Sacrifice, gift and penance! | Aswamedha-Parva-Section-92 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 77)
பதிவின் சுருக்கம் : தியானம் மற்றும் தவம் மூலம் யாக பலன் கிட்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அகஸ்தியர் யாகம் செய்த கதையைச் சொன்னது; கீரியின் வரலாறு...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! சிறப்புமிக்கவரே, சொர்க்கமானது நியாயமான வழிமுறைகளில் அடையப்பட்ட செல்வத்தின் கனியெனில் அது குறித்து முழுமையாக எனக்குச் சொல்வீராக. இக்காரியத்தை நீர் நன்கறிந்தவரெனவே, அதை விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்.(1) ஓ! மறுபிறப்பாளரே, உஞ்ச வாழ்வுமுறையின்படி வாழ்ந்து வந்த அந்தப் பிராமணர் வாற்கோதுமை மாவைக் கொடையளித்ததன் மூலம் அடைந்த உயர்ந்த கனியென்ன என்பதை எனக்குச் சொல்லியிருக்கிறீர். நிச்சயம் நீர் சொன்னவை அனைத்தும் உண்மையே.(2) எனினும், வேள்விகள் அனைத்தையும் காட்டிலும் அந்தக் கதியை அடைந்தது உயர்ந்ததென எவ்வகையில் கொள்ளப்படுகிறது? ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, விளக்கங்கள் அனைத்துடன் இதை எனக்கு விளக்கிச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான்.(3)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, முற்காலத்தில் அகஸ்தியரின் பெரும் வேள்வியில் என்ன நடந்தது என்பது குறித்த இந்தப் பழங்கதையில் இது தொடர்பாகக் குறிப்பிடப்படுகிறது.(4) ஓ! மன்னா, பழங்காலத்தில், பெருஞ்சக்தி கொண்டவரும், உயிரினங்கள் அனைத்தின் நன்மையில் அர்ப்பணிப்பு கொண்டவருமான அகஸ்தியர், பனிரெண்டு வருடங்கள் நீண்ட தீக்ஷைக்குள் நுழைந்தார்[1].(5) உயர் ஆன்ம முனிவருடைய அந்த வேள்வியில் சுடர்மிக்க நெருப்புகளுக்கு ஒப்பான காந்தியைத் தங்கள் உடல்களில் கொண்ட ஹோத்ரிகள் {ஹோதாக்கள்} பலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் கிழங்குகளையோ, கனிகளையோ உண்டு வாழ்பவர்களும், தங்கள் தானியங்களை இரண்டு கற்களை மட்டுமே நசுக்கி உண்பவர்களும் {அஸ்மகுட்டர்களும்}, (சந்திரக்) கதிர்களை மட்டுமே உண்டு வாழ்பவர்களும் {மரீசிபர்களும்} இருந்தனர்.(6) அவர்களில், உண்ணுமாறு பிறரால் வேண்டப்பட்டுத் தங்கள் முன் வைக்கப்படுவதைத் தவிர வேறு உணவேதும் உண்ணாதவர்களும் {பரிப்ருஷ்டிகர்களும்}, தேவர்கள், பித்ருக்கள், விருந்தினர்கள் ஆகியோருக்கு முதலில் படைக்காமல் எதையும் உண்ணாதவர்களும் {வைகஸிகர்களும்}, தாங்கள் உண்ட உணவைக் கழுவாதவர்களும் {வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்பவர்களான ப்ரஸங்கியனர்களும்} இருந்தனர். ஓ! மன்னா, அவர்களுக்கு மத்தியில் யதிகளும், பிக்ஷுக்களும் கூட இருந்தனர்[2].(7)
