Be of Good behaviour! | Shanti-Parva-Section-124| Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 124)
பதிவின் சுருக்கம் : அறம், உண்மை, நற்செயல்கள், வலிமை, செழிப்பு ஆகியன அறப்பண்பிலேயே தங்கள் வேர்களைக் கொண்டுள்ளன என்பதை நிறுவ துரியோதனனுக்குத் திருதராஷ்டிரன் சொன்ன பிரகலாதன், இந்திரன் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! மனிதர்களில் முதன்மையானவரே, பூமியில் அறப்பண்பையே {தர்மசீலத்தையே} மனிதர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். எனினும், அவற்றின் பெருமையில் எனக்குப் பேரையங்கள் இருக்கின்றன. ஓ! அறவோரில் முதன்மையானவரே, அவை எங்களால் புரிந்து கொள்ளத்தக்கவையாக இருந்தால், அறப்பண்பை {நன்னடத்தையை} அடையும் வழி குறித்த அனைத்தையும் நான் கேட்க விரும்புகிறேன்.(2) ஓ! பாரதரே, உண்மையில் அந்நடத்தை எவ்வாறு அடையப்படுகிறது. அதைக் கேட்க நான் விரும்புகிறேன். ஓ! பேசுபவர்களில் முதன்மையானவரே, அந்நடத்தையின் சிறப்பியல்புகளைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளவற்றையும் எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(3)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! கௌரவங்களை அளிப்பவனே, முன்பொரு சமயம் துரியோதனன், இந்திரப்பிரஸ்தத்தில் உனக்கும், உன் தம்பிகளுக்கும் சொந்தமான நன்கறியப்பட்ட செழிப்பைக் கண்டும், பெரும் மாளிகையில் தான் செய்த தவறுகளுக்காக உள்ளான ஏளனங்களாலும் துயரத்தில் எரிந்து கொண்டிருந்த போது, தன் தந்தையான திருதராஷ்டிரனிடம் இதே கேள்வியைக் கேட்டான். ஓ! பாரதா, அச்சந்தர்ப்பத்தில் நிகழ்ந்தவற்றைக் கேட்பாயாக[1].(4,5) உனது பெரும் மாளிகையையும், உன் தலைமையில் இருந்த பெருஞ்செழிப்பையும் கண்ட துரியோதனன், தன் தந்தையின் முன் அமர்வதற்கு முன்னர், அவனிடம் தான் கண்டவற்றைக் குறித்துச் சொன்னான்[2].(6) துரியோதனனின் வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரன், தன் மகனிடமும் {துரியோதனிடமும்}, கர்ணனிடமும் பின்வருமாறு பதிலளித்தான்.(7)
[1] இந்தச் சம்பவம் சபா பர்வம் பகுதி 52ல் விவரிக்கப்பட்டுள்ளது. https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section52.html[2] இது சபாபர்வம் பகுதி 50ல் விவரிக்கப்பட்டுள்ளது. https://mahabharatham.arasan.info/2013/10/Mahabharatha-Sabhaparva-Section50.html
திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, “ஓ! மகனே, நீ ஏன் வருந்துகிறாய்? அதற்கான காரணத்தை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். அந்தக் காரணங்கள் போதுமானவையாகத் தோன்றுவதாக உறுதியடைந்த பிறகு, நான் உனக்கு அறிவுரை கூற முயற்சிக்கிறேன்.(8) ஓ! பகைநகரங்களை அடக்குபவனே, நீயும் பெருஞ்செழிப்பையே அடைந்திருக்கிறாய். உன்னுடன் பிறந்தவர்கள் அனைவரும், உன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் உனக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கின்றனர்.(9) சிறந்த ஆடைகளேயே நீ உன் அங்கங்களில் அணிகிறாய். ஆண்டம்பர உணவையே நீ உண்கிறாய்[3]. சிறந்த வகைக் குதிரைகளே உன்னைச் சுமக்கின்றன. பிறகு ஏன் நீ நிறம் மங்கியவனாக மெலிந்திருக்கிறாய்?” என்று கேட்டான்.(10)
[3] பிசிதௌதான்னம் Picitaudanam என்பது இறைச்சி அடங்கிய உணவாகும்; ஒருவகைப் புலவு {ஊனோடு கலந்து நறுமணப்பொருட்களுடன் பக்குவப்படுத்தப்பட்ட உணவு}, அல்லது ஒரு வேளை கபாப்பை போன்ற உணவாக இருக்கலாம்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “மாம்ஸத்துடன் கூடின அன்னத்தைப் புஜிக்கிறாய்” என்றிருக்கிறது.
துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}, “உயர் ஆன்ம ஸ்நாதக வகைப் பிராமணர்கள் பத்தாயிரம் {10000} பேர் (தினமும்) யுதிஷ்டிரனின் அரண்மனையில் தக்கத்தட்டுகளில் உண்கின்றனர்.(11) சிறந்த மலர்கள், கனிகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அவனது அற்புத மாளிகை, அவனது தித்திரி மற்றும் கல்மாஷ இனக் குதிரைகள், அவனுடைய பல்வேறு வகையான ஆடைகள் ஆகியவற்றைக் கண்டும், ஓ! பாரதரே, வைஸ்ரவணனின் {குபேரனின்} பெருஞ்செழிப்புக்கு ஒப்பான உயர்ந்த செழிப்பை என் எதிரிகளான பாண்டுவின் மகன்களிடம் கண்டும் நான் துயரத்தால் எரிந்து கொண்டிருக்கிறேன்” என்றான்.(13)
திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, “ஓ! ஐயா, யுதிஷ்டிரனைப் போன்ற செழிப்பையோ, அதைவிட மேன்மையானதையோ நீ விரும்பினால், ஓ! மகனே, அறப்பண்பு {நன்னடத்தை} கொண்டவனாக நீ முயற்சி செய்வாயாக.(14) நடத்தையின் மூலம் மட்டுமே ஒருவனால் மூன்று உலகங்களையும் வெல்ல முடியும் என்பதில் ஐயமில்லை.(15) மாந்தாத்ரி {மாந்தாதா} ஒரே இரவில் மொத்த உலகத்தையும் கைப்பற்றினான், ஜனமேஜயன் மூன்றிலும், நாபாகன் ஏழு இரவுகளிலும் அதைச் செய்தனர் {உலகைக் கைப்பற்றினர்}.(16) இந்த மன்னர்கள் அனைவரும் கருணையும், அறப் பண்பையும் {நன்னடத்தையையும்} கொண்டிருந்தனர். இதன் காரணமாகவே, அவர்களது பண்புகளால் வெல்லப்பட்ட பூமாதேவி தானாகவே அவர்களிடம் வந்தாள்” என்றான்.(17)
துரியோதனன் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! பாரதரே, (உம்மால் பெயர் சொல்லப்பட்ட மன்னர்களின்) எந்த நடத்தையின் மூலம் இந்த உலகம் அவ்வளவு விரைவாக வெல்லப்பட்டதோ, அந்த நடத்தையை எவ்வாறு அடைவது என்பதைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன்” என்று கேட்டான்.(18)
திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, “இது தொடர்பாகப் பின்வரும் இந்தப் பழைய விவரிப்பில் குறிப்பிடப்படுகிறது. அறப்பண்பு {நன்னடத்தை} குறித்து இது முன்பொரு சமயத்தில் நாரதரால் உரைக்கப்பட்டதாகும்.(19) பழங்காலத்தில் தைத்தியன் பிரஹலாதன், தனது நடத்தையின் தகுதியால் {புண்ணியத்தால்}, உயர் ஆன்ம இந்திரனின் அரசைப் பறித்து, மூவுலகங்களையும் வென்றான்.(20) அப்போது சக்ரன் {இந்திரன்}, கூப்பிய கரங்களுடன் பிருஹஸ்பதியை அணுகினான். பெரும் ஞானம் கொண்டவனான அந்தத் தேவர்கள் தலைவன் {இந்திரன்}, அந்தப் பேராசானிடம் {பிருஹஸ்பதியிடம்}, “இன்பநிலையின் மூலத்தைக் குறித்து நீர் எனக்குச் சொல்ல வேண்டுமென நான் விரும்புகிறேன்” என்று கேட்டான்.(21) இவ்வாறு கேட்கப்பட்ட பிருஹஸ்பதி, உயர்ந்த இன்பநிலையின் மூலமான (முக்திக்கு {மோட்சத்துக்கு} வழிவகுக்கும்) அந்த அறிவைக் குறித்து அவனிடம் {இந்திரனிடம்} சொன்னார். உண்மையில், அறிவே பரம இன்பத்தின் மூலம் என்று பிருஹஸ்பதி குறிப்பிட்டார். எனினும் இந்திரன், அதை விட உயர்ந்தது ஏதேனும் உள்ளதா என்று மீண்டும் அவரிடம் கேட்டான்.(23)
