Saturday, December 28, 2019

யுதிஷ்டிரனின் ஒப்புதல்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 12

The acquiesce of Yudhishthira ! | Asramavasika-Parva-Section-12 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 12)


பதிவின் சுருக்கம் : சிராதத்தத்துக்குப் பொருள் கொடுக்க மறுத்த பீமன்; தன் கருவூலத்தில் இருந்து எடுத்துக்கொள்ளுமாறு திருதராஷ்டிரனுக்குச சொல்லி அனுப்பிய யுதிஷ்டிரன்...


அர்ஜுனன், "ஓ! பீமரே, நீர் என் அண்ணனாகவும், எனக்குப் பெரியவராகவும், ஆசானாகவும் இருக்கிறீர். நான் ஏற்கனவே சொன்னதைவிட அதிகம் சொல்லத் துணியேன். அரசமுனியான திருதராஷ்டிரர் அனைத்து வகையிலும் நம் மதிப்புக்குத் தகுந்தவர்.(1) நல்லோரும், பொதுவான மட்டத்திற்கு மேலே புகழடைந்தவர்களும், நல்லதைக் குறிக்கும் வேறுபாடுகளை உடைக்காதவர்களும், தங்களுக்கு இழைக்கப்பட்ட தீங்குகளை மட்டுமே நினைப்பதில்லை, தாங்கள் அடைந்த நன்மைகளையும் நினைப்பர்" என்றான்.(2)


உயர் ஆன்ம பல்குனனின் இந்தச் சொற்களைக் கேட்டவனும், அற ஆன்மா கொண்டவனும், குந்தியின் மகனமான யுதிஷ்டிரன், விதுரனிடம் இந்தச் சொற்களில்,(3) "ஓ! க்ஷத்ரி, குரு மன்னரின் மகன்கள், பீஷ்மர், அவரது நலன் விரும்பிகள், அவருக்கு நன்மை செய்தவர்கள் மற்றும் பிறருக்கான ஈமச்சடங்குகளுக்குத் தேவையான செல்வத்தை என் கருவூலத்தில் இருந்து நான் கொடுப்பேனென நான் சொன்னதாக அவரிடம் {திருதராஷ்டிரரிடம்} சொல்வீராக. இதில் பீமன் உற்சாகமிழக்க வேண்டியதில்லை" என்றான்".(4,5)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இந்தச் சொற்களைச் சொன்னவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அர்ஜுனனை உயர்வாக மெச்சினான். அதே வேளையில் பீமசேனன் தனஞ்சயன் மீது தன் கோபப்பார்வைகளை வீசத் தொடங்கினான்.(6) அப்போது, பெரும் நுண்ணறிவைக் கொண்ட யுதிஷ்டிரன், மீண்டும் விதுரனிடம், "மன்னர் திருதராஷ்டிரர் பீமசேனனிடம் கோபம் கொள்வது அவருக்குத் தகாது.(7) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான இந்தப் பீமன், காட்டில் வசித்தபோது, குளிர், மழை, வெப்பம் ஆகியவற்றால் பெரிதும் பீடிக்கப்பட்டவனாகவும், இன்னும் ஆயிரக்கணக்கான துன்பங்களை அடைந்தவனாகவும் இருக்கிறான். இவை யாவும் நீர் அறியாதனவல்ல.(8) எனினும், ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவரே, என் வீட்டில் இருந்து மன்னர் விரும்பும் பொருட்களை, அவர் விரும்பும் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று நான் சொன்னதாக அவரிடம் சொல்வீராக.(9)

பெரிதும் துன்பமடைந்த பீமன் வெளிப்படுத்தும் செருக்கை அவரது இதயத்தில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் நீர் அம்மன்னருக்குச் சொல்ல வேண்டும்.(10) நான் கொண்டிருக்கும் செல்வமெதற்கும், அர்ஜுனன் வீட்டில் இருக்கும் எதற்கும் மன்னர் திருதராஷ்டிரரே உரிமையாளராவார். இதையும் நீர் அவருக்குச் சொல்ல வேண்டும்.(11) மன்னர், பிராமணர்களுக்குக் கொடைகளை அளிக்கட்டும். அவர் விரும்பிய அளவில் பெரிதாகச் செலவு செய்யட்டும். அவர் தமது மகன்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும் பட்டிருக்கும் கடனிலிருந்து விடுபடட்டும்.(12)

அதையும் தவிர, 'ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, என்னுடைய இந்த உடலும், நான் கொண்டிருக்கும் செல்வம் அனைத்தும் உமதே. இதை அறிவீராக. இதில் ஐயமேதும் கொள்ள வேண்டும்' என்றும் அவரிடம் சொல்வீராக" என்றான் {யுதிஷ்டிரன்}".(13)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 12ல் உள்ள சுலோகங்கள் : 13

ஆங்கிலத்தில் | In English