Aristocrats! | Shanti-Parva-Section-107 | Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 107)
பதிவின் சுருக்கம் : உயர்குடியினருக்கும் மன்னர்களுக்கும் இடையில் பகைமை உண்டாகும் காரணங்கள்; உயர்குடியினர் ஒற்றுமையுடன் இருந்தால் நாட்டுக்கு ஏற்படும் நன்மைகள்; பெருந்திரள் மக்களைத் துயரம் மற்றும் ஆபத்தில் இருந்து காக்கக்கூடிய உயர் குடியினர் யாவர்; உயர்குடியினர் மன்னனிடம் இருந்து விலக வழிவகுக்கும் காரணங்கள்; உயர்குடியினரால் நாட்டுக்கு ஏற்படும் அச்சம்; உயர்குடியினருக்கு மத்தியில் உண்டாகக்கூடிய வேற்றுமை ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்கு விரிவாகச் சொன்ன பீஷ்மர்...
Bhishma advises Yudhistra Pandavs and Shree Krishna on his death bed of arrows |
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! எதிரிகளை எரிப்பவரே, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களுக்குரிய கடமைகளின் வழி, பொது நடத்தை {ஒழுக்கம்}, வாழ்வாதார வழிமுறைகள் ஆகியவற்றையும், அவற்றின் விளைவுகளையும் நீர் விளக்கிச் சொல்லியிருக்கிறீர்.(1) மன்னர்களின் கடமைகள், அவர்களின் கருவூலங்கள், அவற்றை நிரப்பும் வழிமுறைகள், படையெடுப்பு மற்றும் வெற்றி ஆகியவற்றைக் குறித்தும் சொன்னீர். அமைச்சர்களின் சிறப்பியல்புகள், குடிமக்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் நடவடிக்கைகள்,(2) ஒரு நாட்டினுடைய ஆறு அங்கங்களின் சிறப்பியல்புகள், படைகளின் தரம், தீயோரை அடையாளங்காணும் வழிமுறைகள், நல்லோரின் அறிகுறிகள்,(3) நடுநிலையுடன் இருப்போர், தாழ்ந்தோர், மேன்மையானோர் ஆகியோரின் பண்புகள், முன்னேற்றத்தை விரும்பும் மன்னன் பெருந்திரள் மக்களிடம் பின்பற்ற வேண்டிய நடத்தை,(4) பலவீனர்கள் பாதுகாக்கப்பட்டுப் பேணி வளர்க்கப்பட வேண்டிய பாங்கு ஆகியவற்றைக் குறித்தும் நீர் சொல்லியிருக்கிறீர். ஓ! பாரதரே, இந்தக் காரியங்கள் அனைத்தையும் குறித்து, புனித உடன்படிக்கைகளில் ஆழப் பதியப்பட்டிருக்கும் அறிவுரைகளை வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறீர்.(5)
எதிரிகளை வெல்ல விரும்பும் மன்னர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தையைக் குறித்தும் நீர் சொல்லியிருக்கிறீர். ஓ! நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, ஒரு மன்னைச் சுற்றிக் கூடியிருக்கும் துணிச்சல் மிக்க மனிதக்கூட்டத்திடம் {உயர்குடிமக்களிடம்} நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து நான் இப்போது கேட்க விரும்புகிறேன்[1].(6) ஓ! பாரதரே, அவர்கள் {கூட்டங்கள்} எவ்வாறு வளர முடியும்? மன்னனிடம் அவர்கள் எவ்வாறு பற்றுடனிருக்க முடியும்? எதிரிகளை அடக்குவதிலும், நண்பர்களை அடைவதிலும் அவர்கள் எவ்வாறு வெல்வார்கள்?(7) வேற்றுமை மட்டுமே அவர்களுக்கு அழிவைக் கொண்டுவரும் என்று எனக்குத் தோன்றுகிறது. பலருக்குத் தொடர்பேற்படும்போது, ஆலோசனைகளை எப்போதும் இரகசியமாக வைத்துக் கொள்வது மிகக் கடினமானது என நான் நினைக்கிறேன். ஓ! எதிரிகளை எரிப்பவரே {பீஷ்மரே}, இது குறித்த அனைத்தையும் நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். ஓ! மன்னா, மன்னனிடம் இருந்து அவர்கள் விலகுவதைத் தடுக்கும் வழிமுறைகளையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(9)
[1] “மரம் என்பது கணமாகும் Gana. அதன் பொருள் கூட்டம் என்பதாகும். இந்தப் பாடம் முழுவதும், மரமானது, உயர்குடியினரின் செல்வத்தையும், அரியணையைச் சூழ்ந்திருக்கும் குருதியையும் குறிப்பிடுவதாகவே அமைந்திருக்கிறது” என இங்கே விளக்குகிறார் கங்குலி. கும்பகோணம் பதிப்பில், “ஓ! பாரதரே, அவ்விதமே ஜயிக்க விருப்பமுள்ளவனுக்குரிய ஒழுக்கமும் உம்மால் கூறப்பட்டது. புத்தியுள்ளவர்களிற் சிறந்தவரே, அவ்விதமே கூட்டங்களின் நடையையும் உம்மிடமிருந்து கேட்க விரும்புகிறேன்” என்றிருக்கிறது.
