Goddess Uma closed the eyes of Lord Maheswara! | Anusasana-Parva-Section-140 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 140)
பதிவின் சுருக்கம் : மஹேஸ்வரனின் கண்களை உமாதேவி மூடியதால் உண்டான மூன்றாவது கண்; இமய மலை எரிக்கப்பட்டு மீட்கப்பட்டது; காரணங்களைச் சொன்ன மஹேஸ்வரன்; நான்கு தலைகளின் தன்மைகளைக் குறித்துக் கேட்ட உமாதேவி...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "அப்போது, புனிதமான முனிவரும், நாராயணனின் நண்பருமான நாரதர், சங்கரனுக்கும், அவனது மனைவியான உமைக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலைக் கொண்ட பின்வரும் கதையைச் சொன்னார்.(1)
நாரதர், "ஒரு காலத்தில், தேவர்கள் அனைவரிலும் அற ஆன்மா கொண்டவனும், காளையைத் தன் கொடியில் கொண்டவனுமான மஹாதேவன், சித்தர்களும், சாரணர்களும் அடிக்கடி சென்று வரும் புனிதமான இமய மலைகளில் கடுந்தவம் செய்து வந்தான்.(2) இனிமை நிறைந்த அம்மலைகள், பல்வேறு வகை மூலிகைகள் அதிகமாக வளர்ந்திருப்பவையும், பல்வேறு வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்டவையுமாக இருந்தன. இந்த நேரத்தில் அவை பல்வேறு இனக்கூட்டங்களைச் சேர்ந்த அப்சரஸ்களாலும், பூத கணங்களாலும் நிறைந்திருந்தன.(3) மகிழ்ச்சியால் நிறைந்தவனாக, பார்ப்பவர்களின் கண்களுக்குப் பல்வேறு தன்மைகளை வெளிப்படுத்தும் நூற்றுக்கணக்கான பூதகணங்களால் சூழப்பட்டவனாக அங்கே அந்தப் பெருந்தேவன் அமர்ந்திருந்தான். அவர்களில் சிலர் கோரமாகவும், அருவருக்கத்தகுந்தவர்களாகவும் இருந்தனர், சிலர் மிக அழகிய குணங்களைப் பெற்றிருந்தனர், வேறு சிலர் மிக அற்புதமான தோற்றங்களில் இருந்தன.(4) அவர்களில் சிலருடைய முகங்கள் சிங்கம் போன்றவையாகவும், சிலருக்கு புலியைப் போன்றவையாகவும், சிலருக்கு யானையைப் போன்றவையாகவும் இருந்தன. உண்மையில், அந்தப் பூத கணங்களின் முகங்கள் பல்வேறு வகை விலங்குகளின் முகங்களைப் போல இருந்தன. சிலருக்கு நரிக்கு ஒப்பான முகமும், சிலருக்கு சிறுத்தையின் முகமும், சிலருக்கு குரங்கின் முகமும், சிலருக்கு காளையின் முகமும் இருந்தன.(5) சிலருடைய முகங்கள் ஆந்தைகளைப் போலவும், சிலருக்கு பருந்துகளைப் போலவும், சிலருக்கு பல்வேறு வகை மான்களின் முகங்களைப் போலவும் இருந்தன.(6)
அந்தப் பெருந்தேவன், கின்னரர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், ராட்சசர்கள் மற்றும் பல்வேறு வகைப் பூதங்கள் சூழ இருந்தான். மஹாதேவன் இருந்த வனம், தெய்வீக மலர்கள் நிறைந்ததாகவும், தெய்வீக ஒளிக்கதிர்களால் சுடர்விடுவதாகவும் இருந்தது.(7) அது தெய்வீக சந்தனத்தின் நறுமணத்துடன் இருந்தது, அனைத்துப் புறங்களிலும் தெய்வீக சாம்பிராணி எரிக்கப்பட்டது. மேலும் அது தெய்வீக இசைக்கருவிகளின் ஒலிகளை எதிரொலித்துக் கொண்டிருந்தது.(8) உண்மையில், மிருதங்கங்கள், பணவங்கள் {முரசுகள்}, சங்கங்கள், மற்றும் பேரிகைகளின் ஒலிகள் அங்கே எதிரொலித்துக் கொண்டிருந்தன. அங்கே பல்வேறு வகைப் பூதகணங்கள், தோகை விரிந்த மயில்களுடன் மகிழ்ச்சிக்கூத்து ஆடிக்கொண்டிருந்தனர்.(9) இவ்வாறு அமைந்திருந்த தெய்வீக முனிவர்களுடைய அந்த வனத்தில், அப்சரஸ்கள் மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்தனர். அந்த இடமானது பார்வைக்கு இனிமை நிறைந்ததாக இருந்தது. சொர்க்கத்திற்கு ஒப்பான அது பேரழகுடன் திகழ்ந்தது. உண்மையில் அங்கே மொத்த சூழலும் அற்புதம் நிறைந்ததாகவும், விவரிக்க இயலாத அழகும், இனிமையும் கொண்டதாவும் இருந்தது.(10)
