The tears of Duryodhana! | Drona-Parva-Section-149 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 64)
பதிவின் சுருக்கம் : ஜெயத்ரதன் கொலையால் துரியோதனன் அடைந்த மனச்சோர்வு; அர்ஜுனனுக்கு ஒப்பான வீரன் ஒருவனும் இவ்வுலகில் இல்லை என்று கருதிய துரியோதனன் கர்ணனிடம் நம்பிக்கை இழந்தது; உற்சாகமற்றவனாகக் கண்ணீருடன் துரோணரிடம் பேசிய துரியோதனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} வீழ்ந்த பிறகு, கண்ணீர்த்துளிகளால் நனைந்த தன் முகத்துடன், உற்சாகத்தை இழந்த உமது மகன் சுயோதனன் {துரியோதனன்}, தன் எதிரிகளை வெல்வதில் நம்பிக்கையிழந்தான்.(1) துயரால் நிறைந்து, பற்கள் உடைந்த பாம்பொன்றைப் போல வெப்பப் பெருமூச்சுகளை விட்டவனும், உலகம் முழுமைக்கும் குற்றமிழைத்தவனுமான உமது மகன் {துரியோதனன்}, மனங்கசந்து சிறுமையை அனுபவித்தான்.(2) அந்தப் போரில், ஜிஷ்ணு {அர்ஜுனன்}, பீமசேனன், சாத்வதன் {சாத்யகி} ஆகியோர் செய்த பயங்கரமான பெரிய படுகொலைகளைக் கண்டு, நிறம் மங்கியவனும், இளைத்தவனும், மனந்தளர்ந்தவனுமான அவனது {துரியோதனனின்} கண்கள் கண்ணீரால் நிறைந்தன.(3) அப்போது அவன் {துரியோதனன்} அர்ஜுனனுக்கு ஒப்பாக இவ்வுலகில் எந்த வீரனும் இல்லை என்று நினைத்தான்.(4) கோபமடைந்திருக்கும் அர்ஜுனனுக்கு எதிரில், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, துரோணரோ, ராதையின் மகனோ {கர்ணனோ}, அஸ்வத்தாமனோ, கிருபரோ நிற்கத்தகுந்தவர்கள் அல்ல.(5)
சுயோதனன் {துரியோதனன்} தனக்குள்ளேயே, “பார்த்தன் {அர்ஜுனன்}, என் படையின் வலிமைமிக்கத் தேர்வீரர்கள் அனைவரையும் போரில் வென்று, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொன்றான். அவனை {அர்ஜுனனை} எவராலும் தடுக்க முடியவில்லை.(6) இந்த எனது பரந்த படையானது, பாண்டவர்களால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது. எவராலும், ஏன் புரந்தரனாலும் {இந்திரனாலும்} கூட என் படையைக் காக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன்.(7) எவனை நம்பி நான் இந்தப் போர்ப்பாதையில் ஈடுபட்டேனோ, ஐயோ, அந்தக் கர்ணன் போரில் வீழ்த்தப்பட்டு ஜெயத்ரதனும் கொல்லப்பட்டான்.(8) என்னிடம் சமாதானம் பேச வந்த கிருஷ்ணனை, நான் எவனுடைய சக்தியை நம்பி துரும்பாகக் கருதினேனோ அந்தக் கர்ணன், ஐயோ அந்தக் கர்ணன் போரில் வெல்லப்பட்டான்” என்று நினைத்தான்.(9)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் இதயத்துக்குள்ளேயே இப்படி வருந்தியவனும், மொத்த உலகத்திற்கும் எதிராகக் குற்றமிழைத்தவனுமான அவன் {துரியோதனன்}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, துரோணரைக் காண்பதற்காக அவரிடம் சென்றான்.(10) துரோணரிடம் சென்ற அவன் {துரியோதனன்}, குருக்களின் பேரழிவையும், தன் எதிரிகளின் வெற்றியையும், தார்தராஷ்டிரர்கள் அடைந்திருக்கும் படுபயங்கர ஆபத்தையும் அவரிடம் சொன்னான்.(11)
