Hope! | Shanti-Parva-Section-126| Mahabharata In Tamil
(ராஜதர்மாநுசாஸன பர்வம் - 126)
பதிவின் சுருக்கம் : மானைத் துரத்தி வந்து பெரும் காட்டில் உள்ள தவசிகளின் ஆசிரமத்தை அடைந்த மன்னன் சுமித்திரன் நம்பிக்கையைக் குறித்து எழும் ஐயத்தை அங்கிருந்த தவசிகளிடம் கேட்டது...
Bhishma advises Yudhistra with Pandavas and Krishna on his death bed of arrows_Shanti Parva-126 |
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, “மன்னன் {சுமித்திரன்}, அந்தப் பெரும் காட்டுக்குள் நுழைந்ததும் தவசிகளின் ஆசிரமம் ஒன்றை வந்தடைந்தான். கடும் அலைச்சலின் விளைவாகக் களைப்படைந்த அவன், ஓய்வெடுப்பதற்காகக் கீழே அமர்ந்தான்.(1) அவன் வில் தரித்திருப்பதையும், அலைச்சலில் களைத்திருப்பதையும், பசித்திருப்பதையும் கண்ட தவசிகள், அவனை அணுகி, அவனுக்கு உரிய மதிப்பை வழங்கினர்.(2) அந்த முனிவர்கள் செலுத்திய கௌரவத்தை ஏற்றுக் கொண்ட மன்னன், அவர்களுடைய தவ முன்னேற்றம் குறித்து விசாரித்தான்.(3) மன்னனின் விசாரிப்புகளுக்கு முறையான பதிலளித்தவர்களும், தவத்தையே தங்கள் செல்வமாகக் கொண்டவர்களுமான அந்த முனிவர்கள், அந்த மனிதர்களில் புலி {சுமித்திரன்} ஆசிரமத்திற்கு வந்த காரணத்தைக் கேட்டனர்.(4)
அவர்கள் {தவசிகள் சுமித்திரனிடம்}, “நீ அருளப்பட்டிருப்பாயாக. கைகளில் வாள், வில் மற்றும் கணைகளுடனும், நடந்தபடியும், எந்த இனிமையான பொருளைத் தேடி இந்த ஆசிரமத்திற்கு வந்தாய்? ஓ! கௌரவங்களை அளிப்பவனே, நீ எங்கிருந்து வருகிறாய் என்பதை நாங்கள் கேட்க விரும்புகிறோம். நீ பிறந்த குலத்தையும், உன் பெயரையும் எங்களுக்குச் சொல்வாயாக” என்று கேட்டனர் {அந்த தவசிகள்}.(6)
ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, ஓ! பாரதா, இவ்வாறு சொல்லப்பட்ட அந்த மன்னன், அந்தப் பிராமணர்கள் அனைவரிடமும் தன்னைக் குறித்து முறையாகச் சொல்லும் வகையில்,(7) “நான் ஹைஹய குலத்தில் பிறந்தவன். நான் சுமித்திரன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறேன், மேலும் நான் மித்திரனின் மகனாவேன். நான் மான்கூட்டத்தைத் துரத்தி, ஆயிரக்கணக்கான மான்களை என் கணைகளால் கொன்றிருக்கிறேன். ஒரு பெரும்படை, என் அமைச்சர்கள், என் வீட்டில் உள்ள பெண்கள் ஆகியோரின் துணையுடன் நான் வேட்டைக்காக இங்கே வந்தேன். ஒரு கணையால் நானொரு மானைத் துளைத்தேன். ஆனால் அந்த விலங்கு, தன் உடலில் தைக்கப்பட்ட கணையுடனும் பெரும் வேகத்துடன் ஓடிச் சென்றது.(8,9) குறிப்பிட்ட எந்த நோக்கமும் இல்லாமல் அதைத் துரத்தி வந்த நான், இந்தக் காட்டை அடைந்து, காந்தி இழந்தவனாகவும், அலைச்சலால் களைத்தவனும், நம்பிக்கை {எதிர்பார்ப்பை} இழந்தவனுமாக உங்கள் முன்னிலையில் இருக்கிறேன்.(10)
களைப்படைந்தவனாகவும், அரசக் குறியீடுகளை {ராஜலக்ஷணங்களை} இழந்தவனகாவும், நம்பிக்கை அனைத்தையும் இழந்தவனாகவும் இந்த ஆசிரமத்தை அடைந்திருக்கும் என் நிலையை விட வேறு பரிதாபகரமான நிலை என்ன இருக்க முடியும்?(11) தவசிகளே, அரசக் குறியீடுகளை இழந்ததற்காகவோ, என் தலைநகரில் இருந்து தொலைவாக வந்துவிட்டதற்காகவோ நான் ஒருபோதும் வருந்தவில்லை. எனினும், நம்பிக்கை இழந்திருப்பதன் விளைவாக நான் கடும் துயரை உணர்கிறேன்.(12) மலைகளின் இளவரசனான இமயமும், நீர்நிலைகளின் பரந்த கொள்ளிடமான கடலும்கூட, ஆகாயத்தின் பரந்த அளவை அடைய முடியாது.(13) அதே போலவே, தவசிகளே, நம்பிக்கையின் {எதிர்பார்ப்பின்} அளவை என்னால் தெளிந்தறிய முடியவில்லை. நீங்கள் அனைத்தையும் அறிந்த நிலையான தவம்மெனும் செல்வத்துடன் கூடியவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் அறியாதது ஏதும் இல்லை.(14) நீங்கள் உயர்ந்த அருளைக் கொண்டவர்களாகவும் இருக்கிறீர்கள். எனவே, என் ஐயத்தை விலக்குமாறு நான் உங்களை வேண்டுகிறேன். மனிதனால் வளர்த்துக் கொள்ளப்படும் நம்பிக்கை, பரந்த ஆகாயம் ஆகிய இரண்டில் எது உங்களுக்கு மிகப் பரந்ததாகத் தோன்றுகிறது?(15)
நம்பிக்கையைப் போல வெல்லப்பட முடியாதது வேறு எது இருக்கிறது என்பதை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்.(16) இது நீங்கள் உரையாடத்தகாதது இல்லை என்றால், அது குறித்த அனைத்தையும் எனக்குத் தாமதமில்லாமல் சொல்வீராக. மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்களே, உரையாடத் தகாத புதிர்கள் எதையும் நான் உங்களிடம் கேட்க விரும்பவில்லை.(17) மேலும் இந்த உரையாடல் உங்கள் தவங்களுக்குத் தீங்கானதாக இருந்தால், நீங்கள் பேச வேண்டும் என நான் விரும்பமாட்டேன். என் கேள்வி உரையாடத் தகுந்தது என்றால்,(18) அந்தக் காரணத்தை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன். தவங்களுக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் நீங்கள் இது குறித்த அனைத்தையும் எனக்குப் போதிப்பீராக” என்றான் {மன்னன் சுமித்திரன்}.(19)
சாந்திபர்வம் பகுதி – 126ல் உள்ள சுலோகங்கள் : 19
ஆங்கிலத்தில் | In English |