The region of Kuvera! | Asramavasika-Parva-Section-20 | Mahabharata In Tamil
(ஆஸ்ரமவாஸ பர்வம் - 20)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனைக் காண வந்த நாரதர்; அந்த வனம் ராஜரிஷிகளுக்கு ஸ்வர்க்கம் தந்ததையும், அவர்களுக்கும் அது ஸித்தியைத் தரும் என்பதையும், திருதராஷ்டிரன் அடையப்போகும் கதியையும் சொன்னது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தவசிகளில் முதன்மையான நாரதர், பர்வதர் மற்றும் கடுந்தவங்களைக் கொண்ட தேவலர் ஆகியோர் மன்னன் திருதராஷ்டிரனைக் காண அங்கே வந்தனர்.(1) சீடர்களுடன் கூடியவரும், தீவில் பிறந்தவருமான வியாசரும், பெரும் ஞானம் கொண்டவர்களும், தவவெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்களான பிறரும், முதிர்ந்த வயதையும், பெரும் புண்ணியங்களையும் கொண்ட அரச முனி சதயூபனும் அங்கே வந்தனர்.(2) ஓ! மன்னா, குந்தி அவர்களை உரிய சடங்குகளுடன் வழிபட்டாள். அந்தத் தவசிகள் அனைவரும் தங்களுக்குச் செய்யப்பட்ட வழிபாட்டில் பெரும் நிறைவை அடைந்தனர்.(3) அந்தப் பெரும் முனிவர்கள், உயர் ஆன்மா கொண்ட திருதராஷ்டிரனிடம் அறம் மற்றும் நீதி குறித்து உரையாடி அவனை மகிழ்வித்தனர்.(4) அவர்களுடைய உரையாடலின் முடிவில் தெய்வீக முனிவரான நாரதர், அனைத்துப் பொருட்களையும் நேரடியாகக் கண்களில் கண்டு, பின்வரும் சொற்களைச் சொன்னார்.(5)
நாரதர், "பெருஞ்செழிப்பைக் கொண்டவனும், முற்றிலும் அச்சமற்றவனுமாகக் கேகயர்களில் ஓர் ஆட்சியாளன் இருந்தான். இந்தச் சதயூபனின் பாட்டனான அவனது பெயர் சஹஸ்ரசித்யன் என்பதாகும்.(6) அந்தச் சஹஸ்ரசித்யன் பேரளவு அறம் கொண்ட தன் மூத்த மகனிடம் தன் நாட்டை ஒப்படைத்துவிட்டு, காட்டிற்கு ஓய்ந்து சென்றான்.(7) பெருங்காந்தியைக் கொண்ட அந்தப் பூமியின் தலைவன் {சஹஸ்ரசித்யன்} சுடர்மிக்கத் தவத்தின் எல்லையைக் கடந்து புரந்தலோகத்தை அடைந்து அங்கே அவனுடைய {புரந்தரனின்} தோழமையில் தொடர்ந்து வாழ்ந்தான்.(8) ஓ! மன்னா, இந்திரலோகத்திற்கு நான் சென்ற பல சந்தர்ப்பங்களில், தவங்களின் மூலம் பாவங்களனைத்தையும் எரித்து இந்திரனின் வசிப்பிடத்தில் வசித்துக் கொண்டிருக்கும் அந்த ஏகாதிபதியை {சஹஸ்ரசித்யனைக்} கண்டிருக்கிறேன்.(9)
