Monday, December 16, 2019

யாகசாலை! - அஸ்வமேதபர்வம் பகுதி – 85

Sacrificial ground! | Aswamedha-Parva-Section-85 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 70)


பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் ஹஸ்தினாபுரத்திற்கு வந்து கொண்டிருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்த யுதிஷ்டிரன்; பிராமணர்களை வரச்செய்து பீமனை யாகசாலை அமைக்கச் செய்தது; பல நாடுகளில் இருந்து வந்த மன்னர்களும், மக்களும்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "இந்தச் சொற்களைச் சொன்ன பார்த்தன் {அர்ஜுனன்}, விருப்பப்படி திரியும் அந்தக் குதிரையைப் பின்தொடர்ந்து சென்றான். அந்த வேள்விக் குதிரை, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} நோக்கிச் செல்லும் சாலையில் திரும்பியது.(1) குதிரை திரும்பியதைச் செய்தி சுமப்பவர்களின் {தன் சாரர்களின் / ஒற்றர்களின்} மூலம் யுதிஷ்டிரன் கேள்விப்பட்டான். அர்ஜுனன் நலமாகவும், உற்சாகத்துடனும் இருப்பதையும் கேட்டு அவன் மகிழ்ச்சியால் நிறைந்தான்[1].(2) காந்தாரர்களின் நாட்டிலும், பிற நாடுகளிலும் விஜயனால் செய்யப்பட்ட அருஞ்செயல்களைக் கேட்ட மன்னன் பெரிதும் மகிழ்ச்சியடைந்தான்.(3) அதே வேளையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், மாக மாதத்தின் வளர்பிறை பனிரெண்டாம் நாள் வந்ததைக் கண்டு, சாதகமான நட்சத்திரமும் {மாகமாஸத்திய [மாசி மாதத்து] துவாதசியும், புஷ்ய [பூசம்] நக்ஷத்திரமும் கூடிய தினம்} இருப்பதைக் கண்டு,(4) பீமன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகிய தன் சகோதர்கள் அனைவரையும் அழைத்தான்.


[1] "சாரர் என்ற சொல் எப்போதும் ஒற்றரையே குறிக்காது. பழங்கால மன்னர்கள் ஒற்றர்களையும் கொண்டிருந்தார்கள் என்றாலும், அவர்கள் முறையான செய்தித் துறையையும் வைத்திருந்தனர். ஒவ்வொரு முக்கிய நிகழ்வையும் மன்னனுக்குச் சரியான தரவுகளுடன் செய்வது அவர்களது தொழிலாகும். மஸல்மான்களின் காலத்தில் இருந்த செய்திப்பிரிவு எழுத்தர்கள், ஹிந்து காலத்தில் இருந்த சாரர்களின் வழித்தோன்றல்களே" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "யுதிஷ்டிரர், அது திரும்பியதைச் சாரன் சொல்லக் கேட்டார்" என்றிருக்கிறது.

ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயா}, பெருஞ்சக்தி கொண்டவனும், கடமைகளை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனுமான மன்னன் {யுதிஷ்டிரன்} இந்தச் சொற்களை உரிய காலத்தில் சொன்னான். உண்மையில், பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, தாக்குபவர்கள் அனைவரிலும் முதல்வனான பீமனிடம்,(5,6) "ஓ! பீமசேனா, உன் தம்பி (அர்ஜுனன்) குதிரையுடன் திரும்பி வருகிறான். அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்ற மனிதர்களிடம் இருந்து இதை நான் அறிந்தேன்.(7) (வேள்விக்கான) காலம் வந்துவிட்டது. வேள்விக் குதிரையும் அருகில் வந்துவிட்டது. மாக மாதத்து முழு நிலவு நாள் நடந்து கொண்டிருக்கிறது. ஓ! விருகோதரா, இம்மாதம் கடக்க இருக்கிறது {இன்னும் ஒரு மாதகாலம்தான் இருக்கிறது}.(8) எனவே, கல்விமான்களும், வேதங்களை அறிந்தவர்களுமான பிராமணர்கள், குதிரை வேள்வியை வெற்றிகரமாக நிறைவேற்ற தகுந்த இடத்தைப் பார்க்கட்டும்" என்றான்.(9)