[1] "ஒரு குறிப்பிட்ட வேள்வியைச் செய்யவோ, ஒரு குறிப்பிட்ட நோன்பை நிறைவேற்றவோ விரும்பும் ஒருவனால் செய்யப்படும் தொடக்கச் சடங்கே தீக்ஷையாகும். ஏதோவொரு மங்கல நாள் தேர்ந்தெடுக்கப்படும். மந்திரங்கள் சொல்லப்பட்டு, சொற்களில் அதன் நோக்கம் வெளிப்படுத்தப்படும். நோன்புகளில் இயல்பைக் கொண்ட நீண்டு நீடிக்கும் வேள்விகள் பல இருந்தன. அவை நிறைவடையும் வரை அதைச் செய்பவன் தீக்ஷை என்ற காலத்திற்கு உட்படுவதாகச் சொல்லப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "மிக்கத் தேஜஸுள்ளவரும், எல்லாப் பிராணிகளுக்கும் நன்மையைச் செய்வதில் பற்றுதலுள்ளவருமான அகஸ்தியர் முற்காலத்தில் பன்னிரெண்டு வருஷங்களில் முடியக்கூடிய தீக்ஷையை அடைந்தார்" என்றிருக்கிறது.[2] கும்பகோணம் பதிப்பில், "அந்த யாகத்தில் மூலத்தை ஆகாரமாகக் கொண்டவர்களும், கனியை ஆகாரமாகக் கொண்டவர்களும், அஸ்மகுட்டர்களும், மரீசிபர்களும், பரிப்ருஷ்டிகர்களும், வைகஸிகர்களும், ப்ரஸங்கியானர்களும், யதிகளும், பிக்ஷுக்களும் வந்திருந்தார்கள்" என்றிருக்கிறது. அஸ்மகுட்டர்கள் என்பதன் அடிக்குறிப்பில், "கல்லால் தான்யத்தைக் குத்தி அரிசியெடுப்பவர்கள்" என்றும், மரீசிபர்கள் என்பதன் அடிக்குறிப்பில், "சந்திரகிரணத்தைப் பானம் செய்து திருப்தி அடைபவர்கள் என்பது பழைய உரை. ஸூர்ய கிரணத்தைப் பானம் செய்பவர்கள் என்பது உண்டு" என்றும், பரிப்ருஷ்டிகர்கள் என்பதன் அடிக்குறிப்பில், "வாங்கிக் கொள்ளும்படி நாம் கொடுப்பதையே பெற்றுக் கொள்பவர்கள் என்பது பழைய உரை" என்றும், வைகஸிகர்கள் என்பதன் அடிக்குறிப்பில், "பெரியோருக்கிட்டு மிச்சத்தையுண்பவர்கள்" என்றும், ப்ரஸங்கியனர்கள் என்பதன் அடிக்குறிப்பில், "அக்காலத்தில் வேண்டியதை மட்டும் எடுத்துக் கொள்பவர்கள்" என்றும் இருக்கின்றன.
அவர்கள் அனைவரும் அறத் தேவனின் உடல் வடிவத்தைக் கண்டவர்களாக இருந்தனர். அவர்கள் தங்கள் கோபத்தை அடக்கியவர்களாகவும், தங்கள் புலன்களின் மீது முழுக் கட்டுப்பாட்டை அடைந்தவர்களாகவும் இருந்தனர். தற்கட்டுப்பாட்டைப் பயின்று வாழ்ந்த அவர்கள், செருக்கில் இருந்தும், பிறருக்கும் தீங்கிழைக்கும் விருப்பத்தில் இருந்தும் விடுபட்டவர்களாக இருந்தனர்.(8) அவர்கள் எப்போதும் தூய ஒழுக்கத்தைப் பின்பற்றுபவர்களாகவும், (தங்கள் காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதில்) தங்கள் புலன்களால் ஒருபோதும் தடுக்கப்பட முடியாதவர்களாகவும் இருந்தனர். அந்த வேள்விக்கு வந்திருந்த அந்தப் பெரும் முனிவர்கள் அதற்குரிய பல்வேறு சடங்குகளை நிறைவேற்றினர்.(9) அந்தச் சிறப்புமிக்க முனிவர் (அகஸ்தியர்), அந்த வேள்விக்குத் திரட்டப்பட வேண்டிய உணவைத் தன் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி, நியாயமான முறையில் போதுமான அளவுக்கு அடைந்தார்.