அதே போலவே, பகதத்தனின் பாட்டனான மன்னன் சைலாலயனும் தன் தவங்களின் சக்தியை மட்டுமே கொண்டு இந்திரலோகத்தை அடைந்திருக்கிறான்.(10) ஓ! ஏகாதிபதி, அங்கே வஜ்ரதாரிக்கே ஒப்பானவனும், பிருஷத்ரன் என்ற பெயரைக் கொண்டவனுமான மற்றொரு மன்னனும் இருந்தான். அந்த மன்னனும் தன் தவங்களின் மூலம் பூமியில் இருந்து சொர்க்கத்திற்குச் சென்றான்.(11) ஓ! மன்னா, இதே காட்டில், பூமியின் தலைவனும், மாந்தாத்ரியின் {மாந்தாதாவின்} மகனுமான புருகுத்ஸன் உயர்ந்த வெற்றியை அடைந்தான்.(12) ஆறுகளில் முதன்மையான நர்மதை இம்மன்னனின் மனைவியானாள். பூமியின் ஆட்சியாளனான அவன், இதே காட்டில் கடுந்தவங்களைச் செய்து, சொர்க்கத்திற்குச் சென்றான்.(13) உயர்ந்த அறவோனும், சசலோமன் என்ற பெயரைக் கொண்டவனுமான மற்றொரு மன்னனும் இருந்தான். அவனும் இதே காட்டில் கடுந்தவங்களைச் செய்து சொர்க்கத்திற்கு உயர்ந்தான்.(14)
ஓ! ஏகாதிபதி, இந்தக் காட்டிற்கு வந்திருக்கும் நீயும், தீவில் பிறந்தவரின் {வியாசரின்} அருளால், உயர்ந்ததும், அடைதற்கரிதானதுமான ஓர் இலக்கை அடைவாயாக.(15) ஓ! மன்னர்களில் முதன்மையானவனே, காந்தாரியின் துணையுடன் கூடிய நீயும் உன் தவங்களின் முடிவில், பெருஞ்செழிப்பை அடைந்து, அந்த உயர் ஆன்மாக்கள் அடைந்த இலக்கை அடைவாயாக.(16) பகனைக் கொன்றவனின் முன்னிலையில் வசிக்கும் பாண்டு எப்போதும் உன்னைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறான். ஓ! ஏகாதிபதி, நீ செழிப்பை அடைவதற்கு அவன் நிச்சயம் உனக்குத் துணை புரிவான்.(17) பெரும் புகழைக் கொண்டவளும், உன் மருமகளுமான இவள் {குந்தி}, உனக்கும், காந்தாரிக்கும் தொண்டு செய்வதன் மூலம் மறுமையில் தன் கணவனுடன் வசிக்கும் இடத்தை அடைவாள்.(18) இவள் நித்திய தர்மமான யுதிஷ்டிரனின் தாயாவாள். ஓ! மன்னா, இவை யாவற்றையும் நாங்கள் எங்கள் ஆன்மப் பார்வையில் கண்டோம்.(19) விதுரன் உயர் ஆன்ம யுதிஷ்டிரனுக்குள் நுழைவான். சஞ்சயனும் தியானத்தின் மூலம் இந்த உலகத்தில் இருந்து சொர்க்கத்திற்கு உயர்வான்" என்றார் {நாரதர்}".(20)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உயர் ஆன்மா கொண்டவனும், கல்வி கற்றவனுமான அந்தக் குருகுலத் தலைவன் {திருதராஷ்டிரன்}, தன் மனைவியுடன் சேர்ந்து நாரதரின் சொற்களைக் கேட்டு, அவற்றைப் புகழ்ந்து, இதற்கு முன் இல்லாத கௌரவங்களால் நாரதரை வழிபட்டான்.(21) ஓ! ஏகாதிபதி, அங்கே இருந்த பிராமணர்களின் கூட்டம் பெரும் மகிழ்ச்சியால் நிறைந்து மன்னன் திருதராஷ்டிரனை மகிழ்வடையச் செய்ய விரும்பி அளவிடற்கரிய வெகுமதிகளால் நாரதரை வழிபட்டனர்.(22) மறுபிறப்பாளர்களில் முதன்மையான அவர்கள் நாரதரின் சொற்களையும் புகழ்ந்தனர்.
