியரான கங்குலியின் பெயரில்லாமல், பதிப்பாளரான பிரதாப சந்திர ராய் அவர்களின் பெயரோடு பனிரெண்டு புத்தகங்களாக வந்த The Mahabharata of Krishna-Dwaipayana Vyasa இரண்டாம் பதிப்பின் பிடிஎஃப் கோப்புகள் இன்று கிடைத்தன. இந்தக் கோப்புகளில் துரோண பர்வத்தில் இருந்து உள்ள மொழிபெயர்ப்பு சுலோக எண்களுடன் கூடியதாக இருக்கிறது. மேலும் சில ஆயுதங்களின் பெயர்களும், சில பெயர்ச்சொற்களும் நேரடியான சம்ஸ்க்ருதச் சொற்களாகவே, தமிழ் வாசகருக்குப் புரியும் வகையில் இருக்கின்றன. நான் இதுவரை Sacred Texts வலைத்தளத்தில் வெளிவந்தவற்றையே மொழிபெயர்த்து வந்தேன். அஃது ஆங்கில வாசகருக்காகச் சில மாற்றங்களுடன் வந்ததாகத் தெரிகிறது. மற்றபடி இரண்டு பதிப்புகளுக்கும் பெரிய வேறுபாடுகள் ஏதும் இல்லை. எனவே, இன்று கிடைத்த இந்தப் பிடிஎஃப் கோப்புகளின் உதவியுடன் இனி மொழிபெயர்க்கலாம் என்றிருக்கிறேன். சுலோக எண்களுடன் இருப்பது, பிற்காலத்தில் மூலத்துடன் ஒப்பு நோக்க ஏதுவாக இருக்கும். எனவே இப்பதிவில் இருந்து சுலோக எண்கள் குறிக்கப்படுகின்றன. ஏற்கனவே செய்யப்பட்ட மொழிபெயர்ப்பையும் இந்தக் கோப்புகளுடன் ஒப்புநோக்கி சுலோக எண்களைக் குறிக்க வேண்டும். முடியுமா என்று தெரியவில்லை.


ஆங்கிலத்தில் | In English