Monday, July 08, 2019

வர்ணாசிரம தர்மங்கள்! - அநுசாஸனபர்வம் பகுதி – 141

The religion of classes and modes of life! | Anusasana-Parva-Section-141 | Mahabharata In Tamil

(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 141)


பதிவின் சுருக்கம் : நான்கு முகங்களைக் கொண்ட காரணம்; காளைமாட்டு வாகனம் அடைந்த வகை; சுடலையில் வசிக்கும் காரணம்; அறம் அல்லது கடமையின் குறியீடுகள்; வர்ணதர்மங்கள்; ஆசிரம தர்மங்கள்; முனி தர்மங்கள் ஆகியவற்றைக் குறித்து உமையிடம் உரையாடிய மஹேஸ்வரன்...


அருள் நிறைந்த புனிதமானவன் {மஹேஸ்வரன் உமையிடம்}, "பழங்காலத்தில், அண்டத்திலுள்ள ஒவ்வொரு அழகிய பொருளிலிருந்தும் அழகு தானியங்களை வெட்டியெடுத்து அருள் நிறைந்தவளான திலோத்தமை என்றழைக்கப்படும் பெண்களில் முதன்மையானவளை பிரம்மன் படைத்தான்.(1) ஒரு நாள், அழகிய முகம் கொண்டவளும், வடிவ அழகில் அண்டத்தில் ஒப்பற்றவளுமான அந்தப் பெண், என்னை மயக்கும் விருப்பத்தால் தூண்டப்பட்டு என்னை வலம் வந்தாள்.(2) அழகிய பற்களைக் கொண்ட அந்தப் பெண் சென்ற திசையங்கும் (நான் அவளைக் காணும் ஆவல் கொண்டிருந்ததால்) உடனுக்குடனே எனக்கொரு புதிய முகம் தோன்றியது. அந்த முகங்கள் அனைத்தும் பார்ப்பதற்கு இனிமையாக இருந்தன.(3) இவ்வாறு அவளைக் காணும் விருப்பத்தின் விளைவாலும், யோகபலத்தின் மூலமும் நான் நான்கு முகம் படைத்தவனானேன். இவ்வாறு நான்கு முகம் கொண்டதில் நான் என் உயர்ந்த யோக சக்தியை வெளிப்படுத்தினேன்.(4)


கிழக்கு நோக்கித் திரும்பிய முகத்தைக் கொண்டு நான் அண்டத்தை ஆள்கிறேன். ஓ! களங்கமற்ற குணங்களைக் கொண்டவளே {உமையே}, வடக்கு நோக்கித் திரும்பிய முகத்தைக் கொண்டு நான் உன்னோடு விளையாடுகிறேன்.(5) மேற்கு நோக்கித் திரும்பிய என் முகம் ஏற்புடையதாகவும், மங்கலமானதாகவும் இருக்கிறது. நான் அதைக் கொண்டு அனைத்து உயிரினங்களுக்கும் மகிழ்ச்சியை விதிக்கிறேன். தெற்கு நோக்கித் திரும்பியிருக்கும் என் முகம் பயங்கரமானதாகும். நான் அதைக் கொண்டு அனைத்து உயிரினங்களையும் அழிக்கிறேன்.(6) அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தால் தூண்டப்பட்டு நான் தலையில் சடாமுடி தரித்த பிரம்மச்சாரியாக வாழ்கிறேன். தேவர்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பினாகை வில் எப்போதும் என் கரங்களில் இருக்கிறது.(7) பழங்காலத்தில் என் செழிப்பை அடைய விரும்பிய இந்திரன், தன் வஜ்ராயுதத்தை என் மீது ஏவினான். அந்த ஆயுதத்தால் என் தொண்டை எரிக்கப்பட்டது. அந்தக் காரணத்தினாலேயே என் தொண்டை நீலமானது[1]" என்றான்.(8)

[1] பிபேக்திப்ராயின் பதிப்பிலும் மேற்கண்டவாறே இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "முன்னொரு யுகத்தில் பலசாலிகளான தேவாஸுரர்கள் அமுத்ததிற்காக வெகுகாலம் வருந்திக் கடலைக் கடைந்தனர். வாஸுகியென்னும் நாகராஜனைக்கயிறாகப் போட்டுப் பெருங்கடலைக் கடையும்போது எல்லா உலகங்களையும் அழிக்கும் விஷம் அந்தக் கடலில் உண்டாயிற்று. தேவர்களனைவரும் அதைக் கண்டவுடன் மனங்குன்றிப் போயினர். தேவியே, லோகங்களின் நன்மைக்காக அந்த விஷம் என்னால் விழுங்கப்பட்டது. சிறந்தவளே, அதனாலேதான், மயில் போன்ற நீல நிறம் என் கழுத்தில் உண்டாக்கப்பட்டது" என்றிருக்கிறது. அதன்அடிக்குறிப்பில், "இந்திரன் சிவனது பெருமையை விரும்பி வஜ்ராயுதத்தைச் சிவன் மேல் பிரயோகிக்க அது கழுத்தில் உரைந்ததனால் நீலகண்டரானார் என்பது வேறு பாடம்" என்றிருக்கிறது.

உமை {மஹேஸ்வரனிடம்}, "ஓ! உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையானவரே, பேரழகுடன் கூடிய சிறந்த வாகனங்கள் பலவிருக்க, ஒரு காளைமாட்டை உமது வாகனமாக நீர் தேர்ந்தெடுத்தது ஏன்?" என்று கேட்டாள்.(9)

மஹேஸ்வரன் {உமையிடம்}, "பழங்காலத்தில் பெரும்பாட்டனான பிரம்மன், அபரிமிதமான பாலைத் தரும் தெய்வீகப் பசுவான சுரபியைப் படைத்தான். அவள் படைக்கப்பட்ட பிறகு, அமுதம் போன்று இனிமையான பாலை அபரிமிதமான அளவுகளில் தரும் பெரும் எண்ணிக்கையிலான பசுக்கள் உண்டாகின.(10) ஒரு காலத்தில் அவளது கன்றுகளின் வாயிலிருந்து ஓரளவு நுரையானது என் உடலில் விழுந்தது. இதனால் நான் கோபமடைந்தேன், என் கோபத்தால் எரிக்கப்பட்ட பசுக்கள் அனைத்தும் பல்வேறு நிறங்களைக் கொண்டவையாகின.(11) பிறகு, அனைத்தையும் அறிந்தவனும், உலங்கள் அனைத்தின் ஆசானுமான பிரம்மன் என்னைத் தணிவடையச் செய்தான். அவனே என்னைச் சுமக்கும் வாகனமாகவும், என் கொடியிலுள்ள சின்னமாகவும் இந்தக் காளையை எனக்குக் கொடுத்தான்[2]" என்றான்.(12)

