Sunday, August 28, 2016

கௌரவர்கள் ஐவரைக் கொன்ற பீமன்! - துரோண பர்வம் பகுதி – 134

Bhima killed five kauravas! | Drona-Parva-Section-134 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 50)

பதிவின் சுருக்கம் : கர்ணன் மற்றும் அவனை நம்பிய துரியோதனன் ஆகியோரைக் குறித்து சஞ்சயனிடம் புலம்பி, பீமனின் ஆற்றலை வியந்த திருதராஷ்டிரன்; திருதராஷ்டிரனை நிந்தித்த சஞ்சயன்; கர்ணனின் தோல்வியைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத துரியோதனின் தம்பிகள் ஐவர் பீமனை எதிர்த்துச் சென்றது; அவர்களைக் கண்ட கர்ணன் மீண்டும் திரும்பிப் பீமனுடன் போரிட்டது; கர்ணனைத் தடுத்துக் கொண்டே அந்தக் கௌரவர்கள் ஐவரையும் கொன்ற பீமன்; கர்ணனைக் கோபத்துடன் வெறித்துப் பார்த்த பீமன்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "விதியே உயர்ந்தது என நான் நினைக்கிறேன். அதிரதன் மகன் {கர்ணன்} தீர்மானத்துடன் போரிட்டாலும், பாண்டுவின் மகனை {பீமனை} வெல்ல முடியாததால், அந்தப் பயனற்ற முயற்சிக்கு ஐயோ.(1) கோவிந்தனோடு {கிருஷ்ணனோடு} கூடிய பார்த்தர்கள் அனைவரையும் போரில் வெல்லத்தக்கவனாகக் கர்ணன் தற்புகழ்ச்சி செய்கிறான். "கர்ணனைப் போன்ற மற்றொரு போர்வீரனை இவ்வுலகில் நான் கண்டதில்லை" என்று துரியோதனன் பேசுவதை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். (2)

உண்மையில், ஓ! சூதா {சஞ்சயா}, முன்னர்த் துரியோதனன் என்னிடம், "கர்ணன், வலிமைமிக்க வீரனும், உறுதிமிக்க வில்லாளியும், களைப்பனைத்திற்கும் அப்பாற்பட்டவனுமாவான். அந்த வசுசேனனை {கர்ணனை} நான் என் கூட்டாளியாகக் கொண்டால், தேவர்களே எனக்கு ஈடாகமாட்டார்கள் எனும்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பலவீனமானவர்களும், கொடூரர்களுமான பாண்டுவின் மகன்களைக் குறித்து என்ன சொல்ல வேண்டும்?" என்று {துரியோதனன்} சொல்வது வழக்கம். எனவே, ஓ! சஞ்சயா, தோற்கடிக்கப்பட்டு, விஷத்தை இழந்த பாம்பைப் போலத் தெரிந்த கர்ணன், போரில் இருந்து ஓடியதைக் கண்ட துரியோதனன் என்ன சொன்னான் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஐயோ, உணர்வுகளை இழந்தவனான துரியோதனன், சுடர்மிக்க நெருப்புக்குள் அனுப்பப்படும் ஒரு பூச்சியைப் போல, போரை அதிகம் அறியாதவனும், உதவியற்றவனுமான துர்முகனை அந்தப் பயங்கர மோதலுக்குள் அனுப்பினானே.


ஓ! சஞ்சயா, அஸ்வத்தாமன், மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, கிருபர் ஆகியோர் ஒன்றுசேர்ந்தாலும், பீமசேனனின் எதிரே நிற்க முடியாதே. பத்தாயிரம் {10000} யானைகளுக்கு இணையான பயங்கர வலிமை மற்றும் மருத்தனின் சக்தி ஆகியவற்றைக் கொண்ட பீமனையும், அவனது கொடூர நோக்கங்களையும் அவர்களும் {அஸ்வத்தாமன், சல்லியன் மற்றும் கிருபர் ஆகியோரும்} அறிவார்கள். பீமனின் வலிமை, கோபம், சக்தி ஆகியவற்றை அறிந்த அந்தப் போர் வீரர்கள், யுக முடிவில் தோன்றும் யமனுக்கு ஒப்பானவனும், கொடூர செயல்களைச் செய்பவனுமான அந்த வீரனின் {பீமனின்} கோபத்தைத் தூண்டுவார்களா? சூதனின் மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான கர்ணன் மட்டுமே, தன் கரங்களின் ஆற்றலை நம்பி, பீமசேனனை அலட்சியமாகக் கருதி அவனுடன் போரிட்டதாகத் தெரிகிறது.(3-10)

