Thursday, December 19, 2019

பொன்மயமான கீரி! - அஸ்வமேதபர்வம் பகுதி – 90

The golden mangoose! | Aswamedha-Parva-Section-90 | Mahabharata In Tamil

(அநுகீதா பர்வம் - 75)


பதிவின் சுருக்கம் : உடலின் ஒரு பக்கத்தை பொன் நிறமாகக் கொண்ட ஒரு கீரி வந்தது; வேள்வியை அவமதித்து உஞ்சவ்ருத்தி பிராமணர் ஒருவர் தர்மதேவதைக்கு ஒரு படி மாவைக் கொடுத்த மகிமையைச் சொல்லி மறைந்த கீரி ...


ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "என் பாட்டன்களின் வேள்வியில் நடந்த அற்புத நிகழ்ச்சி எதனையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான்.(1)


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னர்களின் தலைவா, ஓ! பலமிக்க ஏகாதிபதி, அந்தப் பெரும் குதிரை வேள்வியின் {அஸ்வமேத யாகத்தின்} நிறைவில் நேர்ந்த அற்புதமிக்க நிகழ்வொன்றைக் கேட்பாயாக.(2) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, பிராமணர்களில் முதன்மையானோரும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும், ஏழைகள், குருடர்கள், ஆதரவற்றோர் அனைவரும் நிறைவடைந்த பின்னர்,(3) அபரிமிதமாகக் கொடுக்கப்பட்ட கொடைகளைக் குறித்து அனைத்துப் பக்கங்களிலும் பேசப்பட்டுக் கொண்டிருந்தபோது, உண்மையில், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் தலையில் மலர்மாரி பொழிந்து கொண்டிருந்தபோது,(4) ஓ! பாவமற்றவனே, உடலின் ஒரு பக்கம் தங்கமாக மாறியிருந்த நீலக்கண் கீரியொன்று அங்கே வந்து, இடியைப் போன்ற ஆழமான உரத்த குரலில் பேசியது.(5)

மீண்டும் மீண்டும் இத்தகைய ஆழ்ந்த ஒலிகளால் விலங்குகள் மற்றும் பறவைகளை அச்சுறுத்தியதும், பொந்துக்குள் வசிப்பதும், செருக்குடன் கூடியதும், பேருடல் படைத்ததுமான அது {கீரி}, மனிதக் குரலில்,(6) "மன்னர்களே, இந்தப் பெரும் வேள்வியானது, குருக்ஷேத்திரத்தைச் சேர்ந்தவரும், உஞ்ச நோன்பை நோற்றுக் கொண்டிருந்தவரும், தாராளமானவருமான பிராமணர் கொடையாக அளித்த ஒரு பிரஸ்த {ஒரு படி} வாற்கோதுமை {யவம்} மாவுக்கு ஈடாகாது" என்றது.(7)

ஓ! மன்னா, அந்தக் கீரியின் சொற்களைக் கேட்ட முதன்மையான பிராமணர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.(8) அந்தக் கீரியை அணுகி, அதனிடம் அவர்கள், "நல்லோரும் பக்திமான்களும் நிரம்பிய இந்த வேள்விச் சாலைக்கு நீ எங்கிருந்து வந்தாய்?(9) உன் வலிமையின் அளவென்ன? உன் கல்வி என்ன? உன் புகலிடமெது? எங்கள் வேள்வியை இவ்வாறு நிந்திக்கும் உன்னை நாங்கள் எவ்வாறு அறிந்து கொள்வது?(10) சாத்திரங்களின் எந்தப் பகுதியையும் அலட்சியம் செய்யாமல், சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையிலும், அறிவுக்கு ஏற்புடைய வகையிலும் பல்வேறு வேள்விச் சடங்குகளின் துணையுடன் செய்யப்பட வேண்டிய அனைத்தும் இங்கே செய்யப்பட்டன.(11) சாத்திரங்கள் சுட்டிக்காட்டும் வழியில் வழிபடத்தகுந்தவர்கள் இங்கே முறையாக வழிபடப்பட்டனர். உரிய மந்திரங்களின் துணையுடன் புனித நெருப்புக்குள் ஆகுதிகள் ஊற்றப்பட்டன. எது கொடுக்கப்பட வேண்டுமோ அதுவும் செருக்கில்லாமல் கொடுக்கப்பட்டது.(12) மறுபிறப்பாள வகையினர் பல்வேறு வகைக் கொடைகளின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். க்ஷத்திரியர்கள் நியாயமான முறைகளில் செய்யப்பட்ட போர்களின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். பாட்டன்கள், சிராத்தங்களின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர்.(13)

வைசியர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். முதன்மையான பெண்டிர் பலர், அவர்களது ஆசைகளை நிறைவேற்றியதன் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். சூத்திரர்கள், அன்பான பேச்சுகளின் மூலமும், பிறர் இங்கே திரட்டப்பட்ட அபரிமிதமான செல்வத்தில் எஞ்சியவற்றின் மூலமும் நிறைவடையச் செய்யப்பட்டனர்[1].(14) உற்றார் உறவினர், எங்கள் மன்னன் வெளிப்படுத்திய தூய நடத்தையின் மூலம் நிறைவடையச் செய்யப்பட்டனர். தேவர்கள், தெளிந்த நெய்யாலான ஆகுதிகளின் மூலமும், புண்ணியச் செயல்களின் மூலமும், சார்ந்திருப்பவர்கள் மூலமும், பாதுகாப்பைப் பின்தொடர்பவர்கள் மூலமும் நிறைவடையச் செய்யப்பட்டனர்.(15) எனவே, எது உண்மையோ அதை இந்தப் பிராமணர்களுக்கு உண்மையாக அறிவிப்பாயாக. உண்மையில், அறிந்து கொள்வதில் ஆவலாக இருக்கும் இந்தப் பிராமணர்களால் கேட்கப்பட்டு, சாத்திரங்களுக்கும், உண்மை அனுபவத்திற்கும் ஏற்புடைய வகையில் நீ அறிவிப்பாயாக.(16) உன் சொற்கள் நம்பத்தகுந்தவையாகத் தெரிகின்றன. நீ ஞானியாக இருக்கிறாய். நீ தெய்வீக வடிவத்தைக் கொண்டிருக்கிறாய். நீ கல்விமான்களான பிராமணர்களுக்கு மத்தியில் வந்திருக்கிறாய். நீ சொல்வதை விளக்கிச் சொல்வதே உனக்குத் தகும்" என்றனர் {பிராமணர்கள்}.(17)