[2] மேற்கண்டது போலவே பிபேக்திப்ராயின் பதிப்பிலும் இருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "முன் ஸ்ருஷ்டியின் ஆரம்பத்தில் பசுக்கள் வெள்ளை நிறமாகவிருந்தன. அந்தப் பசுக்கள் பலமும் தேகக்கட்டுமுள்ளவைகளாய் கொழுத்து திரிந்தன. அழகிய முகமுள்ளவளே, நான் அந்தக் காலத்தில் இமயமலையில் உலக நன்மைக்காக ஒற்றைக்காலால் நின்று கையைத் தூக்கிக் கொண்டு தவம் செய்தேன். தேவியே, அப்போது, கொழுப்பு மிகுந்த பசுக்கள் கூட்டமாக என் பக்கத்தில் சுற்றிலும் வந்து நானிருந்தவிடத்தை இடித்தன. அவைகள் செய்த பிழையினால் எனக்கு மன கலக்கமுண்டாயிற்று. ஆதலால், அப்போது கோபமுள்ள மனத்தினால் பசுக்கள் எரிக்கப்பட்டன. பசுக்களுக்கு அந்தக் கொடிய விசனம் வந்தபோது, இந்த விருஷபம் என்னிடத்தில் வேண்டிக் கொண்டு கோபத்தையடக்கிற்று. அப்போது முதல்தான், பசுக்கள் அடக்கமுள்ளவையும், பல நிறங்களுள்ளவையுமாயின. தேவியே, இந்த விருஷப மட்டும் முதலிலிருந்தபடி வெண்ணிறமாயிருக்கிறது. அப்போது முதல்தான், எனக்கு வாகனமாகவும், கொடையாகவும் ஏற்படுத்தப்பட்டது. அதனாலேதான், தேவர்களும், கோக்களும் என்னைப் பசுபதியாகச் செய்தனர். தேவியே, நான் கோபம் தெளிந்து பசுபதியுமானேன்" என்றிருக்கிறது.

உமை {மஹேஸ்வரனிடம்}, "பல்வேறு வடிவங்களையும், அனைத்து வசதிகளையும், ஆடம்பரங்களையும் கொண்ட பல வசிப்பிடங்கள் உமக்குச் சொர்க்கத்தில் இருக்கின்றன. ஓ! புனிதமானவரே, அந்த இனிமை நிறைந்த மாளிகைகள் அனைத்தையும் கைவிட்டு நீர் சுடலையில் வசிப்பது ஏன்? சுடலையானது, (இறந்தோரின்) மயிரும், எலும்புகளும் நிறைந்ததாகவும், கழுகுகளும், நரிகளும் நிறைந்ததாகவும், நூற்றுக்கணக்கான ஈமச்சிதைகள் விரவிக்கிடப்பதாகவும் இருக்கிறது.(14) அழுகும் பிணங்கள் நிறைந்ததும், கொழுப்பு மற்றும் குருதியால் சேறாக இருப்பதும், அதன் மேல் குடல்களும் எலும்புகளும் விரவிக் கிடப்பதும், நரிகளின் ஊளைகளை எப்போதும் எதிரொலிப்பதுமான அது நிச்சயம் ஒரு தூய்மையற்ற இடமாகும்" என்றாள்.(15)

மஹேஸ்வரன் {உமையிடம்}, "நான் எப்போதும் புனித இடத்தைத் தேடி பூமி முழுவதும் சுற்றித் திரிகிறேன். எனினும், சுடலையைவிடப் புனிதமிக்க வேறு இடமெதையும் என்னால் காண முடியவில்லை.(16) எனவே, அனைத்து வசிப்பிடங்களைக் காட்டிலும், ஆலமரக்கிளைகளின் நிழலைக் கொண்டதும், கிழிந்த மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டதுமான சுடலையே என் இதயத்திற்கு அதிக விருப்பமுள்ளதாக இருக்கிறது.(17) ஓ! இனிய புன்னகை கொண்டவளே, என் துணைவர்களான பூதகணங்கள் இத்தகைய இடங்களில் வசிக்கவே விரும்புகின்றனர். ஓ! தேவி, அந்தப் பூதகணங்கள் என்னுடன் இல்லாமல் நான் எங்கும் வசிக்க விரும்புவதில்லை.(18) எனவே, சுடலையே என் புனித வசிப்பிடமாகும். உண்மையில், ஓ! மங்கலப் பெண்ணே, அதுவே எனக்குச் சொர்க்கமாகத் தெரிகிறது. உயர்ந்த புனிதம் நிறந்ததும், பெரும் பலனைத் தரவல்லதுமான சுடலையே, புனித வசிப்பிடங்களை விரும்பும் மனிதர்களால் அதிகம் மெச்சப்படுகிறது" என்றான்.(19)

உமை {மஹேஸ்வரனிடம்}, "ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, ஓ! கடமைகள் மற்றும் அறச்சடங்குகள் அனைத்தையும் நோற்பவர்களில் முதன்மையானவரே, ஓ! பினாகைபாணியே, ஓ! வரங்களை அளிப்பவரே, எனக்கு ஒரு பெரும் ஐயம் உள்ளது. இவ்வுலகில் பல்வேறு வடிவங்களிலும், பல்வேறுவகை உடைகளை உடுத்திக் கொண்டும் எங்கும் திரியும் தவசிகள் காணப்படுகிறார்கள்.(21) ஓ! பகைவர் அனைவரையும் தண்டிப்பவரே, இந்தப் பெரும் முனிவர் கூட்டத்திற்கு நன்மை செய்வதற்காக என்னுடைய இந்த ஐயத்தை அன்புகூர்ந்து தீர்ப்பீராக.(22) அறம் அல்லது கடமையானது என்னென்ன குறியீடுகளைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது? உண்மையில், அறம் அல்லது கடமையின் விவரங்களை அறியாத மனிதர்கள் அவற்றை நோற்பதில் எவ்வாறு வெல்கிறார்கள்? ஓ! பலமிக்கத் தலைவா, ஓ! அறமறிந்தவரே, இதை எனக்குச் சொல்வீராக" என்றாள்".(23)

நாரதர் தொடர்ந்தார், "இமவானின் மகள் இந்தக் கேள்வியைக் கேட்ட போது, அங்கே இருந்த முனிவர்களின் கூட்டம் அந்தத் தேவியை வழிபட்டு ரிக்குகளாலும், ஆழ்ந்த பொருள் கொண்ட மந்திரங்களாலும் அலங்கரிக்கப்பட்ட சொற்களைக் கொண்டு அவளைத் துதித்தனர்.(24)

மஹேஸ்வரன் {உமையிடம்}, "தீங்கிழையாமை, வாக்கில் வாய்மை, அனைத்து உயிரினங்களிடமும் கருணை, ஆன்ம அமைதி, சக்திக்குத்தக்க கொடை ஆகியவை இல்லறத்தானின் முதன்மையான கடமைகளாகும்.(25) பிறர் மனைவியுடன் பாலியல் கலவி தவிர்த்தல், தன் பொறுப்பில் உள்ள செல்வத்தையும், பெண்களையும் பாதுகாத்தல், தனக்குக் கொடுக்கப்படாததை அபகரிக்க விரும்பாமை, தேன் மற்றும் இறைச்சி தவிர்த்தல் ஆகிய இவையே ஐந்து தலைமையான கடமைகளாகும்.(26) உண்மையில், அறம், அல்லது கடமையானது மகிழ்ச்சி நிறைந்த பல கிளைகளைக் கொண்டதாகும். கடமையையே மேன்மையானதாகக் கருதும் உடல் படைத்த உயிரினங்கள் பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டிய கடமைகள் இவையே. தகுதியின் ஆதாரங்கள் இவையே" என்றான்.(27)

