Friday, September 23, 2016

துரோணரின் மறுமொழி! - துரோண பர்வம் பகுதி – 150

The reply of Drona! | Drona-Parva-Section-150 | Mahabharata In Tamil

(ஜயத்ரதவத பர்வம் – 54)

பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்குத் துரோணர் சொன்ன மறுமொழி; கவசத்தைக் களையும் முன் பாஞ்சாலர்கள் அனைவரையும் கொல்வதாகச் சபதமேற்ற துரோணர்; அஸ்வத்தாமனுக்குத் தன் இறுதிச் செய்தியைச் சொல்லுமாறு துரியோதனனைப் பணித்த துரோணர்...


திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} போரில் கொல்லப்பட்ட பிறகு, பூரிஸ்ரவஸ் வீழ்ச்சிக்குப் பிறகு, உங்கள் மனநிலை எப்படி இருந்தது?(1) குருக்களின் மத்தியில் துரியோதனன் இப்படித் துரோணரிடம் பேசியபிறகு, ஆசான் {துரோணர்} அவனிடம் {துரியோதனனிடம்} என்ன சொன்னார்? ஓ! சஞ்சயா இவை யாவையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.(2)


சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பூரிஸ்ரவஸ் மற்றும் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஆகியோர் கொல்லப்பட்ட பிறகு, உமது துருப்புகளுக்கு மத்தியில் உரத்த ஓலம் எழுந்தது(3).

எந்த ஆலோசனைகளின் விளைவால் நூற்றுக்கணக்கான மனிதத் தலைவர்கள் கொல்லப்பட்டனரோ, உமது மகனின் {துரியோதனனின்} அந்த ஆலோசனைகளை அவர்கள் அனைவரும் அலட்சியம் செய்தனர்.(4) துரோணரைப் பொறுத்தவரை, அவர் உமது மகனின் அந்த வார்த்தைகளைக் கேட்டுத் துயரால் நிறைந்தார். சிறிது நேரம் சிந்தித்த அவர், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் துன்பத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(5)

துரோணர் {துரியோதனனிடம்}, “ஓ! துரியோதனா, வார்த்தைக் கணைகளால் என்னை ஏன் இப்படித் துளைக்கிறாய்? அர்ஜுனனைப் போரில் வீழ்த்துவது இயலாது என முன்பே நான் உன்னிடம் சொன்னேன்.(6) கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனால் {அர்ஜுனனால்} பாதுகாக்கப்பட்ட சிகண்டி பீஷ்மரைக் கொன்றான். ஓ! குரு குலத்தோனே {துரியோதனா}, அந்த அருஞ்செயலால் போரில் அர்ஜுனனின் ஆற்றல் நன்கு சோதிக்கப்பட்டது.(7) தேவர்களாலும் வீழ்த்தப்பட முடியாத பீஷ்மர் உண்மையில் போரில் எப்போது கொல்லப்பட்டாரோ, அப்போதே பாரதப் படை அழிந்து விட்டது என்பதை நான் அறிவேன்.(8)  மூவுலகில் உள்ளோர் அனைவரிலும் மிக முதன்மையான வீரர் என நாம் கருதிய அவரே {பீஷ்மரே} வீழ்ந்த பிறகு, வேறு யாரை நாம் நம்ப முடியும்?

ஓ! ஐயா {துரியோதனா}, முன்னர்க் குருக்களின் சபையில் சகுனி விளையாடியது பகடைகளல்ல, அவை எதிரிகளைக் கொல்லவல்ல கூரிய கணைகள்.(10) ஓ! ஐயா, ஜெயனால் {அர்ஜுனனால்} ஏவப்படும் அந்தக் கணைகளே {பகடைக் கணைகளே} இப்போது நம்மைக் கொல்கின்றன. அவற்றை அப்படியே விதுரன் உருவகப்படுத்தியிருந்தாலும், நீ இன்னும் அவற்றை அவ்வாறு புரிந்து கொள்ளவில்லை.(11) ஞானியும், உயர் ஆன்மா கொண்டவனுமான விதுரன், கண்ணீர் நிறைந்த கண்களுடன் உன்னிடம் சொன்ன அந்த வார்த்தைகளை, அமைதியைப் பரிந்துரைத்த அந்த நன்மையான வார்த்தைகளை அப்போது நீ கேட்கவில்லை.(12) அவன் {விதுரன்} முன்னறிவித்த அந்தப் பேரிடர் இப்போது வந்திருக்கிறது. ஓ! துரியோதனா, விதுரனின் வார்த்தைகளுக்கு நீ கீழ்ப்படியாததன் விளைவாலேயே, {அவன் முன்னறிவித்த} அந்தப் பயங்கரமான படுகொலைகள் இப்போது நேருகின்றன.(13) மூட புத்தி கொண்ட எந்த மனிதன், நம்பிக்கைக்குரிய நண்பர்களின் வணங்கத்தக்க சொற்களை அலட்சியம் செய்து, தன் சொந்தக் கருத்தைப் பின்பற்றுவானோ, அவன் விரைவில் இழிந்த பரிதாப நிலையில் வீழ்வான்.(14)

