Kunti followed! | Asramavasika-Parva-Section-16 | Mahabharata In Tamil
(ஆஸ்ரமவாஸ பர்வம் - 16)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் காட்டுக்குப் புறப்படும்போது, விதுரனும், சஞ்சயனும் உடன் புறப்பட்டது, யுதிஷ்டிரனும், பீமனும் தடுத்தும் குந்தியும் அவர்களுடன் சென்றது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா, அந்த நேரத்தில் பூமியிலோ, மாளிகைகளின் மாடியிலோ {உப்பரிகைகளிலோ} நின்று கொண்டிருந்த ஆண்களும் பெண்களும் செய்த முழக்கம் பெரிதாக இருந்தது.(1) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த முதிர்ந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, கைகளைக் கூப்பி, பலவீனத்தால் நடுங்கி, இரு பாலினத்தாராலும் நிறைந்திருந்த முக்கிய வீதியின் {ராஜமார்க்கத்தின்} வழியே சிரமத்துடன் நடந்து சென்றான்.(2) யானையின் பெயரால் அழைக்கப்பட்ட {ஹஸ்தினாபுரம்} நகரத்தின் முக்கிய வாயில் வழியே வெளியேறி, மக்கள் கூட்டத்தினரிடம் தங்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்லுமாறு மீண்டும் மீண்டும் சொன்னான்.(3) மன்னனுடன் {திருதராஷ்டிரனுடன்} செல்வதில் விதுரன் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். கவல்கணன் மகனும், திருதராஷ்டிரனின் முதல் அமைச்சருமான சூதன் சஞ்சயனும் அதே இதயம் கொண்டவனாகவே இருந்தான்![1].(4)
[1] கும்பகோணம் பதிப்பில், "விதுரரும், ஸேனாதிபதியும், ஸூதனும், கவல்கணக் குமாரனுமான ஸஞ்சயனும் அரசனுடன் வனம் செல்ல உத்ஸாஹமுள்ளவர்களானார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "மன்னனுடன் சேர்ந்து காட்டுக்குச் செல்வதற்குத் தனக்கும் அதுவே சரியான நேரமென விதுரன் தீர்மானித்தான். முதன்மை ஆலோசகனும், சூதனும், கவல்கணனின் மகனுமான சஞ்சயனும் அதே தீர்மானத்தையே எடுத்தான்" என்றிருக்கிறது.
மன்னன் திருதராஷ்டிரன், தன்னைப் பின்தொடர்வதிலிருந்து கிருபரையும், வலிமைமிக்கத் தேர்வீரனான யுயுத்சுவையும் தடுத்தான். அவர்களை யுதிஷ்டிரனின் கைகளில் ஒப்படைத்தான்.(5) திருதராஷ்டிரனின் ஆணையின் பேரில் குடிமக்கள் அந்த ஏகாதிபதியைப் பின்தொடர்வதை நிறுத்திய பிறகு, மன்னன் யுதிஷ்டிரனும், தன் குடும்பத்துப் பெண்களுடன் சேர்ந்து நிற்கத் தயாரானான்.(6)
தன் தாயான குந்தியும் காட்டுக்கு ஓய்ந்து செல்வதற்கு விரும்புவதைக் கண்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, அவளிடம், "முதிய ஏகாதிபதியை நான் பின்தொடர்ந்து செல்வேன். நீ நிற்பாயாக.(7) ஓ! ராணி, உன் மருமகள்களான இவர்கள் துணையுடன் நீ நகரத்திற்குத் திரும்புவதே உனக்குத் தகும். இந்த ஏகாதிபதி, தவம்பயில்வதென உறுதியாகத் தீர்மானித்துக் காட்டுக்குச் செல்கிறார்" என்றான்.(8) மன்னன் யுதிஷ்டிரன் கண்ணீரில் குளித்த கண்களுடன் அவளிடம் இந்தச் சொற்களைச் சொன்னாலும், அவனுக்குப் பதிலேதும் சொல்லாமல், காந்தாரியைப் பற்றிக் கொண்டு தொடர்ந்து முன்னேறினாள் குந்தி.(9)
{சிறிது நேரத்திற்குப் பிறகு}, குந்தி {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா, சகாதேவனிடம் ஒருபோதும் அலட்சியம் காட்டாதே. ஓ! ஏகாதிபதி, அவன் எப்போதும் என்னிடமும், உன்னிடமும் மிகுந்த பற்று கொண்டவன்.(10) போரில் ஒருபோதும் புறமுதுகிடாதவனான கர்ணனை நீ எப்போதும் மனத்தில் கொள்ள வேண்டும். என் அறிவின்மையால் அந்த வீரன் போர்க்களத்தில் கொல்லப்பட்டான்.(11) என் மகனே, சூரியனுக்குப் பிறந்த அந்தப் பிள்ளையைக் காணாமல் இருந்தும் நூறு துண்டுகளாகச் சிதறாத என் இதயம் நிச்சயம் இரும்பாலானது.(12) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, இவ்வாறிருக்கையில் நான் என்ன செய்வது? சூரியனின் பிள்ளை பிறந்ததைக் குறித்த உண்மையை அறிவிக்காததால் பழி முழுவதும் என்னையே சாரும்.