பிருஹஸ்பதி {இந்திரனிடம்}, “ஓ! மகனே, அதைவிட மேலும் உயர்ந்ததும் இருக்கிறது. உயர் ஆன்ம பார்க்கவர் (உசனஸ் {சுக்கிராச்சாரியர்}) அஃதை உனக்குச் சிறப்பாகப் போதிப்பார். நீ அருளப்பட்டிருப்பாயாக. ஓ! தேவர்களின் தலைவா, நீ அவரிடம் சென்று விசாரிப்பாயாக” என்று சொன்னார்.(24)
பெரும் தவத்தகுதியும், பெரும் காந்தியும் கொண்ட தேவர்களின் தலைவன், பார்க்கவரிடம் சென்று, நிறைவடைந்த இதயத்துடன், பெரும் நன்மையை விளைவிக்கும் ஓர் அறிவை அவரிடம்{சுக்கிராச்சாரியாரிடம்} இருந்து அடைந்தான்.(25) நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, உயர் ஆன்மப் பார்க்கவரிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, (இன்பத்தை அடையும் வழிமுறைகளில்) அந்தத் தவசி ஏற்கனவே தனக்குச் சொன்னதை விட உயர்ந்ததேதும் இருக்கிறதா என்று அந்தத் தவசியிடமே {சுக்கிராச்சாரியாரிடமே} கேட்டான்.(26)
அனைத்துமறிந்தவரான பார்க்கவர் {சுக்கிராச்சாரியார்}, “உயர் ஆன்ம பிரஹலாதன் அது குறித்த சிறந்த அறிவைப் பெற்றிருக்கிறான்” என்று சொன்னார்.
இதை அறிந்த இந்திரன் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்தான்.(27) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், பகனைத் தண்டித்தவனுமான அவன் {இந்திரன்}, ஒரு பிராமணனின் வடிவத்தை ஏற்று, பிரஹலாதனிடம் சென்று, “எது இன்பத்தை அளிக்கிறது என்பது குறித்துக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(28)
பிரஹலாதன் அந்தப் பிராமணனிடம், “ஓ! மறுபிறப்பாளர்களின் தலைவரே, மூவுலகங்களையும் ஆட்சி செய்யும் பணியில் முழுவதுமாக ஈடுபட்டிருப்பதால் எனக்கு நேரமேதும் இல்லை. எனவே, என்னால் உமக்குப் போதிக்க முடியாது” என்றான்.(29)
அதற்கு அந்தப் பிராமணன் {பிரஹலாதனிடம்}, “ஓ! மன்னா, உனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும்போது, நன்மையை உண்டாக்கவல்ல நடத்தைவழி எது என்பதைக் குறித்த உன் போதனைகளை நான் கேட்க விரும்புகிறேன்” என்றான்.(30)
