Mode of Forest recluse life! | Anusasana-Parva-Section-142 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 142)
பதிவின் சுருக்கம் : வானப்பிரஸ்தர்களின் கடமைகள்; வானப்பிரஸ்தர்களில் இருவகையினரின் கடமைகள்; துறவிகளின் கடமைகள் ஆகியவற்றை உமைக்குச் சொன்ன சிவன்...
உமை {மஹேஸ்வரனிடம்}, "காட்டுத்துறவிகள் {வானப்பிரஸ்தர்கள்}, இனிமை நிறைந்த பகுதிகளிலும், ஆறுகளின் ஓடைகள் மற்றும் நீரூற்றுகளின் மத்தியிலும், ஓடைகள் மற்றும் மற்றும் சிற்றோடைகள், குன்றுகள், மலைகள், வனங்கள் மற்றும் காடுகளில் அருகில் உள்ள கொடிப்பந்தல்களிலும், கனிகள் மற்றும் கிழங்குகள் நிறைந்த புனிதத்தலங்களிலும் வசிக்கிறார்கள்.(1) குவிந்த கவனத்துடனும், நோன்புகள் மற்றும் விதிகளைப் பின்பற்றியபடியும் அவர்கள் அத்தகைய இடங்களில் வசிக்கிறார்கள்.(2) ஓ! சங்கரரே, அவர்கள் பின்பற்றக்கூடிய புனித விதிகளைக் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். ஓ! தேவர்கள் அனைவரின் தேவா, இந்தத் துறவிகள் தங்கள் உடல்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தங்களைத் தாங்களே சார்ந்திருக்கிறார்கள்" என்றாள்.(3)
மஹேஸ்வரன் {உமையிடம்}, "காட்டுத்துறவிகளின் {வானப்பிரஸ்தர்களின்} கடமைகளைக் குவிந்த கவனத்துடன் கேட்பாயாக. ஓ! தேவி, ஒரு மனத்துடன் அதைக் கேட்டு, அறத்தை உன் இதயத்தில் நிலைநிறுத்துவாயாக.(4) கடும் நோன்புகளையும், விதிகளையும் பின்பற்றி, வனங்களிலும், காடுகளிலும் வசிக்கும் அறம் சார்ந்த துறவிகளால் செய்யப்பட்டும் எந்தச் செயல்களால் அவர்கள் வெற்றியை அடைகிறார்கள் என்பதைக் கேட்பாயாக.(5) ஒரு நாளைக்கு மூன்று முறை நீராடி, பித்ருகள் மற்றும் தேவர்களை வழிபட்டு, புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி, இஷ்டி ஹோமம் என்ற பெயரிலான சடங்குகளைச் செய்து,(6) நீவார நெல்லை எடுத்து வந்து, கனிகளையும், கிழங்குகளையும் உண்டு, இங்குதை மற்றும் ஆமணக்கு வித்துகளை நசுக்குச் செய்யப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்துவது அவர்களது கடமைகளாகும்.(7) யோக நடைமுறைகளைச் செய்வதன் மூலம் (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டு, காமம் மற்றும் கோபத்தில் இருந்து விடுபடும் அவர்கள் வீராசனம்[1] என்றழைக்கப்படும் மனோநிலையில் தங்களை அமர்த்திக் கொள்ள வேண்டும். உண்மையில், கோழைகளால் அடைய முடியாத இடங்களில் அவர்கள் வசிக்க வேண்டும்.(8)
[1] "கோழைகளால் அணுகமுடியாத பெருங்காடுகளே வீரஸ்தானம் என்று அழைக்கப்பட்டன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
