Wednesday, October 18, 2017

கர்ணரைக் காணும்போதெல்லாம் அமைதியடைந்தேன்! - சாந்திபர்வம் பகுதி – 01

I became cooled at sight of Karna! | Shanti-Parva-Section-01 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 01)


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனைத் தேடி வந்த முனிவர்கள்; யுதிஷ்டிரனின் நலம் விசாரித்த நாரதர்; நாரதரிடம் தன் மனக்குறைகள் அனைத்தையும் சொன்ன யுதிஷ்டிரன்; கர்ணன் தங்கள் அண்ணன் என்பதைத் தான் அறிய வந்த சூழ்நிலையை நாரதருக்கு எடுத்துச் சொன்னது; கர்ணனின் பாதங்களும், குந்தியின் பாதங்களும் ஒன்றுபோல் இருப்பது தனக்கு ஏற்கனவே ஐயத்தை ஏற்படுத்தியதைச் சொன்னது; இந்தக் காரியத்தில் நாரதர் அறிந்த அனைத்தையும் தனக்குச் சொல்லுமாறு வேண்டிக் கேட்ட யுதிஷ்டிரன்...


ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் நீர்க்காணிக்கைகளை அளித்த பாண்டுவின் மகன்கள், விதுரன், திருதராஷ்டிரன் மற்றும் பாரதக் குலப் பெண்கள் ஆகியோரனைவரும்,(1) (அந்தப் புனிதமான ஓடையின் கரையிலேயே) வசித்தனர். பாண்டுவின் உயரான்ம மகன்கள் {தீட்டிலிருந்து} தூய்மையடைவதற்காக ஒரு மாத காலத்தை, குரு நகருக்கு {குருஜாங்கலத் தலைநகரான ஹஸ்தினாபுரத்திற்கு} வெளியே கடத்த விரும்பினர்.(2) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் நீர்ச்சடங்குகளைச் செய்த பிறகு, தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட உயரான்ம தவசியர் பலரும், மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் பலரும் அந்த ஏகாதிபதியை {யுதிஷ்டிரனைக்} காண அங்கே வந்தனர்.(3) அவர்களில் தீவில் பிறந்தவர் {துவைபாயனரான} (வியாசர்), நாரதர், பெரும் முனிவரான தேவலர், தேவஸ்தானர் மற்றும் கண்வர் ஆகியோர் இருந்தனர். அவர்கள் அனைவரும் தங்கள் சிறந்த சீடர்களையும் தங்களுடன் அழைத்து வந்திருந்தனர்.(4)


ஞானம் கொண்டவர்களும், வேதங்களை அறிந்தவர்களும், இல்லறவாழ்வை நோற்பவர்களுமான மறுபிறப்பாளர்கள் {பிராணர்கள்}, அல்லது ஸ்நாதக வகையைச்[1] சேர்ந்தோர் பலரும் குரு மன்னனை {யுதிஷ்டிரனைக்} காண அங்கே வந்தனர்.(5) அந்த உயரான்மாக்கள் வந்து கொண்டிருந்தபோது, அவர்கள் (யுதிஷ்டிரனால்) முறையாக வழிபடப்பட்டார்கள். பிறகு அந்தப் பெரும் முனிவர்கள் விலைமதிப்புமிக்கத் தரைவிரிப்புகளில் அமர்ந்தனர்.(6) அவர்கள், (தூய்மையற்ற அந்தத் துக்கக் காலத்திற்கு) தகுந்த வகையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வழிபாட்டை ஏற்றுக் கொண்டு, முறையான வரிசையில் மன்னனைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.(7) துயரில் கலங்கிய இதயத்துடன் பாகீரதியின் புனிதமான கரையில் வசித்து வந்த மன்னர்களின் மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} ஆயிரக்கணக்கான பிராமணர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு அவனுக்கு ஆறுதலளித்தனர்.(8)

[1] பிரம்மச்சாரி விரதம் முடித்துக் குருவினால் விடைகொடுக்கப்பட்ட பிறகும் இல்லறத்தை நோற்கும் முன்பும் உள்ள இடைப்பட்ட நிலையில் இருப்பவர்கள் ஸ்நாதகர்கள் ஆவார்கள். அவர்களுக்கு மன்னனுக்கும் மேற்பட்ட மரியாதை செய்யப்பட வேண்டும் என்று தர்மசாஸ்திரம் கூறுவதாகக் கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் காணப்படுகிறது.

