Thursday, January 02, 2020

குந்தியின் சமாதானம்! - ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 17

Consolation of Kunti! | Asramavasika-Parva-Section-17 | Mahabharata In Tamil

(ஆஸ்ரமவாஸ பர்வம் - 17)


பதிவின் சுருக்கம் : பாண்டவர்களுக்குச் சமாதானம் கூறிய குந்தி...


குந்தி {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! வலிமைக்கக் கரங்களைக் கொண்ட பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, நீ சொல்வது உண்மைதான். மன்னர்களே, நீங்கள் உற்சாகமற்றிருந்தபோது, அவ்வாறே நான் உங்கள் அனைவரையும் தூண்டினேன்.(1) பகடையாட்டத்தில் உங்கள் நாடு உங்களிடம் இருந்து அபகரிக்கப்பட்டதைக் கண்டும், நீங்கள் மகிழ்ச்சியை இழந்ததைக் கண்டும், உங்கள் உற்றார் உறவினரின் ஆதிக்கத்திற்கு வசப்பட்டவர்களாக உங்களைக் கண்டும், துணிவையும், உயர்ந்த எண்ணங்களையும் நான் உங்கள் மனத்தில் செலுத்தினேன்.(2) மனிதர்களில் முதன்மையானவர்களே, பாண்டுவின் மகன்கள் வீழ்ந்துவிடக்கூடாது என்ற வகையிலும், அவர்கள் புகழை இழந்துவிடக்கூடாது என்ற வகையிலும் நான் உங்களுக்கு ஊக்கமளித்தேன்.(3)


நீங்கள் அனைவரும் இந்திரனுக்கு இணையானவர்கள். நீங்கள் தேவர்களுக்கு ஒப்பான ஆற்றலைக் கொண்டவர்கள். பிறரின் முகங்களை எதிர்பார்த்து நீங்கள் வாழக்கூடாது என்பதற்காகவே நான் அவ்வழியில் செயல்பட்டேன்[1].(4) அறவோர் அனைவரிலும் முதன்மையானவனும், வாசவனுக்கு நிகரானவனுமான நீ மீண்டும் காட்டுக்குச் சென்று துன்பத்தில் வாழக்கூடாது என்பதற்காகவே நான் உன் இதயத்தில் துணிவைச் செலுத்தினேன்.(5) பத்தாயிரம் {10,000} யானைகளின் பலத்தைக் கொண்டவனும், ஆற்றலுக்காகவும், ஆண்மைக்காகவும் பரந்து அறியப்பட்டவனுமான இந்தப் பீமன், சிறப்பின்மை மற்றும் அழிவுக்குள் மூழ்கிவிடக்கூடாது என்பதற்காகவே நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(6)

[1] "பிறரின் முகங்களை எதிர்பார்த்து வாழ்வது என்பது அவர்களைச் சார்ந்து வாழ்தல் என்ற பொருளைக் கொண்டதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நீங்களெல்லாரும் இந்திரனுக்கு ஒப்பானவர்களும், தேவர்களுக்குச் சமமான பராக்கிரமமுள்ளவர்களும், பிறருடைய முகத்தை எதிர்பாராதவர்களுமாக இருக்க வேண்டுமென்று நான் அவ்விதம் செய்தேன்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நீங்கள் அனைவரும் இந்திரனுக்கு நிகரானவர்கள். நீங்கள் தேவர்களுக்கு இணையான ஆற்றலைக் கொண்டவர்கள். நீங்கள் பிறரைச் சார்ந்திருக்கக்கூடாது. அந்தக் காரணத்திற்காகவே நான் அவ்வழியில் செயல்பட்டேன்" என்றிருக்கிறது.

பீமசேனனுக்கு அடுத்துப் பிறந்தவனும், வாசவனுக்கு இணையானவனுமான இந்த விஜயன் {அர்ஜுனன்} உற்சாகமிழந்துவிடக்கூடாது என்பதற்காகவே நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(7) பெரியோரிடம் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பவர்களான நகுலனும் சகாதேவனும் பலவீனமடைந்து, பசியால் உற்சாகமற்றவர்களாகிவிடக் கூடாது என்பதற்காக நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(8) வாளிப்பானவளும், அகன்ற விழிகளைக் கொண்டவளுமான இந்தப் பெண் {திரௌபதி}, பொதுச் சபையில் தனக்கு இழைக்கப்பட்ட குற்றத்திற்குப் பழிவாங்காமல் இருந்து, அதைப்பொறுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நான் அவ்வழியில் செயல்பட்டேன்.(9)

ஓ! பீமா, பகடையில் வெல்லப்பட்டதும், தன் மாதவிடாய் காலத்தில் வாழை மரத்தைப் போல நடுங்கிக் கொண்டிருந்த இவளை {திரௌபதியை} நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே(10) ஓர் அடிமையை {இழுத்துச் செல்வதைப்} போலத் தன் மடமையின் மூலம் இழுத்துச் சென்றான் துச்சாசனன். இவை யாவற்றையும் நான் அறிவேன். உண்மையில், பாண்டுவின் குலம் (பகைவர்களால்) அடக்கப்பட்டது.(11) பாதுகாப்பை விரும்பும் பெண் அன்றிலைப் போல அவள் உரக்கக் கதறியபோது, என் மாமனார் {பீஷ்மர்} மற்றும் பிறர் உள்ளிட்ட குருக்கள் உற்சாகமற்றவர்களாக இருந்தனர்.(12)