மலைச்சாரல்களில் உறங்கும் அந்தப் பெருந்தேவனின் தவங்களால் அந்த மலைகளின் இளவரசன் {இமவான் / இமய மலை} பேரெழிலுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். வேதமோதுவதில் அர்ப்பணிப்புமிக்கவர்களும், கல்விமான்களுமான பிராமணர்களால் ஓதப்படும் வேதங்கள் அங்கே முழங்கிக் கொண்டிருந்தன. ஓ! மாதவா, வண்டுகளின் ரீங்காரத்தை எதிரொலித்துக் கொண்டிருந்த அம்மலை ஒப்பற்ற அழகுடையதாகத் திகழ்ந்தது.(11) ஓ! ஜனார்த்தனா, பெருவிழாவைப் போலத் தெரிந்தவனும் கடும் வடிவம் கொண்டவனுமான அந்தப் பெருந்தேவனைக் கண்ட தவசிகள் பேரின்பத்தால் நிறைந்தனர்.(12) உயர்வாக அருளப்பட்ட தவசிகள், உயிர்வித்தை உள்ளிழுத்தவர்களான சித்தர்கள், மருத்துகள், வசுக்கள், சாத்யர்கள், விஸ்வேதேவர்கள், வாசவன் {இந்திரன்},(13) யக்ஷர்கள், நாகர்கள், பிசாசங்கள், லோகபாலர்கள், பல்வேறு புனித நெருப்புகள், காற்றுகள் மற்றும் பெரும்பூதங்கள் அனைவரும் யோகத்தில் குவிந்த மனங்களுடன் அந்த மலையில் வசித்து வந்தனர்.(14) பருவ காலங்கள் அனைத்தும் அங்கே இருந்தன, அவை அங்கே பல்வேறு வகைச் சிறந்த மலர்களைச் சிதறிக் கிடக்கச் செய்தன. பல்வேறு வகைச் சுடர்மிக்க மூலிகைகள் {ஜோதிலதைகள்} அந்த மலையில் இருந்த வனங்களுக்கும், காடுகளுக்கும் ஒளியூட்டிக் கொண்டிருந்தன.(15)
மகிழ்ச்சியில் நிறைந்திருந்த பல்வேறு வகைப் பறவைகள், இனிமைநிறைந்த அந்த மலைச்சாரலில் தத்தி நடந்த படியே இன்பமாகப் பாடிக் கொண்டிருந்தன. அவை வெளியிட்டுக் கொண்டிருந்த இசையொலியின் விளைவால் அந்தப் பறவைகள் மிகவும் விரும்பத்தக்கனவாக இருந்தன.(16) சிறந்த படுக்கையாகச் செயல்படுவதைப் போன்றிருந்ததும், சிறந்த தாதுக்களால் அலங்கரிக்கப்பட்டதுமான சிகரங்களில் ஒன்றில் உயர் ஆன்ம மஹாதேவன் அமர்ந்திருந்தான்.(17) இடையைச் சுற்றிலும் புலித்தோலையும், மேலாடையாகச் சிங்கத் தோலையும் அவன் உடுத்தியிருந்தான். ஒரு பாம்பு அவனது புனித நூலாக {பூணூலாக} இருந்தது. அவனுடைய தோள்கள் சிவப்பு அங்கதங்கள் இரண்டால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(18) அவனுடைய தாடி பச்சை நிறத்தில் இருந்தது. அவன் தலையில் சடாமுடி தரித்திருந்தான்[1]. பயங்கரமானவனாக இருந்த அவன், தேவர்களின் பகைவர்கள் அனைவரின் இதயங்களையும் அச்சத்தால் பீடிக்கச் செய்தான். அவனே அனைத்து உயிரினங்களின் அச்சங்களைப் போக்குபவனாகவும் இருக்கிறான். காளைமாட்டைக் கொடியில் கொண்ட தேவனாக அவனை வழிபடுபவர்கள் துதிக்கிறார்கள்.(19) மஹாதேவனைக் கண்ட பெரும் முனிவர்கள், தங்கள் தலைகளால் தரையைத் தொட்டு அவனை வணங்கினார்கள். மன்னிக்கும் ஆன்மாக்களைக் கொண்ட அவர்கள் அனைவரும் (அந்தப் பெருந்தேவனைக் கண்டதன் விளைவால்) பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு முற்றிலும் தூய்மையடைந்தார்கள்.(20)
[1] கும்பகோணம் பதிப்பில், "சிவந்தநிறமுள்ள மீசை தாடிகளும் ஜடையுமுள்ளவரும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவனுடைய தாடியும், சடாமுடியும் பழுப்பு நிறத்தில் இருந்தன" என்றிருக்கிறது. மூலத்தில் "ஹரிஶ்மஶ்ருர ஜடீ" என்றிருக்கிறது.
