Tuesday, August 30, 2016

விகர்ணனுக்காக மிகவும் வருந்திய பீமன்! - துரோண பர்வம் பகுதி – 136

Bhima grieved bitterly for Vikarna! | Drona-Parva-Section-136 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 52)

பதிவின் சுருக்கம் : கடுமையாகப் போரிட்ட பீமனும், கர்ணனும்; பீமனின் ஆற்றலைக் கண்டு கௌரவர்களும், பாண்டவர்களும் மெச்சியது; கர்ணனைக் காக்க தன் தம்பிகளில் எழுவரை அனுப்பிய துரியோதனன்; அந்த எழுவரையும் கொன்ற பீமன், விகர்ணனுக்காக வருந்தியது; பீமனின் முழக்கத்தைக் கேட்டு செய்தியை அறிந்து மகிழ்ந்த யுதிஷ்டிரன்; விதுரனின் வார்த்தைகளை நினைவுகூர்ந்த துரியோதனன்; திருதராஷ்டிரனை நிந்தித்த சஞ்சயன்...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பீமசேனனுடைய வில்லின் நாணொலியையும், அவனது உள்ளங்கையொலிகளையும் கேட்டு, மதங்கொண்ட எதிராளியின் முழக்கங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத மற்றொரு மதங்கொண்ட யானையைப்போல ராதையின் மகனால் {கர்ணனால்} அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(1) பீமசேனனின் முன்னிலையில் இருந்து ஒரு கணம் அகன்ற கர்ணன், பீமசேனனால் கொல்லப்பட்ட உமது மகன்களின் மீது கண்களைச் செலுத்தினான்.(2) ஓ! மனிதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே} அவர்களைக் கண்ட கர்ணன் உற்சாகத்தை இழந்து துயரில் மூழ்கினான். நெடிய  பெரும் அனல் மூச்சுகளைவிட்ட அவன் {கர்ணன்}, மீண்டும் பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்துச் சென்றான்.(3)


தாமிரம் போன்ற சிவந்த கண்களுடன், வலிமைமிக்கப் பாம்பொன்றைப் போலக் கோபத்தில் பெருமூச்சுவிட்ட கர்ணன் தன் கணைகளை ஏவிய போது, கதிர்களை இறைக்கும் சூரியனைப் போலவே மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(4) உண்மையில், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, சூரியனில் இருந்து பரவும் கதிர்களுக்கு ஒப்பாகக் கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் விருகோதரன் {பீமன்} மறைக்கப்பட்டான்.(5) மயிலின் இறகுகளைக் கொண்ட அந்த அழகிய கணைகள், கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டு, உறங்குவதற்காக மரத்திற்குள் நுழையும் பறவைகளைப் போல, பீமனுடைய உடலின் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவின.(6)

உண்மையில், தங்கச் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள், கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டு, நாரைகளின் தொடர்ச்சியான வரிசைகளுக்கு ஒப்பாக இடையறாமல் பாய்ந்தன.(7) அதிரதன் மகனால் ஏவப்பட்ட கணைகள் ஒரு வில்லில் இருந்து மட்டும் வெளியேறுவதாகத் தெரியாமல், கொடிமரம், குடை, ஏர்க்கால், நுகத்தடி மற்றும் தேர்த்தட்டு ஆகியவற்றில் இருந்தும் பாய்வதைப் போலத் தெரியும் அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் இருந்தன.(8) உண்மையில், அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, மூர்க்கமான சக்தி கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், கழுகின் இறகுகளைக் கொண்டவையுமானத் தன் வானுலாவும் கணைகளால் மொத்த ஆகாயத்தையும் நிறைக்கும் வகையில் அவற்றை ஏவினான்.(9)

(இப்படி) வெறியால் தூண்டப்பட்டு, காலனைப் போலத் தன்னை நோக்கி விரைந்து வரும் அவனை {கர்ணனைக்} கண்ட விருகோதரன் {பீமன்}, தன் உயிரைக் குறித்து முற்றிலும் கவலைப்படாமல், தன் எதிரியிலும் மேன்மையடைந்து ஒன்பது கணைகளால் அவனைத் {கர்ணனைத்} துளைத்தான்.(10) கர்ணனின் தடுக்கப்பட முடியாத மூர்க்கத்தையும், அந்த அடர்த்தியான கணைமழையையும் கண்ட பீமன், பெரும் ஆற்றலைக் கொண்டவனாதலால், அச்சத்தால் நடுங்கவில்லை.(11)

பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, அதிரதன் மகனின் {கர்ணனின்} கணைப்பொழிவுக்கு எதிர்வினையாக, இருபது கூரிய கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.(12) உண்மையில், பிருதையின் மகன் {பீமன்} முன்னர்ச் சூதனின் மகனால் {கர்ணனால்} எப்படி மறைக்கப்பட்டானோ, அதே போலவே பின்னவன் {கர்ணன்} இப்போது அந்தப் போரில் முன்னவனால் {பீமனால்} மறைக்கப்பட்டான்.(13) போரில் பீமசேனனின் ஆற்றலைக் கண்ட உமது போர்வீரர்களும், சாரணர்களும் கூட மகிழ்ச்சியால் நிறைந்து அவனைப் புகழ்ந்தனர்.(14) கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய இரு தரப்பிலிருந்தும், பூரிஸ்ரவஸ், கிருபர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மத்ர ஆட்சியாளன் {சல்லியன்}, ஜெயத்ரதன், உத்தமௌஜஸ், யுதாமன்யு, சாத்யகி, கேசவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனன்(15) ஆகிய இந்தப் பெரும் தேர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, “நன்று, நன்று” என்று சொல்லி சிங்க முழக்கம் செய்தனர்.(16)

மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் அந்தக் கடுமுழுக்கம் எழுந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகனான துரியோதனன், மன்னர்கள் மற்றும் இளவரசர்கள் அனைவரிடமும், குறிப்பாகத் தன்னுடன் பிறந்த தம்பிகளிடம் இவ்வார்த்தைகளை விரைவாகச் சொன்னான். “அருளப்பட்டிருப்பீராக, விருகோதரனிடம் {பீமனிடமிருந்து} இருந்து கர்ணனைக் காப்பதற்காக அவனிடம் {கர்ணனிடம்} விரைவீராக, இல்லையெனில், பீமனின் வில்லில் இருந்து ஏவப்படும் கணைகளே ராதையின் மகனை {கர்ணனைக்} கொன்றுவிடும். வலிமைமிக்க வில்லாளிகளே சூதனின் மகனை {கர்ணனைக்} காக்க முயல்வீராக” {என்றான் துரியோதனன்}.(17-19).

இப்படித் துரியோதனனால் கட்டளையிடப்பட்டதும், அவனது {துரியோதனனின்} தம்பியரில் எழுவர், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, கோபத்தில் பீமசேனனை நோக்கி விரைந்து, அனைத்துப் பக்கங்களிலும் அவனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டனர்.(20) குந்தியின் மகனை அணுகிய அவர்கள், மழைக்காலங்களில் மலையின் சாரலில் மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களைப் போலக் கணைமாரிகளால் அவனை {பீமனை} மறைத்தனர்.(21) கோபத்தில் தூண்டப்பட்டவர்களான அந்தப் பெரும் தேர்வீரர்கள் எழுவரும், ஓ! மன்னா, பிரளயத்தின் போது சந்திரனைப் பீடிக்கும் ஏழு கோள்களைப் போலப் பீமசேனனைப் பீடிக்கத் தொடங்கினர்.(22)

அப்போது குந்தியின் மகன் {பீமன்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தன் அழகிய வில்லைப் பெரும்பலத்துடன் வளைத்து, அதை உறுதியாகப் பிடித்து,(23) தன் எதிரிகளும் மனிதர்கள்தான் என்பதை அறிந்து, ஏழு கணைகளைக் குறி பார்த்தான். பெருஞ்சினத்துடன் கூடிய அந்தத் தலைவன் பீமன், சூரியக் கதிர்களைப் போன்ற அந்தப் பிரகாசமான கணைகளை அவர்கள் மீது ஏவினான்.(24) உண்மையில், முந்தைய தீங்குகளை நினைவுகூர்ந்த பீமசேனன், உமது மகன்களான அவர்களின் உடல்களில் இருந்து உயிரைப் பிரித்தெடுக்கும் வகையில் அந்தக் கணைகளை ஏவினான்.(25)

ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அந்தக் கணைகள், பீமசேனனால் ஏவப்பட்டு, அந்தப் பாரத இளவரசர்களின் உடல்களைத் துளைத்து வானத்தில் பறந்து சென்றன.(26) உண்மையில், தங்கச் சிறகுகளைக் கொண்ட அந்தக் கணைகள், உமது மகன்களின் இதயங்களைத் துளைத்து ஆகாயத்தில் சென்ற போது, சிறந்த இறகுகளைக் கொண்ட பறவைகளைப் போல அழகாகத் தெரிந்தன.(27) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, குருதியால் எங்கும் நனைந்திருந்த அக்கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்களின் குருதியைக் குடித்த பிறகு, அவர்களின் உடலைக் கடந்து சென்றன.(28) அந்தக் கணைகளால் முக்கிய உறுப்புகள் துளைக்கப்பட்ட அவர்கள், மலைகளின் செங்குத்துப் பாறைகளில் வளரும் நெடிய மரங்கள் யானைகளால் முறிக்கப்பட்டதைப் போலத் தங்கள் தேர்களில் இருந்து கீழே பூமியில் விழுந்தனர்.(29) இப்படிக் கொல்லப்பட்ட உமது ஏழு மகன்கள், சத்ருஞ்சயன், சத்ருஸஹன், சித்ரன், சித்ராயுதன். த்ருடன், சித்ரசேனன், விகர்ணன் ஆகியோராவர் [1].(30)

[1] சேனாதிபதி, ஜலசந்தன், சுஷேணன் {?}, உக்கிரன், வீரபாகு, பீமன், பீமரதன், சுலோசனன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 64ல் 4ம் நாள் போரிலும், சுநாபன், ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், விசாலாக்ஷன் ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 89ல் 8ம் நாள் போரிலும், வியுதோரோஷ்கன், அநாதிருஷ்டி, குண்டபேதின் {?}, விராஜன், தீர்கலோசனன் {தீப்தலோசனன்}, தீர்க்கபாகு, சுபாகு, கன்யாகத்யஜன் {மகரத்வஜன்}, ஆகிய 8 பேரை பீஷ்ம பர்வம் பகுதி 97ல் அதே 8ம் நாள் போரிலும், குண்டபேதி {?}, சுஷேணன் {?}, தீர்க்கநேத்திரன், பிருந்தாரகன், அபயன், ரௌத்ரகர்மன், துர்விமோசனன், விந்தன், அனுவிந்தன், சுவர்மன், சுதர்சன் ஆகிய 11 பேரை துரோண பர்வம் பகுதி 126ல் 14ம் நாள் போரிலும், துர்ஜயன் என்று ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 132ல் அதே 14ம் நாள் போரிலும், துர்முகன் என்ற ஒருவனைத் துரோணபர்வம் பகுதி 133ல் அதே 14ம் நாள் போரிலும்,  துர்மர்ஷணன், துஸ்ஸஹன், துர்மதன், துர்த்தரன், ஜயன் ஆகிய ஐவரை துரோண பர்வம் பகுதி 134ல் அதே 14ம் நாள் போரிலும், சித்ரன், உபசித்ரன், சித்ராக்ஷன், சாருசித்ரன், சராஸனன், சித்ராயுதன், சித்ரவர்மன் ஆகிய எழுவரை துரோண பர்வம் பகுதி 135ல் அதே 14ம் நாள் போரிலும், சத்ருஞ்சயன், சத்ருஸஹன், சித்ரன், சித்ராயுதன். த்ருடன், சித்ரசேனன், விகர்ணன் ஆகிய எழுவரை இப்போது இந்தத் துரோண பர்வம் பகுதி 136ல் அதே 14ம் நாள் போரில் கொன்றிருப்பதோடு சேர்த்தால், பீமன் இதுவரை திருதராஷ்டிரன் மகன்களில் 56 பேரைக் கொன்றிருக்கிறான். இந்தப் பதினான்காம் நாள் போரில் மட்டும் இதுவரை 32 பேரைக் கொன்றிருக்கிறான்

