Sunday, December 29, 2019

திருதராஷ்டிரன் புறப்பாடு! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 15

The departure of Dhritarashtra! | Asramavasika-Parva-Section-15 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 15)


பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் காந்தாரியின் தோளையும், காந்தாரி குந்தியின் தோளையும் பற்றிக் கொண்டு காடு நோக்கிப் புறப்பட்டது; அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற மக்கள்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "காடுகளுக்குத் தான் புறப்பட வேண்டிய நேரத்தைத் தீர்மானித்த அம்பிகையின் அரச மகன் திருதராஷ்டிரன், வீரர்களான பாண்டவர்களை அழைத்தான்.(1) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முதிர்ந்த ஏகாதிபதி, காந்தாரியுடன் சேர்ந்து அந்த இளவரசர்களை அழைத்தான். கார்த்திகை மாதத்தின் முழுநிலவு நாளான அன்று வேதங்கள் அறிந்த பிராமணர்களைச் சிறு சடங்குகளைச் செய்ய வைத்த அவன்,(2) தான் தினமும் வழிபடும் நெருப்பை எடுத்து வரச் செய்தான். தன் வழக்கமான ஆடைகளைக் கைவிட்டு மான்தோலையும், மரவுரியையும் அணிந்து கொண்டு, தன் மருமகள்கள் துணையுடன் அந்த மாளிகையைவிட்டுப் புறப்பட்டான்.(3)


விசித்திரவீரியனின் அரச மகன் {திருதராஷ்டிரன்} இவ்வாறு புறப்பட்ட போது, பாண்டவ மற்றும் கௌரவப் பெண்மணிகளும், கௌரவக் குலத்தைச் சேர்ந்த வேறு பெண்மணிகளும் உரக்க ஓலமிட்டனர்.(4) மன்னன், தான் வாழ்ந்த அந்த மாளிகையைப் பொரி மற்றும் பல்வேறு வகைகளிலான சிறந்த மலர்களைக் கொண்டு வழிபட்டான். மேலும் அவன் செல்வக்கொடைகளால் தன் பணியாட்கள் அனைவரையும் கௌரவித்து, அந்த வசிப்பிடத்தைவிட்டு வெளியே வந்து பயணத்தில் புறப்பட்டான்.(5)

அப்போது, ஓ! மகனே, மன்னன் யுதிஷ்டிரன், மேனியங்கும் நடுங்கியவாறு, கண்ணீரால் தடை பட்ட உரத்த குரலுடன் இந்தச் சொற்களைச் சொன்னான், "ஓ! அறம்சார்ந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நீர் எங்கே செல்லபோகிறீர்?" என்று சொல்லி மயக்கமடைந்து கீழே விழுந்தான்.(6)

பெருந்துன்பத்தில் எரிந்து கொண்டிருந்த அர்ஜுனன் மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தான். பாரதக் குல இளவரசர்களில் முதன்மையான அவன் {அர்ஜுனன்}, இவ்வாறான முறையில் நடந்து கொள்ளக்கூடாது என்று யுதிஷ்டிரனிடம் சொல்லி உற்சாகமற்றவனாகவும், துன்பத்தில் மூழ்கிய இதயம் கொண்டவனாகவும் நின்று கொண்டிருந்தான்.(7) விருகோதரன் {பீமன்}, வீரப் பல்குனன் {அர்ஜுனன்}, மாத்ரியின் இரு மகன்கள் {நகுல சகாதேவன்}, விதுரன், சஞ்சயன், வைசிய மனைவி மூலம் திருதராஷ்டிரனுக்குப் பிறந்த மகன் {யுயுத்சு}, கிருபர், தௌமியர் மற்றும் பிற பிராமணர்கள் அனைவரும், துயரால் தடைபட்ட குரல்களுடன் அந்த முதிர்ந்த ஏகாதிபதியைப் பின்தொடர்ந்து சென்றனர்.(8) கண்களைக் கட்டிக் கொண்டு நடந்த காந்தாரியின் கைகளைத் தன் தோள்களில் சுமந்து கொண்டு குந்தி முன் சென்றாள். மன்னன் திருதராஷ்டிரன், தன் கைகளைக் காந்தாரியின் தோள்களில் வைத்துக் கொண்டு நம்பிக்கையுடன் நடந்தான்[1].(9) துருபதன் மகள் கிருஷ்ணை {திரௌபதி}, சாத்வதக் குலத்தவள் {சுபத்திரை}, சமீபத்தில் தாயான கௌரவர்களின் மருமகள் உத்தரை[2], சித்திராங்கதை மற்றும் அரச குடும்பத்தின் மற்ற பெண்கள் ஆகியோர் அனைவரும் அந்த முதிர்ந்த ஏகாதிபதியுடன் {திருதராஷ்டிரனுடன்} சென்றனர்.(10)

[1] "திருதராஷ்டிரன் பார்வையற்றவன் என்பதால், தன் கணவனிடம் பேரர்ப்பணிப்பு கொண்டவளான காந்தாரி, தனக்குத் திருமணமான பொழுதிலிருந்தே தன் கணவனால் பார்க்க முடியாத உலகத்தைத் தானும் பார்க்க மறுத்து தன் கண்களைக் கட்டிக கொண்டாள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

[2] கும்பகோணம் பதிப்பில், "பாலனான புத்திரனுள்ளவளும், குரு குலத்தவளுமான உத்தரை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "சந்ததியாக ஒரு மகனைப் பெற்ற கௌரவி உத்தரை" என்றிருக்கிறது.  மூலத்தில் "பாலாபத்யா சொத்தரா கௌரவீ ச" என்றிருக்கிறது.

ஓ! மன்னா, அந்தச் சந்தர்ப்பத்தில் துன்பத்தால் ஏற்பட்ட அவர்களது ஓலம், பெண் அன்றில் {குரரி பறவை} கூட்டத்தின் உரத்த கதறல்களுக்கு ஒப்பானதாக இருந்தது. அப்போது, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் அடங்கிய குடிமக்களின் மனைவிமாரும் அனைத்துப் புறங்களில் இருந்தும் தெருவுக்கு வந்தனர்.(11) ஓ! மன்னா, ஹஸ்தினாபுரத்தின் குடிமக்கள அனைவரும், பழங்காலத்தில், பகடையாட்டத்தில் தோற்றுப் பாண்டவர்கள் புறப்பட்ட போது துயரடைந்ததைப் போலவே திருதராஷ்டிரன் புறப்பட்ட போதும் துயரடைந்தனர்.(12) சூரியனையோ, சந்திரனையோ ஒருபோதும் கண்டிராத பெண்களும், மன்னன் திருதராஷ்டிரன் பெருங்காட்டை நோக்கிச் சென்ற போது, அந்தச் சந்தர்ப்பத்தில் பெருந்துயரத்துடன் தெருவுக்கு வந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(13)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 15ல் உள்ள சுலோகங்கள் : 13

ஆங்கிலத்தில் | In English