Monday, August 29, 2016

பீமனிடம் மீண்டும் புறமுதுகிட்ட கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 135

Karna once more turned his back upon Bhima! | Drona-Parva-Section-135 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 51)

பதிவின் சுருக்கம் : தன்னையே குற்றவாளியாகக் கருதிய கர்ணன்; கர்ணனின் வில்லை அறுத்து, அவனது குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்ற பீமன்; மீண்டும் கர்ணனின் வில்லை அறுத்தது; பீமனின் கவசத்தை அறுத்த கர்ணன்; பீமசேனனிடம் மீண்டும் புறமுதுகிட்ட கர்ணன்; பீமன் மீது தன் தம்பிகளை ஏவிய துரியோதனன்; அவர்களில் எழுவரைக் கொன்ற பீமன்; விதுரனின் வார்த்தைகளை நினைத்த கர்ணன்; கர்ணனின் கவசத்தை அறுத்த பீமன்;பீமனுக்கும் கர்ணனுக்கும் இடையில் மீண்டும் ஏற்பட்ட கடும் மோதல்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உமது மகன்கள் (களத்தில்) நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பதைக் கண்டு, பெரும் ஆற்றலைக் கொண்ட கர்ணன், பெரும் கோபத்தால் நிறைந்து, தன் உயிரில் நம்பிக்கையற்றவனானான்.(1) அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, பீமனால் தன் கண்களுக்கு எதிரிலேயே போரில் கொல்லப்பட்ட உமது மகன்களைக் கண்டு தன்னையே குற்றவாளியாகக் கருதினான்.(2) அப்போது பீமசேனன், முன்னர்க் கர்ணனால் இழைக்கப்பட்ட தீமைகளை நினைவுகூர்ந்து, சினத்தால் நிறைந்து, திட்டமிட்ட கவனத்தோடு {பாதுகாப்போடு} கூரிய கணைகள் பலவற்றால் கர்ணனைத் துளைக்கத் தொடங்கினான்.(3)


பிறகு கர்ணன், சிரித்துக் கொண்டே ஐந்து கணைகளால் பீமனைத் துளைத்து, தங்கச் சிறகுகள் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான எழுபது கணைகளால் மீண்டும் அவனை {பீமனைத்} துளைத்தான்.(4) கர்ணனால் ஏவப்பட்ட அக்கணைகளை அலட்சியம் செய்த விருகோதரன் {பீமன்}, நேரான ஒரு நூறு {100} கணைகளால் அந்தப் போரில் ராதையின் மகனை {கர்ணனைத்} துளைத்தான்.(5) மீண்டும் ஐந்து கூரிய கணைகளால் அவனது முக்கிய அங்கங்களைத் துளைத்த பீமன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, ஒரு பல்லத்தைக் கொண்டு அந்தச் சூத மகனின் {கர்ணனின்} வில்லை அறுத்தான்.(6) பிறகு மகிழ்ச்சியற்றவனான கர்ணன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, தன் கணைகளால் அனைத்துப் பக்கங்களிலும் பீமசேனனை மறைத்தான்.(7)


அப்போது பீமன், கர்ணனின் குதிரைகள் மற்றும் தேரோட்டியைக் கொன்று, இப்படியே கர்ணனின் அருஞ்செயல்களுக்கு எதிர்வினையாற்றி உரத்த சிரிப்பொன்றைச் சிரித்தான்.(8) பிறகு மனிதர்களில் காளையான அந்தப் பீமன், தன் கணைகளால் கர்ணனின் வில்லை அறுத்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உரத்த நாணொலி கொண்டதும், கைப்பிடியில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதுமான அந்த வில்லானது (அவனது {கர்ணனின்} கரங்களில் இருந்து) கீழே விழுந்தது.(9) அப்போது வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன் தன் தேரில் இருந்து இறங்கி அந்தப் போரில் ஒரு கதாயுதத்தை எடுத்து, அதைப் பீமனின் மீது கோபத்துடன் வீசினான்.(10) ஓ மன்னா, தன்னை நோக்கி வேகமாக வரும் அந்தக் கதாயுதத்தைக் கண்ட விருகோதரன் {பீமன்}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதைத் தன் கணைகளால் தடுத்தான்.(11)

