Friday, March 30, 2018

மான் வேட்டை! - சாந்திபர்வம் பகுதி – 125

Deer Hunting! | Shanti-Parva-Section-125| Mahabharata In Tamil

(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 125)


பதிவின் சுருக்கம் : நம்பிக்கையைக் குறித்து எழும் ஐயத்தைப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; வேட்டையாடச் சென்ற மன்னன் சுமித்திரனின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்...


Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-125
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-125
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாட்டா, (ஒரு மனிதனின் தேவைகளில்) நடத்தையே முதன்மையானது என்று சொல்கிறீர். எனினும், எப்போது அந்த நம்பிக்கை {எதிர்பார்பபு}[1] எழுகிறது? அஃது என்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(1) இந்தப் பெரும் ஐயம் என் மனத்தை ஆட்கொள்கிறது. ஓ! பகைநகரங்களை அடக்குபவரே, அஃதை அகற்றுவதற்கு உம்மைத் தவிர வேறு எந்த மனிதனும் இல்லை.(2) ஓ! பாட்டா, ஓ! தலைவா, சுயோதனன் (அவனது பிடிவாதத்தின் விளைவால் உண்டான) போர் தொடங்குவதற்கு முன், முறையானதையே செய்வான் என்ற பெரும் நம்பிக்கை {எதிர்பார்ப்பு} எனக்கு இருந்தது.(3) ஒவ்வொரு மனிதனிலும் பெரும் நம்பிக்கையிருக்கிறது. அந்த நம்பிக்கை {எதிர்பார்ப்பு} அழியும்போது, அதைத் தொடரும் துயரம் பெரியது; கிட்டத்தட்ட மரணத்திற்கு இணையானது என்பதில் ஐயமில்லை.(4) நான் மூடனாக இருந்ததால், திருதராஷ்டிரரின் தீய மகன் துரியோதனன் நான் வளர்த்து வந்த நம்பிக்கையை அழித்தான். ஓ! மன்னா {பீஷ்மரே}, என் மனத்தின் மடமையைக் காண்பீராக.(5) மரங்கள் அனைத்துடன் கூடிய ஒரு மலையைவிட நம்பிக்கை பெரியது என்று நான் நினைக்கிறேன். அல்லது, ஒருவேளை அஃது ஆகாயத்தைவிடவும் பரந்து விரிந்ததாக இருக்கலாம். அல்லது, ஒருவேளை, ஓ! மன்னா, உண்மையில் அஃது அளவிடப்பட முடியாததாகவும் இருக்கலாம்.(6) ஓ! குருக்களின் தலைவரே {பீஷ்மரே}, நம்பிக்கையைப் புரிந்து கொள்வது மிகக் கடினமானதே, அதற்கு இணையாகவே அஃதை அடக்குவதும் கடினமானதாகவே இருக்கிறது. நம்பிக்கையின் இறுதித் தன்மையைக் கண்டு, இதைப் போலவே வெல்லப்பட முடியாதது வேறு என்ன இருக்கிறது என்று கேட்கிறேன்?” என்றான்.(7)

[1] கங்குலியில் “நம்பிக்கை” Hope என்று சொல்லப்படுவது, கும்பகோணம் பதிப்பில் “ஆசை” என்று சொல்லப்படுகிறது. மன்மதநாததத்தர் மற்றும் பிபேக் திப்ராயின் பதிப்புகளிலும் கங்குலியில் உள்ளதைப் போலவே “நம்பிக்கை” என்றே இருக்கிறது.



பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! யுதிஷ்டிரா, பழங்காலத்தில் சுமித்திரனுக்கும், ரிஷபருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை நான் உனக்கு உரைக்கிறேன். அதைக் கேட்பாயாக.(8) ஹைஹய குலத்தைச் சேர்ந்தவனும், சுமித்திரன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஓர் அரசமுனி வேட்டையாடச் சென்றான். அவன் நேரான கணையொன்றால் ஒரு மானைத் துளைத்து, அதைப் பின்தொடர்ந்து சென்றான்.(9) பெரும் பலம் கொண்ட அந்த மான், உடலில் தைத்த கணையுடனே ஓடிச் சென்றது. பெரும் பலம் கொண்ட மன்னனும் {சுமித்திரனும்} தன் பெரிய இரையைப் பெரும் வேகத்துடன் விரட்டிச் சென்றான்.(10) பெரும் வேகம் கொண்ட அந்த விலங்கு, பள்ளத்திலும், சமவெளியிலும் என மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தது. இளைஞனும், சுறுசுறுப்புடையவனும், பலவானும், வில் மற்றும் வாள் தரித்தவனும், கவசம் பூண்டவனுமான மன்னன் மேலும் மேலும் அதைப் பின்தொடர்ந்து சென்றான்.(11) எவரின் துணையுமின்றிக் காட்டில் ஊடாக அந்த விலங்கைத் துரத்திச் சென்ற மன்னன், பல ஆறுகளையும், ஓடைகளையும், ஏரிகளையும், சிறு காடுகளையும் கடந்து சென்றான்.(13)

பெரும் வேகங்கொண்ட அவ்விலங்கு, தன்விருப்பப்படியே அப்போதைக்கப்போது தன்னை மன்னனுக்கு வெளிப்படுத்திக்கொண்டு பெரும் வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.(14) ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னனின் {சுமித்திரனின்} பலகணைகளால் துளைக்கப்பட்ட அந்தக் காட்டுவாசி {மான்}, விளையாடிக் கொண்டிருப்பதைப் போலத் தனக்கும், தன்னைப் பின்தொடர்ந்து வருபவனுக்குமான இடைவெளியைக் குறைத்துக் கொண்டே வந்தது.(15) மீண்டும் மீண்டும் வேகத்தை வெளிப்படுத்தியும், ஒன்றன்பின் ஒன்றாகக் காடுகளைக் கடந்து கொண்டும், அப்போதைக்கப்போது மன்னனுக்கு அருகிலேயே தன்னை வெளிப்படுத்திக் கொண்டேயும் சென்றது.(16)

இறுதியாக, அந்த எதிரிகளை நொறுக்குபவன் {மன்னன் சுமித்திரன்}, கூரியதும், பயங்கரமானதும், உயிர்நிலைகளையே துளைக்கவல்லதுமான மிக மேன்மையான ஒரு கணையைத் தன் வில்லின் நாணில் பொருத்தினான்.(17) பெரும் அளவு உடல்வடிவத்தைக் கொண்ட அந்த விலங்கு, தன்னைப் பின்தொடர்ந்து வருபவனின் முயற்சியைக் கண்டு சிரிப்பதைப் போல, கணை அடையும் தொலைவை விட நான்கு மைல்களுக்கு அப்பால் உள்ள ஓர் இடத்தை அடைந்து, திடீரெனத் தொலைவாகச் சென்றுவிட்டது.(18) சுடர்மிக்கக் காந்தி கொண்ட அந்தக் கணையானது தரையில் விழுந்தது. மானோ ஒரு பெரும் காட்டுக்குள் நுழைந்தது, இருப்பினும் மன்னன் {சுமித்திரன்} அதைத் துரத்துவதைத் தொடர்ந்து கொண்டே இருந்தான்” என்றார் {பீஷ்மர்}.(19)

சாந்திபர்வம் பகுதி – 125ல் உள்ள சுலோகங்கள் : 19

ஆங்கிலத்தில் | In English