Tuesday, December 17, 2019

அர்ஜுனனின் சொல்! - அஸ்வமேதபர்வம் பகுதி – 86

The words of Arjuna! | Aswamedha-Parva-Section-86 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 71)


பதிவின் சுருக்கம் : பலராமன் முதலியோருடன் ஹஸ்தினாபுரம் வந்த கிருஷ்ணன்; அர்ஜுனனின் சொற்களை யுதிஷ்டிரனிடம் சொன்னது...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பூமியின் தலைவர்களும், வேதங்களை அறிந்தவர்களுமான மன்னர்கள் வந்ததைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், பீமனிடம்,(1) "ஓ! மனிதர்களின் தலைவா, மனிதர்களில் முதன்மையானவர்களான இந்த மன்னர்கள் அனைவரும் உயர்ந்த மதிப்புக்குரியவர்கள் என்பதால் அவர்களுக்கு உரிய முறையான கௌரவங்கள் அளிக்கப்படட்டும்" என்றான்.(2) பெரும் புகழைக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், வலிமையும், சக்தியும் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான பீமசேனன், இரட்டையர்களின் {நகுல சகாதேவனின்} துணையுடன் அவ்வாறே செயல்பட்டான்.(3)


மனிதர்கள் அனைவரிலும் முதன்மையான கோவிந்தன் {கிருஷ்ணன்}, தன் முன்னணியில் பலதேவனுடனும், விருஷ்ணிகள் துணையுடனும் அங்கே வந்தான்.(4) அவனுடன் யுயுதானன் {சாத்யகி}, பிரத்யும்னன், கதன், நிசடன், ஸாம்பன், கிருதவர்மன் ஆகியோரும் வந்தனர்.(5) வலிமைமிக்கத் தேர்வீரனான பீமன் அவர்களுக்கு மதிப்புமிக்க வழிபாட்டைக் காணிக்கையாக்கினான். அதன் பிறகு அந்த இளவரசர்கள், தங்களுக்கென ஒதுக்கப்பட்டவையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான அரண்மனைகளுக்குள் நுழைந்தனர்.(6)

மதுசூதனன் {கிருஷ்ணன்}, யுதிஷ்டிரனுடனான உரையாடலின் இறுதியில், பல போர்களின் விளைவால் அர்ஜுனன் மெலிந்திருப்பதைக் குறிப்பிட்டான்.(7) குந்தியின் மைந்தன் {யுதிஷ்டிரன்}, அர்ஜுனனைக் குறித்துப் பகைவரைத் தண்டிப்பவனான கிருஷ்ணனிடம் மீண்டும் மீண்டும் கேட்டான். அண்டத்தின் தலைவன் {கிருஷ்ணன்}, தர்மனின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்}, சக்ரனின் மகனான ஜிஷ்ணு குறித்துப் பேசத் தொடங்கினான்.(8) {கிருஷ்ணன்}, "ஓ! மன்னா, துவாரகையில் வசிப்பவனும், நம்பிக்கைக்குரியவனுமான என்னுடைய மனிதன் {ஒற்றனாக இருக்கலாம்} ஒருவன், என்னிடம் வந்தான். அவன் பாண்டு மகன்களில் முதன்மையான அர்ஜுனனைக் கண்டு வந்திருந்தான். உண்மையில், பல போர்களினால் களைத்திருக்கும் பின்னவன் {அர்ஜுனன்} மிகவும் மெலிந்திருக்கிறான் {என்றும்}.(9) ஓ! பலமிக்க ஏகாதிபதி, அந்த வலிமைமிக்கவன் {அர்ஜுனன்} நமக்கு மிக அருகில் இருக்கிறான் என்றும் என்னுடைய மனிதன் எனக்குத் தெரிவித்தான். உமது குதிரை வேள்வியை நிறைவேற்றுவதில் உம்மை நிறுவிக் கொள்வீராக" என்றான் {கிருஷ்ணன்}.(10)