சுயோதனன் {துரியோதனன்}, “ஓ! ஆசானே {துரோணரே}, இந்த மன்னர்களின் மாபெரும் அழிவைக் காண்பீராக. என் பாட்டனான வீரப் பீஷ்மரை நமது தலைமையில் நிறுத்தி நான் போரிட வந்தேன்.(12) அவரைக் {பீஷ்மரைக்} கொன்ற சிகண்டி, தனது ஆசை நிறைவடைந்து, மற்றொரு வெற்றிக்கான பேராசையில் துருப்புகள் அனைத்திற்கும் முன்னணியில் நின்று கொண்டிருக்கிறான் [1].(13) உமது மற்றொரு சீடனும், வெல்லப்பட முடியாதவனுமான சவ்யசச்சின் {அர்ஜுனன்}, ஏழு அக்ஷௌஹிணி துருப்புகளைக் [2] கொன்று, மன்னன் ஜெயத்ரதனையும் யமனுலகுக்கு அனுப்பிவிட்டான்.(14) ஓ! ஆசானே {திருதராஷ்டிரரே}, எனக்கு வெற்றியை விரும்பி, எனக்கு நன்மை செய்வதிலேயே எப்போதும் ஈடுபட்டு, யமனின் வசிப்பிடத்திற்குச் சென்ற என் கூட்டாளிகளுக்கு நான் பட்ட கடனில் இருந்து எப்படி நான் மீளப்போகிறேன்?(15)
[1] “இங்கே Praluvdhas என்பதை நீலகண்டர் வேறு மாதிரியாக விளக்குகிறார். இங்கே துரியோதனன், சிகண்டியை வஞ்சகம் நிறைந்த வேடனாகவும், அந்த வஞ்சகத்தின் விளைவால் அவன் பீஷ்மரை வீழ்த்தியதாகவும் விளக்குவதாக அவர் {நீலகண்டர்} நினைக்கிறார். இஃது ஏற்புடையதாக இல்லை” என இங்கே விளக்குகிறார் கங்குலி.[2] துரோண பர்வம் பகுதி 145ல் எட்டு அக்ஷௌஹிணிகள் கொல்லப்பட்டன என்று சஞ்சயன் சொல்வதாகக் குறிப்பிடப்படுகிறது. ஒருவேளை அர்ஜுனன் மட்டுமே ஏழு அக்ஷௌஹிணிகளையும், பீமன், சாத்யகி முதலிய பிறர் ஓர் அக்ஷௌணியையும் கொன்றிருக்கலாம்.
தங்கள் உலக வளத்தையெல்லாம் கைவிட்டு, பூமியின் அரசுரிமையை எனக்களிக்க விரும்பிய அந்தப் பூமியின் தலைவர்கள், இப்போது பூமியில் கிடக்கின்றனர்.(16) உண்மையில், நானொரு கோழையே. நண்பர்களின் இத்தகு படுகொலைக்குக் காரணமான நான், நூறு குதிரை வேள்விகளைச் செய்தாலும் புனிதமடைவேன் என்று நினைக்கவும் துணிய மாட்டேன்.(17) நான் பேராசைக்காரன், பாவம் நிறைந்தவன், மேலும் நீதிக்கு எதிராக நடந்தவனுமாவேன். வெற்றியடையும் விருப்பம் கொண்டிருந்த இந்தப் பூமியின் தலைவர்கள், என் செயல்களால் மட்டுமே யமனின் வசிப்பிடத்தை அடைந்தனர்.(18) நடத்தையில் பாவியும், உட்பகையைத் தோற்றுவித்தவனுமான எனக்கு, பூமியானவள் இந்த மன்னர்களுக்கு முன்னிலையில் (மூழ்கும் வகையில்) ஏன் ஒரு துளையைத் தர மறுக்கிறாள் [3].(19)
[3] வேறொரு பதிப்பில் இவ்வரி, “நல்லொழுக்கத்திலிருந்து தவறியவனும், நண்பர்களுக்குத் துரோகம் செய்பவனுமான என் விஷயத்தில் பூமியானவள் ராஜசபையில் பிளந்து என்னை உட்கொள்ள ஏன் சக்தியுள்ளவளாக இல்லை” என்றிருக்கிறது.
