Wednesday, December 18, 2019

செல்வப்பகிர்வு! - அஸ்வமேதபர்வம் பகுதி – 89

Distribution of wealth! | Aswamedha-Parva-Section-89 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 74)


பதிவின் சுருக்கம் : யாகம் முடிந்த பின் மன்னர்களைக் கௌரவித்து ஊருக்கனுப்பிய யுதிஷ்டிரன்...


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "முறையான சடங்குகளின் படி பலிகொடுக்கப்பட்ட வேறு சிறந்த விலங்குகளைச் சமைத்தபிறகு {பசனம் [சமையல் வழிபாடு] செய்த பிறகு}, (உலகம் முழுவதும் திரிந்து வந்த) அந்தக் குதிரையைப் புரோகிதர்கள் பலி கொடுத்தனர்.(1) அவர்கள், சாத்திர வழிகாட்டலுக்கு இணக்கமாக அந்தக் குதிரையைத் துண்டுகளாக வெட்டிய பிறகு, பெரும் நுண்ணறிவைக் கொண்டவளும், மந்திரங்கள், பொருட்கள், அர்ப்பணிப்பு என்ற மூன்று கலைகளைக் கொண்டவளுமான திரௌபதியைப் பகுக்கப்பட்ட அந்த விலங்கின் அருகில் அமரச் செய்தனர்,(2) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தண்மனங்களைக் கொண்ட பிராமணர்கள், அந்தக் குதிரையின் மஜ்ஜையை {வபையை} எடுத்து, அதை முறையாகச் சமைத்தனர்.(3) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், தன் தம்பிகள் அனைவருடன் சேர்ந்து, சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் இவ்வாறு சமைக்கப்பட்ட மஜ்ஜையிலிருந்து எழுவதும், பாவங்கள் அனைத்தையும் தூய்மையாக்கவல்லதுமான அந்தப் புகையை முகர்ந்தான்.(4) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்தக் குதிரையின் எஞ்சிய உறுப்புகள், பெரும் ஞானத்தைக் கொண்ட பதினாறு வேள்விப் புரோகிதர்களால் நெருப்பில் ஊற்றப்பட்டன {அவற்றை அவர்கள் அக்னியில் ஹோமம் செய்தார்கள்}[1].(5)


[1] கும்பகோணம் பதிப்பில், "பிராம்மண ஸ்ரேஷ்டர்கள் விதிப்படி மற்றப் பசுக்களைப் பசனம் செய்த பின்பு அவர்கள் சாஸ்திரப்படி அந்தக் குதிரையைக் கொன்றார்கள். அரசரே, சிறந்த ரித்விக்குக்கள் விதிப்படி குதிரையைக் கொன்றுவிட்டுப் பிறகு (மந்ரம், திரவ்யம், சிரத்தை என்னும்) மூன்று கலைகளுடன் கூடினவளும், நல்ல சித்தமுள்ளவளுமான அந்தத் திரௌபதியை விதிப்படி அதனருகில் உட்காரச் செய்தார்கள். பரதர்களுள் சிறந்தவரே, பிராம்மணஸ்ரேஷ்ணர்கள் சாஸ்திரப்படி அக்குதிரையின் வபையை எடுத்து வேறிடத்து மனம் செல்லாதவர்களாக விதிப்படி பக்குவம் செய்தார்கள். அப்பொழுது, தர்மராஜர் தம்பிகளுடன் எல்லாப் பாபங்களையும் போக்கக்கூடிய அந்த வபையினுடைய புகையின் வாஸனையை மோந்தார். வேந்தரே, அந்தக் குதிரையின் மிச்சமுள்ள அவயவங்களைப் பண்டிதர்களான பதினாறு ரித்விக்குக்களும் ஒன்றுசேர்ந்து அக்னியில் ஹோமம் செய்தார்கள்" என்றிருக்கிறது.