[1] கும்பகோணம் பதிப்பில், "இந்த யாகத்தில், பலவிதமான தானங்களால் பிராம்மணர்களும், நல்ல யுத்தத்தால் க்ஷத்திரியர்களும், சிராத்தங்களால் பிதாமஹர்களும், காப்பாற்றுதலால் வைஸ்யர்களும், இஷ்டமான வஸ்துக்களால் உத்தம ஸ்திரீகளும், பலவித கருணையால் சூத்திரர்களும், தானம் செய்து மிச்சமான பொருள்களால் ஸாமான்ய ஜனங்களும், எங்கள் அரசருடைய சுத்தியால் ஞாதிகளும், ஸம்பந்திகளும், புண்ணியமான ஹவிஸுகளால் தேவர்களும், ரக்ஷணைகளால் சரணமடைந்தவர்களும் ஸந்தோஷமடைந்தார்கள்" என்றிருக்கிறது.

அந்த மறுபிறப்பாள மனிதர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட கீரியானது, சிரித்தபடியே பின்வருமாறு பதிலளித்தது. அது {கீரி}, "மறுபிறப்பாளர்களே, நான் சொன்ன வார்த்தைகள் பொய்யல்ல. மேலும் நான் செருக்கிலும் பேசவில்லை.(18) நான் சொன்னதை நீங்கள் அனைவரும் கேட்டிருக்கக்கூடும். மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களே, ஒரு பிரஸ்த {ஒரு படி} வாற்கோதுமை மாவைக் கொடையளித்த புண்ணியத்திற்கு இந்த வேள்வி ஈடாகாது.(19) பிராமணர்களில் முதன்மையானவர்களே, இதை நான் ஐயமறச் சொல்ல வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதை நான் சொல்கிறேன், சிதறாத கவனத்துடன் கேட்பீராக.(20) அற்புதம் நிறைந்த சிறந்த நிகழ்வாக அது நேர்ந்தது. அந்த நிகழ்வு, குருக்ஷேத்திரத்தில் வசிப்பவரும், உஞ்ச நோன்பு நோற்பவரும், தாராளமானவருமான ஒரு பிராமணரின் தொடர்புடையதாகும்.(21) மறுபிறப்பாளர்களே, அந்நிகழ்வின் விளைவால் அவர், தமது மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் சொர்க்கத்தை அடைந்தார். அப்போது நடந்த நிகழ்வின் விளைவாக என் உடலின் பாதி அளவு பகுதி பொன்னாக மாறியது".(22)

கீரி தொடர்ந்தது, "மறுபிறப்பாளர்களே, நான் இப்போது நியாயமான முறையில் அடையப்பட்டதும், மிகக் குறைந்த அளவைக் கொண்டதும், அந்தப் பிராமணரால் வழங்கப்பட்டதுமான அந்தக் கொடையின் {கொடையாக வழங்கப்பட்ட மாவின்} சிறந்த கனியை {பலன் என்ன என்பதை} உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.(23) அறம் சார்ந்தோர் பலர் வசிப்பதும், குருக்ஷேத்திரம் என்ற பெயரில் அறியப்படுவதுமான அறம்சார்ந்த இடத்தில், உஞ்சம் என்றழைக்கப்படும் நோன்பை நோற்கும் பிராமணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த வாழ்வுமுறையானது ஒரு புறாவைப் போன்றதாகும்[2].(24) அவர் அங்கே தன் மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் வாழ்ந்து தவம் செய்து வந்தார். அற ஆன்மாவும், முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் கூடியவருமான அவர் ஒரு கிளியால் பின்பற்றப்படும் வாழ்வுமுறையைப் பின்பற்றினார்.(25) அற்புத நோன்புகளைக் கொண்ட அவர், ஒவ்வொரு நாளும் ஆறாம் காலத்தில் உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்[3]. நாளின் ஆறாம் காலத்தில் உண்பதற்கு ஏதும் கிடைக்கவில்லையெனில் அந்தச் சிறந்த பிராமணர், அந்த நாளில் உண்ணா நோன்பிருந்து அடுத்த நாளின் ஆறாம் காலத்தில் உண்பார். பிராமணர்களே ஒரு சந்தர்ப்பத்தில், அந்த நிலத்தில் பயங்கரமான பஞ்சம் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் அறம்சார்ந்த அந்தப் பிராமணரின் வசிப்பிடத்தில் எதுவும் சேமித்து வைக்கப்படவில்லை. செடிகொடிகள் அனைத்தும் காய்ந்து மொத்த நாடும் உணவுப் பொருட்கள் ஏதுமற்றதாக இருந்தது.(26-28)

[2] "உஞ்ச நோன்பென்பது, வயலில் உரிமையாளர்களால் பயிர் அறுவடை செய்யப்பட்ட பிறகு புறாவைப் போலத் தானியங்களைப் பொறுக்கி எடுத்து, அதை உண்டு வாழும் வாழ்வுமுறையாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் "உதிர்ந்த தானியத்தை ஒவ்வொன்றாகப் பொறுக்குவது" உஞ்சம் எனப்படும் என்றிருக்கிறது

[3] "பகலின் பனிரெண்டு மணிநேரமானது 8 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டால், அதில் ஆறாம் காலமாக வருவது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். அஃதாவது ஒவ்வொரு நாளும் பிற்பகல் மூன்று மணியில் இருந்து நான்கரை மணி வரையுள்ள காலமாகும். கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில் "பதினெட்டேமுக்கால் நாழிகைக்கு மேல் இருபத்திரண்டரை நாழிகை வரையுள்ள காலம்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பின் அடிக்குறிப்பில் இஃது ஒரு நாளின் ஆறாம் காலமாக அஃதாவது இருபத்துநான்கு மணிநேரத்தை எட்டாகப் பிரித்து, அதில் ஆறாவது வரும் காலம், அதாவது மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை உள்ள காலம் என்று குறிப்பிடப்படுகிறது.

