The great carnage caused by Karna and Bhima! | Drona-Parva-Section-137 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 53)
பதிவின் சுருக்கம் : பீமனுக்கும் கர்ணனுக்கும் இடையில் தொடர்ந்த போர்; இருவராலும் உண்டாக்கப்பட்ட பேரழிவு; சாரணர்களும் சித்தர்களும் அவ்விரு போர்வீரர்களின் வீரத்தையும், திறனையும் வியந்து பாராட்டியது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா, ஓ! சஞ்சயா, இந்தத் துன்பகரமான விளைவு, நிச்சயமாக என் தீய கொள்கையின் காரணமாக எங்களை அடைந்தது என்றே நான் நினைக்கிறேன்.(1) நடந்தது நடந்ததுதான் என்றே இதுவரை நான் நினைத்து வந்தேன். ஆனால், ஓ! சஞ்சயா, இப்போது நான் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?[1](2) ஓ சஞ்சயா, நான் மீண்டும் அமைதியை அடைகிறேன். எனவே, என் தீய கொள்கைகளைக் காரணமாகக் கொண்ட இந்த வீரர்களின் படுகொலை எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றன என்பதை எனக்குச் சொல்வாயாக” என்றான்.(3)
[1] வேறொரு பதிப்பில், “அந்த அநீதியானது இப்போது பலித்துவிட்டதென்று நான் நினைக்கிறேன். சஞ்சய, சென்றது சென்றதேயென்று என் மனத்தில் உறுதியுண்டாகிவிட்டது” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “இதுவரை நடந்ததெல்லாம் நன்மைக்கே என்றே நான் நினைத்தேன். ஆனால், ஓ! சஞ்சயா, இப்போது எந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவோ அவையே பின்பற்றப்பட வேண்டும்” என்று இருக்கிறது. இப்படி மூன்று பதிப்புகளும் மூன்று விதமாகச் சொல்கின்றன.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் ஆற்றலைக் கொண்டவர்களான கர்ணன் மற்றும் பீமன் ஆகிய இருவரும் மழை நிறைந்த இரு மேகங்களைப் போலத் தங்கள் கணைமாரிகளைப் பொழிவதைத் தொடர்ந்தனர்(4) தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கல்லில் கூராக்கப்பட்டவையும், பீமனின் பெயர் பொறிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள் கர்ணனை அணுகி, அவனது உயிரையே துளைத்துவிடுவன போல, அவனது உடலுக்குள் ஊடுருவின.(5) அதே போல அந்தப் போரில் பீமனும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் இருந்தவையுமான கர்ணனின் கணைகளால் மறைக்கப்பட்டான்.(6) அவர்களது கணைகளை அனைத்துப் பக்கங்களிலும் பாயும் வேளையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெருங்கடலுக்கு ஒப்பாகத் துருப்புகளுக்கு மத்தியில் கலக்கம் உண்டானது.(7) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பாகப் பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் உமது படையின் போராளிகளில் பலர் உயிரை இழந்தனர்.(8)
மனிதர்களின் உடல்களோடு கலந்து விழுந்து கிடந்த யானைகள், குதிரைகள் ஆகியவற்றால் பரவிக் கிடந்த போர்க்களமானது, சூறாவளியால் முறிக்கப்பட்ட மரங்கள் சிதறிக் கிடக்கும் ஒரு பாதையைப் போலத் தெரிந்தது.(9) பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளால் போரில் கொல்லப்பட்ட உமது போர்வீரர்கள், “இஃது என்ன?” என்று சொன்னபடியே தப்பி ஓடினர்.(10) உண்மையில், சிந்துக்கள், சௌவீரர்கள், கௌரவர்கள் ஆகியோரைக் கொண்ட அந்தப் படை, கர்ணன் மற்றும் பீமன் ஆகிய இருவரின் மூர்க்கமான கணைகளாலும் பீடிக்கப்பட்டு, பெரும் தொலைவிற்கு அகற்றப்பட்டனர்.(11) துணிச்சல்மிக்க அந்தப் படைவீரர்களில் எஞ்சியோரும், தங்கள் குதிரைகள் மற்றும் யானைகள் கொல்லப்பட்டு, கர்ணன் மற்றும் பீமன் ஆகிய இருவரின் அருகாமையை விட்டகன்று, அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.(12) (மேலும் அவர்கள்), “பீமன் மற்றும் கர்ணன் ஆகிய இருவரால் ஏவப்பட்ட கணைகளும் நம் படைகளையே கொல்வதால், உண்மையில், பார்த்தர்களுக்காகத் தேவர்களே நம்மை மலைக்கச் செய்கின்றனர்” என்றனர்.(13) இவ்வார்த்தைகளைச் சொன்ன உமது துருப்பினர், அச்சத்தால் பீடிக்கப்பட்டு (கர்ணன் மற்றும் பீமன் ஆகியோரின்) கணைகள் அடையும் தொலைவைத் தவிர்த்து, வெகுதொலைவில் இருந்து அந்த மோதலைக் கண்டனர்.(14)
