Fraud Schemes well-devised! | Shanti-Parva-Section-105 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 105)
பதிவின் சுருக்கம் : பகைவர்களை வெல்வதற்குப் பின்பற்றக்கூடிய வஞ்சகத் திட்டங்களைக் குறித்து க்ஷேமதர்சினுக்கும் காலகவிருக்ஷீயருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
Kshemadarcin and Kalakavrikshiya - Mahabharata க்ஷேமதர்சின் _ காலவிருக்ஷீயர் -மகாபாரதம் |
தவசி {காலகவிருக்ஷீயர் கோசல நாட்டு இளவரசன் க்ஷேமதர்சினிடம்} சொன்னார், "ஓ! க்ஷத்திரியா, மறுபுறம், உன் நாட்டை மீட்பதற்கு உனக்கு இன்னும் ஆற்றல் இருப்பதாக நினைத்தால், நீ பின்பற்ற வேண்டிய கொள்கை வழியைக் குறித்து உன்னோடு உரையாடுவேன்.(1) அந்தக் கொள்கை வழியை நீ பின்பற்றி, முயற்சி செய்ய முனைந்தால், உன்னால் உன் செழிப்பை மீட்க முடியும். விபரமாக நான் உனக்குச் சொல்லப்போகும் அனைத்தையும் கவனமாகக் கேட்பாயாக. அந்த ஆலோசனைகளின்படி உன்னால் செயல்பட முடிந்தால், அபரிமிதமான செல்வத்தையும், உண்மையில், உனது நாட்டையும், அரசு அதிகாரத்தையும், பெருஞ்செழிப்பையும் நீ அடைவாய்.(3) ஓ! மன்னா, நீ அதை விரும்பினால் எனக்குச் சொல்வாயாக, அப்போது நான் உனக்கு அந்தக் கொள்கையைக் குறித்துச் சொல்வேன்" {என்றார் காலகவிருக்ஷீயர்}.(4)
மன்னன் {க்ஷேமதர்சின் காலவிருக்ஷீயரிடம்}, "ஓ! புனிதமானவரே, நீர் சொல்ல விரும்புவதை எனக்குச் சொல்வீராக. உமது ஆலோசனைகளைக் கேட்பதற்கும், அதன்படி செயல்படுவதற்கும் நான் விரும்புகிறேன். இன்னும் உம்முடனான இந்தச் சந்திப்பு (எனக்கான) விளைவுகளில் பலன்நிறைந்ததாக இருக்கட்டும்" என்றான்.(5)
Videha - Mithila - Mahabharata - விதேஹ நாடு -மிதிலை |
இவ்வாறு பெரும்படையைத் திரட்டி, நல்ல அமைச்சர்களுடன் ஆலோசித்து, உன் எதிரிகளுக்கு மத்தியில் வேற்றுமையை உண்டாக்கி, ஒரு மனிதன் வில்வக்காயைக் கொண்டு மற்றொரு வில்வக்காயைப் பிளப்பதைப் போலவே அவர்களுக்குள் ஒருவரையொருவர் எதிர்க்கச் செய்வாயாக. அல்லது, உன் எதிரியின் எதிரிகளிடம் அமைதியை ஏற்படுத்திக் கொண்டு, அவனது சக்தியை அழிப்பாயாக.(11) பிறகு, எளிதிற்கிடைக்காத நல்ல பொருட்களிலும், அழகிய பெண்களிலும், விலைமதிப்புமிக்கத் துணிமணிகள், படுக்கைகள், இருக்கைகள், மற்றும் வாகனங்களிலும், வீடுகளிலும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த பறவைகள் மற்றும் விலங்குகளிலும், சாறுகள், நறுமணப்பொருட்கள் மற்றும் கனிகளிலும் உன் எதிரியைப் பற்றுக் கொள்ளச் செய்து, அவனை அழிவடையச் செய்வாயாக[1].(13) ஒருவனுடைய எதிரி இவ்வாறு நிர்வகிக்கப்பட்டால், அல்லது அவனைக் கவனிக்காமல் விட்டால், நல்ல கொள்கையின் படி செயல்பட விரும்பும் ஒருவன், அந்த எதிரி ஒருபோதும் எதையும் அறியாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்[2].(14) ஞானியரால் அங்கீகரிக்கப்பட்ட நடத்தையைப் பின்பற்றி, உன் எதிரியின் ஆட்சிப்பகுதிகளில் உள்ள அனைத்து வகை இன்பங்களிலும் இன்புற்று, நாய், மான், காகம் ஆகியவற்றின் நடத்தையைப் பின்பற்றி, உன் எதிரிகளிடம் வெளிப்படையான நட்புடன் நடந்து கொள்வாயாக.(15)
[1] "இந்தப் பொருட்களில் உன் எதிரியைப் பற்றுக் கொள்ளச் செய்வதால், உன் எதிரியின் கருவூலம் தீர்ந்துவிடக்கூடும். இதைச் செய்தால் உன் எதிரி விரைவில் அழிவடைவான் என்ற பொருளை உணர்த்துவதாக இது தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "சத்துரு தானே நசிக்கும்படி, அடைய முடியாத நல்ல வஸ்துக்கள், ஸ்திரீகள், போர்வைகள், படுக்கைகள், ஆஸனங்கள், வாஹனங்கள், பெரியவிலைபெற்ற வீடுகள், பக்ஷிகள், மிருகக்கூட்டங்கள், ரஸங்கள், கந்தங்கள், கனிகள் இவைகளில் பற்றுள்ளவனாக அவனைச் செய்" என்றிருக்கிறது.[2] கும்பகோணம் பதிப்பில், "இவ்விதம் பற்றுள்ளவனாயிருந்தால் அவனைத் தடுக்க வேண்டிய விஷயத்தில் தடுக்கவும் வேண்டும். உபேக்ஷையாக இருந்தால் தான் சத்துருவென்பது வெளியாகும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் மேற்கண்ட பொருட்களில் எதிரியைப் பற்றுக் கொள்ளச் செய்து வேண்டும் என்றும், "உனக்கு எதிர்வினையாற்றப்பட்டால், நீ அஃதை அலட்சியம் செய்யக்கூடாது. எனினும், நீ உன் எதிரியைக் கட்டுப்படுத்த விரும்பினால், எதையும் நீ வெளிப்படையாகச் செய்யக்கூடாது" என்றுமிருக்கிறது.