யோகம் தொடர்பான சிறந்த விதிகளைப் பின்பற்றி, கோடைக்காலத்தில் நான்கு புறமும் நான்கு நெருப்புகளுக்கு மத்தியிலும், தலைக்கு மேலே சூரியனுடனும் மண்டூகம் என்றழைக்கப்படும் யோகத்தை முறையாகப் பயின்று,(9) வீராசனம் என்றழைக்கப்படும் மனோநிலையில் எப்போதும் அமர்ந்து, வெறும் பாறைகள் அல்லது வெறுந்தரையில் கிடந்து, அறத்தில் இதயத்தை நிலைநிறுத்தி, குளிர், நீர், நெருப்பு ஆகியனவற்றுக்கு அவர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.(10) அவர்கள் நீர், அல்லது காற்று, அல்லது பாசி ஆகியவற்றை உண்டு வாழ வேண்டும். அவர்கள் தங்கள் தானியங்களின் உமி நீக்க இரு கற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்களில் சிலர் அக்காரியத்திற்குத் தங்கள் பற்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். (வருங்காலத்திற்கு எதையும் சேமிக்காமல் இருப்பதற்காக) அவர்கள் எவ்வகைப் பாத்திரங்களையும் வைத்துக் கொள்வதில்லை.(11) சிலர் கந்தலாடைகளையோ, மரவுரிகளையோ, மான் தோல்களையோ உடுத்துகின்றனர். இவ்வாறே அவர்கள் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட கால அளவில் (சாத்திரங்களால் நிறுவப்பட்ட) விதிகளின் படி தங்கள் வாழ்நாளைக் கழிக்கின்றனர்.(12) காடுகளில் இருக்கும் அவர்கள், காடுகளுக்குள்ளேயே திரிந்து, அவற்றுக்குள்ளேயே வாழ்ந்து, அவற்றுக்குள்ளேயே காணப்பட வேண்டும். உண்மையில் இந்தக் காட்டுத் துறவிகள் ஓர் ஆசானை அடைந்து அவர்களுடனே சீடனாக வாழ்கிறார்கள்.(13)
ஹோமச் சடங்குகளைச் செய்வதும், ஐந்து வேள்விகளைச் செய்வதும் அவர்களது கடமையாகும். வேதங்களில் விதிக்கப்பட்டுள்ளபடி ஐந்து வேள்விகளை (குறித்த நேரத்தில்) பிரித்து முறையாகச் செய்து,(14) வேறு வேள்விகளிலும் அர்ப்பணிப்புடன், எட்டாவதாகச் சாதுர்மாஸ்யத்தைப் பின்பற்றி, பௌர்ணமாஸ்யம் மற்றும் பிற வேள்விகளையும் செய்து, நாள்தோறும் செய்ய வேண்டிய வேள்விகளைச் செய்து வாழ்வதே(15) மனைவிகளிடம் இருந்து பிரிந்து, அனைத்து வகைப் பற்றுகளில் இருந்தும் விடுபட்டு, அனைத்துப் பாவங்களில் இருந்தும் தூய்மையடைந்த மனிதர்களின் கடமையாகும். உண்மையில் அவர்கள் இவ்வாறு காட்டில் வாழ வேண்டும்.(16) வேள்விக்கரண்டியும், நீர்க்கலனும் அவர்களுடைய முக்கியச் செல்வங்களாகும். அவர்கள் எப்போதும் மூன்று நெருப்புகளுக்கு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். அறவொழுக்கம் ஒழுகி, அறப்பாத்தையைப் பின்பற்றும் அவர்கள் உயர்ந்த கதியை அடைகிறார்கள்.(17) (தவ) வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களும், வாய்மை அறத்திற்கு எப்போதும் அர்ப்பணிப்புள்ளவர்களுமான இம்முனிவர்கள், புனிதம் நிறைந்த பிரம்மலோகத்தையோ, நித்தியமான சோமலோகத்தையோ அடைகின்றனர்.(18) ஓ! மங்கலமான தேவி, காட்டுத் துறவிகளால் {வானப்பிரஸ்தர்களால்} பின்பற்றபடும் அறத்தின் வரையறைகளைச் சுருக்கமாகவும், அவற்றின் பல்வேறு நடைமுறைகளை விரிவாகவும் சொன்னேன்" என்றான்.(19)