ஓ! காந்தாரியின் மகனே {துரியோதனா}, நற்குலத்தில் பிறந்தவளும், அனைத்து அறங்களையும் பயில்பவளுமான கிருஷ்ணையை {திரௌபதியை} எங்கள் கண்களுக்கு முன்பாகவே குருக்களின் சபைக்கு இழுத்து வந்த உனது அந்தப் பாவகரச் செயலின் கனியே உனக்கு நேர்ந்திருக்கும் இந்தப் பெருந்தீமையாகும். கிருஷ்ணை {திரௌபதி} அப்படி நடத்தப்படத் தகாதவளாவாள்.(15-16) வஞ்சகத்தால் பகடையில் பாண்டவர்களை வென்ற நீ, அவர்களை மான் தோல் உடுத்தச் செய்து காடுகளுக்குள் அனுப்பினாய்.(17) எப்போதும் அறப்பயிற்சிகளில் {நல்ல செயல்களில்} ஈடுபடுபவர்களும், என் சொந்த மகன்களையே போன்றவர்களுமான அந்த இளவரசர்களுக்கு {பாண்டவர்களுக்கு} என்னைத்தவிர இவ்வுலகில் வேறு எந்தப் பிராமணன் தீங்கிழைக்க முனைவான்?(18)

திருதராஷ்டிரன் சம்மதத்துடன், குரு சபையின் மத்தியில் சகுனியை உன் உதவியாளனாகக் கொண்ட நீ, பாண்டவர்களின் கடுஞ்சினத்தைத் தூண்டினாய்.(19) துச்சாசனனுடன் சேர்ந்து கொண்டு கர்ணனும் அந்தக் கோபத்தை அதிகரிக்கச் செய்தான். விதுரனின் வார்த்தைகளை அலட்சியம் செய்து நீயேகூட மீண்டும் மீண்டும் அதை அதிகரிக்கச் செய்தாய்.(20) நீங்கள் அனைவரும் சிந்துக்களின் ஆட்சியாளனின் அருகில் நிற்கத் தீர்மானித்து உறுதியான பாதுகாப்புடன் அர்ஜுனனைச் சூழ்ந்து கொண்டீர்கள். பிறகு ஏன் நீங்கள் அனைவரும் வெல்லப்பட்டீர்கள்? மேலும் ஏன் ஜெயத்ரதன் கொல்லப்பட்டான்?(21) ஓ! கௌரவ்யா {துரியோதனா}, நீயும், கர்ணன், கிருபர், சல்லியன், அஸ்வத்தாமன் ஆகியோரும் உயிருடன் இருக்கையில் சிந்துக்களின் ஆட்சியாளன் எவ்வாறு கொல்லப்பட்டான்.(22) (உன் தரப்பில் உள்ள) மன்னர்கள், சிந்துக்களின் ஆட்சியாளனைக் காப்பதற்காகச் சீற்றத்துடன் தங்கள் சக்தி அனைத்தையும் வெளிப்படுத்தினர். பிறகு ஏன் அவர்களுக்கு மத்தியிலேயே ஜெயத்ரதன் கொல்லப்பட்டான்?(23) அர்ஜுனனின் கைகளில் இருந்து தன்னைப் பாதுகாக்க ஜெயத்ரதன் என்னை நம்பி எதிர்பார்த்தான்.(24) எனினும், அவன் எதிர்பார்த்த பாதுகாப்பை அவன் அடையவில்லை. எனக்கே எந்தப் பாதுகாப்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.(25)