உமை {மஹேஸ்வரனிடம்}, "ஓ! புனிதமானவரே, பெரும் ஐயங்கள் கொண்ட மற்றொரு கேள்வியை நான் கேட்க விரும்புகிறேன். அதற்குப் பதிலளித்து என் ஐயங்களை விலக்குவதே உமக்குத் தகும். நான்கு வகையினர் செய்யக்கூடிய பலன்மிக்கக் கடமைகள் என்னென்ன? பிராமணன் தொடர்புடைய கடமைகள் என்னென்ன? க்ஷத்திரியனுக்கு என்னென்ன? வைசியன் தொடர்பான கடமைகளின் குறியீடுகள் என்னென்ன? சூத்திரன் தொடர்புடைய கடமைவகைகள் என்னென்ன?" என்று கேட்டாள்.(29)

அந்தப் புனிதமானவன், "ஓ! உயர்வாக அருளப்பட்ட பெண்ணே, நீ கேட்ட கேள்வி மிகச்சரியானதாகும். உண்மையில், மறுபிறப்பாள வகையைச் சார்ந்தவர்கள் உயர்வாக அருளப்பட்டவர்களாகவும், பூமியில் தேவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.(30) உண்ணா நோன்புகள் நோற்பதே (புலனடக்கமே) எப்போதும் பிராமணனின் கடமையாகும். ஒரு பிராமணன் தன் கடமைகள் அனைத்தையும் முறையாகச் செய்வதில் வெல்லும்போது அவன் பிராமணன் என்ற அடையாளத்தைப் பெறுகிறான்[3].(31) ஓ! தேவி, பிரம்மச்சரிய கடமைகளை முறையாக நோற்பது அவன் செய்ய வேண்டிய சடங்காகும். நோன்புகள் நோற்பதும், புனித நூல் {பூணூல்} தரித்தல் ஆகியவை அவனது பிற கடமைகளாகும். இவற்றின் மூலமே அவன் மறுபிறப்பாளனாகிறான்.(3) அவன் தன் ஆசான்களையும், பெரியோர்களையும், தேவர்களையும் வழிபடுவதால் ஒரு பிராமணனாகிறான். வேத கல்வியை ஆன்மாவாகக் கொண்ட அறமே நீதியின் ஆதாரமாகும். நீதி மற்றும் கடமைக்கு அர்ப்பணிப்புடன் உள்ள உடல் படைத்த உயிரினங்களுக்கு அதுவே பின்பற்றவேண்டிய, நடைமுறைப்படுத்த வேண்டிய அறமாகும்" என்றான்.(33)

[3] "இங்கே உபவாஸம் எனச் சொல்லப்பட்டிருப்பது இந்திரியஜயம் அல்லது புலனடக்கத்திற்காகச் சொல்லப்பட்டிருக்கிறது என உரையாசிரியர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே சொல்கிறார்.

உமை, "ஓ புனிதமானவரே, என் ஐயங்கள் விலகவில்லை. மனிதர்களில் நான்கு வகையினரின் கடமைகளை விரிவாக விளக்குவதே உமக்குத் தகும்" என்றாள்.(34)

மஹேஸ்வரன், "அறம் மற்றும் கடமை குறித்த புதிர்களைக் கேட்டு, வேதங்களில் குறிப்பிடப்படும் நோன்புகளை நோற்று, புனித நெருப்பில் கவனத்துடன், ஆசானின் காரியத்தை நிறைவேற்றி,(35) ஒரு துறவியின் வாழ்வை வாழ்ந்து, எப்போதும் புனித நூலை {பூணூலைத்} தரித்து, தொடர்ந்து வேதமோதி, பிரம்மச்சரியக்கடமைகளைக் கடுமையாகப் பின்பற்றுவதே பிராமணனின் கடமைகளாகும்.(36) கல்விக்கான காலம் நிறைவடைந்ததும், ஒரு பிராமணன் தன் ஆசானிடம் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, தன் ஆசானின் வசிப்பிடத்தை விட்டகன்று தன் தந்தையின் இல்லத்திற்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு திரும்பியதும் அவன் தனக்குத் தகுந்த மனைவியை முறைப்படி மணந்து கொள்ள வேண்டும்.(37) சூத்திரனால் செய்யப்பட்ட உணவைத் தவிர்ப்பதும் பிராமணனின் கடமையாகும். அறத்தின் பாதையில் நடந்தவாறே, உண்ணா நோன்புகளை எப்போதும் நோற்று, பிரம்மச்சரியத்தைப் பயில்வது அவனது பிற கடமைகளாகும்[4].(38) ஓர் இல்லறத்தான் நாளுக்கு நாள் செய்யும் வழிபாட்டிற்காகத் தன் இல்லத்தில் இல்லற நெருப்பைப் பராமரிக்க வேண்டும். அவன் தன் புலன்களை உரிய முறையில் கட்டுப்படுத்த வேண்டும். அவன், தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் தன்னைச் சார்ந்திருக்கும் அனைவரையும் கவனித்தபிறகு எஞ்சியிருப்பதையே உண்ண வேண்டும். அவள் எளிய உணவை உண்பவனாக, வாக்கில் வாய்மையுள்ளவனாக, அகத்திலும் புறத்திலும் தூய்மை கொண்டவனாக இருக்க வேண்டும்.(39) விருந்தினர்களைக் கவனிப்பதும், மூன்று வேள்வி நெருப்புகளைப்[5] பராமரிப்பதும் அவனுடைய வேறு கடமைகளாகும். இஷ்டி என்ற பெயரில் சொல்லப்படும் சாதாரண வேள்விகளையும் அவன் கவனிக்க வேண்டும். மேலும் விதிப்படி தேவர்களுக்கு விலங்குகளை அர்ப்பணிக்கவும் {பசுபந்தனங்கள் செய்யவும்} வேண்டும்.(40)

[4] "உரிய நேரங்களில் மட்டுமே உணவு உண்பவன் உண்ணாநோன்பு நோன்பவனாகச் சொல்லப்படுகிறான். வேறு பெண்களிடம் பாலியல் கலவியைத் தவிர்த்து தான் மணந்து கொண்ட மனைவியிடம் அவளுக்குரிய காலத்தில் மட்டுமே கலப்பது பிரம்மச்சரியம் நோற்பதாகச் சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[5] கும்பகோணம் பதிப்பில், "வீட்டிலிருந்து இல்லறத்தை நடத்துகிறவனுக்கு வீட்டை விளக்கிவைப்பதும், மெழுகிவைப்பதும், அதிதிகளிடம் அன்பு வைப்பதும் மூன்றக்னிகளையும் வைத்திருப்பதும், சாஸ்திரவிதிப்படி இஷ்டிகளையும் பசுபந்தங்கையும் செய்வதும் முக்கியமான தர்மங்கள்" என்றிருக்கிறது. இஷ்டி, பசுபந்தம் என்பனவற்றிற்கான அடிக்குறிப்பில், "இவை இரண்டும் சிறிய யாகங்கள்" என்றிருக்கிறது.