ஐயோ, இரத்தச்சிவப்புடைய கண்களைக் கொண்டவரும், மறு உலகை வெற்றிக் கொண்ட வெல்லப்பட முடியாத வீரருமான பாட்டன் {பீஷ்மர்} என்னைச் சந்திக்கும்போது, மன்னர்களுக்கு மத்தியில் என்னிடம் என்ன சொல்வார்.(20) வலிமைமிக்க வில்லாளியான அந்த ஜலசந்தன், சாத்யகியால் கொல்லப்பட்டதைப் பாரும். அந்தப் பெரும் தேர்வீரன் {ஜலசந்தன்}, தன் உயிரை விடத் தயாராக, என் நிமித்தமாகப் போருக்குச் செருக்குடன் வந்தான்.(21) காம்போஜர்களின் ஆட்சியாளனும் {சுதக்ஷிணனும்}, அலம்புசனும், என்னுடைய இன்னும் பல கூட்டாளிகளும் கொல்லப்பட்டதைக் கண்டும் என் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதால் எதை நான் அடையப் போகிறேன்?(22)
அந்தப் புறமுதுகிடாத வீரர்கள், என் நிமித்தமாகப் போரிட்டு, என் எதிரிகளை வெல்வதற்காகத் தங்களால் முடிந்த அளவு சக்தியுடன் போராடி தங்கள் உயிரையே விட்டனர்.(23) ஓ! எதிரிகளை எரிப்பவரே {துரோணரே}, நான் இன்று என் முழு வலிமையைப் பயன்படுத்தி அவர்களிடம் பட்ட கடனிலிருந்து விடுபட்டு, யமுனைக்குச் சென்று நீர்க்காணிக்கைகள் செலுத்தி அவர்களை நிறைவு செய்யப் போகிறேன்.(24) ஓ! ஆயுதம் தரித்தோர் அனைவரிலும் முதன்மையானவரே {துரோணரே}, ஒன்று பாஞ்சாலர்களையும், பாண்டவர்களையும் கொன்று மன அமைதியை அடைவேன், அல்லது போரில் அவர்களால் கொல்லப்பட்டு, என் கூட்டாளிகள் சென்ற உலகங்களுக்கே நானும் செல்வேன் என்று நான் செய்திருக்கும் நற்செயல்கள் மீதும், நான் கொண்டிருக்கும் ஆற்றலின் மீதும், என் மகன்களின் மீதும் ஆணையிட்டு உமக்கு நான் உண்மையாகவே சொல்கிறேன்.(25, 26) என் பொருட்டுப் போரில் ஈடுபட்ட அந்த மனிதர்களில் காளையர், அர்ஜுனனால் கொல்லப்பட்டு எங்கே சென்றார்களோ அங்கே நிச்சயம் நானும் செல்வேன்.(27) நாம் நமது கூட்டாளிகளை நன்கு பாதுகாக்கவில்லை என்பதைக் கண்டு, நம்மோடு நீடித்திருக்க அவர்கள் {நமது கூட்டாளிகள்} விரும்பவில்லை. ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே, இப்போது அவர்கள் நம்மைவிடப் பாண்டவர்களையே உகந்தவர்களாகக் கருதுகின்றனர் [4].(28) அர்ஜுனன் உமது சீடன் என்பதாலும், அவனிடம் நீர் கனிவுடன் நடந்து கொள்வதாலும், துல்லிய இலக்கைக் கொண்ட நீரே போரில் நமக்கு அழிவை விதித்திருக்கிறீர்.(29) இதன் காரணமாகவே, நமக்கு வெற்றியைப் பெற்றுத் தர முயன்றோர் அனைவரும் கொல்லப்பட்டனர். இப்போது நமது வெற்றியைக் கர்ணன் மட்டுமே விரும்புவதாகத் தெரிகிறது.(30)
[4] வேறொரு பதிப்பில், “என்னால் (யுத்தத்தில்) உதவிசெய்யப்படாமலிருக்கின்ற மித்ரர்கள் இப்பொழுது என்னை அடையப் பிரியமற்றவர்களாயிருக்கிறார்கள்; பாண்டவர்களை விசேஷமாக மதிப்பது போல நம்மை மதிக்கவில்லை” என்றிருக்கிறது.