(10) அதே காலத்தில் வேறு எண்ணற்ற முனிவர்களும் பெரும் வேள்விகளைச் செய்து கொண்டிருந்தனர். எனினும், அகஸ்தியர் தமது வேள்வியில் ஈடுபட்ட போது,(11) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, ஆயிரங்கண் இந்திரன், (பூமியில்) மழை பொழிவதை நிறுத்தினான்.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, வேள்விச் சடங்குகளின் இடைவேளைகளில், தூய ஆன்மாக்களைக் கொண்ட அந்த முனிவர்களுக்கு மத்தியில் உயர் ஆன்ம அகஸ்தியர் குறித்த இந்தப் பேச்சு எழுந்தது, {அவர்கள்}, "வேள்வியில் ஈடுபடும் இந்த அகஸ்தியர், செருக்கும், பகட்டும் இன்றி {மாத்ஸர்யமின்றி} உணவுக் கொடைகளை அளித்து வருகிறார்.(12,13) எனினும், மேகங்களின் தேவன் {பர்ஜன்யன் / இந்திரன்}, மழை பொழிவதை நிறுத்திவிட்டான். உண்மையில் உணவு எவ்வாறு வளரும்? பிராமணர்களே, அந்த முனிவரின் இவ்வேள்வி பனிரெண்டு வருடங்கள் நீளும் பெரிய வேள்வியாகும்.(14) அந்தத் தேவன் இந்தப் பனிரெண்டு வருடங்களும் மழை பொழிய மாட்டான். இதைச் சிந்தித்துப் பார்த்து, கடுந்தவங்களுடன் கூடியவரும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவருமான இந்த முனிவருக்கு ஏதாவது உதவியைச் செய்வதே உங்களுக்குத் தகும்" என்றனர்.
இச்சொற்கள் சொல்லப்பட்ட போது, பேராற்றல் கொண்ட அகஸ்தியர்,(15,16) தலைவணங்கியவராக அந்தத் தவசிகள் அனைவரையும் நிறைவடையச் செய்து, "வாசவன் அந்தப் பனிரெண்டு வருடங்களும் மழை பொழியவில்லையெனில்,(17) நான் மனோ வேள்வியைச் செய்வேன். இதுவே நித்ய விதியாகும். வாசவன் இந்தப் பனிரெண்டு வருடங்களும் மழைபொழியவில்லையெனில்,(18) நான் ஊறு வேள்வியைச் செய்வேன். இதுவே நித்திய வேள்வியாகும். வாசவன் இந்தப் பனிரெண்டு வருடங்களும் மழையைப் பொழிவில்லையெனில்,(19) நான் என் உழைப்பனைத்தையும் செலுத்தி, மிகக் கடுமையானவையும், கடும் நோன்புகளைக் கொண்டவையுமான வேறு வேள்விகளைச் செய்வதற்கு ஆயத்தமாவேன். வித்துகளை {விதைகளைக்} கொண்டு செய்யப்படும் என்னுடைய இந்த வேள்வி, பல வருடங்கள் நீளும் உழைப்புடன் கூடியதாக என்னால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது[3].(20) வித்துகளைக் கொண்டே நான் அதிக நன்மையைச் செய்வேன். இடையூறேதும் எழாது. என்னுடைய இந்த வேள்வி கலங்கடிக்கப்பட முடியாததாகும்.(21)
[3] "பம்பாய் உரையில் 20ம் ஸ்லோகத்தின் முதல் வரி வேறு வகையில் இருக்கிறது. "நான் என் நோன்பை மிக உறுதியாக நோற்று, என் எண்ணத்தாலேயே எனக்கு வேண்டிய பொருட்களை உண்டாக்கி, பல வேள்விகள் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யப் போகிறேன் என்றிருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "என்னால் இந்தப் பீஜயஜ்ஞமானது அநேக வர்ஷங்களாக அனுஷ்டிக்கப்பட்டது. விதைகளால் இதைச் செய்கிறேன். இதில் இடையூறு உண்டாகாது" என்றிருக்கிறது.