உண்மையில், வேள்விகளைச் செய்வதும், அனைத்து உயிரினங்களுக்கும் முழுமையாகத் தீங்கிழைக்காமல் இருப்பதும் அவனுக்கான உயர்ந்த கடமைகளாகும். தேவர்கள், விருந்தினர்கள் மற்றும் சார்ந்திருப்பவர்கள் உண்ணும் முன்பு ஒருபோதும் தான் உண்ணாமல் இருப்பதும் ஓர் இல்லறத்தானின் கடமையாகும். தேவர்கள், விருந்தினர்கள், சார்ந்திருப்பவர்கள் ஆகியோரைக் கவனித்த பிறகு எஞ்சியிருக்கும் உணவு விகஸம் என்றழைக்கப்படுகிறது. ஓர் இல்லறத்தான் விகஸம் உண்ண வேண்டும்.(41) உண்மையில், ஒரு மறுபிறப்பாள வகையைச் சார்ந்த இல்லறத்தான் ஒருவன், வேதங்களை அறிந்து கொள்வதைத் தவிர்த்து, பணியாட்கள் மற்றும் சார்ந்திருப்போர் பிறர் உள்ளிட்ட தனது குடும்ப உறுப்பினர்களுக்குப் பிறகு உண்பது அவனுக்கான சிறப்புக் கடமையாகக் கருதப்படுகிறது.(42) இல்லறவாசிகளின் வழக்கில் கணவன் மற்றும் மனைவியின் ஒழுக்கம் நிகராக இருக்க வேண்டும். அவன் ஒவ்வொரு நாளும் வீட்டின் தலைமை தேவர்களுக்கு மலர்களையும், பிற பொருட்களையும் காணிக்கை அளிக்க வேண்டும்.(43) ஓர் இல்லறத்தான் ஒவ்வொரு நாளும் தன் வீடு (பசுஞ்சாணம் மற்றும் நீர் கொண்டு) முறையாகக் கழுவப்படுவதைக் கவனத்துடன் செய்ய வேண்டும். அவன் ஒவ்வொரு நாளும் உண்ணோநோன்புகளை நோற்க வேண்டும். நன்கு கழுவப்பட்டு, தூய்மைப்படுத்தப்படும் அவனது வீட்டில் ஒவ்வொரு நாளும் தேவர்களையும், பித்ருக்களையும் கௌரவித்து வேள்வி நெருப்பில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யால் உண்டாகும் புகையால் தூமமூட்ட வேண்டும்.(44) ஒரு மறுப்பிறப்பாளன் வாழும் இல்லற வாழ்வு தொடர்புடைய கடமைகள் இவையே ஆகும். இந்தக் கடமைகளே உண்மையில் உலகத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன. உண்மையில், இந்தக் கடமைகள் இல்லற வாழ்வை வாழும் பிராமணர்களுக்கு மத்தியில் உள்ள அறம் சார்ந்த மனிதர்களிடம் இருந்து எப்போதும், நித்தியமாக உண்டாகிறது.(45)

ஓ! தேவி, நீ என்னிடம் கேட்ட க்ஷத்திரியக் கடமைகளைச் சொல்லப் போகிறேன் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக.(46) ஒரு க்ஷத்திரியனின் கடமை அனைத்து உயிரினங்களையும் பாதுகாப்பதே என்பது தொடக்கம் முதல் சொல்லப்படுகிறது. ஒரு மன்னன் தன் குடிமக்கள் ஈட்டும் பலன்களில் ஒரு நிலையான பங்கைப் பெறுபவனாவான். அந்த வழிமுறையின் மூலம் அம்மன்னன் அறவோனாகிறான்.(47) தன் குடிமக்களை நீதியுடன் ஆண்டுப் பாதுகாக்கும் மனிதர்களின் ஆட்சியாளன், பிறருக்குப் பாதுகாப்பளிக்கும் நல்லியல்பின் மூலம் மறுமையில் பல இன்ப உலகங்களை அடைகிறான்.(48) தற்கட்டுப்பாடு, வேத கல்வி, புனி நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுவது, கொடையளிப்பது, கல்வி,(49) புனித நூல் {பூணூல்} தரிப்பது, அறச்சடங்குகளைச் செய்வது, பணியாட்களையும், சார்ந்திருப்போரையும் ஆதரிப்பது, தொடங்கப்பட்ட செயல்களில் விடாமுயற்சியுடன் செயல்படுவது ஆகியவை அரச வகையினரின் வேறு கடமைகளாகும்.(50)

இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு ஏற்புடைய தண்டனைகளை அளிப்பதும் அவனுடைய மற்றொரு கடமையாகும். வேள்விகளைச் செய்வது, வேதங்களில் விதிக்கப்பட்டுள்ள விதிகளின் படியான அறச்சடங்குகளைச் செய்வது ஆகியவையும் அவனது கடமைகளே. தன் முன்பு வழக்காடுபவர்களின் சச்சரவுகளைச் சரியாகத் தீர்க்கும் நடைமுறையைப் பின்பற்றுவது, வாக்கில் வாய்மை நிறைந்திருப்பதில் அர்ப்பணிப்பு,(51) துன்பத்தில் இருப்போருக்கு உதவி செய்வது ஆகியவற்றையும் மற்றும் வேறு கடமைகளையும் வெளிப்படுத்தும் மன்னன் இம்மையிலும் மறுமையிலும் பெரும் மகிமையை அடைகிறான். பசுக்கள் மற்றும் பிராமணர்களின் சார்பில் பெரும் ஆற்றலை வெளிப்படுத்தி, போர்க்களத்தில் அவன் {மன்னன்} உயிரை விட வேண்டும்.(52) அத்தகைய மன்னன், குதிரை வேள்விகளைச் செய்வதால் வெல்லப்படும் இன்ப உலகங்களைச் சொர்க்கதில் அடைவான்.(53)

கால்நடைகளைப் பராமரித்தல், உழவு, புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுதல், கொடையளித்தல், கல்வி ஆகியன வைசியனின் கடமைகளாகும்.(54) வணிகம், அறப்பாதையில் நடத்தல், விருந்தோம்பல், அமைதி, தற்கட்டுப்பாடு, பிராமணர்களை வரவேற்றல், (பிராமணர்களுக்காக) பொருட்களைத் துறத்தல் ஆகியனவும் வைசியனின் நித்திய கடமைகளாகும்.(55) வணிகத்தில் ஈடுபட்டு, அறப்பாதையில் நடக்கும் வைசியன், எள், நறுமணப் பொருட்கள், சாறுகள் அல்லது நீர்மை சார்ந்த பொருட்களை ஒருபோதும் விற்பனை செய்யக் கூடாது. அவன் அனவருக்கும் விருந்தோம்பல் கடமைகளை வெளிப்படுத்த வேண்டும்.(56) அவன் தன் வழிமுறைகளின் படியும், நீதியின் படியும் சுதந்திரமாக அறம், பொருள் மற்றும் இன்பத்தை அடைய வேண்டும்.