பிரம்மத்தை உச்சரிப்பவரின் இந்தப் பதிலில் மகிழ்ச்சியடைந்தான் மன்னன் பிரஹலாதன். “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன அவன், அறிவைக் குறித்த உண்மைகளை அந்தப் பிராமணருக்குப் போதிக்கத் தக்க சமயத்தைக் கொடுப்பதாகச் சொன்னான்.(31) ஓர் ஆசானிடம் ஒரு சீடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமோ, அவ்வாறே பிரஹலாதனிடம் முறையாக நடந்து கொண்ட அந்தப் பிராமணன், பிரஹலாதன் விரும்பியதை முழு இதயத்துடன் செய்யத் தொடங்கினான்.(32) பல சந்தர்ப்பங்களில் அந்தப் பிராமணன், “எதிரிகளைத் தண்டிப்பவனே, எந்த வழிமுறைகளின் மூலம் உன்னால் மூவுலகங்களின் அட்சியை வெல்ல முடிந்தது? ஓ! அறமன்னா, அவ்வழிமுறைகள் யாவை என்பதை எனக்குச் சொல்வாயாக” என்று கேட்டான். ஓ! ஏகாதிபதி, அந்தப் பிராமணன் கேட்ட கேள்விக்குப் பிரஹலாதன் பதிலளித்தான்.(33)
பிரஹலாதன், “ஓ! மறுபிறப்பாளரே, நான் ஒரு மன்னனாக இருப்பதன் விளைவால் எந்தச் செருக்கையும் உணர்வதில்லை, அதே போல, பிராமணர்களிடம் பகையுணர்வேதும் வளர்ப்பதில்லை. மறுபுறம், சுக்ரனின் போதனைகளின் அடிப்படையில் அமைந்த கொள்கை ஆலோசனைகளை அவர்கள் எனக்கு அறிவிக்கும்போது, நான் அவற்றை ஏற்றுப் பின்பற்றுகிறேன்.(34) முழு நம்பிக்கையுடன் அவர்கள் விரும்புவதை என்னிடம் சொல்லி, அறமற்ற, முறையற்ற வழிமுறைகளில் இருந்து என்னை அவர்கள் தடுக்கிறார்கள். நான் எப்போதும் சுக்கிரனின் போதனைகளுக்குக் கீழ்ப்படிந்தவனாவேன். நான் பிராமணர்களிடமும், பெரியோர்களிடமும் காத்திருந்து அவர்களுக்குத் தொண்டு செய்கிறேன். நான் எந்த வன்மமும் கொள்வதில்லை.(35) நான் அற ஆன்மா கொண்டவனாவேன். தற்கட்டுப்பாட்டுடன் கூடிய நான் எனது புலன்கள் அனைத்தையும் என் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறேன். எனக்குப் போதகர்களாக இருக்கும் அந்த மறுபிறப்பாளர்கள், தேன்கூட்டில் தேனைச் சிந்தும் தேனீக்களைப் போல எனக்கு நன்மையான போதனைகளைப் பொழிகிறார்கள்.(36) நான், அந்தக் கல்விமான்களால் சிந்தப்படும் தேனைச் சுவைத்து, நட்சத்திரக்கூட்டங்களுக்கு மத்தியில் உள்ள நிலவைப் போல என் குலத்தைச் சார்ந்தவர்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறேன்[4].(37) சுக்கிரரின் போதனைகளைப் பிராமணர்களின் உதடுகளில் இருந்து கேட்டு அதன்படி செயல்படுவதே பூமியில் அமுதமும் தெளிவான கண்ணும் ஆகும்.(38) இவற்றிலேயே ஒரு மனிதனுக்கான நன்மை இருக்கிறது” என்றான். இவ்வாறே பிரம்மத்தை உச்சரிப்பவரிடம் பிரஹலாதன் பேசினான்.
[4] “வாகக்ரவித்யானாம் Vagagravidyanam என்பதை நீலகண்டர், புத்தகங்களில் புதையாமால் நாவின் நுனியில் உள்ள கல்வியைக் கொண்ட மனிதர்கள் என்று பொருள் கொள்ளப்படுகிறது. எனவே இவர்கள் {மேலே குறிப்பிடப்படும் கல்விமான்கள்} கூரிய நினைவுத்திறன் கொண்டவர்கள்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “வாக்கின் நுனியில் கல்விகளைக் கொண்ட அவர்களுடைய ரஸங்களை அனுபவிக்கும் நான் நக்ஷத்திரங்களுக்குச் சந்திரன் போல என் ஜாதியிலுள்ளவர்களுக்குப் பதியாயிருக்கிறேன்” என்றிருக்கிறது.
