Saturday, December 28, 2019

நிறைவடைந்த திருதராஷ்டிரன்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 13

Dhritarashtra satisfied! | Asramavasika-Parva-Section-13 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 13)


பதிவின் சுருக்கம் : பொருள் கொடுப்பதற்கு யுதிஷ்டிரன் சம்மதித்ததைத் திருதராஷ்டிரனிடம் தெரிவித்த விதுரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இவ்வாறு மன்னன் யுதிஷ்டிரனால் சொல்லப்பட்டவனும், நுண்ணறிவுமிக்க மனிதர்களில் முதன்மையானவனுமான விதுரன், திருதராஷ்டிரனிடம் சென்று, சிறந்த பொருள்ள இந்தச் சொற்களை அவனிடம் சொன்னான்.(1) {விதுரன்}, "முதலில் நான் மன்னன் யுதிஷ்டிரனிடம் உமது செய்தியைச் சொன்னேன். உமது சொற்களைக் குறித்துச் சிந்தித்து, அவற்றை உயர்வாக மெச்சினான்.(2) பெருஞ்சக்தி கொண்ட பீபத்சுவும் {அர்ஜுனனும்}, தன் மாளிகைகள், தன் உயிர் மூச்சு உட்பட அவற்றிலுள்ள செல்வங்கள் அனைத்தையும் உமது வசம் வைத்திருக்கிறான்.(3) ஓ! அரச முனியே {திருதராஷ்டிரரே}, உமது மகனான மன்னன் யுதிஷ்டிரனும், தன் நாட்டையும், உயிர் மூச்சையும், செல்வத்தையும், தனக்குரிய அனைத்தையும் உமக்குக் கொடுக்க முன் வருகிறான்.(4)


எனினும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், எண்ணற்றவையான தன் கவலைகள் அனைத்தையும் நினைவுகூர்ந்து, பெருமூச்சுகள் பலவற்றை விட்டபடியே பெருஞ்சிரமத்துடன் தன் சம்மதத்தை அளித்தான்.(5) ஓ! ஏகாதிபதி, அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட வீரன் {பீமன்}, உம்மிடம் நல்லுறவைப் பேணும்படி அறமன்னனாலும் {யுதிஷ்டிரனாலும்}, பீபத்சுவாலும் {அர்ஜுனனாலும்} வேண்டவும், தூண்டவும்பட்டான்.(6) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பழைய பகைமைகளை நினைவுகூர்ந்து பீமன் வெளிப்படுத்தும் முறையற்ற நடத்தையினால் சோர்வடைய வேண்டாம் என உம்மை வேண்டிக் கேட்டுக் கொண்டான்.(7)

{யுதிஷ்டிரன்}, "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே, இதுவே போரில் பொதுவாக க்ஷத்திரியர்களின் நடத்தையாகும், இந்த விருகோதரன் {பீமன்}, போரிலும், க்ஷத்திரிய நடைமுறைகளிலும் அர்ப்பணிப்புள்ளவன் ஆவான்.(8) ஓ! மன்னா, நானும், அர்ஜுனனும் சேர்ந்து விருகோதரனை மன்னிக்குமாறு உம்மை மீண்டும் மீண்டும் இரந்து கேட்கிறோம். எங்களுக்கு அருள் புரிவீராக. நீரே எங்கள் தலைவராவீர். ஓ! பூமியின் ஆட்சியாளரே நாங்கள் கொண்டுள்ள செல்வத்தில் நீர் விரும்புவனவற்றை நீர் கொடையளிக்கலாம். ஓ! பாரதரே, இந்த நாட்டிற்கும், இதில் வாழும் அனைவருக்கும் நீரே தலைவராவீர்" {என்று உம்மை வேண்டிக் கொண்டான்}.(9,10)

{பிறகு என்னை நோக்கி}, குரு குலத்தில் முதன்மையான அவர் {திருதராஷ்டிரர்}, தமது மகன்களின் ஈமச் சடங்குகளுக்காகப் பிராமணர்களுக்குக் கொடுக்க வேண்டிய முதன்மையான கொடைகள் அனைத்தையும் கொடுக்கட்டும். உண்மையில், எங்கள் மாளிகைகளில் இருந்து ரத்தினங்கள், பசுக்கள், ஆண் மற்றும் பெண் பணியாட்கள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளை எடுத்துக் கொண்டு அந்த மறுபிறப்பாள வகையினருக்குக் கொடைகளை அளிக்கட்டும். அவர் ஈகைக்கெனத் தான் விரும்பும் பொருட்களைத் தேர்ந்தெடுத்து, ஏழைகள், பார்வையற்றோர், பெருந்துயரில் இருப்போர் ஆகியோருக்குக் கொடையளிக்கட்டும்.(11,12)

ஓ! விதுரரே, அபரிமிதமாகத் திரட்டப்பட்ட உணவு, பல்வேறு சுவைகளைக் கொண்ட பானங்கள் ஆகியவற்றுடன் கூடிய பெரிய அரங்கங்கள் கட்டப்படட்டும். பசுக்கள் குடிப்பதற்கான தொட்டிகளும் கட்டப்பட வேண்டும், புண்ணியம் தரும் பிற வேலைகளும் செய்யப்பட வேண்டும் {என்று யுதிஷ்டிரன் என்னிடம் சொன்னான்}. இவையே மன்னனாலும், பிருதையின் மகனான தனஞ்சயனாலும் எனக்குச் சொல்ல்லப்பட்ட சொற்களாகும். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்" என்றான் {விதுரன்}.(14)

ஓ! ஜனமேஜயா, விதுரன் இச்சொற்களைச் சொன்ன பிறகு, அவற்றில் தன் நிறைவை வெளிப்படுத்திய திருதராஷ்டிரன், கார்த்திகை மாத முழு நிலவு நாளில் பெருங்கொடைகளை அளிப்பதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான்" {என்றார் வைசம்பாயனர்}.(15)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 13ல் உள்ள சுலோகங்கள் : 15

ஆங்கிலத்தில் | In English