சக்ரனின் சக்தியுடன் கூடிய அந்த ஏகாதிபதியின் {யுதிஷ்டிரனின்} வேள்வியை இவ்வாறு நிறைவடையச் செய்தவரும், சிறப்புமிக்கவருமான வியாசர், தமது சீடர்களுடன் சேர்ந்து அந்த மன்னனைப் பெரிதும் புகழ்ந்தார்.(6) அப்போது யுதிஷ்டிரன், பிராமணர்களுக்கு {ஸதஸ்யர்களுக்கு} ஆயிரங்கோடி பொன் நிஷ்கங்களையும், வியாசருக்கு மொத்த பூமியையும் கொடையாக அளித்தான்[2].(7) சத்யவதியின் மகனான வியாசர், பூமியை ஏற்றுக் கொண்ட பிறகு, பாரதக் குலத்தவரில் முதன்மையானவனும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(8) "ஓ! மன்னர்களில் சிறந்தவனே, நீ எனக்குக் கொடுத்த பூமியை, நான் உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன். (பூமியால் பயனில்லாதவர்களும்) செல்வத்தை விரும்புபவர்களுமான பிராமணர்களுக்குக் கொடுப்பதற்காக, இதை {இந்தப் பூமியை} வாங்குவதற்குரிய விலையை எனக்குக் கொடுப்பாயாக" என்று கேட்டார்.(9)

[2] கும்பகோணம் பதிப்பில், "பிறகு, யுதிஷ்டிரர் விதிப்படி ஸதஸ்யர்களுக்கு ஆயிரம் கோடி நிஷ்கங்களையும், வியாஸருக்கும் மற்ற ரித்விக்குகளுக்கும் பூமியையும் கொடுத்தார்" என்றிருக்கிறது. வியாஸர் என்பதன் அடிக்குறிப்பில், "’வ்யாஸாயது’ என்பது மூலம், ‘து என்றமையால் மற்ற ரித்விக்குகளுக்கும்’ ’என்று சேர்த்துக் கொள்வதென்பது’ பழையவுரை" என்றிருக்கிறது.

பெரும் நுண்ணறிவைக் கொண்டனும் உயர் ஆன்மாவுமான யுதிஷ்டிரன், வேள்விக்கு அழைக்கப்பட்ட மன்னர்களுக்கு மத்தியில் தன் தம்பிகளுடன் இருந்து கொண்டு, அந்தப் பிராமணர்களிடம்,(10) "பெரும் குதிரை வேள்வியைச் செய்வதற்குச் சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள தக்ஷிணை பூமியே ஆகும். எனவே, இந்த வேள்விப்புரோகிதர்களுக்கு அர்ஜுனனால் வெல்லப்பட்ட பூமியை நான் கொடுத்தேன்.(11) பிராமணர்களில் முதன்மையானவர்களே, நான் காட்டுக்குச் செல்லப் போகிறேன். நீங்கள் இந்தப் பூமியை உங்களுக்குள் பகிர்ந்து கொள்வீர்களாக. உண்மையில், சதுர்ஹோத்ர வேள்வியில் செய்வது போலப் பூமியை உங்களுக்குள் நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொள்வீராக.(12) மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்களே, இப்போது பிராமணர்களுக்கு உரியவையாக இருப்பவற்றை நான் அபகரிக்க விரும்பவில்லை.(13) கல்விமான்களான பிராமணர்களே, என்னாலும், என் தம்பிகளாலும் எப்போதும் பேணி வளர்க்கப்படும் கருத்து இதுவேயாகும்" என்றான். மன்னன் இச்சொற்களைச் சொன்னபோது, அவனுடைய தம்பிகளும், திரௌபதியும், "ஆம். இதுவேதான்" என்றனர். இந்த அறிவிப்பால் உண்டான உணர்வுக் கிளர்ச்சி பெரியதாக இருந்தது.(14)