பிறகு, பெரும் ஆற்றலைக் கொடையாகக் கொண்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, சூதன் மகனின் {கர்ணனின்} உயிரை எடுக்க விரும்பி, பெரும் சுறுசுறுப்புடன் முயன்று, பின்னவன் {கர்ணன்} மீது ஓராயிரம் கணைகளை ஏவினான்.(12) எனினும் கர்ணன், அந்தப் போரில், அந்தக் கணைகள் அனைத்தையும் தடுத்து, தன் கணைகளால் பீமனின் கவசத்தை அறுத்தான்.(13) பிறகு அவன் {கர்ணன்}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இருபத்தைந்து குறுங்கணைகளால் பீமனைத் துளைத்தான். இவை யாவும் காண மிக அற்புதமாக இருந்தன.(14) பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட பீமன், ஒன்பது நேரான கணைகளை அந்தச் சூதனின் மகன் {கர்ணன்} மீது ஏவினான்.(15) கர்ணனின் கவசத்தையும், வலக்கரத்தையும் துளைத்துச் சென்ற அந்தக் கூரிய கணைகள், எறும்புப் புற்றுக்குள் நுழையும் பாம்புகளைப் போலப் பூமிக்குள் நுழைந்தன. (16) பீமசேனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைமாரியால் மறைக்கப்பட்ட கர்ணன், மீண்டும் பீமசேனனிடம் புறமுதுகிட்டான்.(17)

சூதனின் மகன் {கர்ணன்} புறமுதுகிடுவதையும், குந்தியின் மகனுடைய {பீமனின்} கணைகளால் எங்கும் மறைக்கப்பட்டுக் காலாளாக ஓடுவதையும் கண்ட துரியோதனன்,(18) {தன் தம்பிகளிடம்} “ராதையின் மகனுடைய {கர்ணனின்} தேரை நோக்கி அனைத்துப் பக்கங்களில் இருந்து விரைந்து செல்வீராக” என்றான். பிறகு, ஓ! மன்னா, தங்கள் அண்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியமடைந்த உமது மகன்கள், கணை மாரியை ஏவியபடியே போரில் பாண்டுவின் மகனை {பீமனை} நோக்கி விரைந்தனர்.(19) அவர்கள் {துரியோதனனின் அந்தத் தம்பிகள்}, சித்ரன், உபசித்ரன், சித்ராக்ஷன் [1], சாருசித்ரன், சராஸனன், சித்ராயுதன், சித்ரவர்மன் ஆகியோராவர். அவர்கள் அனைவரும் போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்தவர்களாக இருந்தனர். எனினும், வலிமைமிக்கத் தேர்வீரனான பீமசேனன், இப்படித் தன்னை எதிர்த்து விரைந்து வரும் அந்த உமது மகன்கள் ஒவ்வொருவரையும் ஒரே கணையால் {ஒவ்வொரு கணைகளால்} வீழ்த்தினான். உயிரை இழந்த அவர்கள், சூறாவளியால் வேரோடு சாய்க்கப்பட்ட மரங்களைப் போலக் கீழே பூமியில் விழுந்தனர் [2].(20-22)

[1] கங்குலியின் பதிப்பில் இப்பெயர் விடுபட்டிருக்கிறது. வேறொரு பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இப்பெயர் இடம்பெற்றிருக்கிறது.

[2] சென்ற பதிவின் அடிக்குறிப்பு [3]ல், போர் தொடங்கிய நாளில் இருந்து, துரியோதனின் தம்பிகளில் 42 பேரைப் பீமன் கொன்றிருப்பதாகக் கண்டோம். இப்போது இந்தப்பதிவில் கொல்லப்பட்ட சித்ரன், உபசித்ரன், சித்ராக்ஷன், சாருசித்ரன், சராஸனன், சித்ராயுதன், சித்ரவர்மன் ஆகிய எழுவரைச் சேர்த்து இதுவரை பீமன், திருதராஷ்டிரன் மகன்களில் 49 பேரைக் கொன்றிருக்கிறான்.

வலிமைமிக்கத் தேர்வீரர்களான அந்த உமது மகன்கள் அனைவரும் இப்படிக் கொல்லப்பட்டதைக் கண்ட கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அழுகை நிறைந்த முகத்துடன், விதுரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.(23) முறையான சாதனங்களுடன் கூடிய மற்றொரு தேரில் ஏறியவனும், பெரும் ஆற்றலைக் கொண்டவனுமான கர்ணன், போரில் பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்து வேகமாகச் சென்றான்.(24) தங்கச் சிறகுகளுடன் கூடிய கூரிய கணைகளால் ஒருவரையொருவர் துளைத்துக் கொண்ட அவ்விரு வீரர்களும், சூரியனின் கதிர்கள் ஊடுருவிய இரு மேகத் திரள்களைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(25)