முறையாகச் சோதிக்காமல் ஒருவனை நண்பனாக ஏற்று, நண்பர்களால் சாதிக்கப்பட வேண்டிய காரியங்களில் அவனை ஈடுபடுத்தும் பலவீனமான {மந்த} அறிவைக் கொண்ட மனிதன் தீங்கை அடைவது நிச்சயம்.(31) இப்படியே எனது இந்த விவகாரமும் என் நண்பர்களில் சிறந்தோரால் நிர்வகிக்கப்பட்டது [5]. நான் பேராசைக்காரன், பாவம் நிறைந்தவன், கோணல் புத்தி கொண்டவன் மற்றும் தணிக்க முடியாத பொருளாசை கொண்டவனுமானவேன்.(32) ஐயோ, மன்னன் ஜெயத்ரதன் கொல்லப்பட்டான், மேலும் பெரும் சக்தி கொண்ட சோமதத்தன் மகனும் {பூரிஸ்ரவஸும்}, அபிஷாஹர்களும், சூரசேனர்களும், சிபிக்களும், வசாதிகளும் கொல்லப்பட்டனர்.(33) அந்த மனிதர்களில் காளையர் எனக்காகப் போரில் ஈடுபட்டிருந்த போது அர்ஜுனனால் கொல்லப்பட்டு எங்குச் சென்றார்களோ அங்கேயே நானும் இன்று செல்லப் போகிறேன்.(34) அந்த மனிதர்களில் காளையர் இல்லாத நிலையில் உயிர்வாழும் தேவையேதும் எனக்கு இல்லை. ஓ! பாண்டு மகன்களின் ஆசானே {துரோணரே}, எனக்கு இதில் {இக்காரியத்தில்} அனுமதி அளிப்பீராக” என்றான் {துரியோதனன்}” {என்றான் சஞ்சயன்}.(35)
--------------------------------------------------------------------------------------------[5] “31வது சுலோகத்தையும், 32வது சுலோகத்தின் பாதியையும் நான் சரியாக உரைத்திருக்கிறேனா என்பது தெரியவில்லை. வட்டார மொழிபெயர்ப்பாளர்கள் இந்தப் பத்தியை மிகவும் குழப்பியிருக்கின்றனர். இங்கே Surhittamais என்பது பொருள் கொள்ளக் கடினமான ஒன்றாக இருக்கிறது. துரியோதனன், ‘ஓ! ஆசானே {துரோணரே}, கர்ணன், சகுனி, துச்சாசனன் ஆகியோரும், நானும் உம்மை நண்பராக ஏற்று இந்தப் போரில் உம்மை ஈடுபடுத்தினோம். எனினும், நண்பரின் போர்வையில் இருக்கும் ஓர் எதிரி என்று அப்போது உம்மை நாங்கள் அறியவில்லை’ என்று சொல்வதாக இங்கே நான் பொருள் கொள்கிறேன்” என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறொரு பதிப்பில், “மந்த புத்தியான எவன், உண்மையான மித்ரனென்று தெரிந்து கொள்ளாமல் ஒருவனை மித்திரன் செய்ய வேண்டிய காரியத்தில் ஏவுகிறானோ அவனுடைய அந்தக் காரியம் அழிந்து விடுகிறது. மோகத்தினாலே பேராவல் கொண்டவனும் பாவியும், கோணலான தன்மையுள்ளவனும், தனத்தை விரும்புகிறவனுமான என்னுடைய இந்தக் காரியமானது மிக்கச் சினேகமுள்ளவர்களாலே அவ்விதமாகச் செய்யப்பட்டுவிட்டது” என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “மந்தமான புத்தி கொண்ட எந்த மனிதன், சரியாகத் தீர்மானிக்கமாலேயே ஒருவனை நண்பனாக ஏற்று, உண்மையான நண்பர்களால் மட்டுமே செய்யக்கூடிய செயல்களில் அவனை ஈடுபடுத்துவானோ, அவனது நோக்கம் அழிந்துவிடும். பேராசை, கோணல் புத்தி, வளங்களில் பேராசை கொண்ட பாவியான என்னுடைய இந்த விவகாரம் சிறந்த நண்பர்களாலே (சிறந்த நண்பர்கள் என்று அழைக்கப்படுவோரால்) இவ்வழியில் நிர்வகிக்கப்பட்டது" என்று இருக்கிறது.
துரோண பர்வம் பகுதி – 149ல் வரும் மொத்த சுலோகங்கள் 35
ஆங்கிலத்தில் | In English |