மூன்று மறுபிறப்பாள வகையினருக்கும் தொண்டாற்றுவதே ஒரு சூத்திரனின் உயர்ந்த கடமையாகிறது[6].(57) வாக்கில் வாய்மை நிறைந்தவனும், புலனடக்கம் கொண்டவனுமான சூத்திரன் தவங்களின் பலன்களை அடைந்தவனாகக் கருதப்படுகிறான். உண்மையில், வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு விருந்தோம்பல் கடமைகளை வெளிப்படுத்தும் சூத்திரன், உயர்ந்த தவங்களின் பலனை அடைந்ததாகக் கருதப்படுகிறான்.(58) அறம் சார்ந்த ஒழுக்கம் கொண்டவனும், தேவர்களையும், பிராமணர்களையும் வழிபடுபவனும், புத்திமானுமான சூத்திரன், விரும்பத்தகுந்த அற வெகுமதிகளை அடைந்தவனாகிறான்.(59) ஓ! அழகிய மங்கையே, நான் நான்கு வகையினருக்கான கடமைகளை உனக்குச் சொல்லிவிட்டேன். உண்மையில், ஓ! அருள்நிறந்த மங்கையே, அவர்களுக்குரிய கடமைகளை உனக்குச் சொல்லிவிட்டேன். நீ இன்னும் வேறென்ன கேட்க விரும்புகிறாய்?" என்று கேட்டான் {சிவன்}.(60)

[6] கும்பகோணம் பதிப்பில், "இருபிறப்பாளர்களாகிய இம்மூன்று வர்ணத்தாரும் அக்நிஹோத்திரம் செய்ய வேண்டியவர்கள்" என்றிருக்கிறது.

உமை, "நான்கு வகையினருக்குரியவையும், அவர்களுக்கு நன்மை தரக்கூடியவையும், மங்கலமானவையுமான கடமைகளைச் சொன்னீர். ஓ! புனிதமானவரே, அனைத்து வகையினருக்குமான பொதுக்கடமைகளை இப்போது சொல்வீராக" என்று கேட்டாள்.(61)

மஹேஸ்வரன், "அண்டத்தில் உள்ள அனைத்திலும் முதன்மையானவனும், எப்போதும் அற சாதனைகளை விரும்புபவனும், படைப்பாளனுமான பிரம்மன், உலகங்கள் அனைத்தையும் காக்கும்பொருட்டுப் பிராமணர்களைப் படைத்தான். படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்திலும் அவர்களே பூமிதேவர்களாவர் {பூமியில் உள்ள தேவர்கள் என்று சொல்லப்படுகின்றனர்}.(62) அவர்கள் செய்ய வேண்டிய அறச்சடங்குகள் என்ன என்றும், அவற்றின் மூலம் அவர்கள் அடையும் வெகுமதிகளையும் தொடக்கத்தில் சொல்கிறேன். பிராமணர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அறமே அறங்கள் அனைத்திலும் முதன்மையானதாகும்.(63) உலகத்தில் நீதி நிலவ, சுயம்புவால் மூன்று அறங்கள் உண்டாக்கப்பட்டன. உலகம் படைக்கப்படும்போதெல்லாம் அவ்வறங்கள் பெரும்பாட்டனால் படைக்கப்படுகின்றன. அதைக் கேட்பாயாக. அவையே மூன்று நித்தியமான அறங்களாகும். அதைக் கேட்பாயாக.(64) அந்த மூன்று அறங்கள் இவையே. வேதங்களில் விளக்கப்படும் அறமே உயர்ந்தது; முக்கியத்துவம் வாய்ந்ததில் அடுத்ததாக ஸ்மிருதிகளில் விளக்கப்படுவது {விளகப்படும் அறம்} இருக்கிறது; மூன்றாவதாக முக்கியத்துவம் வாய்ந்தது அறவோராகக் கருதப்படுவோரால் நடைமுறையில் செய்யப்படும் செயல்கள் சொல்லப்படுகின்றன.(65)

கல்விமானான பிராமணன், மூன்று வேதங்களைக் கொண்டிருக்க வேண்டும். அவன் வேத கல்வியை (அல்லது சாத்தங்களை உரைப்பதை) தான் வாழ்வதற்கான வழிமுறையாக ஒருபோதும் கொள்ளக்கூடாது[7]. அவன் நன்கறியப்பட்ட மூன்று செயல்களுக்கு (கொடையளிப்பது, வேதங்கற்பது மற்றும் வேள்விகள் செய்வது ஆகியவற்றுக்குத்) தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அவன் (காமம், கோபம் மற்றும் பேராசையை என்ற) மூன்றைக் கடக்க வேண்டும். அவன் அனைத்து உயிரினங்களுக்கும் நண்பனாக இருக்க வேண்டும். இந்தக்குணங்களைக் கொண்டவனே பிராமணன் என்றழைக்கப்படுகிறான்.(66) அண்டத்தின் தலைவன் பிராமணர்கள் நோற்பதற்கென இந்த ஆறு செயல்களை அறிவித்திருக்கிறான். அந்த நித்திய கடமைகளைக் கேட்பாயாக.(67) வேள்விகளைச் செய்வது, பிறரின் வேள்விகளை நடத்தித் தருவது, கொடைகள் அளிப்பது, கொடைகள் ஏற்பது, கற்பிப்பது, கற்பது ஆகிய ஆறு செயல்களைச் செய்வதன் மூலம் ஒரு பிராமணன் அறத்தகுதியை வெல்கிறான்[8].(68) உண்மையில் ஒவ்வொரு நாளும் வேதங்களைக் கற்பது ஒரு கடமையாகும். வேள்வியானது (மற்றொரு) நித்திய கடமையாகும். தன் சக்திக்குத் தக்கபடியும், விதிக்கு ஏற்புள்ளபடியும் கொடைகளை அளிப்பது அவனுடைய வழக்கில் அதிகம் மெச்சப்படுகிறது.(69) மனோ அமைதியானது அறவோருக்கு மத்தியில் எப்போதும் உயர்ந்த கடமையாகவே நிலவுகிறது. தூய மனம் கொண்ட இல்லறத்தார் மிகப்பெரும் பலன்களை ஈட்டவல்லவர்களாவர்.(70)

[7] "வேதங்கள் அல்லது எவ்வகை ஞானத்தையும் விற்பது பெரும்பாவமாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[8] கும்பகோணம் பதிப்பில், "வேதமோதுவதும், யாகம் செய்வதும், கொடுப்பதும் பிராம்மணனுக்குத் தர்மங்களென்றும், ஓதுவிப்பதும், யாகம் செய்விப்பதும், தானம் வாங்குவதும் பிராம்மணனுக்கு விருத்திகளென்றும் ஏற்பட்டிருக்கின்றன" என்றிருக்கிறது.