உண்பதற்கான வழக்கமான காலம் வந்தபோது, அந்தப் பிராமணர் உண்பதற்கு ஏதுமில்லை. நாளுக்கு நாள் இதுவே நேர்ந்தது. அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பசியால் பீடிக்கப்பட்டனர், ஆனால் தங்களால் முடிந்தவரை நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தனர்.(29) ஜெய்ஷ்ட மாதத்தில் {ஆனி மாதத்தில்} ஒரு நாள், சூரியன் உச்சிப் பொழுதை அடைந்திருந்தபோது, அந்தப் பிராமணர் தானியங்களைப் பொறுக்கச் சென்றார். சூட்டாலும், பசியாலும் பீடிக்கப்பட்ட அவர் இந்தத் தவத்தையே செய்து கொண்டிருந்தார்.(30) தானியங்களை அடைய முடியாத அவர், பசியாலும், உழைப்பாலும் களைத்தார். உண்மையில், அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் உண்ண உணவேதும் கிட்டவில்லை.(31) அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், தன் நாட்களைப் பெரும் துன்பத்தில் கழித்தார். ஒருநாள், ஆறாம் காலம் வந்த பிறகு, அவர் ஒரு பிரஸ்தம் வாற்கோதுமையை {ஒரு படி யவதான்யத்தை} அடைவதில் வென்றார்.(32) ஸக்து என்றழைக்கப்படும் ஒன்றைச் செய்வதற்காக அந்த வாற்கோதுமையானது {யவதானியமானது} அந்தத் தவசிகளால் {பிராமணர் மற்றும் அவரது குடும்பத்தாரால்} மாவாகப் பொடி செய்யப்பட்டிருந்தது. அந்தத் தவசிகள், அமைதியான ஜபங்களையும், நாள்தோறும் செய்யும் பிற சடங்குகளையும் செய்த பிறகு, புனித நெருப்புக்கு முறையாக ஆகுதிகளை ஊற்றிய பிறகு,(33) சிறிதளவே இருந்த அந்த வாற்கோதுமை மாவை ஒரு குடவம் அளவுக்குத் தங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் பிரித்துக் கொண்டனர்[4]. அவர்கள் உண்பதற்காக அமரப் போகும்போது, அங்கே அவர்களது வசிப்பிடத்திற்கு ஒரு விருந்தினர் வந்தார்.(34)

[4] "ஒரு பிரஸ்தம் என்பது நான்கு குடவங்களால் ஆனது. ஒரு குடவம் என்பது இருபத்து நான்கு கைப்பிடிகளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தபஸ்விகளான அவர்களெல்லாரும் ஜபம் முதலான ஆன்னிகத்தையும் அக்னியில் செய்யத்தக்க ஹோமத்தையும் விதிப்படி செய்துவிட்டு (அதை) காற்காற்படியாகப் பிரித்துக் கொண்டார்கள்" என்றிருக்கிறது.

விருந்தினராக வந்த மனிதரைக் கண்ட அவர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். உண்மையில், அவரை வணங்கிய அவர்கள், அவரது உடல்நலம் குறித்த வழக்கமான விசாரிப்புகளைச் செய்தனர்.(35) அவர்கள் தூய மனங்களையும், தற்கட்டுப்பாட்டையும், நம்பிக்கையையும் கொண்டவர்களாகவும், ஆசைகளைக் கட்டுப்படுத்தியவர்களாகவும் இருந்தனர். வன்மத்தில் இருந்து விடுபட்டவர்களான அவர்கள், கோபத்தை வென்றவர்களாக இருந்தனர். பக்தி நிறைந்த அவர்கள், அடுத்தவரின் மகிழ்ச்சியைக் கண்டு ஒருபோதும் துன்புறாதவர்களாக இருந்தனர்.(36) அவர்கள் செருக்கையும், அகந்தையையும், கோபத்தையும் கைவிட்டவர்களாக இருந்தனர். மறுபிறப்பாளர்களே, உண்மையில் அவர்கள், அனைத்துக் கடமைகளையும் அறிந்தவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் விருந்தினரிடம் தங்கள் தவங்கள், தாங்கள் சேர்ந்த குலம் மற்றும் குடும்பத்தைச் சொல்லி, பதிலுக்கு அவரிடம் இருந்தும் குறிப்புகளைப் பெற்று, பசித்து வந்த தங்கள் விருந்தினரைத் தங்கள் குடிலுக்குள் அழைத்துச் சென்றனர்.

அவர்கள் அவரிடம், "இதுவே உமக்கான அர்க்கியம். இந்த நீர் உமது கால்களைக் கழுவிக் கொள்வதற்கானது. ஓ! பாவமற்றவரே, நீர் அமர்வதற்கான இருக்கையாகக் குச {தர்ப்பைப்} புற்கள் இருக்கின்றன.(37,38) ஓ! பலமிக்கவரே, நியாயமான முறையில் அடையப்பட்டதும், தூய்மையானதுமான ஸக்து {வாற்கோதுமை மாவு} இங்கே சிறிதளவு இருக்கிறது. ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, எங்களால் கொடுக்கப்படும் இஃதை ஏற்றுக் கொள்வீராக" என்றனர்.(39)

அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அந்தப் பிராமணர், தனக்குக் கொடுக்கப்பட்ட ஒரு குடவம் வாற்கோதுமை மாவை முழுமையாக உண்டார். ஆனால், ஓ! மன்னா, அவர் உண்டதைக் கொண்டு அவரால் தன் பசியைத் தணித்துக் கொள்ள முடியவில்லை.(40) தன் விருந்தினரின் பசி தணியாததைக் கண்டவரும், உஞ்ச நோன்பை நோற்பவருமான அந்தப் பிராமணர், அவரை நிறைவடையச் செய்வதற்கு வேறு எந்த உணவைக் கொடுக்கலாம் என நினைக்கத் தொடங்கினார்.(41)

அப்போது அவரது மனைவி, "என் பங்கு அவருக்குக் கொடுக்கப்படட்டும். மறுபிறப்பாளர்களில் முதன்மையான இவர் நிறைவடைந்து, தான் விரும்பிய இடத்திற்குச் செல்லட்டும்" என்றாள்.(42)