புரந்தரன் {இந்திரன்} ஓர் அசுரனை வென்றதைப் போலக் கர்ணனைப் போரில் வென்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, போரில் வேறு எவராலும் வெல்லப்பட முடியாதவனாகவே இருக்கிறான். துரோணரையே கலங்கடித்து, அர்ஜுனனைத் தேடி என் படைக்குள் தனியாக நுழைந்த அந்தப் பீமனை, உயிர்வாழும் நம்பிக்கை கொண்ட எவன் அணுகுவான்? உண்மையில், ஓ! சஞ்சயா, பீமனின் முகத்துக்கு நேராக நிற்கும் துணிவு கொண்ட வேறு எவன் இருக்கிறான்?(11-13) கையில் உயர்த்தப்பட்ட வஜ்ரத்துடன் கூடிய பெரும் இந்திரனின் முன்பு நிற்க அசுரர்களில் எவன் துணிவான்? [1] ஒரு மனிதன், இறந்தவர்களின் மன்னனுடைய {யமனின்} வசிப்பிடத்தில் நுழைந்த பிறகும் திரும்பலாம்.(14) ஆயினும், எவனாலும் பீமசேனனிடம் மோதிவிட்டு திரும்ப முடியாது. பலவீனமான ஆற்றலுடனும், அறிவில்லாமலும், கோபக்கார பீமசேனனை எதிர்த்துச் செல்வோர் சுடர்மிக்க நெருப்பில் விழும் பூச்சிகளைப் போன்றவராவர்.

[1] "இரு மொழிகளின் மாண்புகளும் முற்றிலும் வேறாக இருப்பதால், பதினாலாம் சுலோகத்தின் முதல் வரியின் பொருளை, பதிமூன்றாம் சுலோகத்தின் இரண்டாம் பாதியுடன் உறுதியான வடிவத்தில் இணைக்க முயலாமல் தனியாகவே கொடுத்திருக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், "சஞ்சய, வஜ்ராயுதத்தைக் கையில் பிடித்த மகேந்திரனுக்கு எதிரில் அசுரன் போலப் பீமனுக்கெதிரில் எவன் நிற்க சக்தியுள்ளவன்?" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரிலும் மேற்கண்ட பதிப்பில் உள்ளதைப் போலவே உள்ளது.

கோபமும், மூர்க்கமும் கொண்ட பீமன், என் மகன்களைக் கொல்வது குறித்துக் குருக்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே சபையில் சொன்னதை நினைவுகூர்ந்தும், கர்ணனின் தோல்வியைக் கண்டும், அச்சத்தாலேயே துச்சாசனனும், அவனது தம்பிகளும் பீமனுடன் மோதவில்லை என்பதில் ஐயமில்லை.(15-17) ஓ! சஞ்சயா, "கர்ணனும், துச்சாசனனும், நானும் போரில் பாண்டவர்களை வெல்வோம்" என்று (இவ்வார்த்தைகளை) மீண்டும் மீண்டும் சபையில் சொன்ன அந்த என் தீய மகன் {துரியோதனன்}, கிருஷ்ணனுக்குப் பொருத்தமானதை [2] மறுத்ததன் விளைவால், பீமனால் கர்ணன் வீழ்த்தப்பட்டதையும், அவனது தேரை இழக்கச் செய்ததையும் கண்டு துயரால் எரிக்கப்படுகிறான் என்பதில் ஐயமில்லை.(18, 19) கவசம்பூண்ட தனது தம்பிகள், தன் குற்றத்தின் விளைவால் போரில் பீமசேனனால் கொல்லப்படுவதைக் கண்டு, என் மகன் {துரியோதனன்} துயரால் எரிகிறான் என்பதில் ஐயமில்லை.(20)

[2] உண்மையில், "கிருஷ்ணனை அவமதித்ததால்" என்பதே இங்கே பொருளாகும் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், "மதிகேடனும், கௌரவச் சபையில் 'கர்ணனும், துச்சாசனனும், நானும் யுத்தத்தில் பாண்டவர்களை ஜயிப்போம்' என்று அடிக்கடி சொன்னவனுமான என்னுடைய இழிகுணமுள்ள புதல்வன், பீமனாலே கர்ணன் தோல்வியடைவிக்கப்பபட்டு ரதத்தை இழந்ததைக் கண்டும் (முன்பு தான்) கிருஷ்ணனை அவமதித்ததை நினைத்தும் நிச்சயமாக மிகுந்த மன வருத்தத்தை அடைவான்" என்றிருக்கிறது.