அந்தத் தேவன் {இந்திரன்} மழையைப் பொழிவதோ, பொழியாமல் இருப்பதோ இதில் அதிக முக்கியமற்றதாகும். உண்மையில், இந்திரன் தன் விருப்பப்படியே எனக்கு மதிப்பேதும் அளிக்கவில்லையெனில்,(22) நானே இந்திரனாக மாறி அனைத்து உயிரினங்களையும் வாழச் செய்வேன். ஒவ்வொரு உயிரினமும், முன்பு போலவே தான் எப்போதும் உண்டு வளரும் உணவையே உண்டு வளரும்.(23) பல்வேறு வகைப் பொருட்களையும் நான் மீண்டும் மீண்டும் உண்டாக்குவேன். தங்கமும், இன்னும் என்னவெல்லாம் செல்வமுண்டோ அவை அனைத்தும் இந்த இடத்திற்கு இன்று வந்து சேரட்டும்.(24) மூன்று உலகங்களிலும் உள்ள செல்வம் அனைத்தும் இன்று தாமே இங்கு வந்து சேரட்டும். அப்சரஸ்களின் தெய்வீக இனக்குழுக்கள், கின்னரர்களோடு கூடிய கந்தர்வர்கள்,(25) விஸ்வாவசு மற்றும (அவ்வகையைச்) சார்ந்த பிறரும் என்னுடைய இந்த வேள்விக்கு வந்து சேரட்டும். வட குருக்களுக்கு மத்தியில் இருக்கும் செல்வமனைத்தும்,(26) இந்த வேள்விகளுக்குத் தாமே வந்து சேரட்டும். சொர்க்கமும், சொர்க்கத்தைத் தங்கள் இல்லமாகக் கொண்ட அனைவரும், தர்மனும் இங்கே வந்து சேரட்டும்" என்றார் {அகஸ்தியர்}.(27)
சுடர்மிக்க நெருப்புக்கு ஒப்பான மனத்தைக் கொண்டவரும், இயல்புக்கு மீறிய சக்தியைக் கொண்ட தவசியுமான அகஸ்தியர் இந்தச் சொற்களைச் சொன்னதும், அவரது தவங்களின் விளைவால் அவர் விரும்பியது அனைத்தும் நடந்தன.(28) அங்கே இருந்த முனிவர்கள், தவத்தின் சக்தியைக் கண்டு இதயம் மகிழ்ந்தனர். ஆச்சரியத்தில் நிறைந்த அவர்கள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தச் சொற்களைச் சொன்னார்கள்.(29) அந்த முனிவர்கள், "நீர் சொன்ன சொற்களால் நாங்கள் பெரிதும் நிறைவடைந்தோம். எனினும், உமது தவத்திற்கு எந்தக் குறையும் நேரக்கூடாது என நாங்கள் விரும்புகிறோம். நியாயமான வழிமுறைகளின் மூலம் செய்யப்படும் இந்த வேள்விகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம்[4].(30) நியாயமான வழிமுறைகளில் எங்கள் உணவை ஈட்டி, எங்களுக்குரிய கடமைகளை நோற்று வேள்விக்கான தொடக்கங்களில் ஈடுபட்டு, நாங்கள் புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி பிற அறச்சடங்குகளையும் செய்யப் போகிறோம்.(31) நியாயமான வழிமுறைகளின் மூலம் பிரம்மச்சரியம் பயின்று நாங்கள் தேவர்களைத் துதிக்கப் போகிறோம். பிரம்மச்சரிய காலத்தை நிறைவேற்றி, நியாயமான வழிமுறைகளை நோற்று எங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியே வரப் போகிறோம். பிறருக்கு எவ்வகையிலும் தீங்கிழைக்கும் விருப்பத்தில் இருந்து விடுபட்ட புத்தியையே நாங்கள் அங்கீகரிக்கிறோம்.(32,33) ஓ! பலமிக்கவரே, வேள்விகள் அனைத்திலும் தீங்கிழையாமையை நீர் எப்போதும் பாராட்ட வேண்டும். ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே, அப்போது நாங்கள் உயர்வான நிறைவை அடைவோம். உமது வேள்வி நிறைவடைந்த பின்னர், உம்மால் விடைகொடுத்து அனுப்பப்படும்போது நாங்கள் {இந்த ஸத்ரத்திலிருந்து} இந்த இடத்தை விட்டுச் செல்வோம்" என்றானர்.(34)