அவனால் கடமையுணர்வுடன் தொண்டாற்றப்பட்ட தைத்தியர்களின் தலைவன் {பிரஹலாதன்} மீண்டும் அவனிடம், “ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நீர்! என்னிடம் கடமையுணர்வுடன் நடந்து கொள்வதன் விளைவால் நான் உம்மிடம் மிகவும் மனம்நிறைந்திருக்கிறேன். நீ அருளப்பட்டிருப்பீராக. நீர் விரும்பும் வரத்தை என்னிடம் கேட்பீராக. நீர் கேட்கும் வரத்தை நான் நிச்சயம் உமக்கு அளிப்பேன்” என்றான்.(40)
அதற்கு அந்தப் பிராமணன் {பிரஹலாதனிடம்}, அந்தத் தைத்தியர்களின் தலைவனிடம், “மிக்க நன்று, நான் உனக்குக் கீழ்ப்படிவேன்” என்று சொன்னான். அவனிடம் மனம் நிறைந்த பிரஹலாதன், “நீர் விரும்புவதைப் பெற்றுக் கொள்ளும்” என்றான்.(41)
அந்தப் பிராமணன், “ஓ! மன்னா, நீ என்னிடம் நிறைவடைந்திருக்கிறாய், எனக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்புகிறாய் என்றால், நான் உன் நடத்தையை அடைய விரும்புகிறேன். இதுவே நான் உன்னிடம் வேண்டும் வரமாகும்” என்று கேட்டான்[5].(42)
[5] “அதாவது, கேட்பவன் பிரஹலாதனின் நடத்தையைக் களவாட விரும்புகிறான்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், “ராஜரே, நீர் அனுக்கிரகமுள்ளவராய் எனக்குப் பிரியத்தைச் செய்ய விரும்புவீராகில், உமது சீலத்தை நானடைய விரும்புகிறேன். இதுதான் எனக்கு வேண்டிய வரம்” என்று சொன்னான். அஃதாவது உன் பண்பை நான் அடைய விரும்புகிறேன் என்கிறான்.
இதனால் பிரஹலாதன் மகிழ்ச்சியடைந்தாலும், அவன் பேரச்சத்தாலும் நிறைந்தான். உண்மையில், இந்த வரத்தை அந்தப் பிராமணன் குறிப்பிட்ட போது, அந்தத் தைத்திய தலைவன், கேட்பவன் இயல்பான சக்தியைக் கொண்ட ஒரு மனிதனாக இருக்க முடியாது என்று நினைத்தான்.(43)
மிகவும் ஆச்சரியமடைந்த பிரஹலாதன், இறுதியாக, “அப்படியே ஆகட்டும்” என்றான். இருப்பினும் வரமளித்த பிறகு அந்தத் தைத்திய தலைவன் துயரத்தால் நிறைந்தான்.(44) ஓ! மன்னா, வரத்தை அடைந்த பிராமணன் சென்றுவிட்டாலும், பிரஹலாதன் ஆழமான கவலைக்கு உள்ளாகி என்ன செய்வது என்பதை அறியாதிருந்தான்.(45) அந்தத் தைத்திய தலைவன் இக்காரியத்தை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தபோது, ஒளியின் தழல் ஒன்று அவனது உடலில் இருந்து வெளியே வந்தது. பெரும் காந்தியைக் கொண்ட நிழல் வடிவமாகவும்,(46) பெரும் வடிவம் கொண்டதாகவும் அஃது இருந்தது.
பிரஹலாதன் அந்த வடிவத்திடம், “நீ யார்?” என்று கேட்டான்.
அதற்கு அந்த வடிவம், “நான் உன் நடத்தையின் உடல் வடிவமாவேன். உன்னால் கைவிடப்பட்ட நான் இப்போது செல்லப் போகிறேன்.(47) எனவே, ஓ! மன்னா, நான் உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவனும், குற்றமில்லாதவனுமான அந்தப் பிராமணர்களில் முதன்மையானவனிடம் இனி வசிக்கப் போகிறேன்” என்றது.
இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த வடிவம் மறைந்து, அதன்பிறகு விரைவில் சக்ரனின் {இந்திரனின்} உடலில் நுழைந்தது.(48) அந்த வடிவம் மறைந்ததும், அதேபோன்ற மற்றொரு வடிவம் பிரஹலாதனின் உடலில் இருந்து வெளிப்பட்டது. அந்தத் தைத்திய தலைவன், அதனிடம், “நீ யார்?” என்று கேட்டான்.(49)
அதற்கு அந்த {மற்றொரு} வடிவம், “ஓ! பிரஹலாதா, என்னை அறத்தின் உடல்வடிவமாக அறிந்து கொள்வாயாக. ஓ! தைத்தியர்களின் தலைவா, எங்கே நடத்தை {பண்பு} இருக்கிறதோ அங்கேயே நான் வசிப்பேன், எனவே நான் அந்தப் பிராமணர்களில் முதன்மையானவனிடம் செல்லப் போகிறேன்” என்றது.(50)
அறம் மறைந்ததும், ஓ! ஏகாதிபதி, காந்தியுடன் சுடர்விட்ட மூன்றாவது வடிவம் ஒன்று உயர் ஆன்மப் பிரஹலாதனின் உடலில் இருந்து வெளிப்பட்டது.(51) அது யார் எனப் பிரஹலாதனால் கேட்கப்பட்டதும், பெரும்பிரகாசம் கொண்ட அந்த வடிவம், “ஓ! தைத்தியர்களின் தலைவா, நானே உண்மை என்பதை அறிவாயாக. அறத்தின் வழியைப் பின்பற்றி நான் உன்னை விட்டுச் செல்லப் போகிறேன்” என்றது.(52)
அறத்தைப் பின்பற்றி உண்மையானது பிரஹலாதனை விட்டுச் சென்றதும், {நான்காவதாக} மற்றொரு பெரும் வடிவம் பிரஹலாதனின் உடலைவிட்டு வெளியே வந்தது. தைத்திய மன்னனால் கேட்கப்பட்டதும் அந்த வலிமைமிக்கது, “நானே நற்செயல்களின் உடல்வடிவமாவேன். ஓ! பிரஹலாதா, எங்கே உண்மை வாழுமோ, அங்கேயே நான் வாழ்வேன் என்பதை அறிவாயாக” என்றது.(53)
அது பிரகலாதனை விட்டுச் சென்றதும், {ஐந்தாவதாக} மற்றொரு வடிவம் அழுகையுடனும், ஓலத்துடனும் வெளிய வந்தது. பிரஹலாதனால் கேட்கப்பட்ட அஃது, “என்னை வலிமை என்று அறிவாயாக. நற்செயல்கள் எங்கிருக்குமோ அங்கேயே நான் வசிப்பேன்” என்றது.(54) இவ்வார்த்தைகளைச் சொன்னபிறகு, நற்செயல்கள் சென்ற இடத்திற்கே வலிமையும் சென்றது.
இதன்பிறகு, பிரஹலாதனின் உடலில் இருந்து பெரும் பிரகாசம் கொண்ட ஒரு தேவி வெளிப்பட்டாள். அந்தத் தைத்தியத் தலைவனால் கேட்கப்பட்டதும், அவள் தான் செழிப்பின் உடல் வடிவம் என்று பதிலளித்து, “ஓ! வீரா, ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே, உன்னில் வசித்து வந்த நான், உன்னால் கைவிடப்பட்டு, வலிமையைப் பின்தொடர்ந்து செல்கிறேன்” என்றாள்.(56)
பேரச்சமடைந்த உயர் ஆன்மப் பிரஹலாதன், மீண்டும் அந்தத் தேவியிடம், “ஓ! தேவி, ஓ! தாமரைகளுக்கு மத்தியில் வசிப்பவளே, நீ எங்கே செல்கிறாய்?(57) ஓ தேவி, நீ எப்போதும் உண்மைக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவளும், தேவிகளில் முதல்வியும் ஆவாய். (என் சீடனாக இருந்த) அந்தப் பிராமணர்களில் முதன்மையானவன் யார்? நான் உண்மையை அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றான்.(58)