அப்போது, ஓ! பாரதா, ஆகாயத்தில் வடிவமற்ற ஒரு குரல், "நன்று, நன்று" என்று சொல்வது கேட்டது. பேசிக்கொண்டிருந்த பிராமணக் கூட்டத்தில் அவ்வாறே முணுமுணுப்புகளும் எழுந்தன.(15) தீவில் பிறந்தவரான கிருஷ்ணர் {வியாசர்}, அவனை உயர்வாகப் புகழ்ந்து, பிராமணர்களின் முன்னிலையில் யுதிஷ்டிரனிடம் மீண்டும்,(16) "பூமியானவள் உன்னால் என்னிடம் கொடுக்கப்பட்டாள். எனினும், நான் உன்னிடம் அவளைத் திருப்பித் தருகிறேன். நீ இந்தப் பிராமணர்களுக்குப் பொன்னைக் கொடுப்பாயாக. பூமி உனதாகட்டும்" என்றார்.(17)

அப்போது வாசுதேவன் {கிருஷ்ணன்}, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம், "சிறப்புமிக்க வியாசர் சொல்வது போலச் செய்வதே உமக்குத் தகும்" என்றான்.(18)

இவ்வாறு சொல்லப்பட்டவனும், குரு குலத்தில் முதன்மையானவனுமான அவன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகள் அனைவருடனும் சேர்ந்து ஆன்ம மகிழ்ச்சியடைந்து, குதிரை வேள்விக்கென விதிக்கப்பட்ட தக்ஷிணையில் மூன்று மடங்கான கோடிக்கணக்கான பொன் நாணயங்களைக் கொடையளித்தான்.(19) மருத்தனுக்குப் பிறகு அந்த சந்தர்ப்பத்தில் குரு மன்னனால் நிறைவேற்றப்பட்டதை வேறு எந்த மன்னனாலும் நிறைவேற்ற முடியாது.(20) தீவில் பிறந்த தவசியும், பெரும் கல்விமானுமான கிருஷ்ணர் {வியாசர்}, அந்தச் செல்வத்தை ஏற்றுக் கொண்டு, அதை நான்கு பகுதிகளாக்கி, வேள்விப் புரோகிதர்களுக்குக் கொடுத்தார்.(21) பூமிக்கான விலையாக அந்தச் செல்வத்தைக் கொடுத்தவனும், தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனும், சொர்க்கத்தை உறுதி செய்து கொண்டவனுமான யுதிஷ்டிரன் தன் தம்பிகளுடன் மகிழ்ந்திருந்தான்.(22) அளவற்ற செல்வத்தை அடைந்த அந்த வேள்விப் புரோகிதர்கள், பெறுபவரின் விருப்பத்திற்கேற்ப அதைப் பிராமணர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியாகப் பகிர்ந்தளித்தனர்.(23) அந்தப் பிராமணர்கள், வேள்விச்சாலைக்குள் இருந்த வெற்றி வளைவுகள், வேள்வித் தண்டுகள், குடுவைகள் மற்றும் பல்வேறு வகைப் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தங்க ஆபரணங்களையும் யுதிஷ்டிரனுக்கு ஏற்புடைய வகையில் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர்.(24)

பிராமணர்கள் தாங்கள் விரும்பிய அளவுக்குச் செல்வத்தை எடுத்துக் கொண்ட பிறகு எஞ்சிய செல்வமானது, க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் மிலேச்சர்களில் பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோரால் எடுத்துக் கொள்ளப்பட்டது.(25) இவ்வாறு பெரும் நுண்ணறிவுமிக்க மன்னன் யுதிஷ்டிரனால் கொடுக்கப்பட்ட கொடையால் நிறைவடைந்த பிராமணர்கள், மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாகத் தங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்பி சென்றனர்.(26) புனிதமானவரும், சிறப்புமிக்கவருமான வியாசர், தனக்குரிய பெரிய அளவிலான பங்காக வந்த தங்கத்தைக் குந்தியிடம் மதிப்புடன் கொடுத்தார்.(27) தன் மாமனாரிடம் {வியாசரிடம்} இருந்து அந்தக் கொடையை அன்புடன் பெற்றுக் கொண்ட பிருதை, இதய மகிழ்ச்சி கொண்டவளாகப் பல்வேறு புனிதச் செயல்களைச் செய்வதற்கு அதை அர்ப்பணித்தாள்.(28)