கோபத்தால் தூண்டப்பட்டவனும், பயங்கர ஆயுதங்களைத் தரித்தவனும், போரில் காலனைப் போலவே நிற்பவனும், பாண்டுவின் மகனுமான பீமனை உயிரில் விருப்பமுள்ள எவன்தான் பகைமையுடன் எதிர்த்துச் செல்வான்?(21) வடவாக்னியின் கோரப்பற்களுக்கிடையில் இருந்து ஒரு மனிதன் தப்பிவிடலாம், ஆனால், பீமனின் முகத்துக்கு எதிரில் இருந்து எவனாலும் தப்ப முடியாது என்றே நான் நம்புகிறேன்.(23) உண்மையில், பார்த்தனோ, பாஞ்சாலர்களோ, கேசவனோ, சாத்யகியோ போரில் கோபத்தால் தூண்டப்படும்போது, அவர்கள் (தங்கள்) உயிரைக் குறித்துக் கிஞ்சிற்றும் கவலை கொள்வதில்லை. ஐயோ, ஓ! சூதா {சஞ்சயா} என் மகன்களின் உயிர்கள் ஆபத்தில் இருக்கின்றவே" என்றான் {திருதராஷ்டிரன்}.(24)

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! கௌரவ்யரே {திருதராஷ்டிரரே}, தற்போதைய பேரழிவைக் கருத்தில் கொண்டு இப்படித் துயருறும் நீரே இவ்வுலகத்தின் அழிவுக்கான வேர் {காரணம்} என்பதில் ஐயமில்லை.(25) உமது மகன்களின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்த நீரே இந்தக் கடும் பகைமையைத் தூண்டியவராவீர். (நலம் விரும்பும் நண்பர்களால்) தூண்டப்பட்டாலும், மரணமடைய விதிக்கப்பட்ட மனிதனைப் போல உகந்த மருந்தை நீர் ஏற்க மறுத்தீர்.(26) ஓ! ஏகாதிபதி, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, செரிக்கப்பட முடியாத மிகக் கடுமையான நஞ்சைப் பருகிய நீர், இப்போது அதன் விளைவுகள் அனைத்தையும் ஏற்றுக் கொள்வீராக.(27) போராளிகள் தங்களால் முடிந்த வரை சக்தியுடன் போரிடுகின்றனர்; இருப்பினும் அவர்களை நீர் நிந்திக்கிறீரே. எனினும், போர் எவ்வாறு நடந்தது என்பதை விளக்கிச் சொல்கிறேன் கேளும்.(28)

ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் கர்ணன் வீழ்த்தப்பட்டதைக் கண்டவர்களும், பெரும் வில்லாளிகளும், உடன் பிறந்தவர்களுமான உமது ஐந்து மகன்களால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(29) அவர்கள், துர்மர்ஷணன், துஸ்ஸஹன், துர்மதன், துர்த்தரன், ஜயன் ஆவர். அழகிய கவசங்களைப் பூண்டிருந்த அவர்கள் அனைவரும் பாண்டுவின் மகனை எதிர்த்து விரைந்தனர்.(30) அனைத்துப் பக்கங்களிலும் விருகோதரனை {பீமனைச்} சூழ்ந்து கொண்ட அவர்கள், வெட்டுக்கிளிகளின் கூட்டங்களைப் போலத் தெரிந்த தங்கள் கணைகளால் திசைப்புள்ளிகள் அனைத்தையும் மறைத்தனர்.(31) எனினும், பீமன் அந்தப் போரில் இப்படித் திடீரெனத் தன்னை எதிர்த்து விரைபவர்களும், தெய்வீக அழகுடையவர்களுமான அந்த இளவரசர்களைச் சிரித்துக் கொண்டே வரவேற்றான்.(32)

