Thursday, September 01, 2016

தேருக்குள் ஒளிந்து கொண்ட கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 138அ

Karna concealed himself inside the car! | Drona-Parva-Section-138a | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 54)

பதிவின் சுருக்கம் : பீமனின் குதிரைகளைக் கொன்ற கர்ணன், கர்ணனால் துளைக்கப்பட்டு யுதாமன்யுவின் தேரில் தஞ்சமடைந்த பீமனின் தேரோட்டி; பீமனின் ஆயுதங்களை அறுத்த கர்ணன்; கர்ணனைப் பிடிப்பதற்காக அவனது தேர் மீது பாய்ந்து ஏறிய பீமன்; தேருக்குள் ஒளிந்து கொண்ட கர்ணன்; அனைவராலும் பீமனின் சாதனை மெச்சப்படுவது...


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மூன்று கணைகளால் பீமனைத் துளைத்து, அவன் மீது எண்ணற்ற அழகிய கணைகளைப் பொழிந்தான்.(1) பாண்டுவின் மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமசேனன், இப்படிச் சூதன் மகனால் {கர்ணனால்} தாக்கப்பட்டாலும், வலிக்கு உண்டான எந்த அறிகுறிகளையும் காட்டாமல், (கணைகளால்) துளைக்கப்பட்ட மலையைப் போல அசையாதிருந்தான்.(2) பதிலுக்கு அந்தப் போரில் அவன் {பீமன்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, எண்ணெய் தேய்க்கப்பட்டதும், பெரும் கூர்மை கொண்டதும், சிறப்பான கடினத்தன்மை கொண்டதுமான ஒரு கர்ணியை {முட்கள் பதிக்கப்பட்ட கணை} கர்ணனின் காதில் ஆழத் துளைத்தான்.(3) (அக்கணையால்) அவன் {பீமன்}, அழகியதும் பெரியதுமான கர்ணனின் காதுகுண்டலங்களைப் பூமியில் வீழ்த்தினான். அது {காது குண்டலம்}, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் பிரகாசம் கொண்ட நட்சத்திரம் ஒன்று ஆகாயத்தில் இருந்து விழுவதைப் போலக் கீழே விழுந்தது.(4)


கோபத்தால் தூண்டப்பட்ட விருகோதரன் {பீமன்}, பிறகு சிரித்துக் கொண்டே, மற்றொரு பல்லத்தால் சூதன் மகனின் {கர்ணனின்} நடுமார்பை ஆழத் துளைத்தான்.(5) மீண்டும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், அந்தப் போரில், சற்று முன்பே சட்டையுரித்த கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போலத் தெரிந்தவையான பத்து நாராசங்களை விரைவாக ஏவினான்.(6) ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பீமனால் ஏவப்பட்ட அக்கணைகள், கர்ணனின் நெற்றியைத் தாக்கி, எறும்புப் புற்றுக்குள் நுழையும் பாம்புகளைப் போல அதற்குள் {நெற்றிக்குள்} நுழைந்தன.(7) நெற்றில் ஒட்டிக் கொண்ட {தைத்திருந்த} கணைகளால் அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, முன்பு கருநெய்தல்மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புருவங்களோடு கூடியவனாக இருந்ததைப் போலவே அழகாகத் தெரிந்தான் [1].(8)

[1] வேறொரு பதிப்பில், “பிறகு, சூதபுத்திரன், நெற்றியில் தைத்திருக்கின்ற பாணங்களாலே முன்பு கருநெய்தல் புஷ்பமாலையைத் தரித்துக் கொண்டு விளங்கியதைப் போல விளங்கினான்” என்றிருக்கிறது.

