Sacrifice, gift and penance! | Aswamedha-Parva-Section-91 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 76)
பதிவின் சுருக்கம் : தானம் மற்றும் தவங்களால் ஸ்வர்க்கம் முதலியன கிட்டுமென்றும், ஜீவ ஹிம்ஸைக்குக் காரணமான யாகம் சிறந்ததல்ல என்றும் சொன்ன வைசம்பாயனர்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! பலமிக்க முனிவரே, மன்னர்கள் வேள்விகளில் பற்றுள்ளவர்கள். பெரும் முனிவர்கள் தவங்களில் பற்றுள்ளவர்கள். கல்விமான்களான பிராமணர்கள், மன அமைதி, அமைதியான நடத்தை மற்றும் தற்கட்டுப்பாடு ஆகியவற்றைப் பயில்கின்றனர்.(1) எனவே, வேள்விகளின் கனிகளுடன் ஒப்பிடத்தக்க வகையில் இவ்வுலகில் வேறு எதுவும் காணக்கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது. இதுவே என் தீர்மானமாகும். மேலும் அந்தத் தீர்மானமும், ஐயமின்றிச் சரியானதாகத் தெரிகிறது.(2) ஓ! மறுபிறப்பாளர்களில் சிறந்தவரே, எண்ணற்ற மன்னர்கள், வேள்விகளில் தேவர்களை வழிபட்டு இம்மையில் உயர்ந்த புகழையும், மறுமையில் சொர்க்கத்தையும் அடைந்தனர்.(3) பெரும் சக்தியையும், ஆயிரம் கண்களையும் கொண்டவனும், தேவர்களின் பலமிக்கத் தலைவனுமான இந்திரன், அபரிமிதமான கொடைகளுடன் கூடிய வேள்விகள் பலவற்றைச் செய்தே தேவர்களின் மீதான அரசுரிமையை அடைந்து, தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையையும் அடைந்தான்.(4) மன்னன் யுதிஷ்டிரன், பீமன் மற்றும் அர்ஜுனனுடன் கூடியவராக, செழிப்பிலும், ஆற்றலிலும் தேவர்களின் தலைவனுக்கு ஒப்பானவனாக இருக்கும்போது,(5) அந்த உயர் ஆன்ம ஏகாதிபதியின் பெரும் குதிரை வேள்வியை அந்தக் கீரி ஏன் சிறுமைப்படுத்தியது?" என்று கேட்டான்.(6)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னா, ஓ! பாரதா, ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, வேள்வி தொடர்பான சிறந்த விதிகளையும், வேள்வி விளைவிக்கும் கனிகளையும் {பலன்களையும்} நான் உனக்குச் சொல்லப் போகிறேன் கேட்பாயாக.(7) முன்பொரு காலத்தில் சக்ரன் {இந்திரன்} ஒரு குறிப்பிட்ட வேள்வியைச் செய்தான். அந்த வேள்வியின் அங்கங்கள் திரட்டப்பட்ட போது, சாத்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு சடங்குகளைச் செய்வதில் {விஸ்தாரமான யாககர்மாவில்} ரித்விஜர்கள் மும்முரமடைந்தனர்.(8) அனைத்துத் தகுதிகளையும் கொண்டவரான ஆகுதிகளை ஊறுப்பவர் {ஹோதா}, தெளிந்த நெய்யாலான ஆகுதிகளை ஊற்றுவதில் ஈடுபட்டார். பெரும் முனிவர்கள் சுற்றிலும் அமர்ந்திருந்தனர். பெரும் கல்விமான்களும், மனநிறைவடைந்தவர்களுமான பிராமணர்கள், சாத்திர மந்திரங்களை இனி குரல்களில் சொல்லி தேவர்களை ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டிருந்தனர். தாங்கள் செய்து கொண்டிருந்த காரியத்தில் களைப்படையாதவர்களான அத்வர்யுக்களில் முதன்மையானவர்கள், யஜுர் வேத மந்திரங்களை மெல்லிய குரல்களில் ஓதிக் கொண்டிருந்தனர்.(9,10)