உண்மையில், ஐந்து வேள்விகளைச் செய்வதன் மூலம் தன் ஆன்மாவைத் தூய்மைப்படுத்துபவன், வாக்கில் வாய்மை நிறைந்தவன், வன்மத்தில் இருந்து விடுபட்டவன், கொடைகளை அளிப்பவன், மறுபிறப்பாள விருந்தினர்கள் அனைவரையும் மதித்து விருந்தோம்பலுடன் நடத்துபவன், நன்கு தூய்மைப்படுத்தப்பட்ட வசிப்பிடங்களில் வாழ்பவன்,(71) செருக்கற்றவன், தன் காரியங்களில் எப்போதும் நேர்மையாக இருப்பவன், பிறரிடம் இனிமையான நம்பிக்கை தரும் சொற்களைப் பயன்படுத்துபவன், விருந்தினர்களுக்கும், தன் வசிப்பிடத்திற்கு வருவோருக்கும் தொண்டாற்றுவதில் இன்பமடைபவன், குடும்ப உறுப்பினர்கள், தன்னைச் சார்ந்திருப்பவர்கள் ஆகியோரின் தேவைகள் நிறைவடைந்த பின்னர் எஞ்சியிருக்கும் உணவை உண்பவன் ஆகியோர் பெரும் பலன்களை வெல்கிறார்கள்.(72) தன் விருந்தினர்கள் கைகால்களைக் கழுவிக் கொள்ள நீர் தருபவனும், பெறுபவரைக் கௌரவிக்கும் வகையில் அர்க்கியம் கொடுப்பவனும், தன் வசிப்பிடத்திற்கு வருவோருக்கு இருக்கைகள், படுக்கைகள், இருளை விலக்கும் விளக்குகள், உறைவிடம் ஆகியவற்றை முறையாகக் கொடுப்பவனுமான மனிதன் உயர்ந்த அறவோனாகக் கருதப்படுகிறான்.(73) விடியலில் எழுந்து, தன் வாயையும், முகத்தையும் கழுவிக் கொண்டு, தன் விருந்தினர்களுக்கு உணவளித்து, அவர்களைக் கௌரவித்து முறையாகத் தன் வசிப்பிடத்தில் இருந்து அனுப்பி, (மதிப்பின் வெளிப்பாடாக) சிறிது தொலைவுக்கு அவர்களைப் பின்தொடர்ந்து செல்லும் இல்லறத்தான் நித்திய தகுதியை அடைகிறான்.(74) அனைவருக்கும் விருந்தோம்பலும், {அறம், பொருள், இன்பம் என்ற} முத்தொகை தேடலும் இல்லறத்தானின் கடமைகளாகும்.(75)

ஓர் இல்லறத்தானுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அறம் தன் முக்கியக் குறியீடாகப் பிரவிருத்தியைக் கொண்டதாகும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அனைத்து உயிரினங்களுக்கும் மங்கலமானதையும், நன்மை மிகுந்ததையும் உனக்கு நான் விளக்கிச் சொல்கிறேன்.(76) ஓர் இல்லறத்தான் தன் சக்திக்குத் தகுந்த வகையில் கொடைகளை அளிக்க வேண்டும். அவன் அதே வகையிலேயே அடிக்கடி வேள்விகளையும் செய்ய வேண்டும். உண்மையில், தனக்கான நன்மையை அடைய விரும்பும் ஒருவன் எப்போதும் பலன்மிக்கச் செயல்களைச் செய்ய வேண்டும்.(77) ஓர் இல்லறத்தான் நியாயமான வழிமுறைகளின் மூலம் செல்வத்தை ஈட்ட வேண்டும். இவ்வாறு அடையப்பபட்ட செல்வத்தை அற நோக்கங்களைக் கருத்தில் கொண்டு, மூன்று பங்குகளாகக் கவனமாகப் பிரிக்க வேண்டும். அந்தப் பகுதிகளில் ஒன்றைக் கொண்டு அவன் அறச் செயல்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். மற்றொன்றைக் கொண்டு இன்பத்திற்கான தன் ஏக்கங்களை நிறைவடையச் செய்ய முயல வேண்டும். மூன்றாவது பங்கைக் கொண்டு அதை {செல்வத்தை} மேலும் பெருக்க வேண்டும்.(79) நிவிருத்தி அறம் வேறுவகையானதாகும். அது (மறுபிறவியில் இருந்து பிரம்மத்திற்குள் ஈர்க்கப்படும்) விடுதலை நிலைக்காக {முக்திக்காக} இருக்கிறது. அஃதை அமைக்கும் ஒழுக்கம் குறித்துச் சொல்லப் போகிறேன். ஓ! தேவி, விரிவாக என்னிடம் இருந்து கேட்டுக் கொள்வாயாக.(80)

அவ்வறத்தால் மனத்தில் ஆழப்பதிய வைக்கப்படும் கடமைகளில் ஒன்று, அனைத்து உயிரினங்களிடமும் கொள்ளும் கருணையாகும். அதைப் பின்பற்றும் மனிதன், ஒரு நாளைக்கும் அதிகமாக ஓர் இடத்தில் வசிக்கக்கூடாது. இவ்வறத்தைப் பின்பற்றுபவர்கள், விடுதலையை {முக்தியை} அடைய விரும்பி நம்பிக்கையுடன் (அல்லது ஆசையுடன்) கூடிய பற்றுகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள்.(81) தங்கள் வசிப்பிடம், நீருக்காகத் தாங்கள் சுமக்கும் கமண்டலம், தங்கள் மடியை மறைக்கும் ஆடைகள், அவர்கள் அமரும் இருக்கை, தங்கள் கரங்களில் சுமக்கும் திரிதண்டம், தாங்கள் படுக்கும் படுக்கை, தங்களுக்கு வேண்டிய நெருப்பு, தாங்கள் தங்கும் அறை ஆகியவற்றில் அவர்கள் பற்றேதும் கொள்ளக்கூடாது.(82) இவ்வறத்தைப் பின்பற்றுபவன் தன் இதயத்தைத் தன் ஆன்மாவின் இயக்கத்தில் நிறுவுகிறான். அவனது மனம் பரப்பிரம்மத்தில் அர்ப்பணிப்புடன் இருக்கிறது. அவன் பிரம்மத்தை அடையும் கருத்தால் நிறைந்திருக்கிறான். அவன் யோகம் மற்றும் சாங்கிய தத்துவத்தில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கிறான்.(83) அவன் மரத்தடியைத் தவிர வேறு உறைவிடமெதையும் விரும்புவதில்லை. மனிதர்களின் வெற்று வசிப்பிடங்களிலேயே அவன் தங்குகிறான். அவன் ஆற்றங்கரைகளில் உறங்குகிறான். அவன் அத்தகைய கரைகளில் தங்குவதை இன்பமாகக் கருதுகிறான்.(84) அவன் பற்றுகள் அனைத்தில் இருந்தும், பிணைப்புகள் அனைத்தில் இருந்து விடுபடுகிறான். அவன் தன் சொந்த ஆன்மாவின் இருப்பைப் பரமாத்மாவுடன் கலக்கிறான்.(85)

மரக்கட்டையைப் போல நின்று, உணவனைத்தையும் தவிர்க்கும் அவன் விடுதலைக்கான {முக்திக்கான} செயல்களில் மட்டுமே ஈடுபடுகிறான். அல்லது அவன் யோகத்தில் அர்ப்பணிப்புடன் திரிந்து கொண்டிருப்பான். நிவிருத்தி அறத்தைப் பின்பற்றுபவரின் நித்திய கடமைகள் இவையே.(86) அவன் தன் இனத்தில் இருந்து பிரிந்து தனியே வாழ்கிறான். அவன் பற்றுகள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறான். அவன் ஒரே இடத்தில் ஒரு நாளைக்கு மேல் வசிப்பதில்லை. அனைத்துக் கட்டுகளில் இருந்தும் விடுபட்டு அவன் உலகம் முழுவதும் திரிந்து கொண்டிருக்கிறான். பந்தங்கள் அனைத்தில் இருந்தும் விடுதலையடைந்த அவன் ஒரே ஆற்றங்கரையில் கூட ஒரு நாளைக்கு மேல் ஒருபோதும் உறங்க மாட்டான்.(87) வேதங்களில் அறிவித்துள்ள படி விடுதலையை {முக்தியை} அறிந்த மனிதர்களின் அறம் இதுவே ஆகும். இதுவே அறவோரால் நடத்தப்படும் அறப்பாதையாகும். இந்தப் பாதையைப் பின்பற்றுபவன், எந்த அடிச்சுவட்டையும் விட்டுச் செல்வதில்லை.(88)

