Sunday, December 29, 2019

தானயஜ்ஞம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 14

Gift sacrifice! | Asramavasika-Parva-Section-14 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 14)


பதிவின் சுருக்கம் : சிராத்தம் செய்து, உணவு மற்றும் பானத்தால் பிராமணர்களை நிறைவடையச் செய்த திருதராஷ்டிரன்; திருதராஷ்டிரன் கேட்டதைவிடப் பத்து மடங்கு கொடுத்த யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஏகாதிபதி, இவ்வாறு விதுரனால் சொல்லப்பட்ட மன்னன் திருதராஷ்டிரன், யுதிஷ்டிரன் மற்றும் ஜிஷ்ணுவின் {அர்ஜுனனின்}  செயல்களால் உயர்வான நிறைவையடைந்தான்.(1) பீஷ்மருக்காகவும், தன் மகன்கள் மற்றும் நண்பர்களுக்காகவும், உரிய சோதனைகளுக்குப் பிறகு தகுந்த பிராமணர்களை அழைத்து, மேன்மையான முனிவர்களையும் அழைத்து,(2) பெரும் அளவிலான உணவையும், பானத்தையும் தயாரிக்கச் செய்து, தேர்கள், வாகனங்கள், துணிமணிகள், தங்கம், ஆபரணங்கள், ரத்தினங்கள், ஆண் மற்றும் பெண் பணியாட்கள், வெள்ளாடுகள், செம்மறியாடுகள், விரிப்புகள் மற்றும் விலைமதிப்புமிக்கப் பொருட்களைத் திரட்டி,(3) கிராமங்கள், வயல்கள் மற்றும் பிறவகைச் செல்வங்களைத் தயாராக வைத்துக் கொண்டு, யானைகள், ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரைகள் ஆகியவற்றையும், பெண்களில் சிறந்த அழகிய கன்னிகைகளையும்,(4) இறந்து போனோரின் பெயர்களைச் சொல்லி அவர்களின் முன்னேற்றத்திற்காக அந்த மன்னர்களில் முதன்மையானவன் {திருதராஷ்டிரன்} கொடையளித்தான். துரோணர், பீஷ்மர், சோமதத்தன், பாஹ்லீகர்,(5) மன்னன் துரியோதனன் மற்றும் தன்னுடைய வேறு மகன்கள் ஒவ்வொருவரின் பெயரையும், ஜெயத்ரதன் முதலிய தன் நலன்விரும்பிகள் அனைவரின் பெயர்களையும் சொல்லி உரிய முறையில் அந்தக் கொடைகள் அளிக்கப்பட்டன.(6)


யுதிஷ்டிரனின் அனுமதியின் பேரில் நடந்த அந்தச் சிராத்தவேள்வியில், பெருமளவிலான செல்வங்கள் மற்றும் அபரிமிதமான ரத்தினங்கள், ஆபரணங்கள் மற்றும் வேறு வகைச் செல்வங்கள் கொடையளிக்கப்பட்டன.(7) அந்தச் சந்தர்ப்பத்தில் யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில் கணக்கர்கள் மற்றும் எழுத்தர்கள் ஆகியோர், அந்த முதிர்ந்த மன்னனிடம் இடையறாமல்,(8) "ஓ! ஏகாதிபதி, இவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கொடைகள் என்னென்ன என்று ஆணையிடுவீராக. அனைத்துப் பொருட்களும் இங்கே தயாராக இருக்கின்றன" என்று கேட்டுக் கொண்டிருந்தனர். மன்னன் சொன்னதும், அவனால் சொல்லப்பட்டதை அவர்கள் கொடுத்தார்கள்[1].(9) குந்தியின் அரச மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} ஆணையின் பேரில், நூறு பெற இருந்தவன் ஆயிரம்பெற்றான், ஆயிரம் பெற இருந்தவன், பத்தாயிரம் பெற்றான்[2].(10)

