The curse of a Brahmana on Karna! | Shanti-Parva-Section-02 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 02)
பதிவின் சுருக்கம் : துரோணரிடம் சீடனாக இருந்த கர்ணன்; துரோணரிடம் பிரம்மாஸ்திரம் வேண்டியது; துரோணர் மறுத்தது; பிரம்மாஸ்திரம் வேண்டி பரசுராமரிடம் தன் பிறப்பில் பொய்யுரைத்த கர்ணன்; கர்ணனுக்கு நேர்ந்த பிராமணச் சாபம்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பேசுபவர்களில் முதன்மையானவரான தவசி நாரதர், இவ்வாறு கேட்கப்பட்டதும், சூதன் மகன் என்று நம்பப்பட்டவன் {கர்ணன்} (முன் நாட்களில்) எவ்வாறு சபிக்கப்பட்டான் என்பது குறித்த அனைத்தையும் சொல்லத் தொடங்கினார்.(1)
நாரதர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. போரில் கர்ணனையும், அர்ஜுனனையும் எதனாலும் தடுக்க முடியாது.(2) ஓ! பாவமற்றவனே, நான் உனக்கு என்ன சொல்லப்போகிறேனோ, அதைத் தேவர்களும் அறியார்கள். ஓ! வலிய கரங்களைக் கொண்டோனே, முன் நாட்களில் என்ன நடந்தது என்பதைக் குறித்து நான் சொல்வதைக் கேட்பாயாக.(3) ஆயுதங்களின் மூலம் க்ஷத்திரியர்கள் அனைவரும் துடைத்தழிக்கப்பட்டு அவர்கள் எவ்வாறு அருள் உலகங்களை அடைய வேண்டும் என்பதே {அப்போது} கேள்வியாக இருந்தது. இதற்காகவே குந்தியின் கன்னிப்பருவத்தில், போரைத் தூண்ட வல்ல ஒரு பிள்ளை அவளிடம் கருத்தரிக்கப்பட்டான்.(4) பெரும் சக்தி கொண்ட அந்தப் பிள்ளை, சூத நிலையை அடைய வேண்டியிருந்தது {சாரதியின் பிள்ளை என்ற நிலையை அடைய வேண்டியிருந்தது}. அதற்கடுத்து அவன் {கர்ணன்}, அங்கீரச குலக்கொழுந்துகளில் முதன்மையான உன் ஆசானிடமே (துரோணரிடம்) ஆயுத அறிவியலை அடைந்தான்.(5)
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, பீமசேனனின் வலிமையையும், ஆயுதப்பயன்பாட்டில் அர்ஜுனனின் வேகத்தையும், உன் நுண்ணறிவையும், இரட்டையர்களின் {நகுல சகாதேவர்களின்} பணிவையும், இளமைக் காலம் முதலே வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் காண்டீவதாரி {அர்ஜுனன்} ஆகியோருக்குள் ஏற்பட்ட நட்பையும், மக்கள் உங்கள் அனைவரிடமும் கொண்டுள்ள அன்பையும் கண்டு அந்த இளைஞன் {கர்ணன்} பொறாமையில் எரிந்தான்.(6,7) இளமைப் பருவத்திலேயே தற்செயலாகவும், அவனது சொந்த இயல்பின் காரணமாகவும், உங்கள் அனைவரிடமும் அவன் கொண்ட வெறுப்பின் காரணமாகவும் அவன் மன்னன் துரியோதனனுடன் நட்பு பூண்டான்.(8)
தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஆயுத அறிவியலில் அனைவருக்கும் மேம்பட்டவனாக இருப்பதைக் கண்ட கர்ணன், ஒரு நாள் துரோணரைத் தனிமையில் அணுகி, அவரிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னான்,(9) "நான் அர்ஜுனனுடன் போரிட விரும்புவதால், பிரம்ம ஆயுதத்தை, அதன் மந்திரங்கள் அனைத்துடனும், அதைத் திரும்பப் பெறும் சக்தியுடனும் நான் அறிய விரும்புகிறேன்.(10) உமது சீடர்கள் ஒவ்வொருவரிடம் நீர் கொண்டிருக்கும் அன்பும், உமது சொந்த மகனிடம் {அஸ்வத்தாமரிடம்} நீர் கொண்டிருக்கும் அன்பும் இணையானதே என்பதில் ஐயமில்லை. ஆயுத அறிவியலை அறிந்த திறன்மிக்கவர்கள் அனைவரும், உமது அருளின் மூலம் என்னை ஆயுதங்களில் சாதித்தவனாகக் கருத வேண்டும் என நான் வேண்டுகிறேன்" என்று கேட்டான்.(11)
இவ்வாறு சொல்லப்பட்ட துரோணர், பல்குனன் {அர்ஜுனன்} மீது கொண்ட அன்பினாலும், கர்ணனின் தீய குணம் குறித்து தாம் அறிந்திருந்ததாலும், அவனிடம்,(12) "முறையாக நோன்புகள் அனைத்தையும் நோற்ற ஒரு பிராமணனையோ, கடுந்தவங்களை இயற்றிய ஒரு க்ஷத்திரியனையோ தவிரப் பிரம்மாயுதத்தை வேறு எவராலும் அறிய முடியாது" என்றார்.(13)