உமை {மஹேஸ்வரனிடம்}, "ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்து உயிரினங்களின் தலைவா, ஓ! அனைவராலும் வழிபடப்படுபவரே, தவ வெற்றியை அடைய சாத்திரங்களைப் பின்பற்றும் முனிவர்க்கூட்டங்களின் அறம் குறித்து நான் கேட்க விரும்புகிறேன். அதை எனக்குச் சொல்வீராக.(20) காடுகளில் வசித்து, வெற்றியைத் தரும் சாத்திரங்களை நல்ல திறனுள்ளவர்களாக இருக்கும் அவர்களில் சிலர் தாங்கள் விரும்பியபடி வாழ்ந்து, குறிப்பிட்ட நடைமுறைகளில் சுருங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர்; வேறு சிலர் மனைவிகளையும் கொள்கின்றனர். உண்மையில் அவர்களுக்கான நடைமுறைகள் எவ்வாறு விதிக்கப்பட்டிருக்கின்றன?" என்று கேட்டாள்.(21)
மஹாதேவன் {உமையிடம்}, "ஓ! தேவி, தலையை மழித்து, பழுப்பு {காவி} உடை தரித்தல் சுதந்திரமாகத் திரியும் துறவிகளின் குறியீடுகளாகும்; மணந்து கொண்ட மனைவிகளுடன் விளையாடுவோரின் குறியீடுகள் தங்கள் இரவுகளை இல்லங்களில் கழிப்பதில் அடங்குகின்றன.(22) ஒரு நாளைக்கு மூன்று முறை நீராடுவது இருவகையினருக்கும் கடமையாகும். பொதுவாக முனிவர்களால் செய்யப்படுவதைப் போலவே நீர் மற்றும் காட்டில் கிடைக்கும் கனிகள் ஆகியவற்றுடன் ஹோமம் செய்வது, திருமணம் செய்து கொண்ட துறவிகளுக்குப் பொருந்தும். தியான யோகத்திற்குள் ஈர்க்கப்படுவது, அறக்கடமைகளையும் (சாத்திரங்கள் மற்றும் வேதங்களில்) விதிக்கப்பட்டுள்ளவற்றையும் கடைப்பிடிப்பது, அவர்களுக்கெனப் பரிந்துரைக்கப்பட்ட வேறு சில கடமைகளாகும்.(23) காட்டில் வசிக்கும் துறவிகள் தொடர்பாக முன்பு நான் சொன்ன கடமைகள் அனைத்தும் இவர்களுக்கும் பொருந்தும். உண்மையில், அந்தக் கடமைகளைச் செய்தால், அவற்றைச் செய்பவர்கள் கடுந்தவங்களுக்குரிய வெகுமதிகளை அடைவார்கள்.(24) திருமண வாழ்வை வாழும் காட்டுத் துறவிகள் தங்கள் புலன்களின் நிறைவைத் தாங்கள் மணந்து கொண்ட மனைவியருடன் அடக்கிக் கொள்ள வேண்டும். மனைவிகளுக்குரிய பருவ காலங்களில் மட்டுமே அவர்களுடன் கலவியில் ஈடுபட்டு அவர்களுக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டும்.(25)
இந்த அறவோர் பின்பற்றும் அறமானது, முனிவர்களால் விதிக்கப்பட்டு அவர்களாலேயே பின்பற்றப்படுகிறது. அறம் ஈட்டுவதில் தங்கள் கண்களை நிலைக்கச் செய்யும் அவர்கள், கட்டுப்பாடற்ற பேராசையில் இன்ப நுகர் பொருட்கள் எதனையும் பின்தொடரக்கூடாது.(26) முற்றிலும் தீங்கற்ற தன்மையை உறுதிகூறும் கொடையை அனைத்து உயிரினங்களுக்குக் கொடுக்கும் மனிதனின் ஆன்மாவானது வன்மத்தில் இருந்தும் தீங்கிலிருந்தும் விடுபடுவதால் அவன் அறவோனாகிறான்.(27) உண்மையில், அனைத்து உயிரினங்களுக்கும் கருணை காட்டுபவனும், அனைத்து உயிரினங்களிடமும் முற்றிலும் நேர்மையாக நடந்து கொள்ளும் நோன்பைப் பின்பற்றுபவனும், அனைத்து உயிரினங்களின் ஆன்மாவாகத் தன்னை அமைத்துக் கொள்பவனுமான மனிதன் அறவோனாகிறான்.(28) வேதங்கள் அனைத்திலும் நீராடுபவன், அனைத்து உயிரினங்களுடனும் நேர்மையாக நடந்து கொள்பவன் ஆகிய இருவரும் பலனின் அளவில் சரிநிகராகவே பார்க்கப்படுகிறார்கள். ஒருவேளை பின்னவன் பலனின் அளவில் சிறிதளவு மேம்பட்டிருக்கக்கூடும்.(29)