பீமசேனனை எதிர்த்து முன்னேறும் உமது மகன்களைக் கண்டவனும், ராதையின் மகனுமான கர்ணன், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், கூர் முனை கொண்டவையுமான கணைகளை ஏவியபடியே அந்த வலிமைமிக்கப் போர்வீரனை {பீமனை} எதிர்த்து விரைந்தான்.(33) பீமன், உமது மகன்களால் தடுக்கப்பட்டாலும் கர்ணனை எதிர்த்து வேகமாக விரைந்தான்.(34) பிறகு கர்ணனைச் சூழ்ந்து கொண்ட குருக்கள் {கௌரவர்கள்}, நேரான கணைகளின் மழையால் பீமசேனனை மறைத்தனர்.(35) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உறுதிமிக்க வில்லைத் தரித்திருந்த பீமன், மனிதர்களில் காளையரான அவர்கள் அனைவரையும், அவர்களது, குதிரைகள் மற்றும் தேரோட்டிகளுடன் சேர்த்து இருபத்தைந்து {25} கணைகளால் யமனுலகுக்கு அனுப்பி வைத்தான் [3].(36) தங்கள் தேரோட்டிகளுடன் தங்கள் தேர்களில் இருந்து விழுந்த அவர்களது உயிரற்ற வடிவங்கள் {உடல்கள்}, சூறாவளியால் வேருடன் சாய்க்கப்பட்டவையும், பல்வேறு நிறங்களிலான கனமான மலர்களுடன் கூடியவையுமான பெரிய மரங்களைப் போலத் தெரிந்தன.(37)

[3] சேனாதிபதி, ஜலசந்தன், சுஷேணன் {?}, உக்கிரன், வீரபாகு, பீமன், பீமரதன், சுலோசனன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 64ல் 4ம் நாள் போரிலும், சுநாபன், ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 89ல் 8ம் நாள் போரிலும், வியுதோரோஷ்கன், அநாதிருஷ்டி, குண்டபேதின் {?}, விராஜன், தீர்கலோசனன் {தீப்தலோசனன்}, தீர்க்கபாகு, சுபாகு, கன்யாகத்யஜன் {மகரத்வஜன்}, ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 97ல் அதே 8ம் நாள் போரிலும், குண்டபேதி {?}, சுஷேணன் {?}, தீர்க்கநேத்திரன், பிருந்தாரகன், அபயன், ரௌத்ரகர்மன், துர்விமோசனன், விந்தன், அனுவிந்தன், சுவர்மன், சுதர்சன் ஆகிய 11 பேரை துரோண பர்வம் பகுதி 126ல் 14ம் நாள் போரிலும், துர்ஜயன் என்று ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 132ல் அதே 14ம் நாள் போரிலும், துர்முகன் என்ற ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 133ல் அதே 14ம் நாள் போரிலும்,  துர்மர்ஷணன், துஸ்ஸஹன், துர்மதன், துர்த்தரன், ஜயன் ஆகிய ஐவரை இப்போது இந்தப் பதிவில் {துரோண பர்வம் பகுதி 134ல்} அதே 14ம் நாள் போரில் கொன்றிருப்பதோடு சேர்த்தால், பீமன் இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 42 பேரைக் கொன்றிருக்கிறான். {?} என்ற அடைப்புக்குறிகளுக்குள் மீண்டும் கூறப்பட்ட பெயர்கள் இடம்பெற்றிருக்கின்றன.

அதிரதன் மகனை {கர்ணனைத்} தடுத்துக் கொண்டே உமது மகன்களைக் கொன்ற பீமசேனனின் ஆற்றலை நாங்கள் மிக அற்புதமானதாகக் கண்டோம்.(38) கூரிய கணைகளைக் கொண்டு பீமனால் அனைத்துப் பக்கங்களிலும் தடுக்கப்பட்ட சூதனின் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனைப் பார்க்க மட்டுமே செய்தான்.(39) கோபத்தால் கண்கள் சிவந்த பீமசேனனும், உறுதிமிக்கத் தன் வில்லை வளைத்தபடியே கர்ணனின் மீது தன் கோபப் பார்வைகளைச் செலுத்தத் தொடங்கினான்" {என்றான் சஞ்சயன்}.(40)
------------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 134ல்  வரும் மொத்த சுலோகங்கள் 40


ஆங்கிலத்தில் | In English