இவ்வாறு சொல்லப்பட்ட பீமன் அந்த அரச ஆணைக்குக் கீழ்ப்படிந்தான். சுருள் முடி கொண்ட அர்ஜுனன் திரும்பி வருவதைக் கேட்டு அகமகிழ்ந்தான்.(10) பிறகு பீமன், வேள்விச்சாலைகள் வகுப்பதற்கும், கட்டடங்கள் கட்டுவதற்கும் உரிய விதிகளை நன்கறிந்த எண்ணற்ற மனிதர்களுடன் வெளியே புறப்பட்டுச் சென்றான். அவன் தன்னுடன், வேள்விச் சடங்குகள் அனைத்தையும் நன்கறிந்த பிராமணர்கள் பலரை உடன் அழைத்துச் சென்றான்.(11) ஓர் அழகிய இடத்தைத் தேர்ந்தெடுத்த பீமன், வேள்விச்சாலைக்கான மதில்களை அமைப்பதற்காக அதை முறையாக அளந்தான். அதில் எண்ணற்ற வீடுகளும், மாளிகைகளும் கட்டப்பட்டன, அகலமான நெடுஞ்சாலைகளும் அதில் அமைக்கப்பட்டன.(12) அந்தக் கௌரவ வீரன் மிக விரைவில் அந்தச் சாலையை நுற்றுக்கணக்கான சிறந்த மாளிகைகளால் நிரம்பியதாக்கினான். அதன் பரப்பு சமன்படுத்தப்பட்டு, தங்கம் மற்றும் ரத்தினங்களால் பளபளப்பாக்கப்பட்டு, பொன்னாலான பல்வேறு அமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டது.(13)

பிரகாசமான தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், உயர்ந்தவையுமான தூண்களும், அகலமான வெற்றி வளைவுகளும் அந்த வேள்விச்சாலைக்குள் கட்டப்பட்டன. இவையாவும் பசும்பொன்னால் செய்யப்பட்டன.(14) அறம்சார்ந்த ஆன்மா கொண்டவனான அந்த இளவரசன் {பீமன்}, பெண்கள் தங்குவதற்கும், பல்வேறு நாடுகளில் இருந்து வருபவர்களும், தங்கள் இருப்பால் வேள்வியைச் சிறப்பிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுபவர்களுமான எண்ணற்ற மன்னர்கள் தங்குவதற்கும், உரிய அறைகளைச் செய்தான்.(15) அந்தக் குந்தியின் மகன், பல்வேறு நாடுகளில் இருந்து வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் பிராமணர்களுக்கும் உரிய மாளிகைகள் பலவற்றையும் கட்டினான்.(16)

பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமசேனன், மன்னனின் ஆணையின் பேரில், பூமியின் பெரும் மன்னர்களிடம் தூதர்களை அனுப்பினான்.(17) அந்தச் சிறப்புமிக்க மன்னர்களும், குரு ஏகாதிபதிக்கு ஏற்புடையதைச் செய்வதற்காக அவனுடைய குதிரை வேள்விக்கு {அஸ்வமேத யாகத்துக்கு} வந்தனர். மேலும் அவர்கள் தங்களுடன் ரத்தினங்களையும், பெண் பணியாட்கள் பலரையும், குதிரைகள் மற்றும் ஆயுதங்கள் பலவற்றையும் கொண்டு வந்திருந்தனர்.(18) அந்த அரங்கிற்குள் வசித்த உயர் ஆன்ம மன்னர்கள் எழுப்பியச் சொர்க்கத்தையே எட்டிய ஒலிகள், முழங்கும் பெருங்கடலால் உண்டாக்கப்படும் ஒலிக்கு ஒப்பானதாக இருந்தன.(19) குருக்களைத் திளைக்கச் செய்பவனான மன்னன் யுதிஷ்டிரன், தன் வேள்விக்கு வந்திருந்த ஏகாதிபதிகளுக்கு உரிய பல்வேறு உணவு மற்றும் பான வகைகளையும், தெய்வீக அழகுடைய படுக்கைகளையும் ஒதுக்கினான்.(20)