நேர்மை அறமெனச் சொல்லப்படுகிறது; நேன்மையின்மை அல்லது கோணல்புத்தி மாறாக {மறமாகச்} சொல்லப்படுகிறது. நேர்மையாக நடந்து கொள்ளும் மனிதன் அறத்துடன் கூடியவனாகிறான் {அறவோனாகிறான்}.(30) நேர்மையான நடத்தையில் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதன், தேவர்களுக்கு மத்தியில் வசிப்பிடத்தை அடைவதில் வெற்றியடைகிறான். எனவே, அறப்பலனை அடைய விரும்பும் மனிதன் நேர்மையுள்ளவனாக இருக்க வேண்டும்.(31) மன்னிக்கும் இயல்பு, தற்கட்டுப்பாடு, முற்றாக அடக்கப்பட்ட கோபம் ஆகியவற்றுடன் கூடிய ஒருவன் வன்மத்தில் இருந்து விடுபட்டவனாகத் தன்னை அறத்தின் உடல்வடிவமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அத்தகைய மனிதன், அறக்கடமைகளை வெளிப்படுத்துவதைத் தவிர அறப்பலனையும் கொண்டவனாகிறான்.(32) தூக்கக்கலக்கம், தாமதம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவனும், தன் சக்திக்குத் தக்க அறப்பாதையைப் பின்பற்றுபவனுமான அற ஆன்மா கொண்ட மனிதன், ஒழுக்கத்தூய்மை அடைந்து, வயதில் முதிர்ந்ததும் பிரம்மத்திற்கு இணையானவனாகக் கருதப்படுகிறான்" என்றான்.(33)
உமை {மஹேஸ்வரனிடம்}, "ஓ! தேவா, தங்கள் ஆசிரமங்களில் பற்றுடையவர்களும், தவத்தையே செல்வமாகக் கொண்டவர்களுமான தவசிகள் கடமைகளின் எந்த நடைமுறைகளைப் பின்பற்றினால் பெருங்காந்தியை அடைவதில் வெல்கிறார்கள்?(34) மேலும் பெருஞ்செல்வத்தைக் கொண்ட மன்னர்களும், இளவரசர்களும், செல்வமில்லாத பிறரும் என்ன செயல்களைச் செய்வதன் மூலம் உயர்ந்த வெகுமதிகளை அடைவதில் வெல்கிறார்கள்?(35) ஓ! தேவா, காட்டில் வசிப்பவர்கள் என்ன செயல்களைச் செய்வதன் மூலம் நித்தியமான இடத்தை அடைவதிலும், தங்கள் மேனியில் தெய்வீக சந்தனத்தைப் பூசி அலங்கரித்துக் கொள்வதிலும் வெல்கிறார்கள்?(36) ஓ! முக்கண்களைக் கொண்ட சிறப்புமிக்கத் தேவா, ஓ! முந்நகரங்களை அழித்தவரே, தவங்களைச் செய்வது குறித்த மங்கல காரியம் குறித்த அனைத்தையும் விரிவாகச் சொல்வதன் மூலம் என் ஐயத்தை விலக்குவீராக" என்று கேட்டாள்.(37)
அந்தச் சிறப்புமிக்கத் தேவன், "புலனடக்கத்துடன் உண்ணாநோன்புகள் தொடர்பான நோன்புகளை நோற்பவர்கள், எந்த உயிரினத்திற்கு எவ்வகைத் தீங்கையும் இழைக்காதவர்கள், வாக்கில் வாய்மை பயில்பவர்கள் ஆகியோர் வெற்றியை அடைந்து, சொர்க்கத்திற்கு உயர்ந்து, அனைத்து வகைத் தீமையில் இருந்தும் விடுபட்டு, கந்தர்வர்களின் துணையுடன் இன்பத்தில் திளைப்பார்கள்.(38) மண்டூக யோகம் தொடர்புடைய மனோநிலையுடன் கிடப்பவனும், முறையான விதிகளின்படி பலன்மிக்கச் செயல்களைச் செய்து தீக்ஷை எடுத்தவனுமான அறவோன், மறுமையில் நாகர்களின் துணையுடன் இன்பத்தில் திளைப்பார்கள்.(39) மான்களின் துணையுடன், அவற்றின் வாய்களில் இருந்து விழும் புற்களையும், காய்கறிகளையும் உண்டு தீக்ஷை எடுத்துக் கொண்டு அவை தொடர்பான கடமைகளைக் கவனிப்பவர்கள் அமராவதியை (இந்திரனின் மாளிகைகளை) அடைவதில் வெல்கிறார்கள்.(40)