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! ஏகாதிபதி, ஒருபுறமிருக்கும் உயர் குடியினருக்கும், மறுபுறமிருக்கும் மன்னர்களுக்கும் இடையில் பகைமையை உண்டாக்கும் காரணங்களாகப் பேராசையும், கோபமும் இருக்கின்றன[2].(10) இவர்களில் ஒரு தரப்பினர் (மன்னர்கள், அல்லது உயர்குடியினர்) பேராசைக்கு இரையாகின்றனர். அதன் விளைவாக அடுத்தத் தரப்புக்கு (உயர் குடியினர் அல்லது மன்னர்களுக்கு) கோபமேற்படுகிறது. அடுத்தவரை பலவீனமடையச் செய்து, வீணாக்க முனையும் அந்த இரு தரப்பும் அழிவையே அடைகிறது.(11) ஒற்றர்களை நியமித்து, கொள்கையையும், உடல்சக்தியும் கொண்டு திட்டத்தை வகுத்து, இணக்கம் {சாம}, ஈகை {தான}, வேற்றுமை {பேதம்} ஆகிய கலைகளைப் பின்பற்றி, பலவீனம், வீணாக்குதல், அச்சம் ஆகியவற்றை உண்டாக்கக்கூடிய பிற வழிமுறைகளையும் பயன்படுத்தி அந்தத் தரப்புகள் {மன்னர் தரப்பினரும், உயர் குடி தரப்பினரும்} ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வார்கள்.(12) கச்சிதமான அமைப்பின் சிறப்பியல்புகளுடன் கூடியவர்களான ஒரு நாட்டின் உயர் குடிமக்கள், அவர்களிடம் இருந்து மன்னன் அதிகம் பறிக்க முயன்றால், அவனிடம் இருந்து ஒதுங்கி விடுவார்கள். மன்னனிடம் இருந்து ஒதுங்கி, நிறைவில்லாமல் இருக்கும் அவர்கள் அனைவரும், அச்சத்தின் காரணமாகத் தங்கள் ஆட்சியாளனுடைய எதிரிகளின் தரப்பை அடைவார்கள்.(13) மேலும் ஒரு நாட்டின் உயர்குடிமக்கள் தங்களுக்குள்ளேயே ஒற்றுமையின்றி இருந்தால் அவர்கள் அழிவையே அடைவார்கள். ஒற்றுமையில்லாத அவர்கள் எளிதாக எதிரிக்கு இரையாக விழுவார்கள். எனவே, உன்னதமானவர்கள், எப்போதும் ஒரே கருத்துடன் செயல்பட வேண்டும்.(14) அவர்கள் ஒற்றுமையாக இருந்தால், தங்கள் பலம் மற்றும் ஆற்றலின்மூலம் அவர்கள் மதிப்புமிக்க உடைமைகளை ஈட்டுவார்கள். உண்மையில் அவர்கள் இவ்வாறு ஒற்றுமையுடன் இருந்தால், வெளித்தரப்பினர் பலர் அவர்களின் கூட்டணியை நாடுவார்கள்.(15)
[2] “மன்னன், பேராசையினால் உந்தப்பட்டு உயர்குடியினருக்கு அதிக வரிகளை விதிக்கும்போது, அவர்கள் சினங்கொண்டு, மன்னனைக் கீழிறக்க முனைவார்கள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அன்பெனும் கட்டுக்குள் ஒருவரோடொருவர் ஒற்றுமையாக இருக்கும் அந்த உன்னதமானவர்களை ஞானிகள் மெச்சுகின்றனர். காரியத்தோடு ஒற்றுமையாக இருந்தால், அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.(16) ({பிறருக்கு} எடுத்துக்காட்டாக இருப்பதன் மூலம்) ஒழுக்கத்திற்கான அறவழிகளை அவர்களால் நிறுவ முடியும். முறையாக நடந்து கொள்வதால் அவர்கள் செழிப்பில் முன்னேற முடியும்.(17) உயர்குடி மக்கள், தங்கள் மகன்கள், உடன்பிறந்தோர் ஆகியோரைக் கட்டுப்படுத்தி, அறிவால் செருக்கு தணிந்த மனிதர்கள் அனைவரிடமும் அன்பாக நடந்து கொண்டு செழிப்பில் முன்னேறுவார்கள்.(18) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, உயர்குடிமக்கள், ஒற்றர்களை நிறுவும் தங்கள் கடமைகளைக் கவனித்து, கொள்கை வழிமுறைகளையும், கருவூலங்களை நிரப்பும் வழிமுறைகளையும் தீட்டி, செழிப்பில் முன்னேறுவார்கள்.(19) உயர்குடிமக்களானவர்கள், ஞானம், துணிவு, விடாமுயற்சி ஆகியவற்றைக் கொண்டோருக்கு உரிய மரியாதையைச் செலுத்தி, அனைத்து வகைப் பணிகளிலும் உறுதியான ஆற்றலை வெளிப்படுத்தி, செழிப்பில் முன்னேறுவார்கள்.(20)