அதற்கு அந்தச் செழிப்பின் தேவி, “பிரம்மச்சரிய நோன்புக்கு அர்ப்பணிப்புடன் உள்ளவனும், உன்னால் போதிக்கப்பட்டவனுமான அந்தப் பிராமணன் சக்ரனாவான் {இந்திரனாவான்}. ஓ! பலமிக்கவனே, மூவுலகங்களின் மீதும் நீ கொண்டிருந்த அரசுரிமையை அவன் களவாடிவிட்டான்.(59) ஓ! அறவோனே, நீ உன் நடத்தையாலேயே மூவுலகங்களையும் அடக்கி ஆண்டாய். இஃதை அறிந்து கொண்ட தேவர்களின் தலைவன், உன் நடத்தையை உன்னிடம் இருந்து களவாடிவிட்டான்.(60) ஓ! பெரும் ஞானியே, அறம், உண்மை, நற்செயல்கள், வலிமை ஆகியவையும் நானும் நடத்தையிலேயே எங்கள் வேரைக் கொண்டிருக்கிறோம்” என்றாள்”.(61)
பீஷ்மர் தொடர்ந்தார், “ஓ! யுதிஷ்டிரா, இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தச் செழிப்பின் தேவி, எஞ்சியவை அனைத்தையும் போலவே சென்றுவிட்டாள். துரியோதனன் மீண்டும் தன் தந்தையிடம் இவ்வார்த்தைகளில்,(62) “ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவரே, நடத்தையின் உண்மையை அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன். அஃதை அடையும் வழிமுறைகளை எனக்குச் சொல்வீராக” என்று கேட்டான்.(63)
திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்}, “உயர் ஆன்மப் பிரஹலாதன் இந்திரனிடம் உரையாடியபோது அந்த வழிமுறைகள் சொல்லப்பட்டன. எனினும், ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, நடத்தையை எவ்வாறு அடைவது என்பதைக் குறித்துச் சுருக்கமாகக் கேட்பாயாக.(64) செயல், எண்ணம் மற்றும் சொல்லில் தீங்கிழையாமை, அனைத்து உயிரினங்களிடமும் கருணை, கொடை ஆகியவை புகழத்தக்க அந்நடத்தையில் அடங்கியவையாகும்.(65) எந்தச் செயலாலோ, முயற்சியாலோ பிறர் நன்மையடைய மாட்டார்களோ, அல்லது எந்தச் செயலின் விளைவால் ஒருவன் அவமானத்தை அடைவானோ, அச்செயல் ஒருபோதும் செய்யப்படக்கூடாது.(66) மறுபுறம், எந்தச் செயலின் மூலம் சமூகத்தில் ஒருவன் புகழடைவானோ அது செய்யப்பட வேண்டும். ஓ! குருக்களில் சிறந்தவனே {துரியோதனா}, நடத்தை என்றால் என்ன என்பதைக் குறித்து நான் உனக்குச் சுருக்கமாகச் சொன்னேன்.(67) ஓ! மன்னா, தீய நடத்தை கொண்ட மனிதர்கள் செழிப்பை எப்போதாவது வென்றால், ஓ! மகனே அஃதை அவர்கள் நீண்ட காலம் அனுபவிக்க மாட்டார்கள், வேரோடு அழிபவர்களாகவே காணப்படுகிறார்கள்” என்றான்”.(68)
திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்} தொடர்ந்தான், “ஓ! மகனே, யுதிஷ்டிரனைவிட நீ பெருஞ்செழிப்பையடைய விரும்பினால், இவையாவற்றையும் உண்மையாக அறிந்து கொண்டு, நன்னடத்தையுடன் இருப்பாயாக” என்றான்”.(69)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், “இதுவே மன்னன் திருதராஷ்டிரன் தன் மகனுக்குச் சொன்னதாகும். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, நீ இந்த அறிவுரைகளின்படி செயற்பட்டால், நிச்சயம் நீ அவற்றின் கனியை அடைவாய்” {என்றார் பீஷ்மர்}.(70)
சாந்திபர்வம் பகுதி – 124ல் உள்ள சுலோகங்கள் : 70
ஆங்கிலத்தில் | In English |