பாசிகளைத் திரட்டி, மரங்களின் உதிர்ந்த இலைகளை எடுத்து அவற்றை உண்டு வாழ்ந்து, குளிரின் கடுமைகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும் மனிதன் மிக உயர்ந்த இடத்தை அடைவான்.(41) காற்றையோ, நீரையோ, கனிகளையோ, கிழங்குகளையோ உண்டு வாழும் மனிதன், மறுமையில் யக்ஷர்களின் செழிப்பை அடைந்து, பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த அப்சரஸ்களின் துணையுடன் இன்பத்தில் திளைப்பான்.(42) விதிகளில் விதிக்கப்பட்டுள்ள சடங்குகளின்படி பனிரெண்டு ஆண்டுகள் கோடைக்காலத்தில் ஐந்து நெருப்புகளைத் தாங்கும் நோன்பைப் பயிலும் ஒருவன் தன் மறுபிறவியில் ஒரு மன்னனாகப் பிறக்கிறான்.(43) உணவு குறித்த நோன்புகளை நோற்று, பனிரெண்டு வருடங்கள் தவம்பயின்று, தடையெச்சப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, தவிர்க்கப்பட வேண்டிய நேரங்களையும் முறையாகக் கடைபிடித்து வாழ்பவன் தன் மறுபிறவியில் பூமியின் ஆட்சியாளனாவான்.(44) ஆகாயத்தையே மேற்கூரையாகக் கொண்ட உறைவிடத்தில் வெறுந்தரையில் அமர்ந்து, கிடப்பவன், அனைத்து உணவையும் தவிர்த்து தன் உடலைக் கைவிடும்போது சொர்க்கத்தின் பேரின்பத்தை அடைகிறான்.(45)
ஓ! மங்கையே, (வானத்தை {மேற்கூரையாகக் கொண்ட இடத்தை} மட்டுமே தன் உறைவிடமாகக் கொண்டு) வெறுந்தரையில் அமர்ந்து, கிடப்பவன், சிறந்த வாகனங்கள், படுக்கைகள், சந்திரப்பிரகாசத்துடன் கூடிய விலைமதிப்புமிக்க மாளிகைகள் ஆகியவற்றை வெகுமதிகளாக அடைகிறான் என்று சொல்லப்படுகிறது. எளிய உணவை உண்டு, பல்வேறு சிறந்த நோன்புகளை நோற்று தன்னைச் சார்ந்தே வாழும் மனிதன், உணவனைத்தையும் கைவிட்டு தன் உடலைக் கைவிடும்போது, சொர்க்கத்திற்கு உயர்வதில் வென்று, அதன் இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்கிறான். தன்னை மட்டுமே முழுமையாகச் சார்ந்து வாழ்ந்த மனிதன், தீக்ஷையுடன் தொடர்புடைய கடமைகளைப் பனிரெண்டு வருடங்கள் பயின்று, இறுதியாகப் பெருங்கடலில் தன்னுடலைக் கைவிட்டால், அவன் தன் மரணத்திற்குப் பிறகு வருணலோகத்தை அடைகிறான். முற்றிலும் தன்னை மட்டுமே சார்ந்து வாழ்ந்து, பனிரெண்டு வருட தீக்ஷையுடன் தொடர்புடைய கடமைகளைச் செய்து,(46-49) கூரிய கல்லால் தன் பாதத்தையே துளைத்துக் கொள்ளும் மனிதன் குஹ்யலோகத்தின் இன்பத்தை அடைவதில் வெல்கிறான். சுயத்தின் துணையுடன் சுயத்தை விளைவிப்பவனும், (வெப்பம் குளிர், இன்பம் துன்பம் முதலிய) முரண்பட்ட இரட்டைகள் அனைத்தின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டவனும், அனைத்து வகைப் பற்றுகளில் இருந்து விடுபட்டவனும்,(50) தீக்ஷைக்குப் பிறகு பனிரெண்டு ஆண்டு ஒழுக்கமாக மனத்தில் இவற்றை நோற்பவன், சொர்க்கத்தை அடைந்து, தேவர்களைத் துணையாக அடைந்து இன்பங்கள் அனைத்தையும் அனுபவிப்பான்.(51)