சுறுசுறுப்பான குந்தியின் மகனால் {பீமனால்} ஆழத்துளைக்கப்பட்ட கர்ணன், தேரின் ஏர்க்காலைப் பிடித்துக் கொண்டு தன் கண்களை மூடினான் {மயங்கினான்}.(9) எனினும், விரைவில் சுயநினைவு மீண்டவனும், எதிரிகளை எரிப்பவனுமான அந்தக் கர்ணன், குருதியில் குளித்த தன் உடலுடன், சினத்தால் வெறிபிடித்தவனானான்.(10) அந்த உறுதிமிக்க வில்லாளியால் {பீமனால்} இப்படிப் பீடிக்கப்பட்டதன் விளைவால் சினத்தால் மதங்கொண்டவனும், பெரும் மூர்க்கம் கொண்டவனுமான கர்ணன், பீமசேனனின் தேரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான்.(11)

பிறகு, ஓ! மன்னா, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கவனும், கோபம் நிறைந்தவனுமான கர்ணன், சினத்தால் மதங்கொண்டு, கழுகின் இறகுகளால் சிறகமைந்த நூறு கணைகளைப் பீமசேனனின் மீது ஏவினான்.(12) எனினும் அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, தன் எதிரியை {கர்ணனை} அலட்சியம் செய்து, அவனது சக்தியை வெறுமையாக்கி, அவன் மீது கடுங்கணைகளின் மழையைப் பொழியத் தொடங்கினான்.(13) அப்போது கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்டு, ஓ! எதிரிகளை எரிப்பவரே, கோபத்தின் வடிவமாக இருந்த அந்தப் பாண்டுவின் மகனுடைய {பீமனுடைய} மார்பில் ஒன்பது கணைகளால் தாக்கினான்.(14) கொடூரப் பற்களைக் கொண்ட இரு புலிகளுக்கு ஒப்பாக (கணைகள் தரித்திருந்த) மனிதர்களில் புலிகளான அவ்விருவரும் அப்போரில் வலிமைமிக்க இரு மேகத் திரள்களைப் போலத் தங்கள் கணைமாரியை ஒருவரின் மேல் மற்றவர் பொழிந்தனர்.(15) அவர்கள், தங்கள் உள்ளங்கை ஒலிகளாலும், பல்வேறு வகைகளிலான கணைமாரிகளாலும் ஒருவரையொருவர் அச்சுறுத்த முயன்றனர்.(16) சினத்தால் தூண்டப்பட்ட அவ்விருவரும், அந்தப் போரில் அடுத்தவரின் சாதனைகளுக்கு எதிர்வினையாற்ற முனைந்தனர். அப்போது பகைவீரர்களைக் கொல்பவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒரு க்ஷுரப்ரத்தைக் கொண்டு சூதன் மகனின் வில்லை அறுத்துப் பெருங்கூச்சல் செய்தான் [2]. உடைந்த அவ்வில்லை எறிந்தவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, இன்னும் பலமான, கடினமான மற்றொரு வில்லை எடுத்துக்கொண்டான்.(17, 18)

[2] வேறொரு பதிப்பில் இதன்பிறகு இன்னும் அதிகம் இருக்கிறது, அது பின்வருமாறு, "மகாரதனான சூதபுத்ரன் அறுக்கப்பட்ட அந்த வில்லையெறிந்துவிட்டுப் பகைவர் கூட்டத்தை அழிப்பதும் மிக்க வேகமுள்ளதுமான வேறு வில்லைக் கையிலெடுத்தான். பிறகு விருகோதரன் கர்ணனுடைய அந்த வில்லையும் அரைநிமிஷத்திற்குள் அறுத்தான். இவ்வாறு விருகோதரன் கர்ணனுடைய மூன்றாவதும், நான்காவதும், ஐந்தாவதும், ஆறாவதும், ஏழாவதும், எட்டாவதும், ஒன்பதாவதும், பத்தாவதும், பதினோறாவதும், பன்னிரெண்டாவதும், பதிமூன்றாவதும், பதினான்காவதும், பதினைந்தாவதும், பதினாறாவதும், பதினேழாவதும், பதினெட்டாவதும் மற்றும் பலவுமான விற்களை அறுத்தான். பிறகு கர்ணன், அரை நிமிஷத்தினுள் வில்லைக் கையிற்கொண்டு எதிர்நின்றான்" என்றிருக்கிறது. இது கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இல்லை.