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அற்ப புத்தி கொண்ட பாவியான துச்சாசனனால் கூந்தல் பற்றப்பட்டு இவள் {திரௌபதி} இழுத்துச் செல்லப்பட்ட போது, நான் என் புலனுணர்வுகளை இழந்தேன் {மூர்ச்சையடைந்தேன்}.(13) ஓ! என் மகன்களே, உங்கள் சக்தியைப் பெருக்கவே விதுலையின் சொற்களைச் சொல்லி உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(14) ஓ! என் மகன்களே, என் பிள்ளைகளால் பிரதிபலிக்கப்படும் பாண்டுவின் குலம் அழிந்துபோகக்கூடாது என்பதற்காகவே நான் உங்கள் இதயங்களில் துணிவைச் செலுத்தினேன்.(15)

ஒரு குலத்திற்குப் புகழ்க்கேட்டைக் கொண்டுவரும் மனிதனின் மகன்களும், பேரர்களும் ஒருபோதும் நல்லுலகங்களை அடைவதில் வெல்லமாட்டார்கள். உண்மையில், கௌரவக் குலத்தின் மூதாதையர்கள், தங்களுடையவையாக இருந்த இன்பலோகங்களை இழக்கும் ஆபத்தில் இருந்தனர்.(16) ஓ! என் மகன்களே, என்னைப் பொறுத்தவரையில், இதற்கு முன்பே நான் என் கணவரால் அடையப்பட்ட அரசுரிமையின் பெருங்கனிகளை அனுபவித்திருக்கிறேன். நான் பெருங்கொடைகளை அளித்திருக்கிறேன். நான் வேள்வியில் முறையாகச் சோமச்சாற்றைப் பருகியிருக்கிறேன்[2].(17) நான் எனக்காக வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} கிளர்ந்தெழச் செய்யும் விதுலையின் சொற்களைச் சொல்லித் தூண்டவில்லை. அந்த ஆலோசனையைப் பின்பற்றுமாறு உங்களுக்காகவே நான் உங்களை தூண்டினேன்.(18)

[2] "மஹாதானம் {பெருங்கொடை} என்பது யானைகள், குதிரைகள், தேர்கள், வாகனங்கள், படகுகள் முதலிய பொருட்களைக் கொடையளிப்பது என்பது முன்பே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொடையளிப்பதன் மூலம் கொடையாளி பெரும் புண்ணியத்தை வென்றெடுக்கிறான், ஆனால் அவற்றை ஏற்பதன் மூலம் அக்கொடையைப் பெறுபவன், தனித்தன்மைவாய்ந்த மீத்திற ஆற்றலைக் கொண்டவனாக இருந்தால் தவிரப் பாவத்தையே ஈட்டுகிறான். இந்த நாள்வரை, அத்தகையைக் கொடைகளைப் பெறுபவர்கள், வீழ்ந்த மனிதர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "புத்திரர்களே, முன்பு நான் பர்த்தாவினுடைய விஸ்தாரமான ராஜ்யத்தின் பயனை அனுபவித்தேன். மஹாதானங்களைக் கொடுத்தேன். விதிப்படி ஸோம்பானம் செய்தேன்" என்றிருக்கிறது.

ஓ! என் மகன்களே, என் பிள்ளைகளால் வெல்லப்பட்ட அரசுரிமையின் கனிகளில் எனக்கு விருப்பமில்லை. ஓ! பெரும்பலம் கொண்டவனே. என் கணவரால் அடையப்பட்ட இன்பலோகங்களை நான் என் தவங்களின் மூலம் அடைய விரும்புகிறேன்.(19) ஓ! யுதிஷ்டிரா, காடுகளையே தங்கள் வசிப்பிடமாக்கிக் கொள்ள விரும்பும் என் மாமனார் மற்றும் மாமியார் ஆகிய இருவருக்கும் கீழ்ப்படிந்து தொண்டாற்றுவதன் மூலமும், எனத் தவங்களின் மூலமும் நான் என் உடலை உலர்த்த {உடலைவிட்டு விடுபட} விரும்புகிறேன்.(20) ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே, நீயும், பீமனும், பிறரும் என்னைப் பின்தொடர்வதை நிறுத்துவீராக. உன் புத்தி எப்போதும் அறத்திலேயே அர்ப்பணிப்புடன் இருக்கட்டும். உன் மனம் எப்போதும் பெரியதாகவே இருக்கட்டும்" என்றாள் {குந்தி}".(21)

ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 17ல் உள்ள சுலோகங்கள் : 21

ஆங்கிலத்தில் | In English