அனைத்து உயிரினங்களின் தலைவனுடைய {சிவனின்} வனம், பயங்கர வடிவங்கள் பலவற்றால் நிறைந்து வினோதமான அழகுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தது. பெரும்பாம்புகள் பலவற்றால் நிறைந்திருந்த அஃது அணுகத்தகாததாகவும், (சாதாரண உயிரினங்களால்) தாங்கிக் கொள்ள முடியாததாகவும் இருந்தது.(21) ஓ! மதுசூதனா, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அங்கிருந்த அனைத்தும் அற்புதம் நிறைந்தவையாகின. உண்மையில், காளைமாட்டைத் தன் கொடியாகக் கொண்ட பெருந்தேவன் பயங்கர அழகுடன் சுடர்விடத் தொடங்கினான்.(22) அங்கே அமர்ந்திருந்த மஹாதேவனிடம், அவனது மனைவியான இமவானின் மகள் {உமை}, அந்தப் பெருந்தேவனின் துணைவர்களான பூதகணங்களுடைய மனைவிமார் சூழ வந்தாள். அவளது ஆடைகள் அவளுடைய தலைவனுடையவை போலவே இருந்தன, அவள் நோற்ற நோன்புகளும் அவனுடையவை போலவே இருந்தன.(23) அவள், அனைத்து தீர்த்தங்களின் நீரால் நிறைந்திருந்த ஒரு குடத்தை தன் இடையில் வைத்திருந்தாள், அவளுடன் மலையோடைகளுக்குத் தலைமை தாங்கும் தேவியரும் வந்தனர். அந்த மங்கலப் பெண்கள் அவளுக்குப் பின்னால் அணிவகுத்தனர்.(24) அந்தத் தேவி, அனைத்துப் புறங்களிலும் மலர் மாரி பொழிய, பல்வேறு வகை இனிய நறுமணங்களுடன் கூடியவளாக நடந்து வந்தாள். இமயச் சாரலில் வசிக்கப் பிடித்த அவள், இந்தக் கோலத்தில் அந்தப் பெருந்தேவனிடம் சென்றாள்.(25)
அழகிய உமை, இதழ்களில் புன்னகையுடனும், கேலி செய்து விளையாடும் விருப்பத்துடனும், தன் அழகிய கரங்கள் இரண்டாலும் மஹாதேவனின் கண்களைப் பின்னால் இருந்து மறைத்தாள்.(26) மஹாதேவனின் கண்கள் இவ்வாறு மறைக்கப்பட்ட உடனேயே, அனைத்து உலகங்களிலும் இருள் சூழ்ந்தது, அண்டத்தில் எங்கும் உயிரற்றுப் போனதாகத் தெரிந்தது. ஹோமச் சடங்குகள் நின்றுபோயின. புனித வஷத்துகள் திடீரென இல்லாமல் ஆகின.(27) உயிரினங்கள் அனைத்தும் உற்சாகம் இழந்து, அச்சத்தால் நிறைந்தன. உண்மையில், உயிரினங்கள் அனைத்தின் தலைவனுடைய கண்கள் இவ்வாறு மூடப்பட்ட போது, மொத்த அண்டமும் சூரியனற்றுப் போனதாகத் தெரிந்தது.(28) எனினும், அதிகம் பரவியிருந்த இருள் விரைவில் மறைந்து போனது. வலிமைமிக்கச் சுடர்மிக்க நெருப்புத் தழல் மஹாதேவனின் நெற்றியில் இருந்து வெளிப்பட்டது.(29) மற்றொரு சூரியனைப் போலத் தெரிந்த மூன்றாம் கண் (அதில் {நெற்றியில்}) தோன்றியது. அந்தக் கண் யுக நெருப்பைப் போலச் சுடர்விட்டு எரிந்து அந்த மலையை எரிக்கத் தொடங்கியது.(30)