கற்புடையவளான தன் மனைவியும் பசியால் பீடிக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அறிந்த அந்தப் பிராமணர்களில் சிறந்தவரால், அவளுடைய பங்கான வாற்கோதுமை மாவை விருந்தினருக்குக் கொடுப்பதை ஏற்க முடியவில்லை.(43) உண்மையில், கல்விமானான அந்தப் பிராமணர்களில் சிறந்தவர், வயது முதிர்ந்த, உழைப்பால் களைத்த, உற்சாகமற்ற தன் நிலையில் இருந்து(44) ஆதரவற்ற தன் மனைவியின் பசிப்பிணியை அறிந்து கொண்டு, எலும்பும் தோலுமாக மெலிந்து நடுங்கிக் கொண்டிருந்த அவளிடம், "ஓ! அழகியவளே, விலங்குகள், புழுக்கள் மற்றும் பூச்சிகளில் கூட,(45) மனைவிகள் உணவூட்டப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றனர். எனவே, நீ இவ்வாறு சொல்வது உனக்குத் தகாது. ஒரு மனைவி தன் கணவனை அன்புடன் நடத்தி, அவனுக்கு உணவூட்டி, அவனைப் பாதுகாக்கிறாள்.(46) அறம், இன்பம் மற்றும் பொருள் தொடர்புடைய அனைத்தும், குலத்தைத் தழைக்கச் செய்யச் சந்ததியை உண்டாக்கிக் கவனமாக வளர்ப்பதும் என அனைத்தும் மனைவியைச் சார்ந்ததே. உண்மையில், ஒரு மனிதனின் புண்ணியங்களும், இறந்து போன அவனுடைய மூதாதையர்களும் அவளையே சார்ந்திருக்கின்றனர்.(47) ஒரு மனைவி தன் தலைவனை, அவனது செயல்களால் அறிந்து கொள்ள வேண்டும். உண்மையில், தன் மனைவியைப் பாதுகாக்கத் தவறும் மனிதன், இம்மையில் பெரும் புகழ்க்கேட்டை ஈட்டி, மறுமையில் நரகிற்குச் செல்கிறான். அத்தகைய மனிதன் பெரும் புகழ்பெற்ற நிலையில் இருந்தாலும், மறுமையில் இன்பலோகங்களை அடைவதில் ஒருபோதும் வெல்லமாட்டான்" என்றார்.(48)

இவ்வாறு சொல்லப்பட்ட அவள், அவருக்குப் பதிலளிக்கும் வகையில், "ஓ! மறுபிறப்பாளரே, நமது {நம்மிருவரின்} அறச்செயல்களும், செல்வமும் ஒன்றே. இந்த வாற்கோதுமையில் நான்கில் ஒரு பங்கை நீர் எடுத்துக் கொள்வீராக. உண்மையில், என்னிடம் நிறைவடைவீராக.(49) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, நற்குணங்களின் மூலம் பெண்களால் அடையத்தக்க வாய்மை, இன்பம், அறச் செயல், சொர்க்கம் முதலியவையும், அவர்களுடைய ஆசைக்குரிய பொருட்கள் அனைத்தும் கணவரையே சார்ந்திருக்கின்றன.(50) சந்ததியை உண்டாக்குவதில் தாயானவள் தன் குருதியைக் காணிக்கையாக்குகிறாள். தந்தையானவர் தன் வித்தைக் காணிக்கையாக்குகிறார். கணவரே மனைவியின் உயர்ந்த தேவனாவார் {கணவனே கண்கண்ட தெய்வம்}[5]. கணவரின் அருளின் மூலம் பெண்கள் இன்பம் மற்றும் சந்ததி ஆகிய இரண்டையும் வெகுமதிகளாக அடைகின்றனர்.(51) நீர் எனக்கு அளிக்கும் பாதுகாப்பால், எனது பதி {தலைவர்} ஆகிறீர். நீர் எனக்கு அளிக்கும் வாழ்வாதாரத்தால் எனது பர்த்ரி {பர்த்தாவாக} ஆகிறீர். மேலும் எனக்கு மகனை அளிப்பதன் விளைவால் வரமளிப்பவரும் ஆகிறீர். எனவே, (இவ்வளவு உதவிகளுக்குச் செய்யும் பதில் உதவியாக} இந்த வாற்கோதுமையில் என் பங்கை எடுத்து இந்த விருந்தினருக்குக் கொடுப்பீராக.(52) முதுமையில் மூழ்கியிருக்கும் நீர் வயதில் முதிர்ந்தவராக இருக்கிறீர். பசியால் பீடிக்கப்பட்டு மிகப் பலவீனமாகவும் இருக்கிறீர். உண்ணாநோன்புகளால் அயர்ந்து மிக மெலிந்திருக்கிறீர். (நீரே உமது பங்கைக் கொடுக்கும்போது, நான் ஏன் என் பங்கைக் கொடுக்கக்கூடாது?)" என்று கேட்டாள்.(53)

[5] கும்பகோணம் பதிப்பில், "தாய் தந்தைகளுடைய சுக்ல சோணிதங்களாலாகிய பர்த்தாவானவன் (ஸ்திரீகளுக்கு) மேலான தெய்வம்" என்றிருக்கிறது. இதன் அடிக்குறிப்பில், "’தாய் தந்தைகளுடைய சுக்ல சோணிதங்களாலுண்டான இச்சரீரத்திற்குப் பர்த்தாவே மேலான தெய்வம்’ என்று சிலரும், ‘தாயின் ருது காலமும், தந்தையின் பீஜமும், தெய்வமும் புத்ரோத்பத்திக்குக் காரணங்களாம்; ஆயினும் இவற்றுள் முக்கியக் காரணம் பதியேயாம்’ என்று சிலரும் கூறுவர்" என்றிருக்கிறது.

இவ்வாறு சொல்லப்பட்ட அவர், அவளுடைய பங்கான வாற்கோதுமை மாவை எடுத்து, தன் விருந்தினரிடம், "ஓ! மறுபிறப்பாளரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே, இந்த வாற்கோதுமை மாவையும் ஏற்பீராக" என்றார்.(54)

அந்த அளவு மாவை ஏற்றுக் கொண்டு உடனே அதை உண்டாலும், அவரது பசி தணியவில்லை. உஞ்ச நோன்பு நோற்று வந்த அந்தப் பிராமணர் அவர் நிறைவடையாததைக் கண்டு சிந்தனையில் ஆழ்ந்தார்.(55)

அப்போது அவருடைய மகன், "ஓ! மனிதர்களில் சிறந்தவரே, என் பங்கான வாற்கோதுமை மாவை விருந்தினருக்குக் கொடுப்பீராக. என்னுடைய இந்தச் செயல் பெரும் புண்ணியம் கொண்டது என்று கருதுகிறேன். எனவே, இதை நான் செய்கிறேன்.(56) உம்மை நான் பெருங்கவனத்துடன் பராமரித்துக் கொள்ள வேண்டும். தந்தையைப் பராமரிப்பதே நல்லோரால் விரும்பப்படும் கடமையாகும்.(57) தந்தையை அவரது முதுமையில் பராமரிப்பது மகனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் கடமையாகும். ஓ! கல்விமானான முனிவரே, மூவுலகிலும் நடைமுறையில் உள்ள நித்திய ஸ்ருதி (திறன்காணல்) இதுவே ஆகும்.(58) வெறுமனே உயிர்வாழ்வதன் மூலமே நீர் தவம் செய்ய வல்லவராவீர். உடல்கொண்ட உயிரினங்கள் அனைத்தின் உடல்களிலும் வசிக்கும் பெருந்தேவன் உயிர் மூச்சே ஆகும்[6]" என்றான்.(59)