அவ்வாறு சொல்லப்பட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அவனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! மாதவா, நற்பேற்றினாலேயே அர்ஜுனன் பாதுகாப்பாகத் திரும்பி வருகிறான்.(11) ஓ! யாதவர்களைத் திளைக்கச் செய்பவனே, பாண்டு மகன்களில் வலிமைமிக்க வீரனான அவன் இக்காரியம் குறித்து என்ன சொல்லி அனுப்பியிருக்கிறான் என்பதை உன்னிடம் உறுதி செய்து கொள்ள விரும்புகிறேன்" என்றான்.(12)

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், நாநயமிக்க மனிதர்களில் முதன்மையாவனும், விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் தலைவனுமான அவன் {கிருஷ்ணன்}, அற ஆன்மா கொண்ட அந்த ஏகாதிபதியிடம் இச்சொற்களைச் சொன்னான்,(13) {கிருஷ்ணன்}, "ஓ! பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, என்னுடையவனான அந்த மனிதன், பார்த்தனின் சொற்களை நினைவுகூர்ந்து, "ஓ! கிருஷ்ணா, வேளை வரும்போது என்னுடைய இந்தச் சொற்களை யுதிஷ்டிரரிடம் சொல்வாயாக" என்று சொன்னான்.(14) {யுதிஷ்டிரிடம்} ஓ! கௌரவர்களின் தலைவா, (உமது வேள்விக்கு) மன்னர்கள் பலர் வருவார்கள். அவர்கள் வரும்போது அவர்கள் உயர்வாகக் கௌரவிக்கப்பட வேண்டும். உண்மையில், அதுவே நமக்குத் தகும் {என்ற தன் சொற்களைச் சொல்லுமாறு அர்ஜுனன் சொல்லி அனுப்பியிருக்கிறான்}.(15)

{மேலும், என்னுடைய [கிருஷ்ணனின்] மனிதனிடம் அர்ஜுனன்}, "ஓ!கௌரவங்களை அளிப்பவனே, (ராஜசூய வேள்வி நடந்தபோது) அர்க்கியம் அளிக்கும் நேரத்தில் நடந்ததற்கு ஒப்பான இடரேதும் நிகழாமல் தவிர்ப்பதற்குரிய தகுந்த செயல்களைச் செய்ய வேண்டும் என்ற என் வேண்டுகோளையும் மன்னரிடம் {யுதிஷ்டிரரிடம்} தெரிவிப்பாயாக. கிருஷ்ணனும் இஃதை அங்கீகரிக்கட்டும்" {என்றும் அர்ஜுனன் சொல்லி அனுப்பியிருக்கிறான்}. ஓ! மன்னா {யுதிஷ்டிரரே} மன்னர்களின் பகையுணர்வுகளால் மக்கள் கொல்லப்படாதிருக்கட்டும்.(16,17) என்னுடையவனான அந்த மனிதன், தனஞ்சயனின் சொற்களை மேலும் சொன்னான். அவற்றை நான் மீண்டும் சொல்கிறேன் கேட்பீராக.(18)

{அர்ஜுனனின் சொற்களில்}, "ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, மணிப்புர ஆட்சியாளனான என் அன்புக்குரிய மகன் பப்ருவாஹனன், வேள்விக்கு வருவான்.(19) எனக்காக நீர் அவனைக் கௌரவிப்பீராக. ஓ! பலமிக்கவரே, அவன் எப்போதும் என்னிடம் பற்று கொண்டவனாகவும், ஆழமான அர்ப்பணிப்பு கொண்டவனாகவும் இருக்கிறான்" {என்று அர்ஜுனன் தன் மனிதனிடம் சொல்லியனுப்பி இருப்பதாகக் கிருஷ்ணன் சொன்னான்}.(20) இச்சொற்களைக் கேட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன் அவற்றை அங்கீகரித்துப் பின்வருமாறு சொன்னான்".(21)



அஸ்வமேதபர்வம் பகுதி – 86ல் உள்ள சுலோகங்கள் : 21
ஆங்கிலத்தில் | In English