சிகண்டியோடு கூடிய பாஞ்சாலர்களைக் கொல்வதில் வெல்லாதவரை, திருஷ்டத்யும்னப் புழுதியில் மூழ்குபவனைப் போலவே என்னை நான் உணர்கிறேன்.(26) {இப்படி} நானும் துயரில் எரிந்து கொண்டிருப்பதைக் கண்டும், ஓ! பாரதா {துரியோதனா}, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} காப்பதில் தவறி விட்டு, உன் வார்த்தைக் கணைகளால் என்னை ஏன் நீ துளைக்கிறாய்?(27) போரில் களைக்காதவரும், துல்லியமான இலக்கைக் கொண்டவருமான பீஷ்மரின் தங்கக் கொடிமரத்தை இனி உன்னால் காண முடியாது. அப்படியிருக்கையில் எப்படி நீ வெற்றியில் நம்பிக்கைக் கொள்கிறாய்?(28) இந்த அளவுக்கு நிறைய வலிமைமிக்கத் தேர்வீரர்களுக்கு மத்தியில், சிந்துக்களின் ஆட்சியாளனும், பூரிஸ்ரவஸும் கொல்லப்பட்டிருக்கும் போது, முடிவு எவ்வாறு இருக்கும் என நீ நினைக்கிறாய்?(29) ஓ! மன்னா {துரியோதனா}, வெல்லப்படக் கடினமான கிருபர் இன்னும் உயிரோடிருக்கிறார். ஜெயத்ரதனின் பாதையைப் பின்பற்றாமல் இருந்ததற்காக நான் அவரை உயர்வாகப் போற்றுகிறேன்.(30) (போரில்) மிகக் கடினமான சாதனைகளை அடையும் வீரரும், வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களாலேயே போரில் கொல்லப்பட முடியாதவருமான பீஷ்மர், ஓ! கௌரவ்யா {துரியோதனா}, நீயும், உன் தம்பி துச்சாசனனும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கொல்லப்பட்ட போது, ஓ! மன்னா {துரியோதனா}, பூமியே உன்னைக் கைவிட்டதாக நான் நினைத்தேன்.(31, 32)

ஓ! திருதராஷ்டிரன் மகனே {துரியோதனா}, போரில் உன் நன்மையை அடைவதற்காகவே, பாஞ்சாலர்கள் அனைவரையும கொல்லாமல் நான் என் கவசத்தைக் களைய மாட்டேன்.(34) ஓ! மன்னா {துரியோதனா}, போரிட்டுக் கொண்டிருக்கும் என் மகன் அஸ்வத்தாமனிடம் சென்று, அவனது உயிரே ஆபத்துக்குள்ளானாலும், சோமகர்களை மட்டும் அவன் விட்டு விடக்கூடாது என்று சொல்வாயாக [2].(35) மேலும் அவனிடம் {அஸ்வத்தாமனிடம்}, “உன் தந்தையிடம் பெற்ற ஆணைகள் அனைத்தையும் நீ கடைப்பிடிப்பாயாக. பணிவு, சுயக்கட்டுப்பாடு, உண்மை மற்றும் {கபடமற்ற} நேர்மை ஆகிய செயல்களில் நீ உறுதியாக இருப்பாயாக.(36) அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதில், அறத்தையும், பொருளையும் புறக்கணிக்காமல், அற ஆதிக்கம் கொண்ட செய்களையே எப்போதும் நீ செய்வாயாக.(37) பிராமணர்களை எப்போதும் பரிசுகளால் நிறைவு செய்வாயாக. அவர்கள் அனைவரும் உன் வழிபாட்டுக்குத் தகுந்தவர்களாவர். அவர்களுக்குத் தீங்கிழைக்கும் வகையில் எதையும் நீ செய்யாதிருப்பாயாக. அவர்கள் நெருப்பின் தழல்களைப் போன்றவர்களாவர்” என்றும் {அஸ்வத்தாமனிடம் நீ} சொல்ல வேண்டும்.(38)

[2] அஃதாவது, “அவன் {அஸ்வத்தாமன்}, என் எதிரிகளான சோமகர்களைத் தன் சக்திக்குட்பட்ட அனைத்து வழிகளிலும் பழிதீர்க்கவேண்டும்” என்பது பொருள் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

என்னைப் பொறுத்தவரை, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {துரியோதனா}, வார்த்தைக் கணைகளால் உன்னால் துளைக்கப்படும் நான், பெரும்போர் புரிவதற்காகப் பகைவரின் படைக்குள் ஊடுருவுவேன்.(39) உன்னால் முடியுமென்றால், ஓ! துரியோதனா, போய் அந்தத் துருப்புகளைக் காப்பாயாக. குருக்கள் மற்றும் சிருஞ்சயர்கள் ஆகிய இருவரும் கோபமாக இருக்கின்றனர். அவர்கள் இரவிலும் போர்புரிவார்கள்” என்றார் {துரோணர்}.(40) இவ்வார்த்தைகளைச் சொன்ன துரோணர், விண்மீன்களின் ஒளியைத் தன் ஒளியால் மீறி மறைக்கும் சூரியனைப் போல க்ஷத்திரியர்களின் சக்தியைத் தன் சக்தியால் மீறுவதற்காகப் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றார்” என்றான் {சஞ்சயன்}.(41)
------------------------------------------------------------------------------------------
துரோண பர்வம் பகுதி – 150ல்  வரும் மொத்த சுலோகங்கள் 41


ஆங்கிலத்தில் | In English