[6] "இந்தச் சுலோகம் மிகவும் தெளிவற்றதாக இருக்கிறது. நான் இதைச் சரியாகப் புரிந்து கொண்டேனா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. "நீர் அதிகம் தாங்க வல்லவர். உண்மையில் உயிர் மூச்சே பெருந்தேவன் என்பதால், உயிர் வாழ்வதன் மூலமே, அறத் தகுதியை ஈட்ட வல்லவராக இருக்கிறீர். அவனை {உயிர்மூச்சைக்} கைவிடக்கூடாது. இந்த விருந்தினர் நிறைவடையவில்லை என்ற எண்ணமே உம்மைக் கொன்றுவிடுமாதலால் உமது உயிர் பணயத்தில் இருக்கிறது. எனவே, என் பங்கான இந்த வாற்கோதுமையை இந்த விருந்தினருக்குக் கொடுத்து அவரை நிறைவடையச் செய்து உமது உயிரைப் பாதுகாத்துக் கொள்வீராக" என்பதே இங்கே பொருளாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "இந்த ஸ்ருதியானது மூவுலகங்களிலும் சாஸ்வதமாக இருக்கிறது. பிராணனை மட்டும் தரித்துக் கொண்டு உம்மால் தவம் செய்ய முடியும். பிராணிகளுடைய சரீரங்களில் பிராணனிருப்பது மேலான தர்மமல்லவா?" என்றிருக்கிறது.

அதற்கு அந்தத் தந்தை, "நீ ஆயிரம் வருட வயதை எட்டினாலும், எனக்குச் சிறு பிள்ளையாக மட்டுமே தெரிவாய். ஒரு மகனைப் பெற்றதன் மூலம் அந்தத் தந்தை அவன் மூலம் வெற்றியை அடைகிறான் {கிருதகிருத்யனாகிறான்}.(60) ஓ! பலமிக்கவனே, குழந்தைகளுக்குப் பசி மிக அதிகம் என்பது எனக்குத் தெரியும். நான் வயது முதிர்ந்தவன். நான் எவ்வாறேனும் என் உயிர் மூச்சைப் பிடித்துக் கொள்வேன். ஓ! மகனே, (உன் பங்கான உணவை உண்டு) பலமடைவாயாக.(61) ஓ! மகனே, வயதும், முதுமையும் அடைந்த என்னைப் பசி அரிதாகவே பீடிக்கும். மேலும் நான் பல வருடங்களாகத் தவம் பயில்கிறேன். எனக்கு மரணத்தில் அச்சமில்லை" என்றார்.(62)

மகன், "நான் உமது குழந்தையாவேன். ஒருவனுடைய குழந்தை, அவனைக் காப்பதனால் புத்ரன் என்று அழைக்கப்படுகிறான் என ஸ்ருதி அறிவிக்கிறது. மேலும், ஒருவனுடைய சுயமே, அவனுடைய மகனாகப் பிறப்பெடுக்கிறது {ஒருவன் தானே மகனாகப் பிறப்பதாகக் கருதப்படுகிறான்}. எனவே, (உமது மகனின் வடிவில் இருக்கும்) உம்மைக் கொண்டு உம்மைப் பாதுகாத்துக் கொள்வீராக" என்றான்.(63)

தந்தையானவர், "வடிவத்தில் நீ என்னைப் போன்றவனே. ஒழுக்கத்திலும், தற்கட்டுப்பாட்டிலும் நீ என்னைப் போன்றவனே. பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் உன்னைச் சோதித்திருக்கிறேன். எனவே, ஓ! மகனே, நான் உன் பங்கான இந்த வாற்கோதுமையை ஏற்றுக் கொள்கிறேன்" என்றார்.(64)

மறுபிறப்பாளர்களில் முதன்மையான அவர் இதைச் சொல்லிவிட்டு, மிக உற்சாகமாகத் தன் மகனின் பங்கான வாற்கோதுமையை எடுத்துக் கொண்டு, புன்னகையுடன் அதைத் தன் மறுபிறப்பாள விருந்தினருக்கு அளித்தார்.(65) அந்த வாற்கோதுமையை உண்டும், அந்த விருந்தினரின் பசி அடங்கவில்லை. உஞ்ச நோன்பை நோற்பவரும், அற ஆன்மா கொண்டவரும், விருந்தோம்பல் செய்பவருமான அவர் (மேலும் கொடுக்கத் தன்னிடம் ஒன்றுமில்லை என்ற எண்ணத்தால்) வெட்கமடைந்தார்.(66)

அவருக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பிய அவருடைய மருமகள், அப்போது தன் பங்கான வாற்கோதுமையைக் கொண்டு வந்து அவரை அணுகி,(67) "ஓ! கல்விமானான பிராமணரே, உமது மகனின் மூலம் நான் ஒரு மகனைப் பெறுவேன். எனவே, என் பங்கான இந்த வாற்கோதுமையை எடுத்து இந்த விருந்தினருக்குக் கொடுப்பீராக.(68) உமது அருளால், எண்ணற்ற இன்பலோகங்கள் நித்தியமாக எனதாகும். ஒரு பேரனின் மூலம் ஒருவன் எவ்வகைத் துன்பமும் இல்லாத உலகங்களை அடைகிறான்.(69) அறம் முதலிய முத்தொகை, அல்லது புனித நெருப்பின் முத்தொகையைப் போல எப்போதுமிருக்கும் சொர்க்கங்களின் முத்தொகையானது, மகன், பேரன் மற்றும் கொள்ளுப்பேரன் ஆகியோரைச் சார்ந்திருக்கிறது.(70) மகன், தன் தந்தையைக் கடனிலிருந்து விடுவிப்பதால் புத்ரன் என்றழைக்கப்படுகிறான். ஒருவன், தன் மகன்கள் மற்றும் பேரன்களின் மூலம், பக்திமான்கள் மற்றும் நல்லோருக்கு ஒதுக்கப்படும் உலகங்களின் இன்பத்தை எப்போதும் அனுபவிக்கிறான்" என்றாள்.(71)

