Thursday, March 15, 2018

அமைதி நிறுவலே உயர்கடமை! - சாந்திபர்வம் பகுதி – 106

Establishment of peace is the highest duty! | Shanti-Parva-Section-106 | Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 106)


பதிவின் சுருக்கம் : க்ஷேமதர்சினுக்கும், ஜனகனுக்கும் இடையில் நட்பை ஏற்படுத்திய காலகவிருக்ஷீயர்; க்ஷேமதர்சினை மரியாதையுடன் நண்பனாய் ஏற்று அவனுடன் உரையாடிய ஜனகன்; அமைதியை ஏற்படுத்திக் கொள்வதே மன்னர்களின் உயர்ந்த கடமையாகும் என்பதை விளக்க இந்தக் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...


Janaka and Kshemadarcin - Mahabharata  ஜனகன் _ 
க்ஷேமதர்சின்_மகாபாரதம்

மன்னன் {க்ஷேமதர்சின் தவசி காலகவிருக்ஷீயரிடம்}, "ஓ! பிராமணரே, வஞ்சகம், அல்லது மோசடியின் மூலம் வாழ்வைத் தாங்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. செல்வமானது எவ்வளவுதான் பெரியதாக இருப்பினும், நியாயமற்ற வழிமுறைகளில் ஈட்டப்படும் செல்வத்தை நான் விரும்பவில்லை.(1) நமது உரையாடலின் தொடக்கத்திலேயே நான் இந்த வழிமுறைகளைத் தவிர்த்தேன். நிந்தனைக்கு வழிவகுக்காதவையும், அனைத்து வகையிலும் எனக்கு நன்மையே செய்பவையும், விளைவுகளில் தீங்கில்லாதவையுமான செயல்களை மட்டுமே செய்து இந்த உலகில் நான் வாழ விரும்புகிறேன். நீர் சுட்டிக்காட்டும் வழிகளைப் பின்பற்ற இயலாதவனாக நான் இருக்கிறேன். உண்மையில், இந்தப் போதனைகள் எனக்குத் தகாது" என்றான்.(2,3)


Kosala - Videha - Mahabharata - கோசலம் -விதேஹம்
தவசி {காலகவிருக்ஷீயர் கோசலநாட்டு இளவரசன் க்ஷேமதர்சினிடம்}, "ஓ! க்ஷத்திரியா, நீ சொல்லும் இந்த வார்த்தைகள் உன்னை அறவுணர்ச்சிகள் கொண்டவனாகச் சுட்டிக்காட்டுகின்றன. ஓ! பெரும் அனுபவம் கொண்டவனே, உண்மையில், மனோநிலையிலும், புத்தியிலும் நீ நீதிமானாக இருக்கிறாய்.(4) உனக்கும், அவனுக்கும் {விதேஹ ஆட்சியாளனான ஜனகனுக்கும்} நல்லது செய்ய நான் முயற்சிப்பேன். அழிவில்லாததும், வஞ்சனையில்லாததுமான ஒற்றுமையை உனக்கும் அந்த மன்னனுக்கும் இடையில் நான் ஏற்படுத்துவேன்.(5) உன்னதக் குலத்தில் பிறந்தவனும், நீதியற்றவையும், கொடூரமானவையுமான செயல்கள் அனைத்தையும் தவிர்ப்பவனும், பெரும் கல்வி பயின்றவனும், அரசை நடத்துவது மற்றும் அனைத்து மனிதர்களுக்குள்ளும் இணக்கத்தை ஏற்படுத்தும் கலைகளை நன்கறிந்தவனுமான உன்னைப் போன்ற ஒருவனை அமைச்சனாக அடைய விரும்பாதவன் எவன் இருக்கிறான்?(6) ஓ! க்ஷத்திரியா {க்ஷேமதர்சின்}, நாட்டை இழந்து பெருந்துன்பத்தில் மூழ்கியிருப்பவனாக இருப்பினும், நீ நீதிமிக்க நடத்தையைப் பின்பற்றி வாழ விரும்புவதன் காரணமாகவே நான் இதைச் சொல்கிறேன்.(7) உண்மையை உறுதியாகக் கடைப்பிடிக்கும் விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்}, விரைவில் என் வசிப்பிடத்திற்கு வரப்போகிறான். நான் சொல்வதை அவன் நிச்சயமாகச் செய்வான்" என்றார் {காலகவிருக்ஷீயர்}".(8)




பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இதன்பிறகு, விதேஹர்களின் ஆட்சியாளனை {ஜனகனை} அழைத்த அந்தத் தவசி {காலகவிருக்ஷீயர்}, அவனிடம் {ஜனகனிடம்} இந்த வார்த்தைகளைச் சொன்னார், "இந்த மனிதன் {கோசல இளவரசன் க்ஷேமதர்சின்} அரச குடி பிறந்தவன். இவனது இதயத்தையே நான் அறிவேன்.(9) இவனது ஆன்மாவானது கண்ணாடியின் பரப்பையோ, கூதிர்கால நிலவு வட்டிலையோ போன்று தூய்மையானது. அனைத்து வழியிலும் நான் இவனைச் சோதித்துவிட்டேன். நான் இவனிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை.(10) இவனுக்கும் உனக்கும் இடையில் நட்பு இருக்கட்டும். என்னை நம்புவதைப் போலவே நீ இவனிடமும் நம்பிக்கை கொள்வாயாக. (தகுந்த) அமைச்சன் இல்லாத மன்னனால், தன் நாட்டை மூன்று நாட்களுக்குக் கூட ஆள முடியாது.(11) அமைச்சன், துணிவுமிக்கவனாகவும், பெரும் நுண்ணறிவு கொண்டவனாகவும் இருக்க வேண்டும். இந்த இரு பண்புகளைக் கொண்டே ஒருவனால் இருவுலகங்களையும் {இம்மையையும், மறுமையையும்} வெல்ல முடியும். ஓ! மன்னா {ஜனகனே}, ஒரு நாட்டை ஆள்வதற்கும் இந்த இரு பண்புகளே அவசியம் என்பதைக் காண்பாயாக.(12) நீதிமிக்க மன்னர்களுக்கு, இத்தகு பண்புகளைக் கொண்ட ஓர் அமைச்சனைவிட வேறு எந்தப் புகலிடமும் கிடையாது. இந்த உயர் ஆன்ம மனிதன் அரசகுல வழித்தோன்றலாவான். நீதியின் பாதையிலேயே இவன் {க்ஷேமதர்சின்} நடக்கிறான்.(13) அறத்தையே எப்போதும் நோக்கமாகக் கொண்ட இவன் அடைவதற்கு மதிப்புமிக்க ஒருவனாவான். உன்னால் கௌரவத்துடன் நடத்தப்பட்டால், இவன் உன் எதிரிகள் அனைவரையும் அடக்குவான்.(14) இவன் உன்னோடு போரிட்டால், ஒரு க்ஷத்திரியன் என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வான். தன் தந்தைமார் மற்றும் பாட்டன்மாரின் நடத்தையைப் பின்பற்றி உன்னை வெல்ல அவன் போரிட்டால்,(15) எதிராளிகளை வெல்லும் க்ஷத்திரியக் கடமையை நோற்பவனாக நீ அவனோடு போர்புரிவதே உன் கடமையாக இருக்கும். எனினும், என் ஆணையின் பேரில் போரில் ஈடுபடாமல், உனக்கு நன்மை செய்யும் விருப்பத்தோடு இவனை உனக்குக் கீழ் நியமித்துக் கொள்வாயாக.(16) முறையற்ற பேராசையைக் கைவிட்டு அறத்தில் உன் கண்களைச் செலுத்துவாயாக. காமத்தாலோ, போரிடும் விருப்பத்தாலோ, உன் வகைக்கான கடமைகளைக் கைவிடுவது உனக்குத் தகாது.(17) ஓ! ஐயா, வெற்றி நிச்சயமானதில்லை. தோல்வியும் நிச்சயமானதில்லை. இதை நினைவில் கொண்டு, எதிரிக்கு உணவையும், பிற இன்ப நுகர் பொருட்களையும் கொடுத்து அமைதியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.(18) வெற்றியையும், தோல்வியையும் ஒருவன் தன் வழக்கிலேயே காணலாம். ஓர் எதிரியை அழிக்க முனைபவர்கள், சில வேளைகளில் முயலும்போது தாங்களே அழிந்து விடுகிறார்கள்" என்றார் {காலகவிருக்ஷீயர்}.(19)

இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் ஜனகன், அனைத்துக் கௌரவங்களுக்கும் தகுந்தவரான அந்தப் பிராமணர்களில் காளையை {காலகவிருக்ஷீயரை} முறையாக வணங்கிக் கௌரவித்து, அவரிடம்,(20) "பெரும் கல்வியும், பெரும் ஞானமும் கொண்டவர் நீர். எங்களுக்கு நன்மை செய்யும் விருப்பத்தில் நீர் எதைச் சொன்னீரோ, அது நிச்சயம் எங்கள் இருவருக்கும் பயன் பயக்கக்கூடியதே.(21) அவ்வாறு நடந்து கொள்வதே (எங்களுக்கு) உயர்ந்த நன்மையை அளிக்கும். இதைச் சொல்வதில் எனக்கு எத்தயக்கமும் இல்லை" என்றான் {ஜனகன்}.(22)

