The retreat of Satayupa! | Asramavasika-Parva-Section-19 | Mahabharata In Tamil
(ஆஸ்ரமவாஸ பர்வம் - 20)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனும், விதுரனும் குருக்ஷேத்திரம் சென்று சதயூபனுடைய ஆஸ்ரமத்திற்குச் சென்றது; வியாசரின் முன்னிலையில் வானப்ரஸ்தாஸ்மரத்திற்கு தீக்ஷை பெற்றது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "விதுரனின் ஆலோசனையைப் பின்பற்றி மன்னன் {திருதராஷ்டிரன்}, புனிதமானதும், அறவோருக்காக ஒதுக்கப்பட்டதுமான பாகீரதியின் கரைகளில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(1) அங்கே காடுகளில் தங்கள் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட பிராமணர்கள் பலரும், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் பலரும் அந்த முதிர்ந்த ஏகாதிபதியைக் காண அங்கே வந்தனர்.(2) அவன் அவர்களுக்கு மத்தியில் அமர்ந்து, தன் சொற்களின் மூலம் அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தான். சீடர்களுடன் கூடிய பிராமணர்களை முறையாக வழிபட்ட அவன், பிறகு அவர்கள் அனைவருக்கும் விடைகொடுத்து அனுப்பினான்.(3)
மாலை வேளை வந்ததும், மன்னனும் {திருதராஷ்டிரனும்}, பெரும்புகழைக் கொண்ட காந்தாரியும், பாகீரதியின் ஓடைக்குள் இறங்கித் தங்களைத் தூய்மை செய்து கொள்வதற்கான சடங்குகளை முறையாகச் செய்தனர்.(4) ஓ! பாரதா, அரசன், அரசி, விதுரன் மற்றும் பிறரும் அந்தப் புனித ஓடையில் நீராடி வழக்கமான தங்கள் அறச்சடங்குகளைச் செய்தனர்.(5) மன்னன் நீராடலின் மூலம் தன்னைத் தூய்மை செய்து கொண்ட பிறகு, குந்திபோஜனின் மகள் {குந்தி}, தன் மாமனாரான அவனுக்கு வழிகாட்டியவாறே, அவனையும், காந்தாரியையும் நீரிலிருந்து உலர்ந்த கரைக்கு இட்டுச் சென்றாள்.(6)
யாஜகர்கள் அங்கே மன்னனுக்காக ஒரு வேள்விப்பீடத்தை அமைத்திருந்தனர். வாய்மைக்கு அர்ப்பணித்திருந்த பின்னவன் {திருதராஷ்டிரன்}, அப்போது நெருப்பில் ஆகுதிகளை ஊற்றினான்.(7) அந்த முதிர்ந்த மன்னன் பாகீரதியின் கரையில் இருந்து தன் தொண்டர்களுடன் சேர்ந்து நோன்புகளை நோற்றபடியே, கட்டுப்படுத்தப்பட்ட புலன்களுடன் குருக்ஷேத்திரத்தை நோக்கி முன்னேறினான்.(8) பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, பெரும் ஞானியும், அரச முனியுமான சதயூபனின் ஆசிரமத்தை அடைந்து, அவனுடன் உரையாடினான்.(9)
ஓ! பகைவரை எரிப்பவனே, சதயூபன் கேகயர்களின் பெரும் மன்னனாக இருந்தவனாவான். அவன் தன் நாட்டின் அரசுரிமையைத் தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டுக் காட்டுக்கு வந்திருந்தான்.(10) அந்தச் சதயூபன், மன்னன் திருதராஷ்டிரனை உரிய சடங்குகளுடன் வரவேற்றான். அவனுடன் {சதயூபனுடன்} சேர்ந்து பின்னவன் {திருதராஷ்டிரன்} வியாசரின் ஆசிரமத்திற்குச் சென்றான்.(11) வியாசரின் ஆசிரமத்தை அடைந்த அவன், காட்டு வாழ்வுமுறைக்கான {வானப்ரஸ்தாஸ்ரமத்திற்கான} தொடக்கத்தை {தீக்ஷையைப்} பெற்றான். அங்கிருந்து திரும்பிய அவன் சதயூபனின் ஆசிரமத்தில் தன் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான்.(12)
உயர் ஆன்ம சதயூபன், வியாசரின் ஆணையின் பேரில் திருதராஷ்டிரனுக்கு காட்டு வாழ்வுமுறையின் சடங்குகள் அனைத்தையும் கற்பித்தான்.(13) இவ்வாறு உயர் ஆன்ம திருதராஷ்டிரன் தவப் பயிற்சியில் தன்னை நிறுவிக் கொண்டு, தன் தொண்டர்கள் {தன்னைப் பின்பற்றியவர்கள்} அனைவரையும் அதே ஒழுக்கத்தைப் பின்பற்றச் செய்தான்.(14) ஓ! ஏகாதிபதி, குந்தியுடன் கூடிய ராணி காந்தாரியும், மரவுரியையும், மான்தோலையும் அடையாகக் கொண்டு, தன் தலைவன் நோற்கும் அதே நோன்புகளையே தானும் நோற்றாள்.(15)
அவர்கள் எண்ணம், சொற்கள், செயல்கள் மற்றும் கண்களில் இருந்து தங்கள் புலன்களை விலக்கிக் கடுந்தவங்களைப் பயிலத் தொடங்கினர்[1].(16) மனத்தில் குழப்பமேதுமற்றவனான மன்னன் திருதராஷ்டிரன், ஒரு பெரும் முனிவனைப் போலத் தலையில் சடாமுடி தரித்து, மேனியில் மரவுரியும், தோலும் தரித்து, நோன்புகளையும், தவங்களையும் பயிலத் தொடங்கி, தசையை வற்றச் செய்து எலும்பும் தோலுமாகத் தன் உடலைச் சுருக்கினான்.(17) அறத்திற்கான உண்மை விளக்கங்களை அறிந்தவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான விதுரனும், சஞ்சயனும், அந்த முதிர்ந்த மன்னனுக்கும், அவனுடைய மனைவிக்கும் காத்திருந்தனர் {பணி செய்தனர்}. ஆன்மக்கட்டுப்பாடுடையவர்களான விதுரன் மற்றும் சஞ்சயன் ஆகிய இருவரும் மரவுரியையும், கந்தலையும் உடுத்தித் தங்களைச் சுருக்கிக் கொண்டனர்" {என்றார் வைசம்பாயனர்}.(18)
[1] கும்பகோணம் பதிப்பில், "அவர்கள் இந்திரியக் கூட்டத்தை நன்கு அடக்கிச் செய்கையினாலும், மனத்தாலும், வாக்காலும், நேத்ரத்தினாலும் சிறந்ததான தவத்தைச் செய்தார்கள்" என்றிருக்கிறது.
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 19ல் உள்ள சுலோகங்கள் : 18
ஆங்கிலத்தில் | In English |