(13) ஓ! பகைவரை நொறுக்குபவனே, நீ உன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து சூரியனின் மகனுக்காகச் சிறந்த கொடைகளை அளிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.(14) ஓ! பகைவரை வெட்டுபவனே, நீ எப்போதும் திரௌபதிக்கு ஏற்புடையதையே செய்ய வேண்டும். பீமசேனன், அர்ஜுனன், நகுலன் மற்றும் சகாதேவனையும் பார்த்துக் கொள்ள வேண்டும். ஓ! மன்னா, குரு குலத்தின் சுமை இப்போது உன் மேல் இருக்கிறது.(15) நான் என் மாமனாருக்கும், மாமியாருக்கும் செய்யும் தொண்டில் என்னை அர்ப்பணித்துக் கொண்டும், உடலில் புழுதி பூசப்பட்டவளாகக் கடுந்தவங்களில் ஈடுபட்டுக் கொண்டும், காந்தாரியுடன் சேர்ந்து காட்டில் நான் வாழப் போகிறேன்[2]" என்றாள் {குந்தி}".(16)
[2] "திருதராஷ்டிரன் பாண்டுவின் அண்ணன் என்பதால் அவன் பாண்டுவின் தந்தையாகக் கருதப்படுகிறான் என நீலகண்டர் இங்கே விளக்குகிறார். எனவே காந்தாரி, குந்தியின் மாமியாராவாள். மூத்த அண்ணன் தந்தையாகப் பார்க்கப்படுகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நான் வனத்தில் மாமனார் மாமியார்களுடைய பாதங்களில் பணிவிடை செய்து கொண்டு மேனியில் அழுக்குப் படிந்து தவஞ்செய்பவளாகக் காந்தாரியுடன் வஸிக்கப் போகிறேன்" என்றிருக்கிறது. மாமனார், மாமியார் என்பதன் அடிக்குறிப்பில், "திருதராஷ்டிரன் பாண்டுவுக்குத் தமையனாகையால் பிதாவுக்குச் சமமானது பற்றி இவ்விதம் கூறப்பட்டது" என்றிருக்கிறது. பிபேகத் திப்ராயின் பதிப்பில், "நான் என் மாமனார் மற்றும் மாமியருக்குத் தொண்டு செய்வதில் என்னை அர்ப்பணித்துக் கொண்டு காட்டில் வசிக்கப் போகிறேன். நான் காந்தாரியுடன் வசித்துக் கொண்டு, மேனியில் புழுதி பூசப்பட்டவளாகத் தவங்களில் என்னை அர்ப்பணித்துக் கொள்ளப் போகிறேன்" என்றிருக்கிறது. மாமனார் மற்றும் மாமியார் என்பதன் அடிக்குறிப்பில், "திருதராஷ்டிரன் பாண்டுவின் அண்ணனாவான், எனவே அவன் பாண்டுவின் தந்தையைப் போன்றவன்" என்றிருக்கிறது.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அவளால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், அற ஆன்மா கொண்டவனும், ஆசைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தியவனுமான யுதிஷ்டிரன், தன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து பெருந்துயரில் மூழ்கியவனானான். பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த மன்னன் ஒரு சொல்லும் சொல்லாதிருந்தான்.(17) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், சிறிது நேரம் சிந்தித்து, உற்சாகமற்றவனாக, கவலையிலும், துன்பத்திலும் மூழ்கியவனாகத் தன் அன்னையிடம் {குந்தியிடம்},(18) "உண்மையில், இதில் உன் நோக்கமென்ன? இதை நீ செய்வது உனக்குத் தகாது. என்னால் ஒருபோதும் உனக்கு அனுமதியளிக்க முடியாது. நீ எங்களிடம் கருணை காட்டுவதே உனக்குத் தகும்.(19) ஓ! இனிய குணங்களைக் கொண்டவளே, முன்பு நாங்கள் ஹஸ்தினாபுரத்திலிருந்து காடுகளுக்குச் செல்லப் புறப்பட்ட போது, விதுலை தன் மகனுக்கு அறிவரை சொன்ன கதையைச்[3] சொல்லி எங்களை முயற்சியில் ஈடுபடத் தூண்டியவள் நீயே. இப்போது எங்களைக் கைவிடுவது உனக்குத் தகாது.(20) வாசுதேவன் {கிருஷ்ணன்} சொன்ன உன்னுடைய ஞானச் சொற்களால் வழிநடத்தப்பட்டுப் பூமியின் மன்னர்களைக் கொன்று இந்த அரசுரிமையை வென்றிருக்கிறேன்.(21) வாசுதவேனிடம் இருந்து நான் கேள்விப்பட்ட உன்னுடைய புத்தி இப்போது எங்கே? நீ எங்களுக்குக் கற்பித்த க்ஷத்திரிய நடைமுறைகளில் இருந்து நீ வீழ விரும்புகிறாயா?(22) எங்களையும், இந்த நாட்டையும், பெரும்புகழைக் கொண்டவளும், உன்னுடைய மருமகளுமான இவளையும் கைவிட்டு, அடைதற்கரிதான காடுகளில் நீ எவ்வாறு வாழ்வாய்? மனம் இரங்குவாயாக" என்றான் {யுதிஷ்டிரன்}.(23)
[3] இந்தக் கதை உத்யோக பர்வம் பகுதி 133ல் வருகிறது.