நீண்ட கண்களைக் கொண்ட இமவானின் மகள் {உமை} நேர்ந்ததைக் கண்டு, சுடர்விட்டெரியும் நெருப்புக்கு ஒப்பான மூன்றாவது கண்ணுடன் கூடிய மஹாதேவனுக்குத் தலைவணங்கினாள். அவள் தன் தலைவனின் மீது நிலைத்த பார்வையுடன் அங்கே நின்றாள்.(31) சாலமரங்கள் மற்றும் நீண்ட தண்டுகளுடன் கூறிய பிற மரங்கள், இனிமைமிக்கச் சந்தன மரங்கள், பல்வேறு வகையிலான சிறந்த மூலிகைகள் ஆகியவற்றுடன் சேர்ந்து அனைத்துப் புறங்களிலும் மலைக்காடுகள் எரிந்த போது,(32) அச்சத்தால் நிறைந்த மான் கூட்டங்களும், பிற விலங்குகளும் ஹரன் அமர்ந்திருந்த இடத்திற்குப் பெருவேகத்துடன் வந்து, அவனது பாதுகாப்பை நாடின. அவ்விலங்களால் கிட்டத்தட்ட நிறைந்திருந்த அந்தப் பெருந்தேவனின் வனம், ஒருவகை வினோதமான அழகுடன் சுடர்விட்டது.(33) அதே வேளையில், மூர்க்கமாகப் பெருகி சொர்க்கத்தையே எட்டியதும், நிலையற்ற மின்னலைப் போன்ற காந்தியுடன் கூடியதும், வலிமையும், பிரகாசமும் மிக்கப் பனிரெண்டு சூரியர்களைப் போலத் தெரிந்ததுமான அந்தத் தீ, அனைத்தையும் அழிக்கும் யுகநெருப்பைப் போல அனைத்துப் புறங்களையும் மறைத்தது.(34) ஒரு கணத்தில், தாதுகள், சிகரங்கள் மற்றும் சுடர்மிக்க மூலிகைகளுடன் கூடிய அந்த இமய மலைகள் எரிந்தன.(35)
இமவான் நொறுக்கப்பட்டு, எரிக்கப்பட்டதைக் கண்ட மலை இளவரசனின் {இமவானின்} மகள், அந்தப் பெருந்தேவனின் முன்பு மதிப்புடன் கரங்களைக் கூப்பி நின்று அவனது பாதுகாப்பை நாடினாள்.(36) அப்போது சர்வன் {சிவன்}, பெண்மையின் மென்மையால் வெல்லப்பட்ட உமை, தன் தந்தையான இமவான் அத்தகைய பரிதாபகரமான நிலைக்குக் குறைக்கப்பட்டதைக் காண விரும்பாமல் இருப்பதைக் கண்டு, அந்த மலையின் மீது தன் அருள் பார்வையைச் செலுத்தினான்.(37) ஒரு கணத்தில் மொத்த இமயமும் முந்தைய நிலைக்கு மீட்கப்பட்டு, எப்போதும் போன்ற அழகை அடைந்தது. உண்மையில் அந்த மலை உற்சாகம் நிறைந்த தன்மையை வெளிப்படுத்தியது. அதன் மரங்கள் அனைத்தும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.(38) இமவான் மீண்டும் தன் இயல்பான நிலையை அடைந்ததைக் கண்டவளும், களங்கமேதும் இல்லாதவளுமான உமா தேவி, உயிரினங்கள் அனைத்தின் ஆசானான தன் தலைவனிடம், இச்சொற்களைச் சொன்னாள்.(39)
உமை {மஹாதேவனிடம்}, "ஓ! புனிதமானவரே, ஓ! அனைத்துயிரினங்களின் தலைவா, ஓ! திரிசூலந்தரிக்கும் தேவா, ஓ! உயர்ந்த நோன்புகளைக் கொண்டவரே, என் மனத்தைப் பெரும் ஐயம் ஒன்று நிறைக்கிறது. என் ஐயத்தைத் தீர்ப்பதே உமக்குத் தகும்.(40) உமது நெற்றியில் இந்த மூன்றாம் கண் தோன்றியதற்கான காரணங்கள் என்ன? காடுகளும், உரிய அனைத்தும் சேர்ந்து அந்த மலை எரிக்கப்பட்டது ஏன்?(41) ஓ! சிறப்புமிக்கத் தேவா, இந்த மலை மீண்டும் தன் பழைய நிலையை அடைந்தது ஏன்? உண்மையில், ஒரு முறை அஃதை எரித்தபிறகு, மீண்டும் ஏன் மரங்களால் அதை மறைத்தீர்?" என்று கேட்டாள்.(42)