துரோணர் இவ்வாறு பதிலளித்ததும், கர்ணன் அவரை வழிபட்டு விடைபெற்றுக் கொண்டு, அப்போது மஹேந்திர மலைகளில் வசித்து வந்த ராமரிடம் {பரசுராமரிடம்} தாமதமில்லாமல் சென்றான்.(14) அந்த ராமரை அணுகி, தலைவணங்கி, அவரிடம் {பரசுராமரிடம்}, "நான் பிருகு குலத்தைச் சேர்ந்த ஒரு பிராமணனாவேன்" என்றான். இஃது அவனுக்குக் கௌரவத்தைப் பெற்றுத் தந்தது.(15) அவனது பிறப்பையும் {குலத்தையும்}, குடும்பத்தையும் இவ்வாறு அறிந்த ராமர், அவனை அன்புடன் வரவேற்கும் வகையில், "நீ வரவேற்கப்படுகிறாய் {உனக்கு நல்வரவு}" என்று சொன்னார். இதன் காரணமாகக் கர்ணன் பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.(16) சொர்க்கத்திற்கு ஒப்பான அந்த மகேந்திர மலையில் வசித்துவந்தபோது, கர்ணன், பல கந்தர்வர்களையும், யக்ஷர்களையும், தேவர்களையும் சந்தித்து அவர்களோடு {நட்புடன்} ஒன்றுகலந்தான்.(17) அங்கே {மஹேந்திர மலையில்} வசித்த அவன் {கர்ணன்}, அனைத்து ஆயுதங்களையும் முறையாக அடைந்து, தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் ராட்சசர்களுக்கு மிகவும் பிடித்தமானவனாக ஆனான்.(18)
ஒருநாள், அவன் அந்த ஆசிரமத்திற்கு அருகே இருந்த கடற்கரையில் திரிந்து கொண்டிருந்தான். உண்மையில் அந்தச் சூரியனின் மகன் {கர்ணன்}, கையில் வில்லுடனும், வாளுடனும் தனியொருவனாகவே உலவித் திரிந்தான்.(19) ஓ! பார்த்தா {யுதிஷ்டிரா}, இவ்வாறு அவன் உலவிக் கொண்டிருந்த போது, அக்னிஹோத்திரச் சடங்கை தினமும் செய்பவரும், பிரம்மத்தை ஓதுபவருமான ஒரு குறிப்பிட்ட மனிதரின் ஹோமத்திற்குரிய மாட்டைத் தனது கவனக்குறைவினாலும், விருப்பமில்லாமலும் {அறியாமையால்} கொன்றுவிட்டான்.(20) கவனக்குறைவினால் செய்துவிட்ட அந்தச் செயலை அவன் அந்தப் பிராமணரிடம் தெரிவித்தான். உண்மையில், {அதன்} உரிமையாளரை மனநிறைவு கொள்ளச்செய்யும் நோக்கில் மீண்டும் மீண்டும் கர்ணன்,(21) "ஓ! புனிதமானவரே, விருப்பமில்லாமலே {அறியாமையால்} இந்த உமது மாட்டை நான் கொன்றுவிட்டேன். இந்தச் செயலை மன்னிப்பீராக" என்று சொன்னான்.(22)
கோபத்தில் நிறைந்த அந்தப் பிராமணர், அவனை நிந்திக்கும் வகையில் இந்த வார்த்தைகளைச் சொன்னார், "ஓ! தீய நடத்தை கொண்டவனே, நீ கொல்லப்படத் தகுந்தவனாவாய். ஓ! தீய ஆன்மா {தீய புத்தி} கொண்டவனே, இந்தச் செயலின் கனி உனதாகட்டும்.(23) ஓ! பாவி, எவனை நீ எப்போதும் அறைகூவியழைப்பாயோ எவனுக்காக இந்தநாள் வரை நீ முயற்சி செய்து கொண்டிருக்கிறாயோ, அவனோடு போரிடுகையில் உனது தேர்ச்சக்கரத்தை பூமி விழுங்கட்டும்.(24) அந்தச்சக்கரம் இவ்வாறு பூமியால் விழுங்கப்பட்டதும், திகைப்படைந்திருக்கும் உனது தலையை அந்தப் பகைவன் வெட்டுவான். ஓ! மனிதர்களில் இழிவானவனே, என்னைவிட்டுச் செல்வாயாக.(25) கவனக்குறைவால் என்னுடைய இந்த மாடு உன்னால் எவ்வாறு கொல்லப்பட்டதோ, அவ்வாறே நீ கவனக்குறைவுடன் இருக்கும்போது உன்னுடைய தலையை அவன் கொய்வான்" என்று சபித்தார்.(26)
கர்ணன் இவ்வாறு சபிக்கப்பட்டாலும், அந்தப் பிராமணர்களில் முதன்மையானவருக்குப் பசுக்களையும், செல்வத்தையும், ரத்தினங்களையும் காணிக்கையாக்கி அவரை நிறைவு கொள்ளச் செய்ய முயன்றான். எனினும் அவர், மீண்டும் அவனிடம்,(27) "உலகங்கள் அனைத்தாலும் என்னால் சொல்லப்பட்ட இந்த வார்த்தைகளைப் பொய்யாக்க முடியாது. எனவே, நீ செல்வாயாக, அல்லது இருப்பாயாக, அல்லது நீ விரும்பிய எதையும் செய்வாயாக" என்று பதிலளித்தார்.(28) அந்தப் பிராமணரால் இவ்வாறு சொல்லப்பட்ட கர்ணன், உற்சாகம் குறைந்தவனாகத் தன் தலையைத் தொங்கப்போட்டவாறு, மருட்சியுடன் {அச்சத்துடன்} ராமரிடம் {பரசுராமரிடம்} திரும்பி, அக்காரியம் குறித்துச் சிந்திக்கலானான்" என்றார் {நாரதர்}.(29)
சாந்திபர்வம் பகுதி – 02ல் உள்ள சுலோகங்கள் : 29
ஆங்கிலத்தில் | In English |