Censurable indication! | Aswamedha-Parva-Section-87 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 72)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்களில் மற்ற நால்வரைவிட அர்ஜுனனுக்குப் பெரும் அலைச்சல் நேரிடும் வகையில் அவன் உடலில் உள்ள லக்ஷணக் குறை எதுவெனக் கிருஷ்ணனிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அதைக் கூறிய கிருஷ்ணன்; குதிரையுடன் திரும்பி வந்த அர்ஜுனன்...
யுதிஷ்டிரன், "ஓ! கிருஷ்ணா, உன்னுடைய இனிமையான சொற்களை நான் கேட்டேன். அவை உன்னால் பேசத் தகுந்தனவாக இருந்தன. அவை மகிழ்ச்சி நிறைந்தவையாகவும், அமுதத்தைப் போல இனிமையாகவும் இருந்தன. உண்மையில், ஓ! பலமிக்கவனே, அவை என் இதயத்தைப் பேரின்பத்தால் நிறைத்தன.(1) ஓ! ரிஷிகேசா, பூமியின் மன்னர்களுடன் விஜயனுக்கு நேர்ந்திருக்கும் போர்கள் எண்ணற்றவையென நான் கேட்டிருக்கிறேன்.(2) சுகத்தில் {வசதி வாய்ப்புகளில்} இருந்து எப்போதும் தொடர்பறுந்தவனாகப் பார்த்தன் இருப்பதன் காரணம் யாது? விஜயன் பெரும் நுண்ணறிவு பெற்றவனாக இருக்கிறான். எனவே, இஃது என் இதயத்திற்குப் பெரும் துன்பத்தைத் தருகிறது.(3) ஓ! ஜனார்த்தனா, தொழிலில் இருந்து விலகியிருக்கும்போதெல்லாம் நான் குந்தியின் மகனான ஜிஷ்ணுவையே {அர்ஜுனனையே} நினைக்கிறேன். பாண்டுக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிப்பவனான அவன் பெரும் துன்பத்தை அனுபவித்திருக்கிறான்.(4) அவனுடைய உடலில் அனைத்து மங்கலக் குறிகளும் இருக்கின்றன. எனினும், ஓ! கிருஷ்ணா, அவன் {அர்ஜுனன்} எப்போதும் துன்பத்தையும், வசதியின்மையையும் அனுபவிக்கக் காரணமான அந்தக் குறியீடு யாது?(5) குந்தியின் மகனான அவனே, துன்பத்தில் பெரும்பகுதியைச் சுமக்கிறான். அவன் உடலில் நிந்திக்கத்தக்க குறியீடு {கெட்ட லக்ஷணம்} எதையும் நான் காணவில்லை. இதைக் கேட்க நான் தகுந்தவனெனில் எனக்கு அதை விளக்கிச் சொல்வாயாக" என்று கேட்டான்.(6)
இவ்வாறு சொல்லப்பட்டவனும், போஜ இளவரசர்களின் மகிமையை அதிகரிப்பவனுமான ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, நீண்ட நேரம் சிந்தித்த பிறகு, பின்வருமாறு பதிலளித்தான்:(7) "மனிதர்களில் சிங்கமான இவனது தாடையெலும்புகள் சற்றே உயர்ந்திருப்பதைத் தவிர நிந்திக்கத்தக்க இயல்பு வேறு எதையும் நான் காணவில்லை.(8) இதன் விளைவாகவே மனிதர்களில் முதன்மையான இவன் எப்போதும் சாலைகளிலேயே இருக்கிறான். இவன் மகிழ்ச்சியற்றவனாக இருப்பதற்கு வேறு எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை[1]" என்றான்.(9)
[1] கும்பகோணம் பதிப்பில், "புருஷஸ்ரேஷ்டனான இந்த அர்ஜுனனுக்குப் பிண்டிகைகள் அதிகமாக இருக்கின்றன. இதைத் தவிர இவனிடத்தில் வேறு ஒரு கெட்ட லக்ஷணத்தையும் நான் காணவில்லை. புருஷஸ்ரேஷ்டனான அவன் எப்பொழுதும் மார்க்கங்களில் இருக்கிறான். அவன் துக்கத்தை அனுபவிக்கக்கூடிய வேறு லக்ஷணத்தை நான் காணவில்லை" என்றிருக்கிறது. பிண்டிகைகள் என்பதன் அடிக்குறிப்பில், "முழங்காலுக்குக் கீழ் பின்புறமாக உள்ள சதை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்ற இருக்கிறது. மூலத்தில், "puruṣasiṃhasya piṇḍike 'syātikāyataḥ புருஷஸிம்ʼஹஸ்ய பிண்டிகே(அ)ஸ்யாதி⁴கே யத:" என்றிருக்கிறது.