மஹேஸ்வரன் {உமையிடம்}, "ஓ! களங்கமற்ற தேவி, ஆராயாமல் நீ செய்த செயலின் மூலம் நீ என் கண்களை மறைத்தன் விளைவால் ஒரு கணத்தில் அண்டம் ஒளியற்றுப் போனது.(43) ஓ! மலைகளின் இளவரசனுடைய மகளே, அண்டமே சூரியனற்று அனைத்தும் இருளாகிப் போனதால், அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்க விரும்பி நான் என் மூன்றாவது கண்ணை உண்டாக்கினேன்.(44) இந்தக் கண்ணின் உயர்ந்த சக்தியானது அந்த மலையை நொறுக்கி எரித்தது. எனினும், ஓ! தேவி, உன்னை நிறைவடையச் செய்யவே இமவானின் பழுதை நீக்கி மீண்டும் முன்பு போல அமைத்தேன்" என்றான்.(45)
உமை {மஹாதேவனிடம்}, "ஓ! புனிதமானவரே, கிழக்கு, வடக்கு, மேற்கு ஆகியவற்றில் உள்ள உமது முகங்கள் சந்திரனைப் போன்ற இனிமையுடனும், அழகாகவும் இருப்பது ஏன்?(46) தெற்கில் இருக்கும் உமது முகம் பயங்கரமாக இருப்பது ஏன்? உமது சடா முடி பழுப்பாக, செங்குத்தாக நிமிர்ந்தும் நிற்பது ஏன்?[2] உமது தொண்டை மயில்தோகை போல நீலமாக இருப்பது ஏன்?(47) ஓ! சிறப்புமிக்கத் தேவா, உமது கரங்களில் எப்போதும் பினாகை இருப்பது ஏன்? எப்போதும் சடைமுடி தரித்த பிரம்மச்சாரியாக நீர் இருப்பது ஏன்?(48) ஓ!தலைவா, இவை அனைத்தையும் எனக்கு விளக்குவதே உமக்குத் தகும். உம்முடன் சேர்ந்து ஒரே கடமைகளைப் பின்பற்ற முயலும் உமது மனைவி நான். மேலும், ஓ! காளையை உமது அடையாளமாகக் கொண்ட தேவா, நான் பக்தியுடன் உம்மை வழிபடுபவளும் ஆவேன்" என்றாள்".(49)
[2] கும்பகோணம் பதிப்பில், "பகவானே, தேவஸ்ரேஷ்டர்களுக்கும் ஈசுவரரே, எல்லாத் தேவர்களாலும் நமஸ்கரிக்கப்பட்டவரே, பகவனான நீர் எந்தக் காரணத்தினால் நான்முகரானீர்? பகவானே, உமது ஐந்திரமென்னும் கீழ்த்திசை முகம் பார்ப்பதற்கு அச்சரியமாயிருப்பதேன்? பகவானே, வடக்கிலும், மேற்கிலும் உள்ள முகங்கள் பார்ப்பதற்கு அழகாயிருப்பதேன்? தெற்கிலுள்ள முகம் மேலே ஜடைகளால் வியாபிக்கப்பட்டுப் பயங்கரமாயிருப்பதேன்?" என்றிருக்கிறது.
நாரதர் தொடர்ந்தார் "மலைகளின் இளவரசனுடைய மகள் இவ்வாறு சொன்னதும், சிறப்புமிக்கப் பினாகைதாரியான அந்தப் பலமிக்க மஹாதேவன், அவளிடம் உயர்வான நிறைவையடைந்தான்.(50)
அந்தப் பெருந்தேவன் அவளிடம், "ஓ! அருளப்பட்ட மங்கையே, என் வடிவங்கள் அப்படி இருப்பதற்கான காரணங்களை நான் விளக்கிச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக" என்றான்.(51)
அநுசாஸனபர்வம் பகுதி – 140ல் உள்ள சுலோகங்கள் : 51
ஆங்கிலத்தில் | In English |