அப்போது, நாரதர், முதலில் அங்கு வந்திருந்தவர்களும், தீவில் பிறந்தவரை {துவைபாயனரான வியாரசரைத்} தங்களில் முதன்மையானவராகக் கொண்டவர்களுமான முனிவர்களைக் கரங்கூப்பி வணங்கிய பிறகு, சரியான நேரத்தில், தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் பேசினார்.(9) அவர் {நாரதர்}, "ஓ! யுதிஷ்டிரா, உன் கரங்களின் வலிமையாலும், மாதவனின் {கிருஷ்ணனின்} அருளாலும், உன்னால் மொத்த பூமியும் நேர்மையாக {அறவழியில்} வெல்லப்பட்டிருக்கிறது.(10) இந்தப் பயங்கரப் போரில் இருந்து நீ உயிருடன் தப்பியது நற்பேற்றாலேயே. ஓ! பாண்டுவின் மகனே, க்ஷத்திரியக் கடமைகளை நோற்கும் உனக்கு, இதனால் மகிழ்ச்சியில்லையா?(11) ஓ!மன்னா, உன் எதிரிகள் அனைவரையும் கொன்ற பிறகு, உன் நண்பர்களை நிறைவு செய்ய வேண்டாமா? இந்தச் செழிப்பை அடைந்த பிறகும், உன்னைத் துயரம் பீடிக்காதிருக்கும் என நான் நம்புகிறேன்" என்றார்.(12)

யுதிஷ்டிரன் {நாரதரிடம்}, "உண்மையில், கிருஷ்ணனுடைய கரவலிமையின் மீது கொண்ட என் நம்பிக்கை, பிராமணர்களின் அருள், பீமன் மற்றும் அர்ஜுனனின் வலிமை ஆகியவற்றாலேயே இந்த மொத்த பூமியும் என்னால் வெல்லப்பட்டது.(13) எனினும், பேராசையின் காரணமாக உறவினர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்திவிட்டேன் என்ற கனமான துயரம் என் இதயத்தில் எப்போதும் இருக்கிறது. சுபத்திரையின் அன்புக்குரிய மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள் ஆகியோரின் மரணத்திற்குக் காரணமாக அமைந்த இந்த வெற்றியானது, எனக்குத் தோல்வியின் ஒளியிலேயே புலப்படுகிறது.(14,15) விருஷ்ணி குலத்தைச் சேர்ந்தவளும், என் கொழுந்தியாளுமான சுபத்திரை என்னிடம் என்ன கேட்பாள்? மதுசூதனன் {கிருஷ்ணன்} இங்கிருந்து துவாரகைக்குச் செல்லும்போது, அங்கு வசிக்கும் மக்கள் அவனிடம் என்ன கேட்பார்கள்?(16) எங்களுக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்து வருபவளான இந்தத் திரௌபதி, மகன்கள் மற்றும் உறவினர்களை இழந்தவளாக நிற்பது எனக்குப் பெரும் வலியைத் தருகிறது.(17) ஓ! புனித நாரதரே, மேலும் வேறொன்றையும் நான் உமக்குச் சொல்கிறேன். குந்தி, மிக முக்கியமான காரியத்தின் ஆலோசனைகளைத் தனக்குள்ளேயே கமுக்கமாக வைத்துக் கொண்டதில் என் துயரம் மிகப் பெரிதானதாக இருக்கிறது.(18)

பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்டவரும், இவ்வுலகின் தேர்வீரர்களில் ஒப்பற்றவரும், சிங்கத்தின் நடையையும், செருக்கையும் கொண்டவரும், பெரும் நுண்ணறிவையும், கருணையையும் கொண்டவரும், பெரிதான தயாள குணத்தைக் கொண்டவரும், உயர்ந்த நோன்புகளை நோற்றவரும்,(19) தார்தராஷ்டிரர்களின் புகலிடமாக இருந்தவரும், தமது கௌரவத்தில் உணர்வுமிக்கவராக இருந்தவரும், ஆற்றலில் தடுக்கப்பட முடியாதவரும், தம் காயங்கள் அனைத்திற்கும் பழிதீர்க்கத் தயாராக இருந்தவரும், (போரில்) எப்போதும் கோபம் நிறைந்தவராக இருந்தவரும், மீண்டும் மீண்டும் மோதல்களில் எங்களை வீழ்த்தியவரும்,(20) ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் வேகம் கொண்டவரும், அற்புதமான வீரத்தைக் கொண்டவருமான அந்த வீரர் (கர்ணர்), குந்திக்கு இரகசியத்தில் பிறந்த மகனும், அதன் காரணமாக எங்கள் உடன்பிறந்த சகோதரனுமாவார்.(21) இறந்தோருக்கான நீர்த்தர்ப்பணங்களை நாங்கள் செய்து கொண்டிருந்தபோது, குந்தி அவரைச் சூரியனின் மகன் என்றாள். அனைத்து அறத்தையும் கொண்ட அவர் குழந்தைப் பருவத்திலேயே நீரில் விடப்பட்டிருக்கிறார்.(22) குந்தி, எடை குறைந்த பொருட்களால் தயாரிக்கப்பட்ட கூடையில் இட்டு, அவரைக் கங்கையின் ஓடையில் விட்டிருக்கிறாள். ராதைக்குப் பிறந்த சூதப் பிள்ளை என்று இவ்வுலகத்தில் எவர் கருதப்பட்டாரோ,(23) அவர் உண்மையில் குந்தியின் மூத்த மகனும், அதனால் எங்கள் உடன் பிறந்த அண்ணனுமாவார். ஐயோ, நாட்டின் மீது கொண்ட பேராசையால், அறியாமையில் நான் என் அண்ணனைக் {கர்ணரைக்} கொன்றுவிட்டேன். பஞ்சுக் குவியலை எரிக்கும் நெருப்பைப் போல இதுவே {இந்த நினைப்பே} என் அங்கங்களை எரிக்கிறது.(24)