பெரும் நுண்ணறிவைக் கொண்டவனான கிருஷ்ணனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மனிதர்களில் முதன்மையான மன்னன் யுதிஷ்டிரன், அந்த விருஷ்ணிகளின் தலைவனிடம் அவ்வாறே இருப்பதாகச் சொன்னான்.(10) எனினும், (அர்ஜுனனுக்கு களங்கமேதும் கற்பிக்கப்படுதைப் பொறுத்துக் கொள்ள முடியாத) இளவரசி திரௌபதி, கிருஷ்ணனை நோக்கி கோபத்துடன் சாய்வாகப் பார்த்தாள். கேசியைக் கொன்றவனான ரிஷிகேசன், தன் நண்பரான பாஞ்சால இளவரசி (தன் நண்பனிடம் {அர்ஜுனனிடம்}) வெளிப்படுத்திய அன்பின் {காதலின்} குறியீட்டை அங்கீகரித்தான்[2].(11)
[2] "திரௌபதி எப்போதும் கிருஷ்ணனால் சகியாகவோ, நண்பராகவோ கருதப்படுவது கவனிக்கத்தக்கது. உலக அளவில் பெண்கள் ஆண்களைவிடத் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்ட காலத்தில் கிருஷ்ணன் எதிர் பாலினத்தைச் சேர்ந்த ஒருத்தியை வீரப் பெருந்தகைமை கொண்டவளாக உயர்வாகக் கருதினான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "துருபதன் மகளான கிருஷ்ணையோ அஸூயையுடன் கிருஷ்ணனைக் குறுக்காகப் பார்த்தாள். கேசியைக் கொன்றவரும், நண்பரும், தனஞ்சயனே போன்றவருமான ஹ்ருஷீகேசரும், தோழனான அர்ஜுனனிடத்தில் அவளுக்குள்ள அந்தப் பிரீதியை ஏற்றுக் கொண்டார்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், கிருஷ்ணை திரௌபதி, கிருஷ்ணனைக் குறுக்குப் பார்வையில் பார்த்தாள். கேசியைக் கொன்றவனும் இதை அன்பின் குறியீடாக ஏற்றுக் கொண்டான். அவள் அவனுடைய நண்பராவாள். தனஞ்சயனும் அவனுடைய நண்பனும், ரிஷிகேசனையே போன்றவனுமாவான்" என்றிருக்கிறது.