விலங்குகளைக் கொல்வதற்கான காலம் வந்தது. ஓ! மன்னா, வேள்விக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விலங்குகள் பிடிக்கப்பட்ட போது, அவற்றிடம் பெரும் முனிவர்கள் கருணை கொண்டனர்.(11) அந்த விலங்குகள் அனைத்தும் உற்சாகமிழந்ததைக் கண்டவர்களும், தவங்களையே செல்வமாகக் கொண்டவர்களுமான அந்த முனிவர்கள், சக்ரனை அணுகி, அவனிடம், "வேள்வியின் இந்த நடைமுறை மலங்கமானதல்ல.(12) பெருந்தகுதிகளை அடைய விரும்பும் உனக்கு வேள்வியுடன் எந்த அறிமுகமுமில்லை என்பதற்கான குறியீடு இது[1]. ஓ! புரந்தரா, வேள்விகளில் கொல்லப்படுவதற்காக விலங்குகள் விதிக்கப்படவில்லை.(13) ஓ! பலமிக்கவனே, நீ செய்யும் இந்த ஆயத்தங்கள் தகுதியை {புண்ணியத்தை} அழிப்பதற்குரியவை ஆகும். இந்த வேள்வி அறத்திற்கு இணக்கமானதல்ல. உயிரினங்களை அழிப்பதை ஒருபோதும் அறச்செயலெனச் சொல்ல முடியாது.(14) நீ இதை விரும்பினால், உன் புரோகிதர்கள், ஆகமத்தின்படி உன் வேள்வியைச் செய்யட்டும். ஒரு வேள்வியைச் சாத்திர விதிகளின் (உண்மையான கருத்தின்) படி செய்வதன் மூலம் உன்னால் அடையப்படும் தகுதி பெரியதாக இருக்கும்.(15) ஓ! நூறு கண்களைக் கொண்டவனே, மூன்று வருடங்களாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தானிய வித்துகளைக் கொண்டு வேள்வியைச் செய்வாயாக. ஓ! சக்ரா, இதுவே பேரறம் நிறைந்ததாகவும், உயர்ந்த செயல்திறனைக் கொண்ட கனிகளை விளைவிப்பதாகவும் இருக்கும்" என்றனர்.(16)
[1] கும்பகோணம் பதிப்பில், "இந்த யாகவிதி நல்லதன்று. பெரிய தர்மத்தை விரும்புகின்ற உனக்கு இது அறியாமையாகும்" என்றிருக்கிறது.
எனினும், செருக்கின் ஆதிக்கத்தில் இருந்தவனும், மூடத்தனத்தில் மூழ்கியவனுமான நூறு வேள்விகளைச் செய்த தேவன் {இந்திரன்}, அந்த முனிவர்களின் இந்தச் சொற்களை ஏற்கவில்லை.(17) ஓ! பாரதா, அப்போது, சக்ரனின் அந்த வேள்வியில், அசையும் உயிரினங்களைக் கொண்டு வேள்விகள் செய்யப்பட வேண்டுமா? அசையாத பொருட்களைக் கொண்டு அவை செய்யப்பட வேண்டுமா? அவை எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது குறித்துத் தவசிகளுக்கிடையில் ஒரு பெருஞ்சர்ச்சை எழுந்தது.(18) அந்தச் சர்ச்சையில் அவர்கள் அனைவரும் களைப்பை அடைந்தனர். அப்போது, உண்மையைக் காண்பவர்களான முனிவர்கள், (நடுவராக இருக்கும் காரியத்தைக் குறித்து) சக்ரனுடன் ஒரு புரிந்துணர்வைச் செய்து கொண்டு மன்னன் வசுவிடம்,(19) "ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவனே, வேள்விகள் குறித்த வேத தீர்மானமென்ன? விலங்குகளைக் கொண்டு வேள்விகளைச் செய்வது விரும்பத்தக்கதா? வித்துகள் மற்றும் சாறுகளைக் கொண்டு செய்வது விரும்பத்தக்கதா?" என்று கேட்டனர்[2].(20)
[2] கும்பகோணம் பதிப்பில், "யாகங்களைப் பற்றிச் சாஸ்திரம் எவ்விதம் இருக்கிறது? சிறந்த பசுக்களால் யாகம் செய்ய வேண்டியதா? அல்லது, முளைக்காத விதைகளால் யாகம் செய்ய வேண்டியதா?" என்றிருக்கிறது.
அந்தக் கேள்வியைக் கேட்ட மன்னன் வசு, இரு தரப்பின் வாதங்களில் உள்ள பலம் மற்றும் பலவீனங்களைத் தீர்மானிக்காமலேயே, "இருவகைகளில் எது ஆயத்தமாக இருக்கிறதோ அதைக் கொண்டு வேள்விகள் செய்யப்படலாம்" என்றான்.(21) அந்தக் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துவிட்டு அவன் பாதாள லோகத்திற்குச் சென்றான். உண்மையில் பலமிக்கவனான அந்தச் சேதிகளின் ஆட்சியாளன் {உபரிசர வசு}, பொய் சொன்னதன் காரணமாகத் துன்பத்தை அனுபவிக்க வேண்டி இருந்தது.(22) எனவே, ஓர் ஐயம் எழும்போது, எந்த மனிதனும், அவன் எவ்வளவு ஞானம் கொண்டவனாக இருப்பினும், பலமிக்கவனும், சுயம்புவுமான உயிரினங்களின் தலைவனாக அவன் இல்லாவிட்டால், அக்காரியத்தில் எதையும் தனியாகத் தீர்மானிக்கக்கூடாது.(23) தூய்மையற்ற புத்தியைக் கொண்ட ஒரு பாவியால் அளிக்கப்படும் கொடைகள் எவ்வளவு பெரியனவாக இருப்பினும் தொலைந்தே போகும். அத்தகைய கொடைகளால் ஆவதொன்றும் இல்லை.(24)