கண்களில் கண்ணீருடன் குந்தி தன் மகனின் இந்தச் சொற்களைக் கேட்டாலும் தன் வழியில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது பீமன் அவளிடம்,(24) "ஓ! குந்தியே, அரசுரிமை வெல்லப்பட்டு, உன் பிள்ளைகளால் அடையப்பட்ட அந்த அரசுரிமையை நீ அனுபவிக்கும் காலத்தில், நீ செய்ய வேண்டிய அரச கடமைகள் காத்திருக்கும்போது, உன் மனத்தைப் பற்றியிருக்கும் இந்த ஆசை எங்கிருந்து வந்தது?(25) பின் ஏன் எங்களைப் பூமியை அழிக்க ஏவினாய்? அனைவரையும் விட்டுவிட்டு காடுகளையே உன் வசிப்பிடமாக்கிக் கொள்ள நீ விரும்புவதற்கான காரணமென்ன?(26) நாங்கள் காடுகளில்தானே பிறந்தோம். நாங்கள் பிள்ளைகளாக இருந்தபோது காடுகளில் இருந்து எங்களை நீ ஏன் {இங்குக்} கொண்டுவந்தாய்? கவலையிலும், துன்பத்திலும் மூழ்கியிருக்கும் மாத்ரியின் இரு மகன்களைப் பார்.(27) ஓ! தாயே, மனம் இரங்குவாயாக. ஓ! பெரும்புகழைக் கொண்டவளே {குந்தியே}, இப்போது நீ காட்டுக்குச் செல்லாதே. வலிமையால் அடையப்பட்டு, இன்று யுதிஷ்டிரருடையதாக இருக்கும் செழிப்பை நீ அனுபவிப்பாயாக" என்றான் {பீமன்}.(28)
காட்டுக்குள் ஓய்வதை உறுதியாகத் தீர்மானித்திருந்த குந்தி, தன் மகன்களின் இந்தப் புலம்பல்களை அலட்சியம் செய்தாள்.(29) சுபத்திரையுடன் கூடியவளும், உற்சாகமற்ற முகத்தைக் கொண்டவளுமான திரௌபதி, காட்டுக்குச் செல்லும் விருப்பத்துடன் பயணப்பட்டுக் கொண்டிருந்த தன் மாமியாரை அழுதுகொண்டே பின்தொடர்ந்து சென்றாள்.(30) பெரும் ஞானம் கொண்டவளும், உலகத்தில் இருந்து ஓயும் உறுதியான தீர்மானம் கொண்டவளுமான அந்த அருளப்பட்ட மங்கை {குந்தி}, அழுது கொண்டிருக்கும் பிள்ளைகளை அடிக்கடி பார்த்துக் கொண்டே நடந்து சென்றாள்.(31) பாண்டவர்கள், தங்கள் மனைவியர் மற்றும் பணியாட்கள் அனைவருடனும் அவளைப் பின்தொடர்வதைத் தொடர்ந்தனர். அப்போது அவள் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, தன் பிள்ளைகளிடம் இந்தச் சொற்களைச் சொன்னாள்" {என்றார் வைசம்பாயனர்}.(32)
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 16ல் உள்ள சுலோகங்கள் : 32
ஆங்கிலத்தில் | In English |