பாரதர்களின் தலைவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், பல்வேறு வகைப் பயிர்கள், கரும்பு மற்றும் பால் ஆகியவற்றுடன் நன்கு நிரம்பிய பல்வேறு கொட்டகைகளை (விருந்தினர்களுடன் வரும்) விலங்குகளுக்கென ஒதுக்கினான்.(21) உயர்ந்த நுண்ணறிவைக் கொண்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனுடைய அந்தப் பெரும் வேள்விக்குப் பிரம்மத்தை ஓதுபவர்களான முனிவர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்திருந்தனர்.(22) உண்மையில், ஓ! பூமியின் தலைவா, அப்போது வாழ்ந்து வந்தவர்களில் மறுபிறப்பாள வகையைச் சார்ந்தவர்களில் முதன்மையானவர்கள் அனைவரும் தங்கள் சீடர்களுடன் அந்த வேள்விக்கு வந்தனர். குரு மன்னன் {யுதிஷ்டிரன்} அவர்கள் அனைவரையும் வரவேற்றான்.(23) பெரும் சக்தி கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், செருக்கனைத்தையும் கைவிட்டு, தன் விருந்தினர்கள் அனைவரையும் பின்தொடர்ந்து அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அரங்குகளுக்குச் சென்றான்.(24) அப்போது வேள்விக்குத் தேவையான ஏற்பாடுகள் அனைத்தையும் நிறைவேற்றிய கைவினைஞர்களும் {ஸ்தபதிகளும்}, பொறியாளர்களும் {சிற்பிகளும்} அது குறித்து மன்னன் யுதிஷ்டிரனிடம் தெரிவித்தனர்.(25) அனைத்தும் ஆயத்தமாக இருப்பதைக் கேட்டவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், விழிப்பும், கவனமும் நிறைந்தவனாகத் தன்னை முறையாக மத்திக்கும் தன் தம்பிகள் அனைவருடன் பெரும் மகிழ்ச்சியடைந்தான்".(26)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "யுதிஷ்டிரனுடைய அந்தப் பெரும் வேள்வி தொடங்கிய போது, நாநயமிக்கச் சொல்லேர் உழவர்கள் {வித்வான்கள்} பலர், ஒருவரையொருவர் வெல்ல விரும்பி, பல்வேறு முன்மொழிவுகளைத் தொடங்கி வைத்து, அவற்றில் சர்ச்சை செய்து கொண்டிருந்தனர்[2].(27) ஓ! பாரதா, (அங்கே அழைக்கப்பட்டிருந்த) மன்னர்கள், தேவர்களுடைய தலைவனின் {இந்திரனின்} வேள்விக்கே ஒப்பானதும், பீமனால் செய்யப்பட்டதுமான அந்த வேள்விக்கான சிறந்த ஏற்பாடுகளைக் கண்டனர்.(28)

[2] ஹேதுவாதிகள் என்பவர்கள் பொருளறிவு குறித்தவற்றில் சச்சரவும் செய்யும் வாதஞ்செய்வோர் அல்லது தத்துவஞானிகளாவர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அவர்கள், பொன்னாலான வெற்றி வளைவுகள் {வாயில்கள்} பலவற்றையும், அனுபவிக்கத்தகுந்த ஆடம்பரப் படுக்கைகள், இருக்கைகள் மற்றும் பிற பொருட்கள் பலவற்றையும், பல்வேறு இடங்களில் இருந்து அங்கே திரண்டிருந்த மனிதக்கூட்டத்தையும் அங்கே கண்டனர்.(29) அங்கே அவர்கள், கொள்கலன்கள், பாத்திரங்கள், கொப்பரைகள், நீர்க்கலன்கள், மூடிகள் மற்றும் விரிப்புகள் {குடங்கள், பாத்திரங்கள், கடாஹங்கள், கலசங்கள், வர்த்தமானங்கள்} ஆகியவற்றைக் கண்டனர். அங்கே அழைக்கப்பட்டிருந்த மன்னர்கள் பொன்னாலாகாத எதையும் அங்கே காணவில்லை.(30) சாத்திர வழிகாட்டுதலின் படி மரத்தாலும், பொன்னாலும் அலங்கரிக்கப்பட்ட வேள்வித்தம்பங்கள் {யூபங்கள்} பலவும் அமைக்கப்பட்டன. பெரும் பிரகாசத்துடன் கூடிய அவை, (சாத்திர மந்திரங்களால்) அர்ப்பணிக்கப்பட்டு முறையாக நிறுவப்பட்டன.(31) மண்ணுக்குரிய விலங்குகள் அனைத்தும், நீருக்குரியவை அனைத்தும் அச்சந்தர்ப்பத்தில் அங்கே திரட்டப்பட்டிருப்பதை அம்மன்னர்கள் கண்டனர்.(32)