அப்போது அரசமுனியான சதயூபன் நாரதரிடம்,(23) "ஓ! பெரும் காந்தியைக் கொண்டவரே {நாரதரே}, புனிதமானவரான நீர் இந்தக் குரு மன்னன் மற்றும் இங்கிருக்கும் மக்கள் மற்றும் நான் என அனைவரின் பக்தியையும் அதிகரித்திருக்கிறீர்.(24) எனினும், நான் உம்மை ஒன்று கேட்க விரும்புகிறேன். நான் கேட்கிறேன் நீர் சொல்வீராக. ஓ! தெய்வீக முனிவரே, அஃது உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்படும் மன்னன் திருதராஷ்டிரன் தொடர்புடையது.(25) நீர் அனைத்துக் காரியங்களின் உண்மையையும் அறிந்தவராவீர். ஓ! மறுபிறப்பாள முனிவரே, தெய்வீகப் பார்வையுடன் நீர் மனிதர்கள் அடையும் பல்வேறு கதிகளைக் காண்கிறீர்.(26) நீர் சொன்னவர்களும், தேவர்களுடைய தலைவனின் தோழமையைக் கொண்டவர்களுமான மன்னர்களின் கதி என்னவென்பதை நீர் சொன்னீர். எனினும், ஓ! பெரும் முனிவரே, இந்த மன்னனால் எந்தந்தெந்த உலகங்கள் அடையப்படும் என்பதை நீர் சொல்லவில்லை.(27) ஓ! பலமிக்கவரே, அரசன் திருதராஷ்டிரனால் எந்த உலகம் அடையப்படும் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்" என்று கேட்டான் சதயூபன்.(28)
அவனால் இவ்வாறு கேட்கப்பட்டதும், தெய்வீகப் பார்வையையும், கடுந்தவங்களையும் கொண்ட நாரதர், அந்தச் சபைக்கு மத்தியில் அனைவரின் மனங்களுக்கும் உயர்வானவையும், ஏற்புடையவையுமான இந்தச் சொற்களைச் சொன்னார்.(29) நாரதர், "நான் என் விருப்பத்தின் பேரில் சக்ரனின் மாளிகைக்குச் சென்று, ஓ! அரசமுனியே, அங்கே சச்சியின் தலைவனான சக்ரனைக் கண்டேன், மேலும் அங்கே நான் மன்னன் பாண்டுவையும் கண்டேன்.(30) ஓ! ஏகாதிபதி, இந்தத் திருதராஷ்டிரனையும், இவன் செய்து வரும் கடுந்தவங்களையும் குறித்த பேச்சு அங்கே எழுந்தது.(31) அங்கே சக்ரனின் உதடுகளின் மூலமே நான் இந்த மன்னனுக்கு {திருதராஷ்டிரனுக்கு} ஒதுக்கப்பட்டிருக்கும் வாழ்நாள் காலம் இன்னும் மூன்று வருடங்கள் என்பதைக் கேட்டறிந்தேன்.(32) அதன் பிறகு, மன்னன் திருதராஷ்டிரன், தன் மனைவி காந்தாரியின் துணையுடன் குபேரலோகத்திற்குச் சென்று அங்கே அந்த மன்னர்களின் மன்னனால் {குபேரனால்} உயர்வாகக் கௌரவிக்கப்படுவான். இவன் தன் மேனியெங்கும் தெய்வீக ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு தன் விருப்பத்தின் பேரில் நகரும் தேரில் அங்கே செல்வான்.(33) இவன் ஒரு முனிவரின் மகனாவான்; இவன் உயர்வான அருளைக் கொண்டவனாவான்; இவன் தன் தவங்களின் மூலம் தன் பாவங்கள் அனைத்தையும் எரித்திருக்கிறான். அற ஆன்மா கொண்ட இவன் தான் விரும்பியவாறு தேவ, கந்தர்வ, ராட்சச உலகங்களில் திரிந்து வருவான். நீ எதைக் குறித்துக் கேட்டாயோ அது தேவர்களிடம் உள்ள ஒரு புதிராகும் {ரகசியமாகும்}. உங்களிடம் கொண்ட அன்பினால் நான் இந்த உயர்ந்த உண்மையை {உங்களுக்கு} அறிவித்தேன்.(34,35) நீங்கள் அனைவரும் ஸ்ருதிகளைச் செல்வமாகக் கொண்டவர்களாகவும், தவங்களின் மூலம் உங்கள் பாவங்கள் அனைத்தையும் எரித்தவர்களாகவும் இருக்கிறீர்கள்" என்றார் {நாரதர்}".(36)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "அங்கே கூடியிருந்த அனைவரும், மன்னன் திருதராஷ்டிரனும், அந்தத் தெய்வீக முனிவரின் இந்த இனிய சொற்களைக் கேட்டு, பெரிதும் உற்சாகமடைந்தவர்களாகவும், உயர்ந்த நிறைவை அடைந்தவர்களாகவும் இருந்தனர்.(37) பெரும் ஞானம் கொண்ட திருதராஷ்டிரனை இத்தகைய பேச்சின் மூலம் உற்சாகமடையச் செய்த அவர்கள், வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டோருக்கு உரிய பாதையின் வழியே அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றனர்" {என்றார் வைசம்பாயனர்}.(38)
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 20ல் உள்ள சுலோகங்கள் : 38
ஆங்கிலத்தில் | In English |