பெரியவையும், நிறைவேற்றக் கடினமானவையுமான சாதனைகளை அவர்களை மேற்கொள்ளச் செய்வாயாக. மேலும் அவர்கள், பலமிக்க எதிரிகளுடன் பகைமையில் ஈடுபடும்படியும் பார்த்துக் கொள்வயாக.(16) இனிமையான நந்தவனங்கள், விலைமதிப்புமிக்கப் படுக்கைகள் மற்றும் இருக்கைகள் ஆகிவற்றில் அவர்களது கவனத்தைத் திருப்பி, அத்தகு இன்ப நுகர் பொருட்களை அளித்து, உன் எதிரிகளின் கருவூலத்தை வற்றச் செய்வாயாக.(17) உன் பகைவனை வேள்விகள் செய்ய வைத்து, கொடைகளை அளிக்க வைத்து, பிராமணர்களை நிறைவு செய்வாயாக. (உன் கரங்களால் அந்தப் பரிசுகளைப் பெற்ற) அவர்கள் {பிராமணர்கள்}, பதிலுக்கு (தவங்களையும், வேதச் சடங்குகளையும் செய்வதன் மூலம்) உனக்கு நன்மையைச் செய்து, ஓநாய்களைப் போல உன் எதிரிகளை விழுங்குவார்கள்.(18) நீதிமிக்கச் செயல்களைச் செய்யும் மனிதன் உயர்ந்த கதியையே அடைவான் என்பதில் ஐயமில்லை. அத்தகு செயல்களின் மூலம் மனிதர்கள், சொர்க்கத்தில் உயர்ந்த புகழ் உலகங்களை ஈட்டுவதில் வெல்கிறார்கள்.(19) (நல்ல, அல்லது நியாயமற்ற செயல்களின் மூலம்) உன் எதிரிகளின் கருவூலம் தீர்ந்து போனால், ஓ! கோசல இளவரசே, அவர்கள் ஒவ்வொருவரும் அடக்கப்பட வேண்டும்.(20)
கருவூலமே, சொர்க்கத்தில் புகழுக்கும், பூமியில் வெற்றிக்கும் வேராக இருக்கிறது. எதிரிகள் அவர்களுடைய கருவூலங்களின் விளைவாலேயே அத்தகு மகிழ்ச்சியில் இன்புற்றிருக்கிறார்கள். எனவே, அனைத்து வழிகளிலும் கருவூலமானது வற்றச் செய்யப்பட வேண்டும். உன் எதிரியின் முன்பு உழைப்பை மெச்சாதே, ஆனால் விதியை உயர்வாகப் பேசுவாயாக.(21) தேவர்களின் வழிபாடு சார்ந்த செயல்பாடுகளையே அதிகமாகச் சார்ந்திருக்கும் மனிதன் விரைவில் அழிவடைவான் என்பதில் ஐயமில்லை. நீ உன் எதிரியை விஸ்வஜித் என்றழைக்கப்படும் பெரும் வேள்வியைச் செய்ய வைத்து, அவனது உடைமைகளுக்கான வழிமுறைகள் அனைத்தையும் அவனை இழக்கச் செய்வாயாக.(22) இதன் மூலம் உனது நோக்கம் நிறைவேறும். (வற்றிய கருவூலத்தை மீண்டும் நிரப்புவதற்காக அதிகாரத்தைப் பயன்படுத்தி {மக்களின் பொருட்களை} மன்னன் அபகரித்து வருவதால்) நாட்டின் சிறந்த மனிதர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை உன் எதிரிக்குச் சொல்லி, (உலகம் சார்ந்த உடைமைகளை அனைத்தையும் எதிரியிடம் இருந்து வற்றச் செய்வதற்காக) யோகக் கடமைகளை நன்கறிந்த உயர்ந்த தவசி எவரையாவது அவனுக்குச் சுட்டிக்காட்டுவாயாக.(23) அப்போது உன் எதிரி துறவைப் பின்பற்றி, முக்தி வேண்டி வனத்திற்குள் ஓய்ந்து போவான். பிறகு, எதிர்பார்க்கும் விளைவைத் தரக்கூடிய உயர்ந்த மூலிகைகள், செடிகள், செயற்கை உப்புகள் ஆகியவற்றைக் கொதிக்கச் செய்வதன் மூலம் உண்டாக்கப்பட்ட மருந்துகளின் உதவியுடன், (உன் எதிரியின் ஆட்சிப் பகுதிகளில் உள்ள) யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களை அழிப்பாயாக.(24) இவையும், வஞ்சனையுடன் தொடர்புடையவையும், நன்கு தீட்டப்பட்டவையுமான திட்டங்கள் பலவும் இருக்கின்றன. ஒரு நுண்ணறிவுமிக்க மனிதன், இவ்வாறே நஞ்சின் மூலம் ஓர் எதிரி நாட்டின் மக்கள் தொகையை அழிக்க முடியும்" என்றார் {காலகவிருக்ஷீயர்}.(25)
சாந்திபர்வம் பகுதி – 105ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English |