பசுக்கள் பலவும், எருமைகள் பலவும், வயது முதிர்ந்த பெண்கள் பலரும், நீர்வாழ் விலங்குகள் பலவும், இரை தேடும் விலங்குகள் பலவும், பறவை இனங்கள் பலவும். ஈன்று பெறும் உயிரினங்கள், முட்டையிட்டு குஞ்சு பெறும் உயிரினங்கள், அழுக்கு மற்றும் கழிவில் இருந்து உண்டாகும் உயிரினங்கள் பலவும், தாவர வகைப் பலவும் மலைகளில் வளரும் விலங்குகள் மற்றும் செடிகள் பலவும் அங்கே இருப்பதை அவர்கள் கண்டனர்.(33,34) பாகிலிடப்பட்ட விலைமதிப்புமிக்க இன்பண்டங்கள் பிராமணர்கள் மற்றும் வைசியர்கள் ஆகிய இருவருக்காகவும் குவியல் குவியல்களாக அங்கே தயாராக வைக்கப்பட்டிருந்தன. நூறாயிரம் {ஒரு லட்சம்} பிராமணர்கள் உண்டதும், துந்துபிகளும், கைத்தாளங்களும் ஒலிக்கப்பட்டன.(36) துந்துபிகள் மற்றும் கைத்தாளங்களின் ஒலிகள் அடிக்கடி கேட்கும் வண்ணம் அங்கே உணவு உண்டவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் இருந்தது. உண்மையில், நாளுக்கு, நாள் அவ்வொலிகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.(37)

பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் யுதிஷ்டிரனின் வேள்வி இவ்வாறே நடந்து கொண்டிருந்தது. ஓ! மன்னா {ஜனமேஜயா}, அச்சந்தர்ப்பத்தில் உணவு மலைகள் அர்ப்பணிக்கப்பட்டன. தயிர் மற்றும் நெய்யாலான பெரிய குளங்களும், தடாகங்களும் அங்கே காணப்பட்டன.(38) ஓ! ஏகாதிபதி, ஜம்புத்வீபத்தில் உள்ள நாடுகள் மற்றும் மாகாணங்களில் இருந்த மொத்த மக்கள் தொகையும் ஒன்றுதிரண்டு வந்த அந்தப் பெரும் வேள்வியில் இருப்பதாகத் தெரிந்தது.(39) ஆயிரக்கணக்கான நாட்டைச் சேர்ந்தவர்களும், இனங்களைச் சேர்ந்தவர்களும் அங்கே இருந்தனர். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களும், பொன்னாலான பிரகாசமான காது வளையங்களை அணிந்தவர்களுமான பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் தங்கள் கரங்களின் எண்ணற்ற பாத்திரங்களை ஏந்தி, மறுபிறப்பாள வகையைச் சார்ந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவைப் பரிமாறினர்.(40,41) மன்னர்கள் உண்பதற்கும், பருகுவதற்கும் உகந்த மிக மதிப்புமிக்கப் பல்வேறு வகை உணவு மற்றும் பானங்களைப் பாண்டவர்களின் பணியாட்கள் பிராமணர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(42)

அஸ்வமேதபர்வம் பகுதி – 85ல் உள்ள சுலோகங்கள் : 42

ஆங்கிலத்தில் | In English