[1] "தற்காலச் சிராத்தங்கள், திருமணங்கள் மற்றும் வேறு மங்கலச் சடங்குகளில் கொடுக்கப்படும் கொடைகளுக்கு ஒப்பாகவே இங்கே சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கொடையையும் மந்திரங்கள் மற்றும் நீர் தெளித்து அர்ப்பணித்துக் கொடைபெறுபவருக்குக் கொடுப்பதற்குப் பதிலாக, குவியலாக இருக்கும் அனைத்துப் பொருட்களும் மந்திரங்களின் துணையுடன் அர்ப்பணிக்கப்படுகின்றன. அதன் பிறகு விருந்தினர்கள் கூட்டப்பட்டு, தனித்தனியாக அழைக்கப்படுகின்றனர். பட்டியலின் படி கொடையளிக்கப்பட வேண்டிய விருந்தினரை அழைத்து, கொடைபெறும் பொருளை அதியக்ஷன் அல்லது கண்காணிப்பாளர் அறிவிப்பார். உண்மையில் கணக்கர்கள் அதைக் கொடுக்க, எழுத்தர்கள் அதைக் குறிப்பெடுத்துக் கொள்வார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] திருதராஷ்டிரனால் குறிப்பிடப்பட்ட கொடை ஒவ்வொன்றும் யுதிஷ்டிரனுடைய ஆணையின் பேரில் பத்து மடங்காக்ககப்பட்டன" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மேகங்கள் தாங்கள் பொழியும் மழையால் பயிர்களை விளையச் செய்வதைப் போல அந்த அரச மேகமும், செல்வமெனும் மழையைப் பொழிந்ததன் மூலம் பிராமணர்களை நிறைவடையச் செய்தது.(11) ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, அந்தக் கொடைகள் அனைத்தும் கொடுக்கப்பட்ட பிறகு, நான்கு வகையைச் சேர்ந்தவர்களும், அங்கே கூடியிருந்தவர்களுமான விருந்தினர்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் உணவையும், பல்வேறு சுவைகளுடன் கூடிய பானங்களெனும் பெரும் வெள்ளத்தில் அவர்களை மூழ்கும்படி செய்தான்.(12)

உண்மையில், அந்தத் திருதராஷ்டிரப் பெருங்கடலானது, ரத்தினங்களை உயர்ந்து பெருகும் நீராகக் கொண்டும், கிராமங்கள் மற்றும் விளைநிலங்களை வளமாகவும், வேறு முதன்மையான கொடைகளைத் தன் முன்னணித் தீவுகளாகவும், விலைமதிப்புமிக்கப் பல்வேறு வகைப் பொருட்களின் குவியல்களை வளமிக்கக் குகைளாகவும், யானைகளையும், குதிரைகளையும் தன் முதலைகளாகவும், சுழிகளாகவும், மிருதங்க ஒலிகளைத் தன் ஆழ்ந்த முழக்கமாகவும், துணிமணிகள், செல்வம் மற்றும் விலைமதிப்பு மிக்கக் கற்களைத் தன் அலைகளாகவும் கொண்டு பூமியை மூழ்கடித்தது.(13,14) ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவ்வழியிலேயே அந்த ஏகாதிபதி, மறுமையில் உள்ள தன் மகன்கள், பேரப்பிள்ளைகள், பித்ருக்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காகவும், தனக்காகவும் காந்தாரிக்காகவும் கொடைகளை அளித்தான்.(15)

இறுதியாக, இவ்வளவு அபரிமிதமான கொடைகளை அளிக்கும் பணியில் அவன் களைப்படைந்தபோது, அந்தப் பெரும் கொடை வேள்வி ஒரு முடிவுக்கு வந்தது.(16) இவ்வாறே அந்தக் குருகுலத்தின் மன்னன் தன் கொடை வேள்வியை {தானயஜ்ஞத்தைச்} செய்தான். அந்தச் சந்தர்ப்பத்தில் நடிகர்களும், நடனக்கலைஞர்களும் தொடர்ந்து ஆடிப்பாடி அங்கே இருந்த விருந்தினர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தனர்.(17) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, இவ்வாறு பத்து நாட்கள் கொடையளித்த அம்பிகையின் அரச மகன் {திருதராஷ்டிரன்}, தன் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்குத் தான் பட்ட கடன்களில் இருந்து விடுபட்டான்" {என்றார் வைசம்பாயனர்}.(18)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 14ல் உள்ள சுலோகங்கள் : 18

ஆங்கிலத்தில் | In English