முற்றிலும் தன்னையே சார்ந்திருந்து, தீக்ஷையுடன் தொடர்புடைய கடமைகளைப் பனிரெண்டு ஆண்டுகள் பின்பற்றி, இறுதியாகத் தேவர்களுக்குக் காணிக்கையாகத் தன்னுடலை நெருப்பில் கைவிடுபவன், பிரம்மலோகத்தை அடைந்து அங்கே உயர்வாக மதிக்கப்படுகிறான்.(52) ஓ! தேவி, பனிரெண்டு வருடங்கள் தீக்ஷை கடமைகளைப் பின்பற்றி, தன் புனித நெருப்பை ஒரு மரத்தில் வைத்துவிட்டு, உரிய தீக்ஷை பெற்றவனும், புலனடக்கத்துடன் கூடியவனுமான ஒரு மறுபிறப்பாளன், சுயத்தைச் சுயத்தில் வைத்து மமதையில் இருந்து விடுபட்டு, அறம் ஈட்ட விரும்பி, தன் உடலை மறைக்காமல் புறப்பட்டு, வீரர்கள் செல்லும் பாதையில் நடந்து (கிடப்பதற்குரிய காலம் வரும்போது) வீரர்களின் இயல்புக்கேற்றபடி கிடந்து, வீரர்களின் ஒழுக்கப்படியே வாழ்ந்தால், அவன் நிச்சயம் வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட கதியை அடைவான்[2].(53-55) அத்தகைய மனிதன் சக்ரனின் {இந்திரனின்} நித்திய உலகத்திற்குச் சென்று தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையைப் பெற்று, தெய்வீக மலர்மாலைகளையும், தெய்வீக நறுமணப்பொருட்களையும் தரித்துக் கொண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான்.(56)
[2] "வீரர்கள் என்ற சொல்லுக்குப் பொருளாகப் போர்வீரர்கள் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. மறுபறம், அஃது அறம் மற்றும் தவங்கள் செய்த வீரர்களைக் குறிக்கிறது. காடுகளைக் கோழைகளால் அணுக முடியாது என்பதால் அது {காடு} வீரர்களின் பாதையாகும். வீரர்களின் மனநிலை என்பது யோகிகள் அமரும் மனோநிலையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
உண்மையில், அறம் சார்ந்த ஆன்மா கொண்ட மனிதன், தேவர்களைத் தன் துணைவர்களாக அடைந்து, சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக வாழ்கிறான். வீரர்களின் நடைமுறைகளைப் பின்பற்றும் வீரனும், வீரர்களுக்குரிய யோகத்தில் அர்ப்பணிப்புள்ளவனும்,(57) அனைத்தையும் துறந்து, நல்லியல்பின் நடைமுறைகளைப் பயின்று வாழ்பவனும், புலனடக்கத்துடன் கூடியவனாகத் தீக்ஷை பெற்று உடலிலும், மனத்திலும் தூய்மையை அடைந்தவனுமான ஒருவன், வீரர்களுக்காக ஒதுக்கப்பட்ட பாதையை நிச்சயம் அடைவான். நித்தியமான இன்பலோகங்கள் அவனுடையவையாகும்.(58) சாரதியின் விருப்பப்படி செல்லும் தேரைச் செலுத்திக் கொண்டு இன்பலோகங்கள் அனைத்திலும் அவன் தன் விருப்பப்படி திரிந்து வருவான். உண்மையில் அருளப்பட்ட மனிதன், சக்ரனின் உலகங்களில் வசித்து, துன்பங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு எப்போதும் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருப்பான்" என்றான் {சிவன்}.(59)
அநுசாஸனபர்வம் பகுதி – 142ல் உள்ள சுலோகங்கள் : 59
ஆங்கிலத்தில் | In English |