வெண்குதிரைகளைக் கொண்டவனான அர்ஜுனனும், அவரைத் தன் அண்ணனாக அறிய மாட்டான், நானோ, பீமனோ, இரட்டையர்களோ கூட அவ்வாறு அவரை {கர்ணரை} அறியவில்லை. எனினும், சிறந்த வில்லைக் கொண்டவரான அவர் எங்களை (அவரது தம்பிகளாக) அறிந்திருந்தார்.(25) ஒரு சந்தர்ப்பத்தில் பிருதை {குந்தி} அவரிடம் {கர்ணரிடம்} சென்று, எங்கள் நலனை வேண்டி, "நீ என் மகன்" என்று சொன்னதாக நாங்கள் கேள்விப்படுகிறோம்.(26) எனினும், அந்தச் சிறப்புமிக்க வீரர், பிருதையின் விருப்பங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அதற்கடுத்து அவர், தமது தாயாரிடம் {குந்தியிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார் என நாங்கள் கேள்விப்படுகிறோம்.(27) அவர் {கர்ணர் குந்தியிடம்}, "போரில் என்னால் துரியோதனனைக் கைவிடமுடியாது. அப்படி நான் செய்தால், அது மதிப்பற்ற, கொடூரமான, நன்றியற்ற செயலாகும்.(28) உன் விருப்பங்களுக்கு நான் சம்மதித்து யுதிஷ்டிரனுடன் அமைதியை ஏற்படுத்திக் கொண்டால், வெண்குதிரைகள் கொண்ட அர்ஜுனனுக்கு நான் அஞ்சிவிட்டதாக மக்கள் பேசுவார்கள்.(29) கேசவனோடு {கிருஷ்ணனோடு} கூடிய அர்ஜுனனைப் போரில் வென்ற பிறகு, நான் தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} அமைதியை ஏற்படுத்திக் கொள்வேன்" என்ற இவ்வார்த்தைகளைச் சொன்னார் என்று நாங்கள் கேள்விப்படுகிறோம்.(30)

இப்படிச் சொல்லப்பட்ட பிருதை {குந்தி}, அகன்ற மார்பைக் கொண்ட தன் மகனிடம் {கர்ணரிடம்} மீண்டும், "பல்குனனுடன் {அர்ஜுனனோடு} போரிடு, ஆனால் என் மற்ற நான்கு மகன்களையும் விட்டுவிடுவாயாக" என்று கேட்டிருக்கிறாள்[2]. அதற்கு நுண்ணறிவைக் கொண்ட அந்தக் கர்ணர், தன் கரங்களைக் கூப்பித் தன் தாயாரிடம் நடுங்கியவாறே, "உன் மற்ற நான்கு மகன்களையும் நான் என் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தாலும், நிச்சயம் அவர்களைக் கொல்லமாட்டேன். ஓ! தேவி, நீ எப்போதும் ஐந்து மகன்களைக் கொண்டிருப்பாய் என்பதில் ஐயமில்லை. கர்ணன் கொல்லப்பட்டால் அர்ஜுனனோடு ஐவரையும், அர்ஜுனன் கொல்லப்பட்டால் என்னோடு சேர்த்து ஐவரையும் நீ கொண்டிருப்பாய்" என்றிருக்கிறான்.(33) தன் பிள்ளைகளுக்கு நன்மையை வேண்டிய அவனது தாய் {குந்தி}, மீண்டும் அவனிடம், "செல், ஓ! கர்ணா, நீ எப்போதும் யாருக்கு நன்மையை விரும்புவாயோ அந்த உன் சகோதரர்களுக்கு நன்மையைச் செய்வாயாக" என்றிருக்கிறாள்.(34) இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அவனிடம் விடைபெற்றுக் கொண்டு தன் வசிப்பிடத்திற்குத் திரும்பியிருக்கிறாள் {குந்தி}.