பிறகு அந்த விதேஹர்களின் ஆட்சியாளனானவன் {ஜனகன்}, கோசல இளவரசனிடம் {க்ஷேமதர்சினிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான், "க்ஷத்திரியக் கடமைகளை நோற்றும், கொள்கையின் உதவியுடனும் நான் இவ்வுலகை வென்றேன்.(23) எனினும், ஓ! மன்னர்களில் சிறந்தவனே, உன் நற்பண்புகளால் நான் வெல்லப்பட்டேன். அவமான உணர்வேதும் வளர்க்காமல் (என் அருகில் நீ இருந்தால்), ஒரு வெற்றியாளனாகவே நீ என்னுடன் வாழ்வாய்.(24) உன் நுண்ணறிவை நான் மதிக்கிறேன், உன் ஆற்றலை நான் மதிக்கிறேன். நான் உன்னை வென்றுவிட்டேன் என்று சொல்லி நான் உன்னை அவமதிக்கமாட்டேன். மறுபுறம், ஒரு வெற்றியாளனாகவே நீ என்னுடன் வாழ்வாயாக.(25) ஓ! மன்னா, என்னால் முறையாகக் கௌரவிக்கப்பட்டு என் வசிப்பிடத்திற்குச் செல்வாயாக" என்றான் {ஜனகன்}.

Kosala - Videha / Mithila -Mahabharata
பிறகு அந்தப் பிராமணரை {காலகவிருக்ஷீயரை} வணங்கிய மன்னர்கள் இருவரும், ஒருவர்மீது ஒருவர் நம்பிக்கை கொண்டு, *மிதிலையின் தலைநகரத்திற்குச் சென்றனர்.(26) விதேஹர்களின் ஆட்சியாளன் {ஜனகன்}, அந்தக் கோசல இளவரசனை {க்ஷேமதர்சினைத்} தன் வசிப்பிடத்திற்குள் நுழையச் செய்து, அனைத்து கௌரவங்களுக்கும் தகுந்த அவனுக்கு, கால்கழுவ நீரையும், தேன் மற்றும் தயிர்க்கடைசல்களையும் {மதுபர்க்கங்களையும்}, மற்றும் வழக்கமான பொருட்களையும் கொடுத்து கௌரவித்தான்.(27)

மேலும் மன்னன் ஜனகன், பல்வேறு வகை ரத்தினங்கள் மற்றும் நகைகளுடன் சேர்த்துத் தன் சொந்த மகளையே அவனுக்கு {க்ஷேமதர்சினுக்கு} அளித்தான் {திருமணம் செய்து கொடுத்தான்}. இதுவே (அமைதியை ஏற்படுத்துவதே) மன்னர்களின் உயர்ந்த கடமையாகும்; வெற்றி, தோல்வி ஆகிய இரண்டும் நிச்சயமற்றதாகும்" {என்றார் பீஷ்மர்}.(28)

சாந்திபர்வம் பகுதி – 106ல் உள்ள சுலோகங்கள் : 28

*மிதிலையின் தலைநகரத்திற்குச் சென்றனர்.(26)
.....தற்கால பீகார் மாநிலத்தின் வடக்குப் பகுதி முழுவதும் முற்காலத்தில் ஜனகன் (Janaka) மன்னனால் ஆளப்பட்டதே விதேஹ/விதேக (Videha) நாடாகும். எனவே ஜனகனுக்கு விதேகன் (Videha) என்ற பெயருமுண்டு.

ஜனகரின் மகளே சீதா/சீதை  (Sita). சீதா ஜனகரின் மகளானதால் ஜானகி (Janaki) என்றும் அழைக்கப்பட்டாள்.

ஜனகன் விதேகன் என்று அழைக்கப்பட்டதால் சீதை, வைதேகி (Vaitheki/ Vaithegi/ Vaidehi) என்றும் அழைக்கப்பட்டாள்.


இந்த விதேக நாட்டிற்கு மிதிலா/ மிதிலை (Mithila) என்ற பெயரும் உண்டு.  சீதை மிதிலை நாட்டு இளவரசியாதலால் மைதிலி (Maithili) எனவும் அழைக்கப்பட்டாள். 

இந்த மிதிலையில் வாழும் மக்களின் மொழி மைதிலி (Maithili Language) ஆகும். 

பீகாலிருந்தும், ஜார்கண்ட் மாநிலத்திலிருந்தும் வடக்கே உள்ள மிதிலை பிரதேசத்தினை தனியே பிரித்து  மிதிலாஞ்சல் மாநிலமாக (Mithilanchal State) ஒரு புதிய மாநிலத்தினை உண்டாக்கும் திட்டமும் மத்திய அரசால் பரிசிலிக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த விதேஹ அல்லது மிதிலை நாட்டின் தலைநகரம் ஜனகன் ஆட்சி செய்ததால் ஜனகபுரி (Janakpur) என வழங்கப்பட்டது. அந்த ஜனகபுரி தற்போது பீகார் எல்லையை ஒட்டியுள்ள நேபாளம் நாட்டினுள் உள்ள தனுசா மாவட்டத்தின் (Dhanusa District) மாவட்டத் தலைநகரமாகும். நேபாளத்தில் தான் மிதிலை நகரமும் உள்ளது. இந்த மிதிலை நகரம் ஜனகபுரியிலிருந்து 27 கிமீ தொலைவிலேயே உள்ளது.




ஆங்கிலத்தில் | In English