{அதற்கு அவளது} மாமனார், "ஓ! சிறந்த நோன்புகளையும், ஒழுக்கத்தையும் கொண்டவளே, காற்றாலும், சூரியனாலும் சிதைக்கப்பட்டு, நிறத்தை இழந்தவளாக, மெலிந்தவளாக, பசியின் மூலம் கிட்டத்தட்ட நினைவிழந்தவளாகக் காணப்படும் உன்னைக் கண்டும், உன் பங்கான வாற்கோதுமையை எடுத்துக் கொண்டு, அற விதிகளை மீறுபவனாக நான் எவ்வாறு நடந்து கொள்வேன்? ஓ! மங்கலக் காரிகையே {கல்யாணி}, ஒவ்வொரு குடும்பமும் எட்ட வேண்டிய மங்கல விளைவுகளுக்காக இவ்வாறு நீ சொல்வது தகாது[7].(72,73) ஓ! மங்கலக் காரிகையே {கல்யாணி}, நாளின் இந்த ஆறாம் காலத்திலும் உணவைத் தவிர்த்து நோன்பு நோற்கும் உன்னை நான் எவ்வாறு காண்பேன்? தூய்மையும், நல்லொழுக்கமும், தவங்களும் கொண்டவள் நீ. ஐயோ, நீயும் இவ்வளவு துன்பங்களுடன் உன் நாட்களைக் கடத்த வேண்டி வந்ததே. பசியால் பீடிக்கப்பட்டவளும், மென்மையான பாலினத்தைச் சேர்ந்தவளுமான நீ ஒரு சிறுமி ஆவாய். நீ எப்போதும் என்னால் பாதுகாக்கப்பட வேண்டும். ஐயோ, ஓ! உன் உற்றாரைத் திளைக்கச் செய்பவளே, உண்ணாமல் களைத்துப் போனவளாக நான் உன்னைக் காண வேண்டியுள்ளதே" என்றார்.(75)

[7] "’ஒவ்வொரு குடும்பமும் மங்கல விளைவுகளை எட்ட அது தன் மருமகளை நன்றாக நடத்த வேண்டும். நான் எவ்வாறு உன்னை உணவை இழக்கச் செய்வேன்?’ என்பது இங்கே பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.

மருமகள், "நீர் என் தெய்வத்துக்கு தெய்வமாகவும், மூத்தவர்களுக்கும் மூத்தவராகவுமிருக்கிறீர். நீர் நிச்சயம் என் தேவருக்கும் தேவராவீர். எனவே, ஓ! பலமிக்கவரே, என் பங்கான இந்த வாற்கோதுமையை எடுத்துக் கொள்வீராக.(76) என் உடல், உயிர்மூச்சுகள், அறச் சடங்குகள் ஆகிய அனைத்தும் எனக்கு மூத்தோருக்குத் தொண்டாற்றும் ஒரு காரியத்திலேயே அடங்கியிருக்கிறது. ஓ! கல்விமானான பிராமணரே, உமது அருளால் நான் மறுமையில் இன்பலோகங்கள் பலவற்றை அடைவேன்.(77) நான் உம்மால் பார்த்துக் கொள்ளப்படத் தகுந்தவள். ஓ! மறுபிறப்பாளரே, நான் உம்மிடம் முழுமையான அர்ப்பணிப்பு கொண்டவள் என்பதை அறிவீராக. என் மகிழ்ச்சியே உமது கவலை என்ற இந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டு, என் பங்கான இந்த வாற்கோதுமையை எடுத்துக் கொள்வதே உமக்குத் தகும்" என்றாள்.(78)

மாமனார், "ஓ! கற்புடைய பெண்ணே, நோன்புகள் நோற்பவளாகவும், அறச் சடங்குகளில் உறுதியுள்ளவளாகவும், பெரியோரிடம் நோற்கப்பட வேண்டிய ஒழுக்கத்திலேயே எப்போதும் கண்கள் கொண்டவளாகவும் இருக்கும் உன்னுடைய இத்தகைய ஒழுக்கத்தின் விளைவால் நீ எப்போதும் மகிமையில் ஒளிர்ந்து கொண்டிருப்பாய்.(79) எனவே, ஓ! மருமகளே, நான் உன் பங்கான வாற்கோதுமையை எடுத்துக் கொள்கிறேன். உன்னுடைய நற்குணங்கள் அனைத்தையும் சொல்லி என்னால் வஞ்சிக்கத்தகாதவள் நீ. ஓ! அருளப்பட்ட காரிகையே, உண்மையில், அறக்கடமைகளை நோற்கும் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவள் நீயே" என்றார்.(80)

அவளிடம் இவ்வாறு சொன்ன அந்தப் பிராமணர் அவளுடைய பங்கான வாற்கோதுமையை எடுத்து தன் விருந்தினருக்குக் கொடுத்தார். இப்போது அந்த விருந்தினர், பெரும் பக்தி கொண்ட அந்த உயர் ஆன்ம பிராமணரிடம் நிறைவடைந்தார்.(81) பெரும் நாநயம் மிக்கவரும், மனித வடிவில் வந்த அறத்தெய்வமுமான {தர்மதேவனுமான} அந்த முதன்மையான மறுபிறப்பாளர், நிறைவடைந்த ஆன்மாவுடன், அந்தப் பிராமணர்களில் முதன்மையானவரிடம்,(82) "ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, நியாயமான வழிமுறைகளின் மூலம் அடையப்பட்டதும், அறவிதிகளுக்கு ஏற்புடைய வகையில் கொடுக்கப்பட்டதும், தூய்மையானதுமான உம்முடைய இந்தக் கொடையால் நான் பெரிதும் நிறைவடைந்திருக்கிறேன்.(83) உண்மையில், உம்முடைய இந்தக் கொடை சொர்க்கத்தின் இன்பலோகவாசிகளால் உரக்கப் புகழப்படுகிறது. ஆகாயத்தில் இருந்து பூமியில் பொழியப்படும் மலர்களைக் காண்பீராக.(84) தெய்வீக முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள், தேவர்களுக்கு முன் நடப்பவர்கள், தேவதூதர்கள் ஆகியோர் அனைவரும் உமது கொடையால் ஆச்சரியமடைந்து உம்மைப் புகழ்ந்து கொண்டிருக்கின்றனர்.(85)