[2] இந்தச் செய்தி உத்யோக பர்வம் பகுதி 146ல் வைசம்பாயனர், வியாசரிடமிருந்து பெற்ற செய்தியாக நேரடியாக ஏற்கனவே உரைத்திருக்கிறார். இங்கே யுதிஷ்டிரன் சொல்வது, அவன் கேள்விப்பட்ட செய்தியாகும். வைசம்பாயனர் உரைப்பதில், குந்தி இவ்வாறு கர்ணனிடம் கோரவில்லை. கர்ணன் தானே முனமுவந்து அப்படிச் சொல்கிறான். ஆனால் பின்னர் யுதிஷ்டிரனை உயிர் போகுமளவுக்கும் இதே கர்ணன் காயப்படுத்துகிறான்.

அந்த வீரர் {கர்ணர்}, உடன் பிறந்த தம்பியால் கொல்லப்படும் அண்ணனாக அர்ஜுனனால் கொல்லப்பட்டிருக்கிறார்.(35) ஓ! தலைவரே {நாரதரே}, பிருதையோ {குந்தியோ}, அவரோ {கர்ணரோ} இந்த இரகசியத்தை ஒருபோதும் வெளியிட்டதில்லை. எனவே, பெரும் வில்லாளியான அவர், போரில் அர்ஜுனனால் கொல்லப்பட்டார்.(36) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, அதன் பின்பே அவர் என் உடன் பிறந்த அண்ணன் என்பதை நான் அறிய வந்தேன். உண்மையில் பிருதையின் வார்த்தைகளுக்குப் பின்பே, கர்ணர் எங்கள் அனைவருக்கும் மூத்த சகோதரர் என்பதை நான் அறிய வந்தேன்.(37) என் அண்ணனைக் கொல்ல நானே காரணமாக இருந்ததால், என் இதயம் அதிகமாக எரிகிறது. எனக்கு உதவி செய்யக் கர்ணர், அர்ஜுனன் ஆகிய இருவரையும் நான் கொண்டிருந்தால், என்னால் வாசுதேவனையே {கிருஷ்ணனையே} வெல்ல முடியும்.(38) தீய ஆன்மா கொண்ட திருதராஷ்டிரர் மகன்களால் சபைக்கு மத்தியில் நான் கொடுமையை அனுபவித்தபோது, திடீரென என் கோபம் தூண்டப்பட்டாலும், கர்ணரைக் கண்டதும் நான் அமைதியடைந்துவிட்டேன்.(39) எங்களுக்கிடையில் பகடையாட்டம் நடந்தபோது, துரியோதனனுக்கு ஏற்புடையதைச் செய்யும் விருப்பத்தில் கர்ணரே கொடுமை நிறைந்த கடும் வார்த்தைகளைப் பேசியபோதும், அவரை {கர்ணரைக்} கண்டதும் என் கோபம் தணிவடைந்தது. {அப்போது} கர்ணரின் பாதங்கள் எங்கள் தாயாரான குந்தியின் பாதங்களுக்கு ஒப்பாக இருப்பதாக எனக்குத் தெரிந்தது.(40,41) அவருக்கும், எங்கள் தாயாருக்கும் இடையில் உள்ள அந்த ஒற்றுமைக்கான காரணத்தைக் காணும் விருப்பத்தில் நான் நீண்ட நேரம் சிந்தித்திருக்கிறேன்.(42) இவ்வாறு நன்கு முயற்சி செய்தும் என்னால் அக்காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.(42)

உண்மையில், போர்க்காலத்தில் ஏன் அவரது தேர்ச்சக்கரங்களைப் பூமி விழுங்கியது? என் அண்ணன் ஏன் சபிக்கப்பட்டார்? இவை அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்.(42) ஓ! புனிதமானவரே {நாரதரே}, உம்மிடம் இருந்து அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன். கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தையும், இவ்வுலகில் உள்ள அனைத்தையும் நீர் அறிந்திருக்கிறீர்" என்றான் {யுதிஷ்டிரன்}".(43)

சாந்திபர்வம் பகுதி – 01ல் உள்ள சுலோகங்கள் : 43

ஆங்கிலத்தில் | In English