மன்னன் யுதிஷ்டிரன், தன் வேள்வியின் நிறைவில் நீராடிவிட்டு, தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனாக, அனைவராலும் மதிக்கப்படுபவனாகச் சொர்க்கவாசிகளுக்கு மத்தியில் உள்ள தேவர்களின் தலைவனைப் போலத் தன் தம்பிகளுக்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(29) அங்கே கூடியிருந்த மன்னர்களால் சூழப்பட்ட பாண்டுவின் மகன்கள், ஓ! மன்னா, நட்சத்திரங்களுக்கு மத்தியில் உள்ள கோள்களைப் போல அழகாகத் தெரிந்தனர்.(30) அவர்கள் அந்த மன்னர்களுக்குப் பல்வேறு ரத்தினங்கள், தங்கங்கள், யானைகள், குதிரைகள், தங்க ஆபரணங்கள், பெண் பணியாட்கள், துணிகள், பெருமளவிலான தங்கம் ஆகியவற்றைப் பரிசாக அளித்தனர்.(31) உண்மையில், ஓ! மன்னா, அங்கே அழைக்கப்பட்டிருந்த மன்னர்களுக்குச் சொல்ல முடியாத அளவுக்குச் செல்வத்தைப் பகிர்ந்தளித்த பிருதையின் மகன், கருவூலத் தலைவனான வைஸ்ரவணனை {குபேரனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(32) அடுத்ததாக வீர மன்னன் பப்ருவாஹனனை அழைத்த யுதிஷ்டிரன், பல்வேறு வகையான அபரிமிதமான செல்வத்தைக் கொடுத்து, அவன் தன் இல்லம் திரும்பிச் செல்வதற்கு அனுமதி அளித்தான்.(33)

அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தன் தங்கையான துச்சலையை நிறைவடையச் செய்வதற்காக, அவளுடைய பேரனை, அவனுடைய தந்தை வழி நாட்டில் {மன்னனாக} நிறுவினான்.(34) தன் புலன்களில் முழுக் கட்டுப்பாட்டைக் கொண்டவனான குரு மன்னன் யுதிஷ்டிரன், அங்கே கூடியிருந்தவர்களும், முறையாக வகுக்கப்பட்டவர்களும்[3], தன்னால் கௌரவிக்கப்பட்டவர்களுமான மன்னர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினான்.(35) பகைவரைத் தண்டிப்பவனும், சிறப்புமிக்கவனுமான பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, உயர் ஆன்ம கோவிந்தனையும் {கிருஷ்ணனையும்}, பெரும் வலிமை கொண்ட பலதேவனையும் {பலராமனையும்}, பிரத்யும்னனை முதல்வனாகக் கொண்ட வேறு விருஷ்ணி வீரர்கள் ஆயிரக்கணக்காணோரையும் முறையாக வழிபட்டான். தன் தம்பிகளிடன் துணையுட்ன கூடிய அவன் அவர்கள் துவாரகை திரும்புவதற்கு விடை கொடுத்தனுப்பினான்.(36,37)

[3] "’ஸுவிபக்தான்’ என்பது படிநிலை, முன்னுரிமை போன்ற கேள்விகளைப் பொருத்தவரையில் அவர்களுக்கு மத்தியில் சச்சரவோ, நிறைவின்மையோ ஏற்படாத வண்ணம் முறையாக வகைப்படுத்தப்பட்டனர் அல்லது கூட்டமாகத் திரட்டப்பட்டனர் என்பதைக் குறிக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