செல்வம், வளம், சாத்திர அறிவு, கலைகள் மற்றும் அறிவியல்கள் அனைத்தின் அறிவு ஆகியவற்றைக் கொண்ட உயர்குடி மக்கள், அறியாமையில் உள்ள பெருந்திரள் மக்களை அனைத்து வகைத் துயரம் மற்றும் ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவார்கள்.(21) ஓ! பாரதர்களின் தலைவா, (மன்னனின் பங்குக்கு) கோபம், முறிவு, அச்சம், தண்டனை, ஒறுப்பு, ஒடுக்குதல், கொலை ஆகியவை உன்னதக் குடிமக்களை மன்னனிடம் இருந்து விலகச் செய்து, மன்னனுடைய எதிரிகளின் தரப்பை அடையச் செய்கிறது.(22) எனவே, மன்னனால் அந்த உயர் குடிமக்களின் தலைவர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நாட்டின் காரியங்கள் பெருமளவில் அவர்களைச் சார்ந்தே இருக்கின்றன.(23) ஓ! பகைவர்களை நொறுக்குபவனே, உயர்குடி மக்களின் தலைவர்களிடம் மட்டுமே ஆசோலனைகள் செய்யப்பட வேண்டும், அவர்களிடம் மட்டுமே ஒற்றர்களும் இருக்க வேண்டும். ஓ! பாரதா, உயர்குடியின் ஒவ்வொரு நபரிடமும் மன்னன் ஆலோசிக்கக்கூடாது.(24) மன்னன், அந்தத் தலைவர்களுடன் இணக்கமாக நடந்து கொண்டு, மொத்த வகையினருக்கும் நன்மை செய்ய வேண்டும். எனினும், அந்த உயர்குடி கூட்டமானது, பிளவடைந்து, வேற்றுமையடைந்து, தலைவர்கள் அற்றுப் போனால், வேறு வகைச் செயல்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும்.(25)
உயர்குடி மக்கள் தங்களுக்குள் ஒருவரோடொருவர் சச்சரவு செய்து கொண்டு, தங்கள் வளங்களுக்கேற்ற வகையில் ஒவ்வொருவரும் ஒற்றுமையில்லாமல் செயல்பாட்டால், அவர்களது செழிப்பானது தேய்ந்துபோகும், பல்வேறு வகைத் தீமைகளும் நேரும்.(26) அவர்களில் கல்வியும், ஞானமும் கொண்டோர், ஒரு சச்சரவு தோன்றிய உடனேயே அதைக் களைய வேண்டும். உண்மையில், ஒரு குலத்தின் பெரியோர், அலட்சியத்துடன் நடந்து கொண்டால், அந்தக் குலத்தினர் மத்தியில் கலகம் பிறக்கும். அத்தகு கலகங்களே ஒரு குலத்தின் அழிவாகி, உன்னதமானவர்களுக்கு மத்தியில் (உயர்குடியினர் அனைவருக்கும் மத்தியில்) வேற்றுமையை உண்டாக்கும்.(27) ஓ! மன்னா, உள்ளே இருந்து எழும் அச்சங்கள் அனைத்தில் இருந்தும் உன்னைப் பாதுகாத்துக் கொள்வாயாக. வெளியில் இருந்து எழும் அச்சங்கள் அற்ப விளைவுகளையே உண்டாக்கும். ஓ! மன்னா, முதல் வகை அச்சமானது {உட்பகையானது}, ஒரே நாளில் உன் வேரையே அறுத்துவிடும்.(28) குலத்தாலும், குருதியாலும் ஒருவருக்கொருவர் இணையான மனிதர்கள், தங்கள் இயல்பில் இருந்து எழும் கோபம், அல்லது மடமை, அல்லது பேராசை ஆகியவற்றால் ஒருவரோடொருவர் பேசுவதையும் நிறுத்திவிடுவார்கள். இது தோல்வியின் அறிகுறியாகும். துணிவாலோ, நுண்ணறிவாலோ, அழகாலோ, செல்வத்தாலோ எதிரிகள் உயர்குடியை அழிப்பதில்லை. வேற்றுமையாலும் {பேதமுறையினாலும்}, கொடைகளாலும் {தானமுறையாலும்} மட்டுமே அதை அடக்க முடியும். இதன் காரணமாகவே, ஒற்றுமை ஒன்றே உயர்குடியின் பெரும்புகலிடமாகச் சொல்லப்படுகிறது” என்றார் {பீஷ்மர்}.(29-31)
சாந்திபர்வம் பகுதி – 107ல் உள்ள சுலோகங்கள் : 31
ஆங்கிலத்தில் | In English |