குரு, சௌவீர மற்றும் சிந்து வீரர்கள் கொல்லப்படுவதைக் கண்டும், சிதறிக் கிடக்கும் கவசங்கள், கொடிமரங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றால் அந்தப் பூமியானது மறைக்கப்பட்டிருப்பதைக் குறித்துக் கொண்டும், அனைத்துப் பக்கங்களிலும், யானைகள், காலாட்படை வீரர்கள், குதிரைவீரர்கள் மற்றும் தேர்வீரர்களின் உயிரற்ற உடல்களையும் கண்டும் அந்தச் சூத மகனின் {கர்ணனின்} உடலானது கோபத்தால் பிரகாசத்துடன் சுடர்விட்டு எரிந்தது.(19,20) தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் உறுதியான வில்லை வளைத்த அந்த ராதையின் மகன் {கர்ணன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனின் மீது தன் கோபப் பார்வைகளை வீசினான்.(21) சினத்தால் மதங்கொண்ட அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, தன் கணைகளை ஏவிய போது, நடுப்பகலில் பளபளக்கும் கதிர்களைக் கொண்ட கூதிர்காலத்துச் சூரியனைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தான்.(22) தன் கரங்களால் கணையை எடுக்கும்போதும், அதை வில்லின் நாணில் பொருத்தும்போதும், நாண்கயிற்றை இழுக்கும்போதும், அதை {கணையை} விடுக்கும்போதும், அந்தச் செயல்களுக்கு இடையில் எவராலும் எந்த இடைவெளியையும் காண முடியவில்லை. இப்படிக் கர்ணன் வலப்பக்கமாகவும், இடப்பக்கமாகவும் கணைகளை ஏவுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, அவனது வில்லானது ஒரு பயங்கர நெருப்பு வளையத்தைப் போல இடையறாமல் வட்டமாக வளைக்கப்பட்டிருந்தது. கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கூர்முனைகளைக் கொண்டவையுமான கணைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}  திசைகளின் அனைத்துப் புள்ளிகளையும் மறைத்து சூரியனின் ஒளியையே இருளச் செய்தன.(23-26)

கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அந்தக் கணைகளின் எண்ணற்ற கூட்டங்கள் ஆகாயத்தில் காணப்பட்டன. உண்மையில், அதிரதன் மகனின் {கர்ணனின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகள் நாரைகளின் வரிசைகளைப் போல ஆகாயத்தில் அழகாகத் தெரிந்தன.(27-28) அந்த அதிரதன் மகன் ஏவிய கணைகள் அனைத்தும், கழுகின் இறகுகளைக் கொண்டவையாகவும், கல்லில் கூராக்கப்பட்டவையாகவும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையாகவும், சுடர்மிக்க முனைகளைக் கொண்டவையாகவும் இருந்தன. அவனது வில்லின் சக்தியால் உந்தப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள் பீமனின் தேரை நோக்கி இடையறாமல் பாய்ந்து கொண்டிருந்தன.(29-30) உண்மையில், கர்ணனால் ஏவப்பட்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் கணைகள், ஆகாயத்தில் ஆயிரக்கணக்கில் பாய்ந்த போது, அடுத்தடுத்துச் செல்லும் வெட்டுக் கிளிகளின் {விட்டிற்பூச்சிக்} கூட்டங்களைப் போல அழகாகத் தெரிந்தன. அதிரதன் மகனின் {கர்ணனின்} வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகள், ஆகாயத்தில் சென்றபோது, தொடர்ந்து செல்லும் ஒரே நீண்ட கணை ஒன்றைப் போல வானத்தில் தெரிந்தன. மழைத்தாரைகளால் மலையை மறைக்கும் மேகமொன்றைப் போல, சினத்தால் தூண்டப்பட்ட கர்ணன், கணைமாரியால் பீமனை மறைத்தான்.(31-33)

அப்போது பொங்கும் கடலுக்கு ஒப்பான அந்தக் கணைமாரியை அலட்சியம் செய்துவிட்டுக் கர்ணனை எதிர்த்து பீமன் விரைந்ததால், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தங்கள் துருப்புகளுடன் கூடிய உமது மகன்கள், பின்னவனின் {பீமனின்} வலிமை, சக்தி, ஆற்றல் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றைக் கண்டனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கைப்பிடி கொண்ட உறுதிமிக்க வில்லைத் தரித்திருந்தான்.(34-36)

அவன் {பீமன்}, தொடர்ந்து வட்டமாக வளைக்கப்பட்ட இந்திரனின் வில்லைப் போலத் தெரியும்படி அதை {வில்லை} விரைவாக வளைத்தான். அதிலிருந்து தொடர்ச்சியாக வெளிவந்த கணைகள் மொத்த ஆகாயத்தையும் நிறைப்பனவாகத் தெரிந்தன.(37)

பீமனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான அந்த நேரான கணைகள், வானத்தில் ஒரு தொடர்ச்சியான கோடு ஒன்றை உண்டாக்கியதால் அவை தங்க மாலையொன்றைப் போல மிகப் பிரகாசமாகத் தெரிந்தன.(38)

ஆகாயத்தில் பரவியிருந்த (கர்ணனின்) கணைமாரியானது, பீமசேனனின் கணைகளால் தாக்கப்பட்டு, துண்டுகளாகச் சிதறடிக்கப்பட்டுக் கீழே பூமியில் வீழ்ந்தன.(39) அப்போது, தங்கச் சிறகுகள் கொண்டவையும், வேகமாகச் செல்பவையும், ஒன்றோடு ஒன்று மோதி நெருப்புப் பொறிகளை உண்டாக்குபவையும், கர்ணன் மற்றும் பீமசேனன் ஆகிய இருவருடையவையுமான அந்தக் கணை மாரிகளால் வானம் மறைக்கப்பட்டது. அப்போது சூரியன் மறைக்கப்பட்டது, காற்றும் வீசாமல் நின்றது.(40,41) உண்மையில், இப்படி அந்தக் கணைகளால் ஆகாயம் மறைக்கப்பட்ட போது, எதையுமே காணமுடியவில்லை. பிறகு அந்தச் சூதனின் மகன் {கர்ணன்}, உயர் ஆன்மப் பீமனின் சக்தியை அலட்சியம் செய்து, பிற கணைகளைக் கொண்டு பீமனை முழுமையாக மறைத்து, அவனிலும் மேன்மையடைய முயன்றான். பிறகு, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவ்விருவரால் ஏவப்பட்ட கணைமாரிகள் எதிர் காற்றுகள் இரண்டைப் போல ஒன்றோடொன்று மோதுவதாகத் தெரிந்தன.(42,43) மனிதர்களில் சிங்கங்களான அவ்விருவரின் கணைமாரிகளும் மோதிக் கொண்டதன் விளைவால், ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, வானத்தில் ஒரு காட்டுத் தீ உண்டானதாகத் தெரிந்தது.(44)

அப்போது கர்ணன், பீமனைக் கொல்லவிரும்பி, கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையும், கொல்லனின் கரங்களால் பளபளப்பாக்கப் பட்டவையுமான பல கணைகளைச் சினத்தால் அவன் {பீமன்} மீது ஏவினான். எனினும் பீமன், அக்கணைகள் ஒவ்வொன்றையும் தன் கணைகளால் மூன்று துண்டுகளாக அறுத்து, கர்ணனினும் மேன்மையடைந்து, "நில், நில்!" என்று கூச்சலிட்டான்.(45,46) கோபம் நிறைந்தவனும், வலிமைமிக்கவனுமான பாண்டுவின் மகன் {பீமன்}, அனைத்தையும் எரிக்கும் காட்டுத்தீயைப் போலச் சினத்தால் மீண்டும் கடும் கணைகளை ஏவினான். அவர்களது தோல் கையுறைகளின் மீது வில்லின் நாண்கயிறுகள் தாக்கியதன் விளைவாகப் பேரொலிகள் உண்டாகின.(47,48) அவர்களது உள்ளங்கை ஒலிகளும் பேரொலிகளாகின, அவர்களது சிங்க முழக்கங்கள் பயங்கரமாகின, அவர்களது தேர்ச்சக்கரங்களின் சடசடப்பொலிகளும், அவர்களது வில்லின் நாணொலிகளும் கடுமையாகின.(49) ஒருவரையொருவர் கொல்ல விரும்பிய கர்ணன் மற்றும் பாண்டுவின் மகன் {பீமன்} ஆகியோரது ஆற்றல்களைக் காணவிரும்பிய போராளிகள் அனைவரும் போரிடுவதை நிறுத்தினர்.(50) தெய்வீக முனிவர்கள், சித்தர்கள், கந்தர்வர்கள் ஆகியோர், "நன்று, நன்று!" என்று சொல்லி பாராட்டினர். வித்யாதரர்களின் இனக்குழுக்கள் அவர்கள் மீது மலர்மாரியைச் சொரிந்தனர்.(51)