அபரிமிதமான உணவு, செல்வம், ரத்தினங்கள், மற்றும் பல்வேறு வகையான {ஸுரை [கள்] மற்றும் [மரத்தில் இருந்து உண்டாகும்] மைரேயம் போன்ற} மது வகைகளின் பெருங்கடல்கள் ஆகியற்றுடன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் அந்த வேள்வி இவ்வாறே கொண்டாடப்பட்டது.(38) நெய்யையே சகதியாகவும், உணவையே மலைகளாகவும் கொண்ட தடாகங்கள் அங்கிருந்தன. ஓ! பாரதக் குலத்தின் தலைவா, ஆறு வகைச் சுவைகளைக் கொண்ட பானங்களெனும் சேறுகளுடைய ஆறுகளும் அங்கிருந்தன.(39) காண்டவராகங்கள் என்றழைக்கப்படும் பாகிலிடப்பட்ட இன்பண்டங்களைச் செய்வதிலும் உண்பதிலும் ஈடுபட்ட மனிதர்கள் முடிவற்றவர்களாகவும், உணவுக்காகக் கொல்லப்பட்ட விலங்குகள் முடிவற்றவையாகவும் இருந்தன[4].(40) மதுவெறி கொண்ட மனிதர்களால் நிறைந்ததும், இன்பத்தில் நிறைந்த இளம்பெண்களுடன் கூடியதுமான அந்தப் பரந்த வெளி இருந்தது. மிருதங்க ஒலிகள் மற்றும் சங்குகளின் முழக்கங்கள் ஆகியவற்றை அந்தப் பரந்த சாலை எதிரொலித்துக் கொண்டிருந்தது. இவை யாவற்றுடன் அந்த வேள்வி மிக மகிழ்ச்சிகரமானதாக இருந்தது.(41)

[4] காண்டவராகம் என்பது திப்பிலி, (பொடியாக்கப்பட்ட) சுக்கு, உளுந்து ஆகியவற்றுடன் சர்க்கரை கலந்து செய்யப்படும் பண்டமாகும். ஒருவேளை இது தற்போது இன்றைய நகரக் கடைத்தெருக்களில் உள்ள முங்கா லட்டுவைப் போன்றதாக இருக்கலாம்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "செய்யப்படுகின்றவைகளும், புஜிக்கப் படுகின்றவைகளுமான பக்ஷ்யம் காண்டவம், ராகம், கொல்லப்படுகின்ற பசுக்கள் {விலங்குகள் என்று பொருள்} இவைகளுடைய அளவை ஜனங்கள் காணவில்லை" என்றிருக்கிறது. காண்டவம் என்பதன் அடிக்குறிப்பில், "’திப்பிலியும், சுக்கும், சேர்ந்த பருப்பு ரஸம்’ என்பது பழைய உரை" என்றும், ராகம் என்பதன் அடிக்குறிப்பில், "’சர்க்கரை சேர்ந்த பருப்பு ரஸம்’ என்பது பழைய உரை" என்றும் இருக்கிறது.

‘இனிய பொருட்கள் கொடுக்கப்படட்டும்", ’இனிய உணவு உண்ணப்படட்டும்’ என்ற ஒலிகளே அந்த வேள்வியில் பகலும், இரவும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தன. மகிழ்ச்சி நிறைந்தவர்களும், மன நிறைவு கொண்டவர்களுமான மனிதர்கள் நிறைந்த ஒரு பெரும் விழாவாக அது தெரிந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அந்த வேள்வியைக் குறித்து இந்த நாள் வரை {பாண்டவர்களுக்குப் பின் மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு வந்த ஜனமேஜயனின் காலம் வரை} பேசிக் கொண்டிருக்கின்றனர்.(42) செல்வத்தையும், ஆசைக்குரிய பல்வேறு பொருட்களையும், ரத்தினங்களையும், பல்வேறு வகைப் பானங்களையும் தாரைகளாகப் பொழிந்த பிறகு, பாரதக் குலத்தில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, தன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவனாக, தன் நோக்கம் நிறைவேறியவனாகத் தன் தலைநகருக்குள் {ஹஸ்தினாபுரத்திற்குள்} நுழைந்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(43)

அஸ்வமேதபர்வம் பகுதி – 89ல் உள்ள சுலோகங்கள் : 43

ஆங்கிலத்தில் | In English