பிரம்மலோகத்தில் வசிக்கும் மறுபிறப்பாள முனிவர்கள், தங்கள் தேர்களில் அமர்ந்தவாறு உமது காட்சி கிட்டுவதற்காக வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, சொர்க்கத்திற்குச் செல்வீராக.(86) பித்ரு லோகத்தில் வசிக்கும் உமது பித்ருக்கள் அனைவரும் அவர்களால் காக்கப்பட்டனர். பித்ருக்கள் என்ற நிலையை அடையாத பிறரும் எண்ணற்ற யுகங்களுக்கு உம்மால் காக்கப்பட்டிருக்கின்றனர்.(87) உமது பிரம்மச்சரியம், உமது கொடைகள், உமது வேள்விகள், உமது தவங்கள், தூய இதயத்துடன் உம்மால் செய்யப்பட்ட நற்செயல்கள் ஆகியவற்றின் மூலம் நீர் சொர்க்கத்திற்குச் செல்லப் போகிறீர்.(88) ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவரே, நீர் பேரர்ப்பணிப்புடன் தவங்களைப் பயின்றீர். எனவே, ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, உமது கொடைகளால் தேவர்கள் பெரிதும் நிறைவடைந்திருக்கின்றனர்.(89) பெருங்கடின காலத்தில், தூய இதயத்துடன் இந்தக் கொடையை அளித்திருக்கும் உம்முடைய இந்தச் செயலின் மூலம் நீர் சொர்க்கத்தை வென்றுவிட்டீர்.(90)

பசியானது, ஒருவனுடைய ஞானத்தை அழித்து, அவனது அறம்சார்ந்த புத்தியைப் பிறழச் செய்யும். பசியால் வெல்லப்பட்ட புத்தியைக் கொண்டவன் தன் மனவுரம் அனைத்தையும் கைவிடுகிறான்.(91) எனவே, எவன் பசியை வெல்வானோ அவன் நிச்சயம் சொர்க்கத்தை வெல்வான். ஒருவன் கொடைகளை அளிக்கும் விருப்பத்தை வளர்க்கும் வரை, அவனது அறம் ஒருபோதும் அழிவடையாது.(92) மகனிடம் கொண்ட அன்பை அலட்சியம் செய்து, தன் மனைவியிடம் கொண்ட அன்பை அலட்சியம் செய்து, அறத்தையே முதன்மையானதாக அறிந்த நீர் இயற்கையான ஏக்கங்களில் {ஆசைகளில்} ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை.(93) செல்வத்தை அடைவது அற்ப தகுதியை {புண்ணியத்தைக்} கொண்ட ஒரு செயலாகும். தகுந்த மனிதனுக்கு அளிக்கும் கொடையே பெருந்தகுதியை {பெரும் புண்ணியத்தைக்} கொண்டதாகும். (உரிய சரியான) காலத்தில் கொடையளிப்பது இன்னும் பெரிய தகுதியைக் கொண்டதாகும். இறுதியாக (கொடையளிப்பதில்) அர்ப்பணிப்புக் கொள்வது மிக உயர்ந்த தகுதியாகும்.(94) சொர்க்கத்தின் வாயிலைக் காண்பது மிக அரிது. அக்கறையின்மையால் மனிதர்கள் அதைக் காணத் தவறுகின்றனர். சொர்க்கத்தின் வாயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள தடையானது, பேராசையைத் தன் வித்தாகக் கொண்டதாகும். அந்தத் தடையானது, ஆசை மற்றும் பற்றால் கட்டப்பட்டிருக்கிறது. உண்மையில் சொர்க்கத்தின் வாயில் அணுகப்பட முடியாததாகும்.(95)

கோபத்தை அடக்கி, தங்கள் ஆசையை வென்ற மனிதர்களும், தவங்களுடன் கூடிய பிராமணர்களும், தங்களால் இயன்ற அளவு கொடை அளிப்பவர்களும் அதைக் காண்பதில் வெல்கிறார்கள்.(96) ஆயிரம் இருந்து நூறு கொடுப்பவனும், நூறு இருந்து பத்து கொடுப்பவனும், செல்வம் ஏதும் இல்லாதிருந்தும் கைநிறைய நீரைக் கொடுப்பவனும் என இவர்கள் அனைவரும் நிகரான தகுதியை ஈட்டுகின்றனர்.(97) மன்னன் ரந்திதேவன், தன் செல்வம் அனைத்தையும் இழந்திருந்தபோதும், தூய இதயத்துடன் சிறிதளவு நீரைக் கொடையளித்தான். ஓ! கல்விமானான பிராமணரே, இந்தக் கொடையின் மூலம் அவன் சொர்க்கத்திற்குச் சென்றான்.(98) அறத்தேவன், மதிப்பற்றதும், நியாயமான முறையில் அடையப்பட்டதும், அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையுடன் அளிக்கப்பட்டதுமான கொடைகளில் நிறைவடைவதைப் போல, விலை மதிப்புமிக்கப் பெரிய கொடைகளாலும் நிறைவடைவதில்லை.(99) மன்னன் நிருகன் மறுபிறப்பாள வகையினருக்கு ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடையாக அளித்தான். தனக்கு உரிமையில்லாத ஒரே ஒரு பசுவைக் கொடுத்ததன் மூலம் அவன் நரகில் வீழ்ந்தான்.(100)

சிறந்த நோன்புகளைக் கொண்டவனும், உசீநரன் மகனுமான சிபி, தன் உடலின் தசையைக் கொடையளித்ததன் மூலம் அறலோகங்களை அடைந்து சொர்க்கத்தில் இன்புற்றிருக்கிறான்.(101) செல்வம் மட்டுமே தகுதியாகி {புண்ணியமாகி} விடாது. நல்ல மனிதர்கள், தங்கள் சிறந்த சக்தியைப் பயன்படுத்தி நல்ல வழிமுறைகளின் துணையுடன் முயன்று, தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுகின்றனர். நியாயமாக ஈட்டப்பட்ட சொற்ப அளவு செல்வத்தைக் கொண்டு ஈட்டப்படும் தகுதியைப் போல ஒருவனால் பல்வேறு வேள்விகளைச் செய்வதன் மூலம் கூட ஈட்ட முடியாது.(102) கொடைகளின் கனிகள் {பயன்கள்} கோபத்தின் மூலம் அழிவடைகின்றன. ஒருவன் பேராசையின் மூலம் சொர்க்கத்திற்குச் செல்வதில் தவறுகிறான். கொடையின் தகுதிகளை அறிந்தவனும், நியாயமான ஒழுக்க நடைமுறையைப் பின்பற்றுபவனுமான ஒருவன், தவங்களின் மூலம் சொர்க்கத்தை அனுபவிப்பதில் வெல்கிறான்.(103) ஓ! பிராமணரே, உம்மால் அளிக்கப்பட்ட இந்தக் கொடையின் (ஒரு பிரஸ்தம் வாற்கோதுமை மாவின்) கனியானது {பயனானது}, அபரிமிதமான கொடைகளுடன் ராஜசூய வேள்விகள் பலவற்றையோ, குதிரை வேள்விகள் பலவற்றையோ செய்ததன் மூலம் ஒருவன் ஈட்டுவதை {ஈட்டும் பலனை} விட மிகப் பெரியதாகும்.(104)