பாண்டுவின் மகனான விருகோதரன் {பீமன்}, இப்படிக் கொல்லப்பட்ட உமது மகன்கள் அனைவரிலும், தன் அன்புக்குரிய விகர்ணனுக்காக வருந்தி, கடும் துக்கத்தை அடைந்தான்.(31) அந்தப் பீமன், “போரில் என்னால் நீங்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்று இப்படியே என்னால் சபதமேற்கப்பட்டது. ஓ! விகர்ணா, அதற்காகவே, நீயும் கொல்லப்படலாயிற்று. {இங்கே} என் சபதமே நிறைவேற்றப்பட்டதாயிற்று.(32) ஓ! வீரா {விகர்ணா}, ஒரு க்ஷத்திரியனின் கடமைகளை மனதில் தாங்கியே நீ போரிட வந்தாய். எங்களுக்கு, அதிலும் குறிப்பாக மன்னனுக்கு (எங்கள் அண்ணனுக்கு) {யுதிஷ்டிரனுக்கு} நன்மை செய்வதில் நீ எப்போதும் ஈடுபட்டு வந்தாய்.(33) எனவே, ஒப்பற்றவனான உனக்காக நான் வருந்துவது முறையாதல் அரிதே {முறையாகாது}” என்றான் {பீமன்} [2].

[2] வேறொரு பதிப்பில், “விகர்ணா, என்னால் இந்தப் பிரதிஜ்ஞை செய்யப்பட்டது யுத்தத்தில் நீங்கள் கொல்லப்படத் தக்கவர்களல்லரோ? ஆதலால், நீ கொல்லப்பட்டாய். என்னால் பிரதிஜ்ஞை காக்கப்பட்டது. வீரனே, க்ஷத்திரிய தர்மத்தை நினைத்துக் கொண்டு நீ யுத்தத்திற்கு வந்தாய். ஆதலால், யுத்தகளத்தில் நீ கொல்லப்பட்டாய். யுத்தமுறையானது கொடியதன்றோ? எங்களுடைய நன்மையிலும், விசேஷமாக (எங்கள்) அரசருடைய நன்மையிலும் பற்றுள்ளவனும், அதிகத் தேஜஸையுடையவனுமான விகர்ணன் நியாயத்தினாலோ அநியாயத்தினாலோ அடிக்கப்பட்டுப் படுத்திருக்கிறான். ஆழ்ந்த புத்தியுள்ளவரும் பூமியில் பிருகஸ்பதிக்குச் சமமானவரும், காங்காபுத்ரருமான பீஷ்மரும் யுத்தத்தில் பிராணனையிழக்கும்படி செய்விக்கப்பட்டார். ஆதலால் யுத்தமானது கொடியதன்றோ?” என்று கூறினான்” என இருக்கிறது.

அவ்விளவரசர்களைக் கொன்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ராதையின் மகன் {கர்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்} பயங்கரமான சிங்கமுழக்கம் ஒன்றைச் செய்தான்.(34) வீரப் பீமனின் அந்தப் பெருங்கூச்சலானது, ஓ! பாரதரே, அந்தப் போரில் அவனது வெற்றியை நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனுக்குத் தெரிவித்தது. உண்மையில், வில் தரித்த அந்தப் பீமனின் மகத்தான கூச்சலைக் கேட்ட மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் போருக்கு மத்தியில் பெரும் மகிழ்ச்சியை உணர்ந்தான்.(35, 36) மகிழ்ச்சியடைந்த அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்} பிறகு, ஓ! மன்னா, தன் தம்பியின் சிங்க முழக்கத்தை, துந்துபிகள் மற்றும் பிற இசைக்கருவிகளின் ஒலிகளோடு வரவேற்றான். ஏற்றுக் கொள்ளப்பட்ட குறியீட்டடின்படி விருகோதரன் {பீமன்} அந்தச் செய்தியை அனுப்பிய பிறகு, ஆயுதங்களை அறிந்தோரில் முதன்மையான அந்த யுதிஷ்டிரன், மகிழ்ச்சியால் நிறைந்து போரில் துரோணரை எதிர்த்து விரைந்தான்.