நியாயமற்ற ஒழுக்கம் கொண்டவனும், பாவம் நிறைந்த ஆன்மாவைக் கொண்டவனும், அழிவைச் செய்பவனுமான ஒரு மனிதனால் அளிக்கப்படும் கொடைகளின் மூலம் இம்மையிலோ, மறுமையிலோ நியாயமான புகழை ஒருபோதும் அடைய முடியாது.(25) தகுதியை ஈட்டும் விருப்பத்தின் மூலம், நியாயமற்ற வழிகளில் ஈட்டப்பட்ட செல்வத்தைக் கொண்டு வேள்விகளைச் செய்யும் அற்ப புத்தி கொண்ட மனிதன், தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதில் ஒருபோதும் வெல்வதில்லை.(26) பாவம் நிறைந்த ஆன்மாவைக் கொண்ட அந்த இழிந்த பாவி, பாசாங்குத்தனத்துடன் அறவோனின் வேடத்தை ஏற்றுப் பிராமணர்களுக்குக் கொடைகளை அளிப்பதன் மூலம் (உண்மையில் தகுதி எதனையும் ஈட்டாமல்) தன் சொந்த அறத்தைக் குறித்து மனிதர்களின் மத்தியில் ஒரு நம்பிக்கையை மட்டுமே உண்டாக்குவான்.(27) ஆசை மற்றும் அறியாமையில் மூழ்கி பாவம் நிறைந்த செயல்களின் மூலம் செல்வத்தை ஈட்டும் கட்டுப்பாடற்ற ஒழுக்கம் கொண்ட பிராமணன், இறுதியில் பாவம் நிறைந்தவர்களின் இலக்கையே {கதியையே} அடைகிறான்.(28)
பேராசை மற்றும் மூடத்தனத்தில் மூழ்கும் ஒருவன், செல்வத்தைச் சேமிக்க விரும்புகிறான். பாவம் நிறைந்த, தூய்மையற்ற புத்தியினால் தூண்டப்பட்ட அவன் அனைத்து உயிரினங்களுக்கும் தீங்கிழைக்கிறான்.(29) அத்தகைய வழிமுறைகளின் {தீங்கிழைப்பதன்} மூலம் செல்வமீட்டிய ஒருவன், அதைக் கொண்டு கொடைகளை அளித்தாலோ, வேள்விகளைச் செய்தாலோ, நியாயமற்ற வழிமுறைகளின் மூலம் அச்செல்வத்தினை ஈட்டியதன் விளைவால் அவன் மறுமையில் அந்தக் கொடைகள், அல்லது வேள்விகளின் கனிகளை ஒருபோதும் அனுபவிக்க மாட்டான்.(30) தவங்கள் எனும் செல்வத்துடன் கூடிய மனிதர்கள், தங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி, களங்களில் {வயல்களில்} இருந்து திரட்டப்பட்ட தானியங்கள், அல்லது கிழங்குகள், அல்லது கனிகள், அல்லது கீரைகள், அல்லது நீர், அல்லது இலைகள் ஆகியவற்றைக் கொடையளிப்பதன் மூலம் பெரும் தகுதியை ஈட்டி, சொர்க்கத்திற்குச் செல்கிறார்கள்.(31) இத்தகைய கொடைகளே அறம் நிறைந்தவையாகவும், உயர்ந்த தவங்களுக்கு நிகரானவையாகவும் ஆகின்றன. அத்தகைய கொடைகளும், உயிரினங்கள் அனைத்திடம் கொள்ளும் கருணையும், பிரம்மச்சரியமும், பேச்சில் வாய்மையும், அன்புடைமையும், உளவலிமையும், மன்னிக்கும் தன்மையும் {பொறுமையும்},(32) அழிவற்ற அறத்தின் நித்திய அடித்தளங்களாக அமைகின்றன.
விஷ்வாமித்ரர் மற்றும் பழங்கால மன்னர்கள் பிறரைக் குறித்தும் நாம் கேள்விப்படுகிறோம்.(33) விஷ்வாமித்ரர், அசிதர், மன்னர் ஜனகர், கக்ஷஸேநர், ஆர்ஷ்டிஷேணர், மன்னர் ஸிந்துத்வீபர் ஆகிய இவர்களும்,(34) தவங்களையே செல்வமாகக் கொண்ட இன்னும் பல மன்னர்களும், நியாயமாக ஈட்டிய பொருட்களைக் கொடையாகக் கொடுத்து உயர்ந்த வெற்றியை அடைந்தனர்.(35) ஓ! பாரதா, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களில் தவங்களைச் செய்பவர்களும், கொடைகள் மற்றும் பிற அறச் செயல்களின் மூலம் தங்களைத் தூய்மை செய்து கொள்பவர்களும் சொர்க்கத்தை அடைகிறார்கள்" {என்றார் வைசம்பாயனர்}.(36)
அஸ்வமேதபர்வம் பகுதி – 91ல் உள்ள சுலோகங்கள் : 36
ஆங்கிலத்தில் | In English |