[4] "அநேகமாக இதுவே பொருளாக இருக்க வேண்டும்: ஒரு பிராமணர் தம் தவங்களின் மூலம் இயல்புக்கு மீறிய விளைவுகளை உண்டாக்கினால், அவரது தவங்களில் ஒரு பகுதி அழிவடையும். அந்த முனிவர்கள், அகஸ்தியர் செய்த தவங்களின் எந்தப் பகுதியும் அவருடைய வேள்வியை நிறைவடையச் செய்வதில் செலவளிப்பதை விரும்பவில்லை (அவருடைய தவங்கள் அழிவடைவதை விரும்பவில்லை)" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவர்கள் இந்தச் சொற்களைச் சொல்லிக் கொண்டிஉரக்கும்போது, தேவர்களின் தலைவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான புரந்தரன், அகஸ்தியருடைய தவங்களின் சக்தியைக் கண்டு மழையைப் பொழிந்தான்.(35) உண்மையில், ஓ! ஜனமேஜயா, அளவிலா ஆற்றல் கொண்ட அந்த முனிவரின் வேள்வி முடியும் வரை, மழையின் தேவனான அவன் மழையைப் பொழிந்து, அளவிலும், காலத்திலும் மனிதர்களின் விரும்பங்களை நிறைவேற்றினான்.(36) ஓ! அரச முனியே, தேவர்களின் தலைவன் {இந்திரன்}, பிருஹஸ்பதியைத் தன் முன் கொண்டு அங்கே வந்து, அகஸ்திய முனிவரை நிறைவடையச் செய்தான்.(37) அகஸ்தியர் அந்த வேள்வியின் முடிவில் மகிழ்ச்சியால் நிறைந்தவர்களாக அந்தப் பெரும் முனிவர்கள் அனைவரையும் முறையாக வழிபட்டு, அவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பினார்" {என்றார் வைசம்பாயனர்}.(38)
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "பொன் தலை கொண்டதும், மனிதக் குரலில் அந்தச் சொற்கள் அனைத்தையும் பேசியதுமான அந்தக் கீரி {கீரியின் வடிவில் இருந்தது} யார்? என்னால் கேட்கப்படும் இதை எனக்கு நீர் சொல்வீராக" என்றான்.(39)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "நீ முன்பே என்னைக் கேட்காததால் நான் அதை உனக்குச் சொல்லவில்லை. அந்தக் கீரி யார் என்பதையும், அதனால் மனிதக் குரலை எவ்வாறு ஏற்க முடிந்தது என்பதையும் சொல்கிறேன் நீ கேட்பாயாக.(40) முன்பொரு காலத்தில், ஜமதக்னி முனிவர் ஒரு சிராத்தத்தைச் செய்யக் கருதினார். அவரது ஹோமப் பசு அவரிடம் வந்தாள், அந்த முனிவர் அவளிடம் பாலைக் கறந்தார்.(41) அவர் புதியதும், உறுதியானதும், தூய்மையானதுமான ஒரு பாத்திரத்தில் அந்தப் பாலை வைத்தார். தர்மதேவன், கோபத்தின் வடிவை ஏற்று அந்தப் பால் பாத்திரத்திற்குள் நுழைந்தான்.(42) உண்மையில் தர்மன், அந்த முனிவர்களில் முதன்மையானவர் தமக்குத் தீங்கு நேர்வதைக கண்டு என்ன செய்வார் என்பதைக் காண விரும்பினான்.(43) தமது பாலைக் கெடுத்தது கோபமே என்பதை அறிந்த தவசி, அவனிடம் சினமேதும் அடையவில்லை. பிறகு கோபமானவன், ஒரு பிராமணப் பெண்ணின் வடிவத்தை ஏற்றுத் தன்னை அந்த முனிவரிடம் வெளிப்படுத்திக் கொண்டான்.(44)