மறுபுறம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது மகன்கள் முப்பத்தொருவர் [3] கொல்லப்பட்டதைக் கண்ட துரியோதனன், “விதுரர் பேசிய நன்மையான வார்த்தைகள் இப்போது உணரப்படுகின்றன” என்று விதுரரின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தான்.(37-40) இப்படி நினைத்த மன்னன் துரியோதனனால் தான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய முடியவில்லை. பகடையாட்டத்தின் போது, மூடனும், தீயவனுமான உமது மகன் {துரியோதனன்}, (தன் பக்கத்தில் இருந்த) கர்ணனுடன் சேர்ந்து, பாஞ்சால இளவரசியை {திரௌபதியைச்} சபைக்கு அழைத்துவரச் செய்து, அவளிடம் பேசியதும், அதே இடத்தில் உமது முன்னிலையில்(41, 42) கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, “ஓ! கிருஷ்ணையே {திரௌபதியே}, பாண்டவர்கள் தொலைந்தனர், அவர்கள் நிலையான நரகத்திற்குள் மூழ்கிவிட்டனர். எனவே நீ வேறு கணவர்களைத் தேர்ந்தெடுப்பாயாக” என்ற அளவுக்குக் கர்ணனால் பேசப்பட்ட கடும் வார்த்தைகளும், ஐயோ, அவை அனைத்தின் கனியும் {பலனும்} இப்போது வெளிப்படுகின்றன.(43, 44)

[3] 14ம் நாள் போரில் மட்டும் பீமசேனனால் கொல்லப்பட்டவர்கள் 32 பேராவர். மேலே முப்பத்தொன்று என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. துர்முகன், துர்ஜயன் இருவரும் ஒருவராக இருப்பின் கணக்குச் சரியாகவே வரும். கொல்லப்பட்டோரின் பெயர் விபரங்களை அறிய இதே பதிவின் அடிக்குறிப்பு [1] ஐ காணவும்.

மேலும், ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, கோபம் நிறைந்த உமது மகன்கள், அந்த உயர் ஆன்மா கொண்டோரான பாண்டுவின் மகன்களிடம் எள்ளுப்பதர்கள் போன்ற பல்வேறு கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினர். (இப்படி விளைந்த) கோப நெருப்பைப் பதிமூன்று {13} வருடங்கள் தடுத்திருந்த பீமசேனன் இப்போது அதை {கோப நெருப்பைக்} கக்கியபடியே, உமது மகன்களுக்கு அழிவை ஏற்படுத்துகிறான்.(45-46) ஏராளமாகப் புலம்பிய விதுரர், சமாதானத்தை நோக்கி உம்மை இட்டுச் செல்வதில் தவறினார். ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, அவை அனைத்தின் கனியையும் உமது மகன்களுடன் சேர்ந்து அனுபவிப்பீராக.(47) நீர் முதியவராகவும், பொறுமையுள்ளவராகவும், அனைத்துச் செயல்களின் விளைவுகளை முன்னறியவல்லவராகவும் இருக்கிறீர். அப்படியிருந்தும், நீர் உமது நலன்விரும்பிகளின் ஆலோசனைகளைப் பின்பற்ற மறுத்ததால், இவையாவும் விதியின் பயன் என்றே தெரிகிறது.(48) ஓ! மனிதர்களில் புலியே {திருதராஷ்டிரரே} வருந்தாதீர். இவையாவும் உமது பெரும் தவறால் விளைந்தவையே. உமது மகன்களின் அழிவுக்கு நீரே காரணமாவீர் என்பதே எனது கருத்தாகும்.(49)

ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, விகர்ணனும், பெரும் ஆற்றலைக் கொண்ட சித்திரசேனனும் வீழ்ந்துவிட்டனர். உமது மகன்களில் முதன்மையான பல வலிமைமிக்கத் தேர்வீரர்களும் கூட வீழ்ந்துவிட்டனர்.(50) ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே, பீமன், தன் பார்வை செல்லும் தொலைவில் வந்த உமது பிற மகன்களையும் விரைவாகக் கொன்றான்.(51) பாண்டுவின் மகனான பீமனாலும், விருஷனாலும் (கர்ணனாலும்) ஏவப்பட்ட கணைகளால் நமது படையில் ஆயிரக்கணக்கானோர் எரிக்கப்படுவதை உம்மால் மட்டுமே நான் காண நேர்ந்தது” {என்றான் சஞ்சயன்}.(52)
-----------------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 136ல்  வரும் மொத்த சுலோகங்கள் 52


ஆங்கிலத்தில் | In English