அப்போது, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், கடும் ஆற்றலைக் கொண்டவனுமான பீமன், தன் ஆயுதங்களால், எதிரியின் ஆயுதங்களைக் கலங்கடித்துப் பல கணைகளால் சூதனின் மகனை {கர்ணனைத்} துளைத்தான்.(52) பெரும் வலிமையைக் கொண்ட கர்ணனும், பீமசேனனின் கணைகளைக் கலங்கடித்து, அந்தப் போரில் அவன் {பீமன்} மீது ஒன்பது நாராசங்களை ஏவினான்.(53) எனினும் பீமன், அதே அளவிலான பல கணைகளால் அக்கணைகளை ஆகாயத்தில் வெட்டி, அவனிடம் {கர்ணனிடம்}, "நில், நில்" என்றான்.(54)

பிறகு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த வீரப் பீமன், சினத்தால் தூண்டப்பட்டு, யமன் அல்லது காலனின் தண்டத்திற்கு ஒப்பான கணையொன்றை அதிரதன் மகன் {கர்ணன்} மீது ஏவினான்.(55) எனினும், பெரும் ஆற்றலைக் கொண்ட ராதையின் மகன் {கர்ணன்} சிரித்துக் கொண்டே பாண்டுமகனின் அந்தக்கணை ஆகாயத்தில் வரும்போதே அதை மூன்று கணைகளால் வெட்டினான்.(56) பாண்டுவின் மகன் {பீமன்}, கடுங்கணைகளின் மழையை மீண்டும் பொழிந்தான். எனினும் கர்ணன், பீமனின் அந்தக் கணைகள் அனைத்தையும் அச்சமற்ற வகையில் ஏற்றான்.(57)

சினத்தால் தூண்டப்பட்டவனும், சூதனின் மகனுமான கர்ணன், தன் ஆயுதங்களின் சக்தியாலும், தன் நேரான கணைகளைக் கொண்டும் அம்மோதலில் போரிட்டுக் கொண்டிருந்த பீமனின் அம்பறாத்தூணிகள் இரண்டையும், வில்லின் நாண்கயிற்றையும், அவனது {பீமனது} குதிரைகளின் கடிவாளங்களையும் அறுத்தான். பிறகு அவனது {பீமனது} குதிரைகளையும் கொன்ற கர்ணன், ஐந்து கணைகளைக் கொண்டு பீமனின் தேரோட்டியையும் துளைத்தான்.(58,59) அந்தத் தேரோட்டி வேகமாக யுதாமன்யுவின் தேரை நோக்கி ஓடிச் சென்றான். அப்போது சினத்தால் தூண்டப்பட்டவனும், யுக நெருப்பின் காந்திக்கு ஒப்பானவனுமான ராதையின் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே பீமனின் கொடிக்கம்பத்தையும், அவனது கொடியையையும் வீழ்த்தினான்.

தன் வில்லை இழந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பீமன் தேர்வீரர்கள் பயன்படுத்தும் ஓர் ஈட்டியை எடுத்துக் கொண்டான்.(60,61) கோபத்தால் தூண்டப்பட்ட அவன் {பீமன்}, அதைத் தன் கரங்களில் சுழற்றியபடியே பெரும் பலத்துடன் கர்ணனின் தேர் மீது எறிந்தான். பிறகு, இப்படி அவ்வீட்டி {பீமனால்} வீசப்பட்டதும், அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், விண்கோளைப் போலப் பிரகாசத்துடன் தன்னை நோக்கி வந்ததுமான அதைப் பத்து கணைகளால் அறுத்தான். அதன்பேரில் அவ்வீட்டி, போர்க்கலையின் அனைத்து முறைகளையும் அறிந்தவனும், தன் நண்பர்களுக்காகப் போரிடுபவனும், சூதனின் மகனுமான கர்ணனின் அந்தக் கூரிய கணைகளால் பத்து துண்டுகளாக வெட்டப்பட்டுக் கீழே விழுந்தது.