உண்மையில் கோபமானவன், பிருகு குலத்தில் முதன்மையான அவர் {ஜமதக்னி} தன்னை வென்றுவிட்டதைக் கண்டு, அவரிடம், "ஓ! பிருகு குலத் தலைவரே, நான் உம்மால் வெல்லப்பட்டேன். பிருகுக்கள் பெரும் கோபக்காரர்கள் என்ற சொல் மனிதர்களுக்கு மத்தியில் உண்டு. நான் உம்மால் அடக்கப்பட்டதால், அச்சொல் பொய்யென்பதை நான் இப்போது கண்டுகொண்டேன்.(45) பேரான்மா கொண்டவர் நீர். மன்னிக்கும் தன்மையுடன் {பொறுமையுடன்} கூடிவர் நீர். நான் இன்று உமது ஆளுகையின் கீழ் இங்கே நிற்கிறேன். ஓ! அறம் சார்ந்தவரே, நாம் உமது தவங்களுக்கு அஞ்சுகிறேன். ஓ! பலமிக்க முனிவரே, நீர் எனக்குக் கருணை காட்டுவீராக" என்றான் {பிராமணப் பெண் வடிவில் வந்த கோபமான தர்மன்}.(46)
ஜமதக்னி, "ஓ! கோபமே, உடல் வடிவத்துடன் கூடிய உன்னை நான் கண்டிருக்கிறேன். எந்தக் கவலையுமின்றி நீ விரும்பிய இடத்திற்குச் செல்வாயாக. நீ எனக்கு இன்று எந்தத் தீங்கையும் இழைக்கவில்லை. உனக்கெதிரான மனவெறுப்பு ஏதும் என்னிடம் இல்லை.(47) யாருக்கு நான் இந்தப் பாலை வைத்திருந்தேனோ அந்தப் பித்ருக்கள் உயர்ந்த அருளைக் கொண்டவர்களாவர். நீ அவர்களிடம் சென்று {உன் கருத்தை அவர்களிடம் சொல்லி} அவர்களது கருத்துகளை {அச்சம் என்றால் என்ன என்பதை} உறுதி செய்து கொள்வாயாக[5]" என்றார்.(48)
[5] கும்பகோணம் பதிப்பில், "எவர்களை உத்தேசித்து இந்தப் பாலை நான் அபேக்ஷித்தேனோ அந்தப் பித்ருக்கள் பெரிய பாக்கியமுள்ளவர்கள். அவர்களிடமிருந்து (பயத்தைத்) தெரிந்து கொள். போகலாம்" என்றிருக்கிறது.
இவ்வாறு சொல்லப்பட்டதும், அச்சமடைந்த கோபமானவன் {தர்மன்}, அந்த முனிவரின் பார்வையில் இருந்து மறைந்து போனான். அந்தப் பித்ருக்களின் சாபம் மூலம் அவன் {தர்மன்} ஒரு கீரியானான்.(49) பிறகு அவன், தனக்கேற்பட்ட சாபத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வர பித்ருக்களை நிறைவடையச் செய்யத் தொடங்கினான். அவனிடம் அவர்கள், "தர்மத்தை {தர்மனை} அவமதித்துப் பேசுவதன் மூலம் நீ அடைந்திருக்கும் சாபத்தின் முடிவை அடைவாய்" என்றனர்.(50)
அவர்களால் இவ்வாறு சொல்லப்பட்ட அது, பெரும் வேள்விகளை நிந்தித்தவாறு, வேள்விகளைச் செய்யும் இடங்களிலும், புனித இடங்களிலும் திரிந்து கொண்டிருந்தது. அந்தக் கீரியே மன்னன் யுதிஷ்டிரனின் பெரும் வேள்விக்கு வந்தது.(51) ஒரு பிரஸ்தம் வாற்கோதுமை மாவைக் குறிப்பிட்டதன் மூலம் தர்மனின் மகனை இகழ்ந்த அந்தக் கோபமானது {கீரியானது}, யுதிஷ்டிரன் தர்மனின் சுயம் (தர்மனின் மகன்) என்பதால் தன் சாபத்தில் இருந்து விடுபட்டது.(52) அந்த உயர் ஆன்ம மன்னனின் வேள்வியில் நடந்தது இதுவே. அந்தக் கீரி நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கேயே அப்போதே மறைந்து போனது" {என்றார் வைசம்பாயனர்}.(53)
அஸ்வமேதபர்வம் பகுதி – 92ல் உள்ள சுலோகங்கள் : 53
அஸ்வமேதபர்வம் பகுதி – 92ல் உள்ள சுலோகங்கள் : 53
********* அநுகீதா உப பர்வம் முற்றும் *********
********* அஸ்வமேத பர்வம் முற்றிற்று *********
********* அடுத்தது ஆசிரமவாஸிக பர்வம் *********
ஆங்கிலத்தில் | In English |