பிக்ஷுக்கள் (விடுதலை அறத்தைப் பின்பற்றுபவர்கள்) நான்கு வகையினராவர். அவர்கள், குடீசகர்கள், பஹூதகர்கள் ஹம்ஸர்கள், பரமஹம்ஸர்கள் ஆவர். இரண்டாமவர் முதலாமவரைவிடவும் மேன்மையானவர் ஆவார், மூன்றாமவர் இரண்டாமவரை விடவும், நான்காமவர் மூன்றாவரைவிடவும் மேன்மையானவர்கள் ஆவர்.(89) பரமஹம்ஸ நிலையைவிடப் மேன்மையானது ஏதுமில்லை; அதைவிடத் தாழ்ந்தது ஏதுமில்லை, அதைவிட முன்போ பின்போ ஏதுமில்லை. அது மகிழ்ச்சியும் துக்கமுமற்ற ஒரு நிலையாகும்; அது மங்கலமானதும், முதுமை மற்றும் மரணத்தில்இருந்து விடுபட்டதும், மாற்றமேதும் அடையாததுமான நிலையாகும்" என்றான் {மஹேஸ்வரன்}.(90)

உமை {மஹேஸ்வரனிடம்}, "இல்லறத்தார் மற்றும் முக்தி அறத்தைக்குறித்தும், அறவோரால் பின்பற்றப்படும் அறங்கள் குறித்தும் சொன்னீர். இவை உலகில் வாழும் உயிரினங்களுக்கு மிகுந்த நன்மையைப் பயக்கும் உயர்ந்த பாதைகளாகும்.(91) ஓ! அறங்கள் அனைத்தையும் அறிந்தவரே, நான் முனிவர்களின் உயர்ந்த அறத்தைக் குறித்துக் கேட்க விரும்புகிறேன். ஆசிரமங்களில் வசிக்கும் தவசிகளை நான் எப்போதும் விரும்புகிறேன்.(92) புனித நெருப்பில் ஊற்றப்படும் தெளிந்த நெய்யாலான ஆகுதிகளின் புகை வெளியிடும் நறுமணம் மொத்த ஆசிரமங்களிலும் நீக்கமற நிறைந்து அவற்றை இனிமைநிறைந்தவைகளாக ஆக்குகிறது. ஓ! பெரும் தேவா, இதைக் கண்டு என் இதயம் எப்போதும் மகிழ்ச்சியில் நிறைகிறது.(93) ஓ! பலமிக்கத் தேவா, தவசிகள் அறம் குறித்து எனக்கு ஐயங்கள் இருக்கின்றன. அனைத்து அறங்களையும் அறிந்தவர் நீரே. ஓ தேவர்களின் தேவா, ஓ! பெரும் தேவா, நான் உம்மிடம் கேட்ட இக்காரியங்கள் குறித்து உண்மையில் விரிவாகச் சொல்லி என்னைத் தெளிவடையச் செய்வீராக" என்று கேட்டாள்.(94,95)

அருள் நிறைந்த அந்தப் புனிதமானவன் {மஹேஸ்வரன் உமையிடம்}, "சரி. உயர்ந்ததும், சிறந்ததுமான தவசிகளின் அறம் குறித்து உனக்கு நான் சொல்லப் போகிறேன். ஓ! மங்கலப் பெண்ணே, இந்த அறத்தின் ஆணைகளைப் பின்பற்றும் தவசிகள், தாங்கள் பயிலும் கடுந்தவங்களின் மூலம் வெற்றியை அடைகின்றனர்.(96) ஓ! உயர்வாக அருளப்பட்டவளே, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர்களும், பேநபர்கள் {நுரையை உண்பவர்கள்} என்ற பெயரில் அறியப்பட்டவர்களுமான அறம்சார்ந்த முனிவர்களின் கடமைகள் என்னென்ன என்பதைத் தொடக்கம் முதல் நீ கேட்பாயாக.(97) பெரும்பாட்டனான பிரம்மன் (தவங்களைப் பயிலும் நாட்களின் போது நீரின் வடிவிலான) அமுதத்தைப் பருகினான். அந்த நீரானது ஒரு பெரும் வேள்வியில் இருந்து சொர்க்கத்தில் பாய்ந்து கொண்டிருந்தது.(98) அந்த நீரின் நுரை (பிரம்மன் குடித்ததன் விளைவால்) தன் இயல்பின்படியே உயர்ந்த மங்கலத்தைக் கொண்டதாக இருந்தது. (குறிப்பிடப்பட்ட அந்த நீரில் இருந்து) இவ்வாறு வெளி வந்த நுரையை உண்டு வாழ்ந்த அந்த முனிவர்கள் பேநபர்கள் (நுரையை உண்பவர்கள்) என்றழைக்கப்பட்டார்கள். ஓ! தவங்களையே செல்வமாகக் கொண்ட மங்கையே, தூய ஆன்மா கொண்ட முனிவர்களின் ஒழுக்கம் இதுவே. வாலகில்யர்களைக் குறித்து நான் விளக்கப் போகிறேன் கேட்பாயாக.(99) வாலகில்யர்கள் தங்கள் தவங்களால் வெற்றியை அடைந்த தவசிகளாவர். அவர்கள் சூரிய வட்டிலில் வசிக்கிறார்கள். பறவைகளால் பின்பற்றப்படும் வாழ்வியல் முறைகளைச் சார்ந்திருப்பவர்களும், அறக் கடமைகள் அனைத்தையும் அறிந்தவர்களுமான அந்த முனிவர்கள், உஞ்ச முறையின்படி வாழ்கிறார்கள்.(100)

அவர்கள் மான் தோல்களையோ, மரப்பட்டைகளையோ {மரவுரிகளையோ} உடுத்துகிறார்கள். முரண்பட்ட இரட்டைகள் அனைத்தில் இருந்து விடுபட்டவர்களும், தவங்களையே செல்வமாகக் கொண்டவர்களுமான இந்த வாலகில்யர்கள் இந்த அறப்பாதையிலேயே நடக்கிறார்கள்.(101) அவர்கள் {வாலகில்யர்கள்} கட்டைவிரல் அளவுள்ளவர்களே. வகைகளாப் பிரிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு வகையும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கடமைகளைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் தவங்களை மட்டுமே பயில்கிறார்கள். அவர்க்ள தங்கள் அறவொழுக்கத்தால் வெல்லும் பலன்கள் மிக உயர்ந்தவையாகும்.(102) அவர்கள் தேவர்களுக்குச் சரிநிகர் நிலையை அடைந்தவர்கள் என்றும், தேவர்களின் நோக்கங்களை நிறைவேற்றவே இருப்பவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள். கடுந்தவங்களால் தங்கள் பாவங்கள் அனைத்தையும் அழித்த அவர்கள், பிராகசத்தில் சுடர்விட்ட படியே திசைப்புள்ளிகள் அனைத்திற்கும் ஒளியூட்டுகிறார்கள்.(103)