பிறகு மரணம் அல்லது வெற்றியை அடைய விரும்பிய குந்தியின் மகன் {பீமன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கேடயம் ஒன்றையும், வாள் ஒன்றையும் எடுத்துக் கொண்டான்.(62-64) எனினும் கர்ணன், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே பீமனின் அந்தப் பிரகாசமான கேடயத்தைக் கடும் கணைகள் பலவற்றால் வெட்டினான். தேரிழந்த பீமன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேடயத்தையும் இழந்து, சினத்தால் வெறிபிடித்தவனானான்.(65,66) வேகமாக அவன் {பீமன்}, வலிமையான தன் வாளைக் கர்ணனின் தேர் மீது ஏறிந்தான். அந்தப் பெரிய வாளானது, நாண் பொருத்தப்பட்ட சூதன் மகனின் வில்லை அறுத்து, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வானத்தில் இருந்து விழும் கோபக்காரப் பாம்பைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(67)

அந்தப் போரில் சினத்தால் தூண்டப்பட்ட அந்த அதிரதன் மகன் {கர்ணன்}, சிரித்துக் கொண்டே, எதிரியை அழிப்பதும், வலுவான நாண்கயிறு கொண்டதும், தான் இழந்ததை {முந்தைய வில்லை} விடக் கடினமானதுமான மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டான். குந்தியின் மகனை {பீமனைக்} கொல்ல விரும்பிய கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கச் சிறகுகளையும், பெரும் சக்தியையும் கொண்ட ஆயிரக்கணக்கான கணைகளை ஏவத் தொடங்கினான்.(68,69)

கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகளால் தாக்கப்பட்டவனும் வலிமைமிக்கவனுமான பீமன், கர்ணனின் இதயத்தை வேதனையால் நிறைக்கும்படி வானத்தில் எம்பி {கர்ணனின் தேரின் மேல்} குதித்தான்.(70) போரில் வெற்றியை விரும்பிய பீமனின் நடத்தையைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, தேருக்குள் ஒளிந்து கொண்டு அவனை {பீமனை} ஏமாற்றினான்.(71) கலங்கிய {பயந்த} இதயத்துடன் கர்ணன் தேர்த்தட்டில் தன்னை மறைத்துக் கொண்டதைக் கண்ட பீமன், கர்ணனின் கொடிக்கம்பத்தைப் பிடித்துக் கொண்டு பூமியில் {தரையில் அவனுக்காகக்} காத்திருந்தான் [3].(72) கருடன் ஒரு பாம்பைக் கவர்ந்து செல்வதைப் போலவே கர்ணனை அவனது தேரில் இருந்து கவரச் சென்ற பீமனின் அந்த முயற்சியைக் குருக்கள் {கௌரவர்கள்} மற்றும் சாரணர்கள் அனைவரும் பாராட்டினர். பீமன் தன் தேரை இழந்து, தன் வில்லும் வெட்டப்பட்டிருந்தாலும், (உடைந்த) தன் தேரை விட்டு, தன் வகைக்கான {க்ஷத்திரியக்} கடமைகளை நோற்றுப் போரில் நிலையாக நின்றான்" {என்றான் சஞ்சயன்}.(73,74)

[3] வேறொரு பதிப்பில், "கர்ணனுடைய வில்லினின்று விடுபடுகின்ற அம்புகளாலே பீடிக்கப்படுகின்ற பலசாலியான அந்தப் பீமன் ஆகாயத்தில் கிளம்பிக் கர்ணனுடைய ரதத்தில் பிரவேசித்தான். யுத்தரங்கத்தில் ஜயத்தை விரும்புகிற அந்தப் பீமனுனுடைய செய்கையைக் கண்டு அந்த ராதேயன் கொடிமரமுள்ளவிடத்தில் ஒளிந்து கொண்டு பீமசேனனை வஞ்சித்தான். துன்பத்தையடைந்திருக்கின்ற இந்திரியங்களை உடையவனாகித் தேரின் நடுவில் பதுங்கிக் கொண்டிருக்கின்ற அந்தக் கர்ணனைக் காணாமல், பீமசேனன் அந்தத் தேரின் கொடிமரத்தில் ஏறிப் பின்பு பூமியில் இறங்கி அவனை எதிர்பார்த்து நின்றான்" என்றிருக்கிறது. 


ஆங்கிலத்தில் | In English