வாற்கோதுமை மாவின் இந்த ஒரு பிரஸ்தத்தை {ஒரு படியைக்} கொண்டு நீர் நித்தியமான பிரம்மலோகத்தை வென்றுவிட்டீர். ஓ! கல்விமானான பிராமணரே, இருளின் களங்கமற்ற பிரம்மலோகத்திற்கு நீர் மகிழ்ச்சியுடன் செல்வீராக.(105) ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, உங்கள் அனைவருக்காக ஒரு தெய்வீகத் தேர் {விமானம்} இங்கே வந்திருக்கிறது. உங்கள் விருப்பப்படி அதில் ஏறுவீராக. ஓ! பிராமணரே, நானே அறத்தேவனாவேன் {தர்மதேவனாவேன்}. என்னைப் பார்ப்பீராக.(106) நீர் உமது உடலைப் பாதுகாத்தீர். உமது சாதனையின் புகழ் இந்த உலகம் உள்ள வரை நீடித்திருக்கும். உமது மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் சேர்ந்து நீர் சொர்க்கத்திற்குச் செல்வீராக" என்றார் {பிராமண விருந்தினராகத் தர்ம தேவன்}. அறத்தேவன் இந்தச் சொற்களைச் சொன்னதும், அந்தப் பிராமணர், தன் மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் சொர்க்கத்திற்குச் சென்றார்.(108)

கடமைகள் அனைத்தையும் அறிந்தவரும், கல்விமானுமான அந்தப் பிராமணர் இவ்வாறு தன் மகன், மருமகள் மற்றும் நான்காவதாகத் தன் மனைவியுடன் சொர்க்கத்திற்கு உயர்ந்த பிறகு, நான் என் பொந்துக்குள் இருந்து வெளியே வந்தேன்.(109) அங்கே அந்த வாற்கோதுமை மாவின் மணத்துடன், (அந்தப் பிராமணர் தன் விருந்தினருக்குக் கொடுத்த) நீரினால் உண்டான சகதியுடன், அங்கே பொழிந்திருந்த தெய்வீக மலர்களுடன், அந்த நல்ல மனிதன் கொடுத்த வாற்கோதுமை மாவின் துகள்களுடன் (என் உடல்) கொண்ட தொடர்பாலும்,(110) அந்தப் பிராமணரின் தவத்தாலும் என் தலை பொன்னாக மாறியது. வாய்மையிலும், தவங்களிலும் உறுதியாக இருந்த அந்தப் பிராமணருடைய கொடையின் விளைவால் என்னுடைய உடலில் பாதிக்கும் அதிகமான பகுதி பொன்மயமானதைக் காண்பீராக.(111,112)

மறுபிறப்பாளர்களே, அப்போது முதல் என் உடலில் எஞ்சியிருக்கும் பகுதியையும் பொன்னாக மாற்றிக் கொள்வதற்காக, தவசிகளின் ஆசிரமங்களுக்கும், மன்னர்களால் செய்யப்படும் வேள்விகளுக்கும் உற்சாகமிக்க இதயத்துடன் நான் மீண்டும் மீண்டும் செல்கிறேன்.(113) பெரும் ஞானியான குரு மன்னனின் {யுதிஷ்டிரனின்} இந்த வேள்வியைக் குறித்துக் கேள்விப்பட்டு, பெரும் நம்பிக்கையுடன் நான் இங்கே வந்தேன். எனினும் நான் பொன்மயமாகவில்லை.(114) பிராமணர்களில் முதன்மையானவர்களே, அந்த ஒரு பிரஸ்த வாற்கோதுமை மாவோடு {கொடையாகக் கொடுக்கப்பட்ட அந்த ஒருபடி மாவோடு} இந்த வேள்வியை எவ்வழியிலும் ஒப்பிடமுடியாது என்ற சொற்களை இதற்காகவே சொன்னேன்.(115) ஒரு பிரஸ்தம் வாற்கோதுமை மாவின் தூளால் அந்தச் சந்தர்ப்பத்தில் நான் பொன்மயமாக மாற்றப்பட்டேன். எனினும், இந்தப் பெரும் வேள்வி அந்தத் தூளுக்கு நிகராகாது. இதுவே என் கருத்தாகும்" என்றது {அந்தக் கீரி}.(116)

பிராமணர்களில் முதன்மையான அவர்கள் அனைவரிடமும் அந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு அந்தக் கீரி அவர்களின் பார்வையில் இருந்து மறைந்து போனது. பிறகு அந்தப் பிராமணர்கள் தங்கள் தங்களுக்குரிய இல்லங்களுக்குத் திரும்பிச் சென்றனர்".(117)

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! பகை நகரங்களை வெல்பவனே, அந்தப் பெரும் வேள்வியில் நிகழ்ந்த அற்புத நிகழ்வு குறித்த அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.(118) ஓ! மன்னா, நீ வேள்வி குறித்து உயர்வாக நினைக்கக்கூடாது. கோடிக்கணக்கான முனிவர்கள் தங்கள் தவங்களின் துணையால் மட்டுமே சொர்க்கத்திற்கு உயர்ந்தனர்.(119) அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழையாமை, மனநிறைவு, ஒழுக்கம், நேர்மை, தவம், தற்கட்டுப்பாடு, வாய்மை, கொடை ஆகியன ஒவ்வொன்றும் வேள்வித்தகுதிக்கு நிகரானவையாகும்" {என்றார் வைசம்பாயனர்}.(120)

அஸ்வமேதபர்வம் பகுதி – 90ல் உள்ள சுலோகங்கள் : 120

ஆங்கிலத்தில் | In English