அப்போது, வீரர்களின் மகிழ்ச்சியையும், மருண்டோரின் அச்சத்தையும் அதிகரிக்கும் வகையில் அந்தப் போர்க்களத்தில் ஒரு பயங்கர ஆறு பாயத் தொடங்கியது.(15) மேலும் அது யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் குருதியால் உண்டானதாக இருந்தது. மனிதர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் உயிரற்ற உடல்கள்,(16) கொடிக்கம்பங்கள், தேர்த்தட்டுகள் {இருசுக்கட்டைகள்} ஆகியவற்றாலும், தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளின் அலங்காரப் பொருட்கள், உடைந்து போன தேர்கள், சக்கரங்கள், அக்ஷங்கள் {அச்சுகள்}, கூபரங்கள் {ஏர்க்கால்கள்}(17) ஆகியவற்றாலும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும் நாணொலி கொண்டவையுமான விற்கள், கர்ணன் மற்றும் பீமனால் ஏவப்பட்டவையும், சட்டையுதிர்த்த பாம்புகளுக்கு ஒப்பானவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான ஆயிரக்கணக்கான கணைகள், நாராசங்கள், எண்ணற்ற வேல்கள், ஈட்டிகள், கத்திகள், போர்க்கோடரிகள்,(18,19) கதாயுதங்கள், தண்டங்கள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கோடரிகள், பல்வேறு வடிவங்களிலான தண்டங்கள், ஈட்டிகள், பரிகங்கள்,(20), அழகிய சதாக்னிகள் ஆகியவற்றாலும் மறைக்கப்பட்டுப் பூமியானது பிரகாசமாகத் தெரிந்தது. தங்கத்தாலான காது குண்டலங்கள், ஆரங்கள், (மணிக்கட்டுகளில் இருந்து) தளர்ந்து விழுந்த கைவளைகள், வளையங்கள், கிரீடங்களில் அணியப்படும் மதிப்புமிக்க ரத்தினங்கள், தலைப்பாகைகள், தலைக்கவசங்கள், பல்வேறு வகைகளிலான தங்க ஆபரணங்கள், ஓ ஐயா {திருதராஷ்டிரரே}, கவசங்கள், தோலுறைகள், யானைகளின் கயிறுகள், (தங்கள் நிலைகளில் இருந்து தவறிய) குடைகள், சாமரங்கள், விசிறிகள், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களின் துளைக்கப்பட்ட உடல்கள், குருதிக் கறையுடன் கூடிய கணைகள், தங்கள் நிலைகளில் இருந்து தளர்ந்து விழுந்து கிடந்த பல்வேறு பிற பொருட்கள் ஆகியவற்றால் விரவிக் கிடந்த அந்தப் போர்க்களமானது, நட்சத்திரங்கள் சிதறிக்கிடக்கும் ஆகாயத்தைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தது.
அற்புதம் நிறைந்தவையும், நினைத்துப் பார்க்க முடியாதவையும், மனித சக்திக்கு அப்பாற்பட்டவையுமான அவ்விரு வீரர்களின் சாதனைகளைக் கண்டு சாரணர்களும், சித்தர்களும் மிகவும் ஆச்சரியமடைந்தனர். காற்றைத் தன் கூட்டாளியாகக் கொண்ட சுடர்மிக்கக் காட்டுத் தீயானது (பரந்து கிடக்கும்) உலர்ந்த புற்குவியலின் ஊடாகச் செல்வதைப் போலவே பீமனிடம் சினம் கொண்ட அதிரதன் மகனும் {கர்ணனும்}, அந்தப் போரில் சீற்றத்துடன் திரிந்தான் [2]. அவ்விருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டிருந்தபோது, நாணற்காடுகளை நசுக்கும் இரு யானைகளைப் போல எண்ணற்ற கொடிமரங்களையும், தேர்களையும் வீழ்த்தி, குதிரைகள், மனிதர்கள் மற்றும் யானைகள் ஆகியவற்றைக் கொன்றனர்.(21-27) ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையானது மேகத் திரள்களைப் போலத் தெரிந்தது, மேலும், கர்ணன் மற்றும் பீமனால் அந்தப் போரில் விளைந்த பேரழிவு பெரியதாக இருந்தது” {என்றான் சஞ்சயன்}.(28)
[2] கர்ணனும் பீமனும் நெருப்பாகவும் காற்றாகவும் பொருள் கொள்ளப்படுவதாகத் தெரிகிறது என இங்கே விளக்குகிறார் கங்குலி.
ஆங்கிலத்தில் | In English |