தூய்மையடைந்த ஆன்மாக்களைக் கொண்டவர்களும், கருணையைப் பயில்வதில் தங்களை அர்ப்பணித்தவர்களுமான வேறு சிலர் சக்ரசரர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். அறவொழுக்கம் ஒழுகுபவர்களும், பெரும் புனித நிலையைக் கொண்டவர்களுமான அவர்கள் சோமனின் உலகத்தில் வாழ்கிறார்கள்.(104) இவ்வாறு பித்ருக்களின் உலகதிற்கு மிக அருகில் வசிக்கும் அவர்கள் சோமனின் கதிர்களைப் பருகி வாழ்கிறார்கள். ஸம்ப்ரக்ஷாலர்கள், ஆஷ்மகுட்டர்கள் மற்றும் தந்தோலூகலர்கள் என்றழைக்கப்படும் வேறு சிலரும் இருக்கிறார்கள்[9].(105)

[9] "ஸம்ப்ரக்ஷாலர்கள் என்போர், அடுத்த நாளைக்கு எதையும் சேர்த்து வைக்காமல் தங்கள் பொருட்கள் அனைத்தையும் நாள்தோறும் கழுவுபவர்கள் ஆவர். ஆஷ்மகுட்டர்கள் என்போர் தங்கள் தானியங்களை இரண்டு கற்களை மட்டுமே கொண்டு உமி நீக்குபவர்களாவர். தந்தோலூகலர்கள் என்போர் தங்கள் தானியங்களில் உமி நீக்க பற்களை மட்டுமே பயன்படுத்துவோராவர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

இவர்கள் சோமம் பருகும் தேவர்கள் மற்றும் நெருப்பின் தழல்களைப் பருகும் வேறு சிலருக்கு அருகில் வாழ்கிறார்கள். தாங்கள் மணந்து கொண்ட மனைவிகளுடன், தங்கள் ஆசைகளை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு, சோமனின் கதிர்களைப் பருகி அவர்கள் வாழ்கிறார்கள்.(106) அவர்கள் புனித நெருப்பில் தெளிந்த நெய் ஆகுதிகளை ஊற்றி பித்ருக்களை உரிய வடிவங்களில் துதிக்கிறார்கள். மேலும் அவர்கள் நன்கறியப்பட்ட வேள்விகளையும் செய்கிறார்கள். இதுவே அவர்களது அறமெனச் சொல்லப்படுகிறது.(107) ஓ! தேவி, இந்த முனிவர்களின் அறமானது, வீடற்றோர் மற்றும் தேவலோகம் உட்பட எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக உலவுபவர்கள் ஆகியோரால் எப்போதும் நோற்கப்படுகிறது. மேலும் உள்ள வேறு வகையினர் குறித்து நான் இப்போது சொல்லப் போகிறேன். நீ கேட்பாயாக.(108) முனிவர்களின் வெவ்வேறு அறங்களைப் பின்பற்றுவோர் தங்கள் ஆசைகளை அடக்கித் தங்கள் ஆன்மாவை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். உண்மையில், காமம், கோபம் ஆகியவற்றில் முற்றிலும் வெல்ல வேண்டும் என்பது என் கருத்தாகும்.(109) உஞ்ச வாழ்வு முறை மூலம் அடையப்பட்ட (செல்வம்) தானியத்தைக் கொண்டு அவர்கள், புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றுதல், தர்மராத்ரி என்றழைக்கப்படும் வேள்வியின் நிலையான இருக்கையில் எப்போதும் அமர்வது, சோம வேள்வியைச் செய்வது, சிறப்பறிவை அடைவது, பட்டியலில் ஐந்தாவதாக வேள்விக் கொடைகளை அளிப்பது, நாள்தோறும் செய்யும் வேள்விகள், பித்ரு மற்றும் தேவ வழிபாட்டில் அர்ப்பணிப்பு மற்றும் அனைவரிடமும் விருந்தோம்பலுடன் நடத்தல் உள்ளிட்ட கடமைகளை வெளிப்படுத்த வேண்டும்.(110,111)

பசுவின் பாலில் தயாரிக்கப்படும் ஆடம்பர உணவுப் பொருட்கள் அனைத்தையும் தவிர்த்தல், இதய அமைதியில் இன்பங்கொள்ளல், வெறும்பாறைகள் அல்லது வெறும் நிலத்தில் கிடத்தல், யோகத்தில் அர்ப்பணிப்பு, கீரைகள் மற்றும் மரங்களின் இலைகளை உண்பது,(112) கனிகள், கிழங்குகள், காற்று, நீர், பாசி ஆகியவற்றை உண்டு வாழ்தல் உள்ளிட்டவை, (உலகத்தால்) வெல்லப்பட முடியாத மனிதர்களுக்குடைய கதியை அடைவதற்கு முனிவர்களால் பயிலப்படும் சில நடைமுறைகளாகும்.(113) ஒரு வீட்டில் இருந்து மேல்நோக்கி செல்லும் புகை {சமையலறை புகை} இல்லாமல் போகும்போது, உமி நீக்கும்கருவி இயங்காமல் நிற்கும்போது, இதய நெருப்பு அணைந்த போது, வீட்டில் இருப்பவர்க்ள அனைவரும் தங்கள் உணவை உண்ட பிறகு, உணவு வகைகள் அறைக்கு அறை எடுத்துச் செல்லப்படாதபோது, பிச்சைக்காரர்கள் சாலைகில் நடக்காத போது,(114) வாய்மை அறம் மற்றும் மனோ அமைதியில் அர்ப்பணிப்புடைய மனிதன், ஒரு விருந்தினரை அடைய விரும்பி (தன் ஆசை நிறைவடையாமல்) இருந்தால், அப்போது அவன் தன் வீட்டில் எஞ்சியிருக்கும் உணவை உண்ணலாம். இவ்வழியில் செயல்படுவதால் அவன் முனிவர்களின் அறத்தைப் பயில்பவனாகிறான்.(115) ஒருவன் ஆணவம் கொள்ளக்கூடாது; செருக்கடையக்கூடாது; உற்சாகமில்லாதவனாக, நிறைவில்லாதவனாக, எதற்கும் வியப்படைபவனாக இருக்கக்கூடாது. ஒருவன் நண்பர்களுக்கும், பகைவர்களுக்கும் இடையில் சரிநிகராகவே நடந்து கொள்ள வேண்டும். உண்மையில், மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், கடமைகள் அனைத்தையும் அறிந்தவனுமான மனிதன் அனைத்து உயிரினங்களுடனும் நட்புடன் பழக வேண்டும்" என்றான் {சிவன்}.(116)

அநுசாஸனபர்வம் பகுதி – 141ல் உள்ள சுலோகங்கள் : 116

ஆங்கிலத்தில் | In English