அப்போது சினத்தால் தூண்டப்பட்ட பாண்டுவின் மகன் {பீமன்}, பெரும் கூர்மை மற்றும் கடும் சக்தியைக் கொண்ட முப்பத்தாறு {36} பல்லங்களால் சூதன் மகனின் {கர்ணனின்} கவசத்தை அறுத்தான்.(26) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட சூதனின் மகனும் {கர்ணனும்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஐம்பது நேரான கணைகளால் குந்தியின் மகனை {பீமனைத்} துளைத்தான்.(27) செஞ்சந்தனக் குழம்பைத் தங்கள் மேனியில் பூசியிருந்த அவ்விரு வீரர்களும், கணைகளால் ஒருவருக்கொருவர் பல காயங்களை உண்டாக்கி சிந்திய குருதியால் மறைக்கப்பட்டு, உதயச் சூரியனையும், சந்திரனையும் போலப் பிரகாசமாகத் தெரிந்தனர்.(28) கணைகளால் அறுக்கப்பட்ட கவசங்களுடன் தங்கள் உடல்கள் குருதியால் மறைக்கப்பட்டிருந்த கர்ணனும், பீமனும், தங்கள் சட்டைகளில் இருந்து அப்போதுதான் விடுபட்ட இரு பாம்புகளைப் போலத் தெரிந்தனர்.(29) உண்மையில், தங்கள் பற்களால் ஒன்றையொன்று சிதைத்துக் கொள்ளும் இரு புலிகளைப் போல மனிதர்களில் புலிகளான அவ்விருவரும், தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர். மழைத்தாரைகளைப் பொழியும் இரு மேகத் திரள்களைப் போல அவ்விரு வீரர்களும் தங்கள் கணைகளை இடையறாமல் பொழிந்தனர்.(30)

எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும், தங்கள் தந்த முனைகளால் ஒன்றையொன்று கிழித்துக் கொள்ளும் இரு யானைகளைப் போலத் தங்கள் கணைகளால் தங்கள் ஒவ்வொருவரின் உடல்களையும் கிழித்துக் கொண்டனர்.(31) ஒருவரை நோக்கி ஒருவர் முழங்கி தங்கள் கணைகளை ஒருவர் மேல் ஒருவர் பொழிந்த முதன்மையான அவ்விரு தேர்வீரர்களும், தங்கள் தேர்களைக் கொண்டு வட்டங்களாலான அழகிய தடங்களை உண்டாக்கச் செய்து ஒருவரோடொருவர் விளையாடுவதாகத் தெரிந்தது.(32) அவர்கள், பருவகாலத்தில் உள்ள பசுவின் முன்னிலையில் ஒன்றை நோக்கி ஒன்று முழங்கும் வலிமைமிக்க இரு காளைகளுக்கு ஒப்பாக இருந்தனர். உண்மையில், மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரும், பெரும் ஆற்றலைக் கொண்ட வலிமைமிக்க இரு சிங்களைப் போலவே தெரிந்தனர்.(33) கோபத்தால் சிவந்த தங்கள் கண்களால் ஒருவரையொருவர் நோக்கியவர்களும், பெரும் சக்தியைக் கொண்டவர்களுமான அவ்விரு போர்வீரர்களும், சக்ரனையும் {இந்திரனையும்}, விரோசனன் மகனையும் {பிரகலாதனையும்} போலப் போரிட்டனர்.(34)

அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், வில்லைத் தன்னிரு கரங்களால் வளைத்தபோது, மின்னலின் சக்தியூட்டப்பட்ட மேகம் ஒன்றைப் போலவே தெரிந்தான்.(35) பிறகு வில்லின் நாணொலியைத் தன் இடியொலியாகவும், இடையறாத கணை மாரியைத் தன் மழைப்பொழிவாகவும் கொண்ட அந்த வலிமைமிக்கப் பீம மேகம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தக் கர்ண மலையை மறைத்தது.(36) பயங்கர ஆற்றலைக் கொண்டவனும் பாண்டுவின் மகனுமான அந்தப் பீமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மீண்டும் ஒரு முறை தன் வில்லில் இருந்து ஏவப்பட்ட ஓராயிரம் கணைகளால் கர்ணனை மறைத்தான்.(37) கங்க இறகுகளால் அமைந்த சிறகுகளைக் கொண்ட கணைகளைக் கொண்டு அவன் {பீமன்} கர்ணனை மறைத்த போது, உமது மகன்கள் இயல்புக்கு மீறிய அவனது ஆற்றலைக் கண்டனர்.(38)

பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்}, சிறப்புமிக்கக் கேசவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, சாத்யகிக்கும், (அர்ஜுனன் தேருடைய இரண்டு) சக்கரங்களைப் பாதுகாப்பவர்களான இருவருக்கும் (யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ் ஆகியோருக்கும்) மகிழ்ச்சியை ஊட்டியபடி, இப்படியே பீமன் கர்ணனுடன் போரிட்டான்.(39) பீமனின் ஆற்றல், கரங்களின் வலிமை, விடாமுயற்சி ஆகியவற்றை அறிந்தவர்களான உமது மகன்கள் அனைவரும் மகிழ்ச்சியற்றவர்களானார்கள்” {என்றான் சஞ்சயன்}.(40)
--------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 135ல்  வரும் மொத்த சுலோகங்கள் 40



ஆங்கிலத்தில் | In English