குதிரையைப் பின்தொடர்ந்து சென்ற அர்ஜுனனின் இனிமையான வெற்றிகளைக் கேட்ட பீமசேனனும், வேள்விப் புரோகிதர்கள் உள்ளிட்ட பிற குருக்களும் {கௌரவர்களும்} உயர்வான மகிழ்ச்சியை அடைந்தனர்.(12) அவர்கள் அர்ஜுனனைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும்போதே, அந்த உயர்ஆன்ம வீரனிடம் இருந்து ஒரு தூதன் செய்தியைச் சுமந்து வந்தான்.(13) அந்தப் புத்திசாலியான தூதன், குரு மன்னனின் முன்னிலைக்கு வந்து, மதிப்புடன் தலை வணங்கி, மனிதர்களில் முதன்மையான பல்குனனின் வரவைத் தெரிவித்தான்.(14) அந்தச் செய்தியைப் பெற்றதும், மகிழ்ச்சிக் கண்ணீர் மன்னனின் கண்களை மறைந்தது. தூதன் கொண்டு வந்த இனிய செய்திக்காக அவனுக்குப் பெருங்கொடைகள் வழங்கப்பட்டன.(15)
அன்றிலிருந்து இரண்டாவது நாள், மனிதர்களில் முதன்மையான அந்தக் குருக்களின் தலைவன் வந்த போது பேராரவாரம் கேட்டது.(16) அர்ஜுனனுக்கு அருகில் நடந்து வந்த அந்தக் குதிரையின் குளம்படிகளில் இருந்து எழுந்த புழுதியானது, தெய்வீகக் குதிரையான உச்சைஸ்ரவத்தால் எழுப்பட்டதைப் போல அழகாகத் தெரிந்தது.(17)
அர்ஜுனன் முன்னேறி வந்தபோது, குடிமக்களால் சொல்லப்படும் மகிழ்ச்சி நிறைந்த சொற்கள் பலவற்றைக் கேட்டான். {அவர்கள்}, "ஓ! பார்த்தா {அர்ஜுனா}, நற்பேற்றினாலேயே நீ ஆபத்துகளில் இருந்து விடுபட்டாய். மன்னன் யுதிஷ்டிரனுக்குப் புகழுண்டாகட்டும்.(18) உலகம் முழுவதும் குதிரையைச் சுற்றித் திரியவிட்டு, போரில் மன்னர்க்ள அனைவரையும் வென்று திரும்ப அர்ஜுனனைத் தவிர வேறு எவனால் முடியும்?(19) சகரனாலும், பழங்காலத்தின் உயர் ஆன்ம மன்னர்களாலும் இத்தகைய அருஞ்செயல் செய்யப்பட்டதாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை.(20) ஓ! குருத்தில் முதன்மையானவனே, நீ அடைந்த இந்தச் சாதனையை எதிர்கால மன்னர்களாலும் ஒருபோதும் அடைய முடியாது" {என்றனர்}.(21)
குடிமக்கள் சொன்ன காதுக்கினிய இத்தகைய சொற்களைக் கேட்டபடியே உயர் ஆன்ம பல்குனன் {அர்ஜுனன்}, வேள்விச்சாலைக்குள் நுழைந்தான்.(22) அப்போது மன்னன் யுதிஷ்டிரனும், அவனுடைய அமைச்சர்கள் அனைவரும், யதுக்களைத் திளைக்கச் செய்பவனான கிருஷ்ணனும், திருதராஷ்டிரனைத் தங்கள் முன்னணியில் கொண்டு, தனஞ்சயனை வரவேற்க வெளியே சென்றனர்.(23) அவன், தன் தந்தையின் (திருதராஷ்டிரனின்) பாதங்களையும், பெரும் ஞானியும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரனின் பாதங்களையும் வணங்கி விட்டு, பீமனையும், பிறரையும் வழிபட்டு, கேசவனை {கிருஷ்ணனை} ஆரத் தழுவிக் கொண்டான்.(24)
அவர்கள் அனைவரால் வழிபடப்பட்டு, உரிய சடங்குகளின்படி அவர்களை வழிபட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரன் {அர்ஜுனன்}, உடைந்த கப்பலில் இருந்த மனிதன் அலைகளால் அலைக்களிக்கப்பட்டுக் கரையை அடைந்து ஓய்ந்ததைப் போல அந்த இளவரசர்களின் துணையுடன் ஓய்ந்திருந்தான்.(25) அதே வேளையில் பெரும் ஞானம் கொண்ட பப்ருவாஹனன், தன் அன்னையரின் (சித்ராங்கதை மற்றும் உலூபியின்} துணையுடன் குருவின் தலை நகரத்திற்கு {ஹஸ்தினாபுரத்திற்கு} வந்தான்.(26) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த இளவரசன், குரு குலத்தின் பெரியோர் அனைவரையும், அங்கே இருந்த பிற மன்னர்களையும் முறையாக வணங்கி அவர்கள் அனைவராலும் பதிலுக்குக் கௌரவிக்கப்பட்டான். அதன் பிறகு அவன், தன் பாட்டியான {பிதாமஹியான} குந்தியின் சிறந்த வசிப்பிடத்திற்குள் நுழைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(27)
அஸ்வமேதபர்வம் பகுதி – 87ல் உள்ள சுலோகங்கள் : 27
ஆங்கிலத்தில் | In English |